நட்பு என்பது!

என்னையா? எட்டுவயதுமகனுக்குத் தாயான என்னையா? இன்னொருவனின் மனைவியான என்னையா? எந்தத் துணிவில் இப்படி செய்யமுடிந்தது?
நட்பு என்பது!

என்னையா? எட்டுவயதுமகனுக்குத் தாயான என்னையா? இன்னொருவனின் மனைவியான என்னையா? எந்தத் துணிவில் இப்படி செய்யமுடிந்தது? ஒன்றாக படித்தோம் என்பதாலா? அல்லது கணவனுடனான பிணக்கில்; மறுக்கமாட்டாள்; என்ற எண்ணத்தில் செய்திருப்பானோ?
சேகரின் முரட்டுத்தனமான பிடிக்குள்ளிருந்து தன்னை விடுவித்துக் கொண்ட மதுராவுக்குள் அந்த கணம் இந்த கேள்விகள்தான் தோன்றிற்று.
திடிரென தடைபட்டிருந்த மின்சாரம் வந்துவிட கோபத்துடன் அவனை நோக்கித் திரும்பினாள், ஆனால் அவன் வெளியே சென்று கொண்டிருந்தான்.
கற்பு என்பது மனக்கட்டுபாடு. அதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வரை எந்தவிதமான மாற்றுசிந்தனைக்கும் செயலுக்கும் இடம் கொடுக்கத் தோன்றாது.
உடல்பூராவும் பரவிய எரிச்சல் வியர்வையாய் வழிந்தோட தன் உடல்மீதே அவளுக்கு வெறுப்புத்தட்டியது. பாத் ரூமிற்குள் நுழைந்து முகத்தைக் அலம்பியவள் கண்ணாடியைப் பார்த்துக்கொண்டே மீண்டும் - மீண்டும் அலம்பினாள்.
காதுகளில் அவன் கிசுகிசுத்த வார்த்தைகளை மறக்க எத்தனித்தபோதும் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்து அலைக்கழித்தது. நடந்ததை யாரிடமாவது சொல்லி
விடலாமா என்று நினைத்தவள். ஊசி இடம் தராமல் நூல் நுழைந்துவிடுமா என்பதாய் ஆளாளுக்குப் பேசி நோக அடித்துவிடுவார்கள் என்றெண்ணி அந்த நினைப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தாள்.
ஆனாலும்; தன் விருப்பத்திற்கு மாறான சேகரின் செயல் படிப்படியாய் ஆட்கொள்ள மனதளவிலும் உடலளவிலும் சோர்ந்தாள். புடவையை சரிசெய்தவாறு பாத்ரூமை விட்டு வெளியே வந்து; தன் இருக்கையில் சென்று அமர்ந்தாள். இன்னும் என்னென்ன எதிர்கொள்ள வேண்டியிருக்குமோ என்பதான சிந்தனைவிரிந்தது. ஆணோ, பெண்ணோ ஓர் அமைப்புக்குள் இருக்கும் வரைதான் பாதுகாப்பும் பலமும் என்பது அதைவிட்டு வெளியேவந்த பின்னரே புரியவருகிறது.
பலமும் பலவீனமும் எதிரெதிர் துருவங்கள், பலவீனம் இயலாமையின் வெளிப்பாடு என்றால் பலம் இயன்றதின் களிப்பு. மதுரா அங்கே பலவீனப்பட்டுக் கொண்டிருக்க சேகர் இங்கே, நாயர் கடையில் தேனீருக்கு சொல்லிவிட்டு ஒரு சிகரெட்டை பற்றவைத்தவன் பத்து நிமிடத்திற்கு முன் தனக்கு கிடைத்த சந்தர்ப்பத்திற்கு நன்றி தெரிவித்ததுடன் அதை சமயோஜிதமாக பயன்படுத்திக் கொண்டதை நினைத்து தன்னை பாராட்டிக் கொண்டான். தன்மீது ஒட்டிக் கொண்டிருந்த மதுராவின் உடல் மணத்தை நீண்ட சுவாசத்தில் உள்ளிழுத்து அதில் மெய் மறந்தான்.
