திரைக் கதிர்

வருடங்கள் எத்தனை கடந்தாலும், நித்யாமேனனுக்கான மார்க்கெட் நிலவரம் மட்டும் அப்படியே இருக்கிறது. தமிழ், மலையாளம் உள்ளிட்ட சினிமாக்களில் அவ்வப்போது அவருக்கான இடங்கள் உருவாகி கொண்டே இருக்கின்றன.
திரைக் கதிர்

வருடங்கள் எத்தனை கடந்தாலும், நித்யாமேனனுக்கான மார்க்கெட் நிலவரம் மட்டும் அப்படியே இருக்கிறது. தமிழ், மலையாளம் உள்ளிட்ட சினிமாக்களில் அவ்வப்போது அவருக்கான இடங்கள் உருவாகி கொண்டே இருக்கின்றன. மலையாளத்தில் ஒருவர் மட்டுமே நடிக்கும் "பிரானா மற்றும் கொளம்பி' என்ற படத்தில் நடிக்கிறார். இதைத் தொடர்ந்து  மறைந்த முதல்வர் ஜெயலலிதா வேடத்தில் "தி அயர்ன் லேடி' என்ற படத்தில் நடிக்கிறார். இதில் இவருக்கு ஜெயலலிதா வேடம்.  மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் "சைக்கோ', தெலுங்கில் என்டிஆர் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் "கதாநாயகுடு' படத்தில் மறைந்த நடிகை சாவித்திரி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நித்யா மேனன், தற்போது ஹிந்தி படம் ஒன்றிலும் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.  ஜெகன் சக்தி இயக்கும் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார். இதில் அக்ஷய் குமார் கதாநாயகனாக நடிக்கிறார். வித்யாபாலன், சோனாக்ஷி சின்ஹா, டாப்ஸி ஆகியோர் நடிக்கும் இந்த படத்தின் கதை, மங்கள்யான் திட்டத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. "தி அயர்ன் லேடி' படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும், பாலிவுட் படத்துக்காக மும்பை செல்கிறார் நித்யாமேனன்.  

அஜித்தை  ரசிகர்கள் "தல' என்று பட்டப் பெயரிட்டு அழைக்கின்றனர். திரையுலகில் பலரும் அவரை "தல' என்றே அழைக்கும் நிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவன் வேறு ஒருவரை "தல' என்று அழைக்கிறார். அவர் மட்டுமல்ல கிரிக்கெட் ரசிகர்களும் அவரை அப்படித்தான் அழைக்கிறார்கள். விளையாட்டு துறையில் உள்ள அந்த "தல' வேறுயாருமல்ல டோனிதான். இணையதளங்களில் டோனியை கொண்டாடும் ரசிகர்கள் "தல' என்றே குறிப்பிடுகின்றனர். இந்நிலையில் தனது இணைய தள சுட்டுரைப் பக்கத்தில் விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ள பதிவில்... "தல டோனியுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது என் வாழ்நாள் கனவு. அந்த கனவு தற்போது நிறைவேறியிருக்கிறது. இந்த அதிசயத்தை நிகழ்த்திய கடவுளுக்கு நன்றி' என குறிப்பிட்டிருக்கிறார்.  அத்துடன் டோனி அருகில் அமர்ந்து தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டிருக்கிறார்.  "நானும் ரவுடிதான்', "தானா சேர்ந்த கூட்டம்' படங்களை இயக்கிய விக்னேஷ் சிவன், அடுத்த படத்தை இயக்குவதற்கான திரைக்கதையை தயாரித்து வருகிறார். 

விமர்சனரீதியாக பெரும் வரவேற்பை பெற்றுள்ள "பரியேறும் பெருமாள்' படம் மிகப் பெரும் விவாதங்களையும் உண்டாக்கியுள்ளது.  சென்னையில் சமீபத்தில் "மெய்காண் கலைஞர் தமிழ்ச்சங்கம்'  ஏற்பாடு செய்திருந்த மதிப்பாய்வு நிகழ்வில் இயக்குநர்கள் பாரதிராஜா, வெற்றிமாறன், ராம், அமீர், வ.கெளதமன், மாரி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். படத்தை பார்த்து விட்டு இயக்குநர் பாரதிராஜா பேசும் போது...  ""ஒன்றை விமர்சனம் செய்ய வேண்டுமென்றால், நாம் அவற்றைவிட ஒருபடி மேலிருக்கிறவர்களாக இருக்க வேண்டும். அப்படி மாரி செல்வராஜின் "பரியேறும் பெருமாள்' படத்தை விமர்சிப்பதற்கு, அவனைத் தாண்டி ஒருபடி மேலிருக்கிறேன் என்பதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். இந்தப் படம் பார்த்து முடித்ததும், மறுபடியும் மறுபடியும் எனக்கு மாரி செல்வராஜுடைய முகம்தான் வந்துபோனது. அவன் மனிதர்களை மட்டும் படத்தில் பேச வைக்கவில்லை, அந்த மண்ணையும் பேச வைத்திருக்கிறான். கருப்பி மேல் நம் எல்லோரையும் பாசம் கொள்ளச் செய்திருக்கிறான். அதேபோல், இப்படத்தில் வருகிற "நான் யார்?' பாடலைப் போல ஒன்றை இதுவரை நான் பார்த்ததே இல்லை. இந்த ஒரு பாடல் போதும், மாரி செல்வராஜ் அற்புதமான அறிவாளிக் கலைஞன் என்பதைச் சொல்வதற்கு. குறிப்பாக, யாருடைய மனதையும் புண்படுத்தாமல், ஒரு கீறல் கூட விழாமல் இப்படத்தை எடுத்ததற்காக வாழ்த்துகள்'' என்றார் பாரதிராஜா. 

