திருவடிசூலத்தில் திவ்ய தேசங்களின் சங்கமம்!

திருவடிசூலத்தில் திவ்ய தேசங்களின் சங்கமம்!

ஸ்ரீமந்நாராயணன் சகல புவனங்களையும், அதில் உறையும் ஜீவராசிகளையும் ரட்சிக்கவும், தர்மத்தை காத்து நிலை நிறுத்தவும் திருவுள்ளம் கொண்டு யுகங்கள் தோறும் பற்பல திவ்ய அவதாரங்களை எடுத்து திருவருள் புரிந்துள்ளார

ஸ்ரீமந்நாராயணன் சகல புவனங்களையும், அதில் உறையும் ஜீவராசிகளையும் ரட்சிக்கவும், தர்மத்தை காத்து நிலை நிறுத்தவும் திருவுள்ளம் கொண்டு யுகங்கள் தோறும் பற்பல திவ்ய அவதாரங்களை எடுத்து திருவருள் புரிந்துள்ளார்.  பகவானை துதித்து ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட  திவ்ய தேசங்கள், இந்த பூ உலகில் 106 என்ற எண்ணிக்கையிலும், வானுலக திருப்பதிகளாகிய பாற்கடல், திருவைகுந்தம் ஆகிய இரண்டும் சேர்ந்து 108 - ஆக வழிபடப்படுகின்றது. 

இப்புண்ணிய ஸ்தலங்களில் பகவான் ஒவ்வொருவருக்கும் காட்சியளித்து அனுக்கிரகம் செய்த பெருமையுடையது என்பர். இத்தகைய சிறப்பு வாய்ந்த திருமால் திவ்ய தேசங்களை நாம் வாழும் காலத்திற்குள் தரிசிக்க வேண்டும்! இதற்கெல்லாம் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், பொருளாதார வசதிகளும் இருக்க வேண்டுமல்லவா? அதனாலேயே நாம் தரிசிக்க ஏதுவாக, 108 வைணவ திவ்ய தேசங்களையும் ஒரே இடத்தில் அமைத்து தந்துள்ளார்கள் தேவி உபாசகர் புண்ணியக்கோட்டி மதுரை முத்துசுவாமிகள்.

திருவடிசூலம் ஓர் அற்புத ஸ்தலமாகும். ஞானசம்பந்தப் பெருமானின் தேவாரப்பதிகம் பெற்ற திருத்தலம். இங்கு ஈஸ்வரன் கோயிலிருந்து சற்று தொலைவில் மலைகளும், வனங்களும் சூழ்ந்த பகுதி ஸ்ரீ கோயில்புரம் என்று அழைக்கப்பட்டு வருகின்றது. வேகவதி நதி ஒரு காலத்தில் ஓடி வளப்படுத்திய பகுதி என கூறப்படுகிறது. தற்போது அந்த நதி அந்தர்வாகினியாக (மறைவாக, பூமியின் கீழ்) இருப்பதாக ஐதீகம். 

துவாபரயுகத்தில் பகவான் கண்ணன் பசுக்கூட்டங்களுடன் வேணுகானம் இசைத்த இடம். இந்த கலியுகத்தில் தன் தங்கையுடன் கோயில் கொண்டு அருள்புரிய திருவுள்ளம் கொண்டுள்ளார். அந்த எண்ணக்கிடக்கையை அம்பாளின் அருளாளர் மூலம் ஈடேற்றிக் கொண்டார். அதன் தாக்கம் தான் நாம் இப்பொழுது காணும் விஸ்வரூபிணி தேவி கருமாரி அம்மன் சந்நிதியும், ஸ்ரீவாரு வேங்கடேசப் பெருமாள் சந்திதியும். ஏற்கெனவே ஆதி மகாசக்தி பலயுகங்களுக்கு முன் திருவடி பதித்து திரிசூல நாட்டியம் ஆடிய இடம்.

இத்தலத்திற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில், தற்போது ஸ்ரீவேங்கடேசப் பெருமாள் கோயிலைச் சுற்றி 108 வைணவ திவ்ய தேசங்களும் சிறிய தனித்தனி ஆலயமாகக் கட்டப்பட்டுள்ளது. இந்த அமைப்பு அமைவதற்கு முன், நிலவுலகில் உள்ள ஒவ்வொரு திவ்ய தேசங்களுக்கும் சென்று, அங்கு ஒவ்வொரு சாளக்கிராமங்களை வைத்து பூஜிக்கப்பட்டு அத்தலத்தின் புண்ணிய தீர்த்தங்களைக் கொண்டே, அந்தந்த திவ்ய தேச எம்பெருமாள் எவ்வகையான ரூபத்தில் ஆராதிக்கப்பட்டு வருகின்றாரோ அத்தகு ரூபங்களாகவே திரு உருவம் அமைத்து பிரதிஷ்டையான பெருமையுடையது. இந்த திவ்ய தேச சந்நிதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 2018 -இல் அஷ்டபந்தன மஹாசம்ப்ரோக்ஷண வைபவம் சிறப்பாக நடந்தேறியது.

திருமலையில் எழுமலைகளைக் கடந்து பெருமாளை சேவிக்க வேண்டும். ஆனால் இங்கு ஸப்த சைலஜ மத்யபீடம் என்று ஏழுமலைகளின் நடுவே கோயில் கொண்டுள்ள திருவேங்கடவனையும் அவரைச்சுற்றி 108 வைணவ திவ்யதேசங்களையும் ஒரே சேர தரிசிப்பது என்பது நாம் செய்த புண்ணியமே. கண்கொள்ளாக் காட்சி. வேறு எங்கும் இத்தகைய அமைப்பு இருப்பதாக தெரியவில்லை.

பெருமாளின் வழிபாட்டிற்குரிய புனிதமான புரட்டாசி மாதத்தில் இந்த திவ்ய தேசங்கள் தரிசனம் கண்டு திருவேங்கடவனின் பேரருளைப் பெறுவோம்.
காஞ்சி மாவட்டம், செங்கற்பட்டு - திருப்போரூர் வழித்தடத்தில் செங்கையிலிருந்து 9 கி.மீ தூரத்தில் உள்ளது திருவடிசூலம். 

தொடர்புக்கு:  98405 00272 . 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com