மாநபி மணி மொழியில் மருத்துவம்

அல்லாஹ் எந்த நோயையும் அதற்குரிய நிவாரணத்தை அருளாமல் இறக்குவதில்லை என்று இறைதூதர் இனிய நபி (ஸல்) அவர்கள் இயம்பியதை அறிவிக்கிறார் அபூஹுரைரா (ரலி) நூல் புகாரி. எல்லா நோய்களையும் நீக்கும்


அல்லாஹ் எந்த நோயையும் அதற்குரிய நிவாரணத்தை அருளாமல் இறக்குவதில்லை என்று இறைதூதர் இனிய நபி (ஸல்) அவர்கள் இயம்பியதை அறிவிக்கிறார் அபூஹுரைரா (ரலி) நூல் புகாரி. எல்லா நோய்களையும் நீக்கும் மருந்தை நீக்கமற நிறைந்துள்ள இறைவன் உண்டு பண்ணி இருக்கிறான். நோய் ஏற்பட்டால் மருத்துவம் செய்யுங்கள்.  தடை செய்யப்பட்ட ஹராமான மருத்துவம் வேண்டாம் என்ற ஏந்தல் நபி(ஸல்) அவர்களின் மணிமொழியை அறிவிக்கிறார் அபூதர்தா (ரலி) நூல்- அவூதாவூத். இன்றைய மருத்துவத்துறை புதிய புதிய நோய்களைக் கண்டறிந்து அந்நோய்களுக்குரிய சிகிச்சைகளையும் கண்டுபிடிப்பதைக் காண்கிறோம். புத்தியைப் பேதளிக்கச் செய்யும் போதை பொருள்களைக் கொண்டு மருத்துவம் செய்வதை மாநபி (ஸல்) அவர்கள் தடுத்ததைத் தொடுத்து உரைக்கிறார் வாபில் இப்னு ஹஜ்ரு (ரலி) நூல் -முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ.
இறப்பைத் தவிர பிற நோய்களுக்குக் கருப்பு பயற்றில் (கருஞ்சீரகம்) நிவாரணம் உண்டு என்று உத்தம நபி (ஸல்) அவர்கள் உரைத்ததை அறிவிக்கிறார் அபூஹுரைரா (ரலி) நூல்- புகாரி, முஸ்லிம், திர்மிதீ. இன்று கருஞ்சீரக மருந்துகள் இல்லாத இடமே இல்லை. கீரையை கொண்டு உங்கள் உணவை அலங்கரியுங்கள். நபிமார்களின் குழம்பு கீரை; அரசர்களின் குழம்பு இறைச்சி என்றும் இறைதூதர் நபி (ஸல்) அவர்கள் அறிவித்ததை மஙானீ நூலில் காணலாம். சித்த, ஆயுர்வேத, யூனானி, அலோபதி முதலிய அனைத்து மருத்துவ முறைகளிலும் கீரையின் பயன்கள் சீராய் குறிப்பிடப்படுவதைக் 
காண்கிறோம்.
விலா வலிக்கு ஜைத்தூண் எண்ணெயைக் கொண்டும் வர்ஸ் என்ற ஏமன் நாட்டு மூலிகையை கொண்டும் மருந்து தயாரிக்க மாநபி (ஸல்) அவர்கள் ஏவியதை எடுத்துரைக்கிறார் ஜைதுப்னு அர்கம் (ரலி) நூல்- திர்மிதீ. ஜைத்தூண் எண்ணெய் என்பது ஆலிவ் எண்ணெய். உற்பத்தி உறுப்புகளை உறுதியாக்கி உற்பத்தி பெருக்கத்திற்கு உதவும். ரத்த கொதிப்பைக் கட்டுப்படுத்தும். முதுமையின் தளர்ச்சியைத் தடுக்கும் தன்மை உடையது ஆலிவ் எண்ணெய் என்று ஆய்வாளர்கள் அறிவிக்கின்றனர். விலா வலி, தொண்டை வலிக்கு அகர் (அதிமதுர) குச்சி சிறந்த மருந்து என்பதும் மாநபி (ஸல்) அவர்களின் மணிமொழி. மூக்கில் ரத்தம் வடிந்தால் அதிமதுர குச்சியை நீரில் கரைத்து மூக்கில் செலுத்தினால் வழியும் ரத்தம் வடியாது தடுக்கும்.
