இரக்கம் ஒரு பூவிலங்கு

""ஒரு நூறு ரூபா இருந்தா அப்பா வாங்கிட்டு வரச்சொன்னார்!'' என்றான் ராமராஜ்.
இரக்கம் ஒரு பூவிலங்கு

""ஒரு நூறு ரூபா இருந்தா அப்பா வாங்கிட்டு வரச்சொன்னார்!'' என்றான் ராமராஜ்.

ரங்கராஜன் பர்சைத் திறந்து ஒரு முழு நூறு ரூபாய் நோட்டை எடுத்து அவனிடம் எடுத்து நீட்டினான்.  "" இந்தா, இதைக் கொண்டு போய் அப்பா கிட்டே கொடு!'' என்றான்.

பார்த்துக்கொண்டே இருந்த மோகனுக்குக் கோபமாக வந்தது.  ராமராஜ் அங்கிருந்து போகும் வரை காத்திருந்தவன், அவன் வாசல் வரை போனதும், "" என்னடா இது, அவன் வந்து ரூபா கேட்கிறான், உடனே நீயும் ஏதோ அவன் கொடுத்து வைத்தது மாதிரி தூக்கி அவன் கிட்டே கொடுக்கறே?'' என்றான், ஆத்திரத்துடன்.

""ராமராஜோட அப்பா சுப்பராமனை எனக்கு எத்தனையோ வருஷமாத் தெரியும்.  அவரோட ரெண்டாவது பையன் ரங்கசாமி என்னோடதான் படிச்சான். பக்கத்து சீட்டு.  ரொம்ப யோக்கியமான பையன்.  நல்ல குடும்பம்.  ஏதோ இப்போ கஷ்டப்படறார்.  அப்பப்போ ஏதாவது கேப்பார். நானும் ஹெல்ப் பண்றதுண்டு!''

""வாங்கினதை திருப்பித் தந்திருக்காரா?''

""நான் அதைப் பத்தி அக்கறைப்பட்டதில்லே.  கேட்டா, கொடுக்கறதோடு சரி.''

""தர்ம பிரபுன்னு நினைப்பு.  இப்படியே கேட்டபோதெல்லாம் கொடுத்துட்டிருந்தா, போண்டியாயிடுவே!  உனக்கு யாரும் உதவ முன் வர மாட்டா ரங்கராஜா!  நான் இப்பவே சொல்லி வைக்கறேன்!''

""போகட்டும்டா.  நான் அப்படி எல்லாம் போண்டி ஆயிடமாட்டேன்.  எனக்குத் தெரியும் என்னோட நிலைமை!''

மோகன் பண விஷயத்தில் படு கெட்டி.  ஒரு ரூபாய் கொடுத்தால் இரண்டு ரூபாயாக வசூலித்துவிடுவதில் கில்லாடி.  அவனிடம் பணம் சேர்ந்ததில் வியப்பில்லை.  தயவு தாட்சண்யம் பார்க்க மாட்டான். அலுவலகத்தில் யாராவது அவனிடம் மாதக் கடைசியில் பணம் கேட்டு விட்டால் தொலைந்தது. நூறு கேள்வி கேட்டுவிட்டுத்தான் கொடுப்பான். வாங்கிக் கொள்கிறவனுக்கும் "ஏன்டாப்பா இவனிடம் கேட்கப் போனோம்?' என்று தோன்றிவிடும்.  அதே போல, திருப்பிக் கொடுக்காவிட்டால் நாக்கைப் பிடுங்கிக்கொள்கிற மாதிரி பலர் முன்னிலையில் கேட்டுவிடுவான்.  சிறிய தொகை, பெரிய தொகை என்றெல்லாம் வர்ஜா வர்ஜம் கிடையாது.  

மார்க்கெட்டில் மோகன் ஒரு நாள் ராமராஜைப்  பார்த்தான். 

முன் பின் அறிமுகம் இல்லாத போதும், அருகே சென்று, ""தெரிகிறதா?'' என்று கேட்டான்.

""தெரியலே!'' என்றான் ராமராஜ்.

""அன்னிக்கு ரங்கராஜன் வீட்டிலே பார்த்தோமே?'' என்றான் மோகன்.

""எனக்கு ஞாபகமில்லே.  நீங்க அவர் ஃப்ரண்டா?'' என்று கேட்டான்.

""ஆமா.  ரங்கராஜனோட ஃப்ரண்டு.  நீ அடிக்கடி அங்க வருவியா?''

""இல்லே.  எப்பவாவது வருவேன்.  அப்பா அனுப்பிச்சா வருவேன்.  எப்பவும் இல்லே!''

""அப்பா எப்ப அனுப்புவார்?  அடிக்கடி அனுப்புவாரா?''