நிச்சயம் மதுரா இதை ஏற்றுக் கொள்வாள். இதன்பின்னர் நிச்சயம் அவளுக்குள் ஒரு மாற்றம் ஏற்படும்.
நம்பிக்கையில் வந்த வார்த்தைகளை தன்னைமறந்து வெளியேக்ககூற, நாயர் தேனீர் ஆற்றுவதை நிறுத்தி இவனை பார்த்தார். "என்ன சாருக்கு ரொம்ப சந்தோஷமோ?''
ஒன்றுமில்லை என்பதுபோல இவன் கையசைக்க நாயர் தேனீரை நீட்டினார். வாங்கி பருகத் தொடங்கினான்.
பிரபாகரின் அழைப்பின்பேரில் சென்னைக்கு வந்தவனுக்கு இது இரண்டாவது சந்தோஷம். முதலாவது பிரபாகர் தன் ஆடிட்டிங் கம்பெனியில் வேலைதந்தது.
பிரபாகரன் சொன்னான்; ""சின்ன வயசிலேருந்து ஒண்ணாவே படிச்சோம், ஒரே ரேங்க் எடுத்தோம், போட்டி பொறாமை இல்லாம ஒண்ணாவே விளையாடினோம், ஒண்ணாவே வளர்ந்தோம், படிக்கிற காலத்திலே என்னன்னவோ செய்யணும்ணு திட்டம் போட்டோம். ஆனா எனக்கு எந்தவித கஷ்டமில்லாம ஒரு வேலையும் கிடைச்சுடுச்சு, அதன்மூலம் நல்ல வாழ்க்கைத் துணையும் வந்தது. ஆனா நீயோ அங்கே இங்கேன்னு அல்லாடி படாதபாடு பட்டுட்டே. இந்த ஆடிட்டிங் கம்பெனிக்கு சொந்தக்காரனா ஆன பிறகு தனியா இருந்து நடத்தறதைக் காட்டிலும் ஒரு குழுவா இருந்து நடத்தினா பெரிசா வளரமுடியும்னு தோணுச்சு. அதான் உன்னை வரவழைச்சேன். முழுக்கமுழுக்க இது சுயநலம் இல்லே, நம்ப ரெண்டுபேர் நிலையிலிருந்து பார்த்தாலும் ரெண்டும் கலந்ததாகவே இருக்கும். உனக்கு மாசம் பதினைந்தாயிரம் சம்பளம் பிக்ஸ் பண்ணியிருக்கேன். வண்டியும் ஏற்பாடு பண்ணியிருக்கேன். கம்பெனி லாபத்திலே உனக்கு ஐந்து பர்செண்ட் பங்கு. என்ன ஓ.கே.தானே''.
"உதவும் மனப்பான்மை பலருக்கும் வரும். ஆனால் இப்படி கொடுக்கிற மனப்பான்மை உன்னைப்போல சிலருக்கு மட்டுமே வரும். நட்பை மதிக்கத் தெரிஞ்சவங்க பலர். ஆனால் அதை உயர்த்திப் பார்ப்பவர்களில் நீ மட்டும்தான்டா. உனக்கு கடைசி வரையிலே உண்மையாகவும் நம்பிக்கையாகவும் இருப்பேன்'' என்று பிரபாகரை கட்டிக்கொண்டு சொன்னபோது சேகரின் கண்கள் கலங்கின.
"வா வேலை பார்க்கிற மத்தவங்களை அறிமுகப்படுத்தறேன்''.
அலுவலக பணியாளராக மதுராவை பிரபாகர் அறிமுகப்படுத்திய போது அது ரெட்டிப்பாகியது.
"நம்மோட சிதம்பரத்திலே படிச்சவங்கதானே?''