எவர் ஒவ்வொரு நாளும் காலையில் ஏழு அஜ்வா பேரீச்சம் பழங்களைத் தின்கிறாரோ அவருக்கு அந்நாள் முழுவதும் நஞ்சை முறிக்கும் சக்தி உருவாகும் என்று உத்தம நபி (ஸல்) அவர்கள் உரைத்ததை அறிவிக்கிறார் ஸஃதுப்னு அபீவக்காஸ் (ரலி) நூல்- புகாரி, முஸ்லிம், அபூதாவூத். இச்செய்தியை அன்னை ஆயிஷா (ரலி) அறிவிப்பது முஸ்லிமில் உள்ளது. அஜ்வா என்னும் பேரீச்சம் பழம் மதீனாவில் விளையும் உயர் ரக பழம்; விலையும் அதிகம். ஒவ்வொரு தாவரத்தையும் சுவைக்கும் பசுவின் பால் புருவ வியர்வையை விரல் நீக்குவது போல நெஞ்சு எரிச்சலை நீக்கும், முதுகு எலும்பை வலுவாக்கும். மூளையை பலப்படுத்தும். பார்வையை தெளிவாக்கும். மறதியை விரட்டும் என்ற மாநபி (ஸல்) அவர்களின் மணிமொழியை அறிவிப்பவர் அப்துல்லாஹ் இப்னு மசூத் (ரலி) நூல்- புகாரி, முஸ்லிம். பாலில் பேரீச்சம் பழத்தை வேக வைத்து வெண்ணெய் சேர்த்து சாப்பிடுவார்கள். சாந்த நபி (ஸல்) அவர்கள். இப்படி சாப்பிடுவதால் தாது விருத்தியாகும்; மூளையும் இதயமும் வலுவுறும். பாலுடன் பருப்பு வகைகளைச் சேர்த்து சாப்பிடுவது கூடாது. அதனால் தசைப் பிடிப்பு ஏற்படும். பாலை அதிகம் அருந்துவது கண் பார்வையை குறைக்கும். மூட்டுவலியை உண்டாக்கும். இரைப்பையை பருக்க வைக்கும் என்றும் ஏந்தல் நபி (ஸல்) அவர்கள் எச்சரித்தார்கள். இரைப்பை கல் இன்று பலரை வருத்தும் நோயாக உள்ளது.
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஒரு துண்டு பார்லி ரொட்டியில் பேரீச்சம் பழத்தை வைத்து இது தாவர ரொட்டி என்று மொழிந்ததை அறிவிக்கிறார் யூசுப் இப்னு அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரலி) நூல்- அபூதாவூத். பார்லி சூப் 
காய்ச்சலைக் குறைக்கும். சிறுநீரைப் பெருக்கி சுத்தப்படுத்தும். வெந்தயத்தின் விந்தை பயனை அறிவோர் எடைக்கு எடை தங்கம் கொடுத்து வெந்தயம் வாங்குவர் என்ற ஏந்தல் நபி (ஸல்) அவர்களின் நன்மொழி ஜாத்துல் மஆத் என்ற நூலில் உள்ளது. வெந்தயம் இனிப்பு நீரை விரட்டும் விரோதி. ரத்த கொழுப்பைக் குறைக்கும். பாலூட்டும் தாய்மார்களின் பாலைப் பெருக்கும். வெந்த வெளி புண்கள் வயிற்றுப் புண்களை ஆற்றும்.
தாஹா நபி (ஸல்) அவர்கள் ஆண்கள் தங்கம் அணிவதைத் தடுத்தார்கள். அறிவிப்பவர் -அபூஹுரைரா (ரலி) நூல் -புகாரி. இன்றைய மருத்துவ ஆய்வுகள் ஆண்கள் தங்கம் அணிந்தால் ஆண்மை குறைகிறது என்று கூறுகிறது. 
மாநபி (ஸல்) அவர்களின் மணிமொழியில் மறைந்துள்ள மருத்துவ மகிமையை உணர்ந்து உண்ணும் உணவினை உரிய முறையில் தேர்வு செய்து சீராய் உண்டு தீரா நோய்கள் தீண்டாது தடுத்து நலமாய் வளமாய் வாழ்வோம்.
- மு.அ. அபுல் அமீன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com