""இல்லே.  எப்போ வேணுமோ, அப்ப அனுப்புவார்.  எதுக்கு இதெல்லாம் கேக்கறீங்க?""

""ஒண்ணுமில்லே.  சும்மாத்தான்.  அப்பா என்ன பண்றார்? ரிட்டயர்டா?''

""இல்லே.  நாட்டு வைத்தியர்.''

""ஓ...  வருமானம் ஏதாவது வருமா?''

""அன்னன்னிக்கு வரும்.  சில நாளைக்கு வராது.''

""வராதன்னிக்கு ரங்கராஜன் வீட்டுக்கு வந்து ரூபா வாங்கிட்டுப் போவியோ?'' 

மோகனின் கேள்விக்கு ராமராஜ் பதில் சொல்லவில்லை.  இவனுக்கு என்ன பதில் சொல்வது என்று நினைத்திருக்கலாம்.  என்ன இப்படி எல்லாம் கேட்கிறானே என்றும் நினைத்திருக்கலாம்.  தங்கள் குடும்பத்தைப் பற்றிக் கேவலமாக நினைக்கிறானோ என்றும் நினைத்திருக்கலாம்.  ""நான் வர்றேன்!'' என்று சொல்லி அங்கிருந்து நகர்ந்துவிட்டான்.
            
அலுவலகம் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்த போது வயதான ஒரு மாது, ரிசப்ஷனில் வந்து காத்துக்கொண்டிருப்பதாக பியூன் முத்து வந்து மோகனிடம் தெரிவித்தான்.

""யாராம், கேட்டியா?'' என்றான்.

""நான் கேட்கலே, சார்.  உங்களை அர்ஜென்டா பார்க்கணும்னாங்க.  சொல்றேன்னேன்.''

மோகன் ஸீட்டை விட்டு வெளியே வந்து, ரிசப்ஷனுக்கு வந்தான்.   தங்கம் மாமி உட்கார்ந்திருந்தாள்.  இவனைக் கண்டதும் எழுந்து நிற்க முயன்றாள்.  

""உக்காருங்க'' என்றான் மோகன்.

""என்ன, ஆபீஸ் வரைக்கும்?'' என்றான் மெல்லிய குரலில்.

""கொஞ்சம் அவசரம்.  அதான் வந்தேன்.''

""பழையதே பாக்கி இருக்கே, மாமி.  அதுக்குள்ளே புதுசுக்கு வந்துட்டீங்களே!''
""பழசெல்லாம் பைசா பாக்கி இல்லாம தீத்துட்டேனே.  பாக்கி ஏதும் இல்லியே!''
""யாரு இல்லேன்னா?  வட்டிலே பாக்கி இல்லே?''

""பதினஞ்சு பர்சென்ட் வட்டி போட்டிருந்தீங்க.  கணக்குப் பண்ணிக் கொடுத்துட்டேனே.''

""அது பணம் கொடுக்கறப்ப.  இப்ப உங்க பையனுக்கு வேலை ஆயிட்டுதாம்லே? இருபத்து நாலு பர்சன்ட் கொடுக்க வேணுமே?''
""சார், இது நியாயமா, நீங்களே சொல்லுங்கோ.  பணம் கொடுக்கறப்போ, பதினஞ்சு   பர்சன்ட்னு சொல்லிட்டு, இப்ப இருபத்து நாலுன்னு சொன்னா என்ன நியாயம்?''

""அப்போ உங்க பையனுக்கு வேலை ஆயிருந்துதா?  இல்லியே?  அதனால மனசிரங்கி பதினஞ்சு பர்சன்ட்னு சொன்னேன்.  இப்போ நிலைமை மாறி இருக்கே.  உங்களுக்கும் வசதி வந்துட்டுது.  கொடுக்கலாமில்லே?""

""வசதி வந்துட்டுதுன்னா, நான் ஏன் இங்க உங்க கிட்ட மறுபடி வறேன்?''

""சரி.  அந்த வட்டிலே பாக்கியக் கொடுக்கறதா இருந்தா, இப்போ புதுசா நீங்க கேட்கிறதைக் கொடுக்கறேன்.  என்ன, சரியா?''

தங்கம் மாமி சற்று யோசிக்கிற மாதிரி இருந்தது.  ஆனால் யோசிக்கிற நிலைமையில் அவள் இல்லை.  ""சரி'' என்றாள். 

""நாளைக்கு வீட்டுக்கு வந்து கேஷ் தறேன்'' என்றான் மோகன். 

""எனக்கு இன்னிக்கே கிடைச்சா பரவாயில்லே!'' என்றாள் தங்கம் மாமி. 

சற்றி யோசிப்பது போல் பாவனை செய்துவிட்டு, ""ஆகட்டும்.  சாயந்தரம் ஆபீஸ் விட்டதும் வந்து தந்துடறேன்'' என்றான்.