"ஆமாம், ஒருநாள் சூளைமேடுபக்கம் போய்கிட்டிருந்தப்போ ரோட்டை கிராஸ்பண்றதைப் பார்த்தேன், கூப்பிட்டு விசாரிச்சு வேலைக்கு அழைச்சிட்டு வந்துட்டேன். இவ்வளவு பெரிய மாநகரத்திலே தெரிஞ்சவங்க அதுவும் சொந்த ஊர்க்காரங்க கிடைச்சா ரெண்டு பேருக்கும் கூடுதல் பலம்தானே? இவங்க, ஹஸ்பெண்ட் சாஃப்ட்வேர் கம்பெனில வேலை பார்க்கிறார். ஒரு பையன் இருக்கான்''.
படிக்கும் காலத்தைவிட திருமணமாகி தாயாகியிருந்த மதுரா அழகாகத் தெரியவே மகிழ்ச்சி நிமிடத்துக்கு நிமிடம் அதிகரித்தது. வேலை கொடுத்தவனுக்கு விசுவாசத்தையும் உடன் படித்தவளுக்கு திறமையையும் காட்ட கடுமையாக உழைத்து புதிதாக நூற்றுபத்து கஸ்டமர்கள் சேர்த்தான். இதனால் பிரபாகர், மதுரா இருவரின் பாராட்டும் கிடைத்தது. கூடவே மதுராவின் வாழ்க்கைப்பற்றியும் அவளுக்கும் அவளது கணவருக்குமிடையேயான இடைவெளிப் பற்றியும் தெரியவந்தது. உறவுக்கார கணவனின் மனப்போக்குப் பிடிக்காமல் விலகி வாழ்ந்ததால் ஏற்பட்ட பரிதாபம் படிப்படியாக அனுதாபமாகி பின் பாசமாகியது. தன் குடும்பத்தைச் சார்ந்த ஒருத்தி பாதிக்கப்பட்டிருப்பதை போல உணர்ந்து ஆறுதல் அளிக்கும் விதமாக நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளச்செய்தது.
மணவாழ்க்கையில் விரிசல் ஏற்பட்டு மருண்டு சுருண்டுகிடந்த நேரத்தில் உடன் படித்த பள்ளித்தோழன் அழைத்து வேலை தந்து பொருளாதார பாதுகாப்பளித்ததும், கல்லூரித் தோழி புதுத்தெம்பளித்ததும்; அலுவலக வேலையிலிருந்து வீட்டு வேலை வரை உதவி செய்ததும் மகிழ்ச்சியை ஏற்படுத்த. அவ்வப்போது தொட்டுப் பேச அவளது கையை தோளை ஆதுரத்துடன் பற்ற என்பதான அவன் வெளிப்பாட்டை மதுரா இயல்பாய்
ஏற்றுக்கொண்டாள். ஆனால் தப்போ சரியோ எந்த செயலுக்கும் நீட்சி இருக்கத்தானே செய்கிறது.
இருவருக்குமிடையோன அந்த நெருக்கத்தை காதலாக முடிவு செய்து அவளிடம் வெளிப்படுத்தியபோது எதிர்பார்த்திராத அவள் தடுமாறினாள். ஆனால் பெரிதாக எந்த எதிர்ப்பையும் காட்டாமல் வழக்கமான சிரிப்பு மாறாமல்
"தப்பு, தப்பு. இது பெரிய தப்பு'' என்றுகூறி அவன் எண்ணத்தை மாற்ற முயற்சித்தாள். ஆனால் அவனோ அவள் எதிர்கொண்டவிதத்தை அவளின் விருப்பத்தின் வெளிப்பாடாக எண்ணி, வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் அதைப்பற்றி பேசுவது, கடிதம் தருவது, கவிதை எழுதுவது, அங்கே இங்கே தொடுவது என்பதான செயலால் இன்றோ விபரீதம்.
மதுரா இருப்புக் கொள்ள முடியாமல் தவித்தாள். எவ்வளவோ எடுத்துக் கூறியும் ஏற்காது இப்படி செய்துவிட்டானே என்பதாய் புலம்பினாள். இதுசம்பந்தமாக அவனுடன் பேசியதை நினைவுக்குக் கொண்டுவந்தாள்.