ஹீரோக்கள் இல்லாமல் தங்களை மட்டுமே முன்னிலைப்படுத்தும் கதைகளைத் தேர்வு செய்து நடிப்பது ஹீரோயின்களுக்கு வழக்கமாகி விட்டது. ஜோதிகா,  நயன்தாரா, த்ரிஷா, அனுஷ்கா என இந்தப் பட்டியல் நீளும். இந்த வரிசையில் இப்போது இணைந்திருப்பவர் ராய் லெட்சுமி. ஹீரோ இல்லாமல், ஹீரோயினுக்கு அதிக முக்கியத்துவம் கொண்ட கதையுடன் உருவாகும் படம் "சின்ட்ரல்லா'. இதில் பேய்  வேடத்தில் நடிக்கிறார் ராய் லட்சுமி. வினோ வெங்கடேஷ் இயக்குகிறார்.  இது பற்றி அவர் கூறும் போது... ""திகில் கதை கொண்ட இதில் பேயாகவும், இசைக்கலைஞராகவும் இரு வேடங்களில் ராய் லட்சுமி நடிக்கிறார். அவரது திரையுலக வாழ்க்கையில் இது ஒரு முக்கியமான படமாக இருக்கும். முற்பகுதி கதையில் குழந்தைகளுக்கு பிடித்த விஷயங்களும், பிற்பகுதி கதையில் பயமுறுத்தும் சம்பவங்களும் இடம்பெறும். பேய் வேடம் ஏற்றுள்ள ராய் லட்சுமி, நான்கு மணி நேரம்  மேக்கப் போட்டுக்கொள்கிறார். ராமி ஒளிப்பதிவு செய்கிறார். அஸ்வமித்ரா  இசை அமைக்கிறார். வரும் மார்ச் மாதம்  படம் வெளியாகிறது'' என்றார். 

அஜித் - சிவா கூட்டணியில் உருவாகி வரும் படம் "விஸ்வாசம்'.  சத்யஜோதி நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் நயன்தாரா, தம்பி ராமையா, யோகி பாபு, போஸ் வெங்கட்,ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். மதுரை மற்றும் தேனி நகர பின்னணியில் உருவாகி வரும் இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் புனேவில் படமாக்கப்பட்டு வந்தன. புனேவில் பிரத்யேக அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்து வந்தது.  இதன் இறுதிக் கட்டமாக அங்கே சில சண்டைக் காட்சிகள் மற்றும் ஒரு பாடலின் சில பகுதிகள் படமாக்கப்பட்டன. அத்துடன் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவுற்றதாகப் படக்குழு அறிவித்துள்ளது.படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதால், "விஸ்வாசம்' படத்துக்கான தோற்றத்திலிருந்து அஜித் மாறி விட்டார். இந்த தோற்றத்தில் இயக்குநர் சிவா மற்றும் ஒளிப்பதிவாளர் வெற்றி ஆகியோருடன் அஜித் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. ஏற்கெனவே அவ்வப்போது குரல் பதிவும் நடந்து வந்ததால், அஜித்தின் பணிகள் பெரும்பாலும் முடிந்து விட்டதாகத் தெரிகிறது. பின்னணி இசை கோர்ப்பு மற்றும் நயன்தாரா உள்ளிட்டோரின் குரல் பதிவு மட்டுமே மீதம் உள்ளது. அந்த பணிகளும் இந்த வாரம் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. "விஸ்வாசம்' பணிகளை முடித்துவிட்டதால், "பிங்க்' தமிழ் ரீமேக்கில் கவனம் செலுத்துவார் அஜித் எனத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com