ரங்கராஜன் வெளியே புறப்படத் தயாரான போது, மோகன் வந்து கதவைத் தட்டினான். 

மோகனைப் பார்த்ததும் முதலில் ரங்கராஜனுக்குச் சற்று வெறுப்பு வந்தது என்றாலும், நண்பனாக வந்திருப்பதை வரவேற்காமல் இருக்க முடியவில்லை. 

""என்ன மோகன், லேவா தேவி வியாபாரம் எல்லாம் எப்படி இருக்கிறது?'' என்றான் ஒருவித ஏளனம் தொனிக்கும் குரலில். 

""என்ன லேவா தேவி?  யாருக்கும் நான் கடனும் கொடுப்பதில்லை.  கடனும் வாங்குவதில்லை.  உன்னை மாதிரி இரக்க பிரபுவாகவும் இல்லை, போதுமா?'' 
""பச்சைப் பொய். எனக்குத் தெரியாது என்று நினைக்காதே.  நேற்று தங்கம் மாமியிடம் நீ கறாராகப் பேசிக்கொண்டிருந்ததை ரிஸப்ஷன் பின்னால் இருந்த ஸீட்டில் உட்கார்ந்து கேட்டுக்கொண்டுதான் இருந்தேன்.  உன்னை மாதிரி கிராதகன் வேறு யாரும் இருக்க மாட்டார்கள், மோகன்!''   

மோகன் முகம் சற்றுச் சுருங்கிய மாதிரிஇருந்தது.   

""யார் கிராதகன்?  கொடுத்த பணத்தைக் கேட்டால் கிராதகனா?'' 

""கொடுத்த பணத்தைத் திருப்பிக் கொடுத்துட்டா அந்த அம்மா.  அப்பறம் அவ பையனுக்கு வேலை கிடைச்சுடுத்துன்னு வட்டியை அதிகம் பண்ணிக் கேக்கறது எந்த விதத்துல நியாயம், சொல்லு.  நீ கொடுப்பியா?  மனுஷனாடா நீ?''  

""நீ கேட்ட உடனே தூக்கிக் கொடு.  உங்கிட்டே பணம் கொட்டிக் கிடக்கு. திரும்பக் கேட்க மாட்டே.  யாரோ நாட்டு வைத்தியர் கேக்கறார்னு அவர் பையன் வந்து கேக்கற போதெல்லாம் நூறு இரு நூறுன்னு தூக்கித் தூக்கிக் கொடுக்கறே.  என்னால அப்படி எல்லாம் இருக்க முடியாதுடாப்பா!  எனக்குக் காசு வேணும்.  நிறைய வேணும்.  ஒண்ணுலேருந்து பத்து பண்ணணும்.'' 

""ராமராஜோட அண்ணன் என்னோட படிச்சவன்டா.  எனக்குப் புரியாதபோதெல்லாம் பாடம் சொல்லித் தந்தவன்டா.  கஷ்டப்படற குடும்பம்டா. ஒரு வேளை பட்டினி கிடந்தா என்ன பாடுபடுவான்னு எனக்குத் தெரியும்டா. மனுஷத்வம் உள்ள எவனுக்கும் வர உணர்வுதான் அது.  எனக்கு இந்த நூறு இர நூறு எல்லாம் திரும்ப வந்தாலும் ஒண்ணுதான், வராட்டாலும் ஒண்ணுதான்.  இரக்கம்னு ஒண்ணு மனுஷனுக்கு இருக்கணும்டா.  அது இல்லேன்னா அவன் மனுஷனோட சேர்த்தியே இல்லே, போடா!'' 

""ஆமா.  நீ பெரிய தர்ம பிரபு.  பணம் இல்லாம் ஒரு நாள் நீ திண்டாடுவே.  அப்ப நீ எங்கிட்டதான் வருவே.  பார்த்துக்கோ!'' 

""அந்த நாள் வரவே வராது.  நான் என்னிக்கும் தர்ம பிரபுவாவே இருப்பேன். உனக்குத் தெரியாது.  இரக்கம் ஒரு விலங்கு இல்லே.  அது ஒரு பூ விலங்கு.'' 
பசியும் பட்டினியுமாக இருந்த நாட்களை எல்லாம் கடந்து வந்து, படித்து நல்ல வேலையில் அமர்ந்து, கை நிறையச் சம்பளம் வாங்கிக் கொண்டு வந்து அம்மாவையும் அப்பாவையும் வயிறு நிறையச் சாப்பிட வைத்து ஆனந்தமாகப் பார்த்தவன் ரங்கராஜன். அவனுக்கு இரக்கம் ரத்தத்தில் ஊறியிருந்தது என்பதை மோகன் அறிய வாய்ப்பில்லை.  


சாருகேசி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com