"வேண்டாம் சேகர், நாம இப்படியே இருந்துடுவோம், கல்யாணங்கறது ரொம்ப பெரியவிஷயம். ரொம்ப ரொம்ப நம்பிக்கையோட என் மணவாழ்க்கையை ஆரம்பிச்சேன், ஆனா அதுக்கு மாறா அமைஞ்சுட்டுது. இப்போ நான் ஒருத்தரின் மனைவி மட்டுமில்லே, எட்டு வயது பையனுக்கு அம்மாவும்கூட. என் கணவரோட என்னாலே ஒத்துப்போக முடியலேங்கறதும், அவரோட அன்பும் பாசமும் எனக்கு கிடைக்காம போனதாலே என் மகிழ்ச்சியும் சந்தோஷமும் குறைஞ்சி போச்சுங்கறதும் உண்மைதான். அதுக்காக நான் இன்னொரு கல்யாணம் பண்ணிக்க விரும்பலே. என்னுடைய மிகப்பெரிய ஆதாரமா என் மகனை நான் நினைக்கிறேன். இந்த நிலையிலே இன்னொரு கல்யாணம் பண்ணி அவன் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி அவனுக்கு கஷ்டத்தைக் கொடுக்க விரும்பலே சேகர். கடைசிவரை இதுவே நிலைச்சாப் போதும். இன்னொரு விஷயம்? காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்கிறோமோ இல்லே பெற்றோர் பார்க்கிறவங்களைக் கல்யாணம் பண்ணிக்கிறோமோ எதுவாயிருந்தாலும் முதல் திருமணம்தான் மகிழ்ச்சியும் கிளர்ச்சியுமாக இருக்கும். ரெண்டாவது திருமணம்ங்கறது நிறைய கட்டுப்பாடுகளையும் விட்டுக்கொடுத்தலையும் உள்ளடக்கி வாழ வேண்டியிருக்கும். ரெண்டாவது திருமணத்துக்கு பெரும்பாலானோர் தயங்கறதுக்கு இதுவே காரணம். என்கதை கிடக்கட்டும் உன்கதைக்கு வா. இந்த உலகம் ரொம்ப ரொம்ப பெரிசு கோடிக்கணக்கான ஆண்கள் மாதிரி; பெண்களும் இருக்காங்க. இவர்களில் உனக்கு பொருத்தமானவளை தேர்ந்தெடு. அவளோட எல்லாத்தையும் பகிர்ந்துக்க அப்பத்தான் அமைதியும் நிம்மதியுமா வாழமுடியும். அதைவிட்டுட்டு என்கிட்டே வந்து காதல் கத்தரிக்காய்ங்றே. உன்னை நினைச்சா எனக்கு சிரிப்புத்தான் வருது''.
அவள் பேசி முடித்தவுடன், மிகப்பெரிய விஷயத்தை மிகமிக சாதாரணமாக பேசுகிறாளா அல்லது அடிமனதில் ஆசையை வைத்துக்கொண்டு வெளிப்படுத்த முடியாமல் அல்லாடுகிறாளா என நினைத்தவன் சிலநிமிடங்கள் இடைவெளிக்குப்பின் பேச்சைத் தொடர்ந்தான்.
"காதல்னா என்ன? அது எப்படி வரும்? எப்பொழுது வரும்னு தெரியாம நீ பேசறே. அது ஒரு ஈர்ப்புணர்வு, அது எப்பவும் வரலாம் யாருக்கும் வரலாம். இன்னார் மீதுதான் வரணுங்கற கட்டுபாடுகளுக்கு உட்பட்டு வர்றதில்லே. அதுக்கு அழகு முக்கியமில்லே, ஆனா அதைத்தாண்டி பலவிஷயங்கள் இருக்குங்கறதுதான் யதார்த்தமான உண்மை. நீ படிக்கிற காலத்திலே உன்மீது எனக்கு ஈர்ப்பு எற்பட்டதில்லே. இப்போ ஏற்படுதுன்னா உன் வாழ்க்கைப் பிரச்னை எனக்குள்ளே ஏற்படுத்தின பாதிப்பிலே கவலைபட்டு உன்னை காதலிக்க ஆரம்பிச்சுட்டேன். பிரபாகர் உனக்கு பொருளாதார ரீதியா பாதுகாப்பைக் கொடுத்ததுமாதிரி உன்மனசிலே அமைதியையும் நிம்மதியையும் ஏற்படுத்திவைக்கணும்னு விரும்பினேன். அதுதான் காதலா வெளிப்பட்டிருக்கு. எந்தவிதமான மனமாச்சிரியத்துக்கும் இடங்கொடுக்காம உன் புருஷன்கிட்டே பேசி சீக்கிரம் விவாகரத்து வாங்கிட்டு வா. எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாம உன்னை வாழ்க்கைத் துணையாகவும் உன்மகனை என்மகனாகவும் ஏத்துக்க நான் தயாராக இருக்கேன்'' என்றான் சேகர்.
அவன் தன்னை அடைவதில் உறுதியாக இருந்ததைப் புரிந்துக் கொண்டவள் தொடர்ந்து பேசி புரியவைப்பதைவிட மெளனத்தாலும் கால ஓட்டத்தாலும் உணர்த்துவதுதான் சரி என அமைதிகாத்தாள். ஆனால் அது இப்படி எரிமலையாய் வெடித்து தீப்பிழம்பை வெளிப்படுத்தும் என கனவிலும் நினைக்கவில்லை.
வெகுநேரம் வரை வீட்டிற்கு புறப்படாமல் தன் சீட்டிலேயே உட்கார்ந்திருந்தவள் பியூன் வந் சொன்னபிறகு வீட்டிற்கு புறப்பட்டாள்.
அடுத்தநாள் அலுவலகம் வந்தவனை அழைத்த பிரபாகர் ஒரு கடிதத்தை நீட்டினான். அதை வாங்கி படித்த சேகர்; அதிர்ச்சியுற்றான், அது மதுராவின் ராஜினாமா கடிதம்.
இந்த கடிதத்தை அனுப்பிவிட்டு நேத்து நடந்தவிஷயத்தையும் போன்லே சொன்னாள்.
பிரபாகர் பேச்சு அவனை சங்கடத்துக்குள்ளாக்கியது. தன்னை அழைத்து வேலை தந்தவனுக்கு தான் துரோகமிழைத்தது போன்றதொரு குற்ற உணர்வு ஏற்பட பிரபாகரை நேருக்குநேர் பார்க்க முடியாமல் தலைகுனிந்தான்.
"தப்பான நோக்கத்திலே அப்படி செய்யலே, உன்வாழ்க்கை சரியா அமையலே மனசுக்கு பிடிக்காத கணவனோட இருந்து கஷ்டப்படறதைவிட அவன்கிட்டே பேசி டைவர்ஸ் வாங்கிட்டுவா, உன்னை என் மனைவியாகவும் உன்பிள்ளையை என் மகனாகவும் ஏத்துக்க தயாரா இருக்கேன் சொல்லிப் பார்த்தேன். அவ ஒரு முடிவுக்கு வர்றதா தெரியலே. தயங்கிட்டே இருந்தாள். அதைப் போக்கத்தான் கட்டிப்பிடிச்சேன். இதற்குப் பிறகாவது அவளுக்குள் ஒரு மனமாற்றம் வராதான்னு நினைச்சுத்தான் அப்படி செஞ்சேன். ஆனா அவ என்னடான்னா இப்படி லட்டர் அனுப்பியிருக்கா. ஐயாம் ஸோ ஸாரி. ஒரு நல்ல ஸ்டாப்பை இழக்க நான் காரணமா இருந்தது நினைச்சு வருத்தப்படறேன்'' என்றான் சேகர்.
"உன்னோட நடத்தை எல்லாத்தையும் பார்த்துக்கிட்டுத்தான் இருந்தேன். ஆரம்பத்திலே உன்மேல எனக்கு கோபம் வந்துச்சு. அப்புறம் உன் செயலுக்கான காரணம் புரிஞ்சு பிறகு உன்மேல நம்பிக்கை ஏற்பட்டு உன் மூலமா அவவாழ்க்கை மாறட்டும்னு அமைதியாயிட்டேன். நடந்தது நடந்ததா இருக்கட்டும். இனிமேல் நடக்கறது நல்லா இருக்கட்டும். நீ வேலையைப்பாரு. அவ மனசுமாறி வந்தா கண்டினியூ பண்ணிப்பா என்று கூறினான் பிரபாகர்.
பிரபாகருக்கு எல்லாமும் தெரிந்திருக்கின்றது என்பதும் மதுராவின் வாழ்வில் மாற்றம் ஏற்பட விரும்பி அமைதி காத்திருக்கிறான் என்பதும் புரியவர, பிரபாகரின் மீதான மதிப்பு சேகருக்குள் கூடியது.
"நீ அவளை வேலைக்குக் கூப்பிடு, என்னாலே இங்கே வேலை செய்யமுடியாது'' என்றான்சேகர்.
சேகரின் பேச்சைக்கேட்டு பிரபாகர் திடுக்கிட்டான்
"என்னடா ஆச்சு? நீ பேசறது உனக்கு பைத்தியக்காரத்தனமா படலே''.
"இல்லேடா, எனக்கு எங்கேப் போனாலும் வேலைக் கிடைச்சிடும். ஆனா அவளுக்கு நல்ல சம்பளத்துடன் கூடிய வேலையும் பாதுகாப்பும் உன்னைவிட்டா வேற யாராலும் கொடுக்க முடியாது''.
இந்த பதிலைக் கேட்டு சற்றுநேரம் அமைதிகாத்த பிரபாகர் பேச்சைத் தொடர்ந்தான்; "உனக்கு கிடைக்கிலேங்கிற கோபத்திலே சொல்றியோன்னு நினைச்சேன்''.
"அப்படியும் எடுத்துக்கலாம், ஆனா இந்த கோபம் அவளை பழிவாங்குகிற கோபமில்லே, அவமேலே இருக்கிற காதலாலோ, ஸாரி, இனிமேல் அதை அப்படி சொல்லக் கூடாதில்லே. நட்பு மிகுதியாலே அதாவது அன்புமிகுதியாலும் அக்கறையாலேயும் ஏற்பட்ட கோபம்னு எடுத்துக்கலாம். இதுக்கு முன்னாடி வேலை பார்த்த இடத்திலே ஒரு பெண்ணை விரும்பினேன். ரெண்டு வருஷம் தொடர்ந்த காதல் ஒருகட்டத்திலே முடிஞ்சுப் போச்சு. மதுரா நம்பளோட படிச்ச காலத்திலே அவளை திரும்பிக் கூட பார்க்கத் தோணலே, அதையும் மீறி இப்போ ஏற்பட்டதுக்கு காரணம் அவ மீதான அக்கறைதான். அதை ஏத்துக்கறதும் ஏத்துக்காததும் அவ விருப்பம். ஆனா காதல்ங்கறது ரெண்டு பேரு முடிவு பண்ற விஷயம். இந்தநிலையிலே நான் தொடர்ந்து அவளோட வேலைசெய்தா நிறைவேறாத ஆசையை காரணமாக்கிகிட்டு எந்தவிதத்திலாவது கஷ்டத்தைக் கொடுத்துடுவேனோன்னும் அவளை உதாசீனப்படுத்திடுவேனோன்னும் பயமா இருக்கு. ஒருவேளை நான் எல்லாத்தையும் மறந்துட்டு இருந்தாலும் ஏதேச்சையா ஏற்படற பிரச்னைகளை வெச்சு அவ தப்பான காரணம் கற்பிச்சிக்கிட்டா.. பிரச்னை இன்னும் பெரிசாயிடும். அதான் வேண்டாங்கறேன்''.
அவன்பதிலைக் கேட்ட பிரபாகருக்கு அவன் சொல்வது சரி எனப்பட்டது. உண்மைக் காதலுக்காக உண்மையாக தன்னை காட்டிக் கொள்ளும் அவனை சமாதானம் செய்யாமல் அமைதிகாத்தான்.
"சரி நான் வேலையைவிட்டு போய்ட்டதா சொல்லி அவளை வேலைக்குக் கூப்பிடு''.
பிரபாகர் போன் போட்டான் எதிர்முனையில் மதுரா. அவளது ரியாக்ஷனை சேகர் அறிவதற்காக போன் ஸ்பீக்கரை ஆன் செய்தான்
மதுரா நான் பிரபாகர் பேசறேன், ""சேகர் உன்கிட்டே நடந்துகிட்ட விதத்துக்காக மன்னிப்பு கேட்டுக்கிறேன்''.
"அவர் செஞ்ச செயலுக்கு நீங்க ஏன் மன்னிப்புக் கேட்கணும்''
"நீ ரிசைன் பண்ற அளவுக்கு வந்தபின்னர் இப்படித்தானே கேட்க வேணும். நீயும் சரி, சேகரும் சரி நீங்களா வேலைக்கேட்டு இங்கே வரலே, நான்தான் ரெண்டு பேரையும் கூப்பிட்டு வேலைக் கொடுத்தேன். நீங்க ரெண்டு பேரும் பிரச்னை பண்ணிகிட்டு என்னை விட்டுப் போயிட்டீங்க. நீ ரிசைன் லட்டரை அனுப்பிட்டு வீட்டிலே உட்கார்ந்துட்டே, அவன் என்னடான்னா எனக்கு இந்த வேலையே வேண்டாம்னு பெட்டியை எடுத்துட்டு புறப்பட்டு போய்ட்டான். நல்லா இருங்க''
"என்னது போயிட்டாரா?''
பதற்றமாய் வந்த குரலைக் கொண்டு அவன் விலகிப்போவதை அவள் ஏற்கவில்லை என்பதை பிரபாகர் புரிந்துக் கொண்டான்.
"அவரு கெட்டவரு இல்லே, நல்லவருதான். என்மீது அன்பும் அக்கறையும் வெச்சிருந்தார். ஆனா என்னாலத்தான் அதை ஏத்துக்க முடியலே''.
"ஏன்? ஒத்துவராத கணவனை டைவர்ஸ் பண்ணிட்டு அவனை கல்யாணம் பண்ணிக்கலாமே''.
"முதல்லே நான் கூட அப்படித்தான் நினைச்சேன். ஆனா என் பையனோட எதிர்காலம் என்முடிவை மாத்திக்க வெச்சுட்டுது''.
"அவன் உன் பையனை தன் மகனா ஏத்துக்க தயாரா இருக்கானே''.
"ஏத்துப்பார்னு எனக்குத் தெரியும்''.
"அப்புறம் ஏன் தயங்கணும்''.
"என் மகன் அவரை அப்பாவா ஏத்துக்கணுமே.. அதனால தான் என் முடிவை மாத்திக்க வேண்டியதாச்சு''.
"சரி உன் இஷ்டம். அவன்தான் இல்லையே வேலைக்கு வரலாமே''
"வருவேன், ஆனா அவருப்போனதுதான் ஏத்துக்க முடியலே. எங்கப்போறேன்னு சொல்லிட்டுப் போனாரா?''
"எங்கப் போனான்னு தெரியலே, போன் அடிக்கறேன் எடுக்க மாட்டேங்கறான். அவன் பேச்சைவிடு. நீ சீக்கிரம் வந்து சேரு. போனை வெச்சுடறேன்''
பிரபாகர் போனை வைத்துவிட்டு சேகரைப் பாரத்தான்.
"மகனோட எதிர்காலத்தைப் பற்றிய பயம் மட்டுமில்லே உன்னைப்பத்திய கவலையும் அவளுக்கு இருக்குடா, கொஞ்ச காலம் போகட்டும் கன்வீன்ஸ் பண்ணிப் பார்க்கலாம்''.
"வேண்டாண்டா அவளா வரும்போது வரட்டும், வரலேன்னாலும் பரவாயில்லை. வந்தா மனைவி, வரலேன்னா சிநேகிதி. இனிமேல் நாம அவளைப்பத்தி பேச வேண்டாம், எனக்குக் கொஞ்சம் பணம் கொடு நான் ஊருக்குப் போகணும். சீக்கிரம் திரும்பிடுவேன்''.
"நீ ஊருக்குப் போகவேண்டாம். நீ வந்து ஜாயின் பண்ணினபிறகு அம்பத்தூர்ல கம்பெனி பிராஞ்ச் தொடங்கலாம்னு ஒரு இடத்தைப் பிடிச்சுப் போட்டேன் அதிலே நீ கம்பெனி தொடங்கி நடத்து கம்பெனி பிராஞ்சா வேண்டாம். தனி நிறுவனமா உன் பேர்லேயே தொடங்கு அந்தப்பக்கம் இருக்கிற கிளையண்ட் எல்லாம் உனக்கு கீழே கொண்டாந்துடறேன். இந்தப்பக்கம் இருக்கறதை நான் பார்த்துக்கறேன். கஸ்டமர் கேட்டா பிரதர் கன்சன்னு சொல்லிடலாம். ஆரம்பகால செலவுக்கு நான் பணம் தருகிறேன். சம்பாதிச்சுக் கொடுத்துடு''
"தான் பிடித்த கட்டடத்தையும் கொடுத்து தன்னிடம் நீண்ட நாட்களாக உள்ள வாடிக்கையாளர்களையும் விட்டுக் கொடுத்து சொந்தமாக தொழில் தொடங்க பணமும் கொடுத்து.. இதவெல்லாம் உன்னைத்தவிர வேறுயாருக்கும் வராதுடா''
உணர்ச்சி வசப்பட்ட சேகர் பிரபாகரைக் கட்டிக் கொண்டான். ""தேங்க்ஸ்டா. தேங்க்ஸ். உயிருள்ளவரை மறக்கமாட்டேன்''.
"பணத் தேவைக்காகத்தான் போராடுகிறோம். அது தேவையான அளவுக்கு வந்துட்ட பின்னாடி அதுமேலே இருக்கிற ஆசையை விட்டுடணும். ஐ மீன் அதை இல்லாதவங்களுக்குக் கொடுக்கணும் ரெண்டுபேரும் பதினைந்து வருஷம் ஒண்ணா இருந்து ஒருத்தருக்கொருத்தர் உதவியாகவும் ஒத்தாசையாகவும் இருந்தோம். இது ஏன் கடைசி வரையில் தொடரக் கூடாது அதான் செஞ்சேன். அப்புறம் மதுரா''.
பிரபாகர் தொடர, சேகர் தடுத்தான்.
"இனிமே அவ நம்ப தோழி மட்டுமில்லே, நம்ம சிநேகிதியுங் கூட. நீ அவளுக்கு எது செஞ்சாலும் அதிலே என் பங்கும் இருக்கட்டும். அது அவளுக்குத் தெரிய வேண்டாம். அப்புறம் நான் அம்பத்தூர்லதான் இருக்கேங்கறதை அவகிட்டே சொல்லவேண்டாம். முடிஞ்சா அவளையும் அவள் கணவனையும் கூப்பிட்டு பேசி பாரு. அவ பிராப்ளம் சால்வாயிட்ட பிறகு என்னைப்பத்தி அவ நினைக்கமாட்டா. மறுபடியும் என்னை நினைச்சு குழம்பாம அவ வாழ்க்கையை அவ எதிர்கொள்ளட்டும். அதுக்காககத்தான் சொல்றேன் புரிஞ்சுதா''
பிரபாகர் தலையசைத்தான்.

நெய்வாசல் நெடுஞ்செழியன்


 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com