பொருநை போற்றுதும்! - 8

திரிகூட ராசப்பரின் சமகாலத்துப் பொருநைக்கரைப் புலவர்களில் ஒருவர் நமச்சிவாயக் கவிராயர். பாபநாசத்தை ஒட்டிய விக்கிரமசிங்கபுரத்தில் தோன்றியவர்.
பொருநை போற்றுதும்! - 8

திரிகூட ராசப்பரின் சமகாலத்துப் பொருநைக்கரைப் புலவர்களில் ஒருவர் நமச்சிவாயக் கவிராயர். பாபநாசத்தை ஒட்டிய விக்கிரமசிங்கபுரத்தில் தோன்றியவர். பாபநாசம் அருள்மிகு உலகம்மைமீது அபார பக்தி பூண்டிருந்தார். நாள்தோறும் உலகம்மையை அர்த்தஜாம பூஜையில் தரிசித்துவிட்டு வீடு திரும்புவார். திரும்பும்போது, அம்மைமீது பாடல்களைப் பாடிக் கொண்டேயும் நடப்பது இவர் வழக்கம். இவருக்கே தெரியாமல், அம்மை இவரைப் பின்தொடர்ந்து நடப்பாளாம். 

ஒருநாள் இவ்வாறு நடக்கும்போது, கவிராயர், தாம் தரித்திருந்த தாம்பூலத்தை உமிழ, அதன் துளிகள், பின் தொடர்ந்த அம்மைமீது தெறித்துவிட்டன. அவற்றைத் துடைக்காமல் அம்மையும் சந்நிதிக்குத் திரும்பிவிட்டாள். மறுநாள் காலை, அம்மையின் ஆடையில் படிந்திருந்த தாம்பூலத் துளிபற்றி, அர்ச்சகர் அரசரிடம் முறையிட... அரசரும் பரிகாரம் தேட முயல... அரசர் கனவில் தோன்றிய அம்பிகை, உண்மை உரைத்துக் கவிராயருக்கு மரியாதை செய்யச் சொன்னாள். கவிராயரை மாலை மரியாதையோடு கோயில் சந்நிதிக்கு அழைத்து வரச் செய்த மன்னர், என்ன இருந்தாலும் மனம் சமாதானமடையாமல், கவிராயரைச் சோதிக்க எண்ணினார். அம்பிகையின் திருக்கரத்தில் பூச்செண்டு ஒன்றை வைத்துப் பொன் கம்பிகளால் கட்டிவிட்டு, பாட்டால் அச்செண்டை எடுக்கும்படிக் கவிராயரைப் பணித்தார்.  கவிராயரும் பாடப் பாட, பொன் கம்பிகள் ஒவ்வொன்றாகத் தெறித்து விழுந்து, கவிராயரின் பெருமையை உலகுக்கு உணர்த்தின. 

சிங்கை (விக்கிரமசிங்கபுரம்) உலகம்மை மீது இவர் பாடிய உலகம்மைப் பிள்ளைத் தமிழ், உலகம்மை அந்தாதி, உலகம்மை கொச்சகக் கலிப்பா, உலகம்மை பதிற்றுப்பத்து அந்தாதி, உலகம்மை சந்த விருத்தம் ஆகிய ஐந்து நூல்களோடு, அத்தலத்துச் சிவபெருமான்மீது பாடியுள்ள சிங்கைச் சிலேடை வெண்பா என்னும் நூலும் சேர்த்து "சிங்கைப் பிரபந்தத் திரட்டு' என்று வழங்கப்படுகின்றன. 

நமச்சிவாயக் கவிராயரை மட்டுமல்லாமல், விக்கிரமசிங்கபுரம், மேலும் சில பெருமக்களையும் தந்துள்ளது. நமச்சிவாயக் கவிராயரின் தந்தையார் முக்களாலிங்கனார், பாபநாசத் தலபுராணம் பாடினார். நமச்சிவாயக் கவிராயரின் தமையனார் ஆனந்தக்கூத்தர். இவரின் மகனே, சிவஞான போதத்திற்குத் திராவிட மாபாடியம் பாடிய சிவஞான முனிவர் ஆவார். இளமையிலேயே துறவுபூண்டு சிவஞானத் தம்பிரான்(இவரின் சமாதி நாள் 17.04.1785) என்று போற்றப்பெற்ற இவர், அகிலாண்டேஸ்வரிப் பதிகம், பஞ்சாக்ஷர தேசிக மாலை, இலக்கண விளக்கச் சூறாவளி, சிவஞான சித்தியார் சுபக்கப் பொழிப்புரை, தொல்காப்பியச் சூத்திர விருத்தி, திருத்தொண்டத் திருநாமக் கோவை, அமுதாம்பிகைப் பிள்ளைத் தமிழ், இளசை அந்தாதி, சித்தாந்தப் பிரகாசிகை, தர்க்க சங்கிரஹம் உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதினார். இலக்கியம், இலக்கணம், தர்க்கம், கண்டனம், உரை விளக்கம் என்று பல்வகைப்பட்ட நூல்களின் ஆசிரியராகத் திகழ்ந்த சிவஞான முனிவர், தமிழகமெங்கும் பயணித்தார்; ஆங்காங்கே தமிழ்ப் பணியும் ஆன்மிகப் பணியும் ஆற்றியதால், மாணாக்கர்கள் பலர் இவரிடம் பயின்றனர். இவருடைய தலை மாணாக்கரே, கந்தபுராணம் பாடிய கச்சியப்பர். 

18-ஆம் நூற்றாண்டின் கடைப்பகுதியில், வீரபாண்டிய கட்டபொம்மனின் சமகாலத்தவராக வாழ்ந்த முத்தாலங்குறிச்சி கந்தசாமிப் புலவர் பல்வேறு நொண்டி நாடகங்களைப் பாடினார்.  இவருக்குக் கண்பார்வை முழுவதுமாகப் பறிபோனது. திருச்செந்தூர் முருகப்பெருமான்மீது நொண்டி நாடகம் பாட, கண் பார்வை மீண்டது. இதுகுறித்துக் கேள்வியுற்ற திருவிதாங்கூர் மன்னர் மார்த்தண்ட வர்ம குலசேகர ராமராஜர், ஈற்றடி கொடுத்துப் பாடச் சொல்ல, தொடர்ந்து திருவனந்தபுரம் நொண்டி நாடகம் பாடினார். மன்னர் கொடுத்த ஏராளமான பொன்னையும் பொருளையும் கொணர்ந்து, திருச்செந்தூர் திருக்கோயில் திருப்பணி செய்தார். 

நெல்லைச் சாரலின் தமிழ்ச் சாரல் 17-ஆம் நூற்றாண்டிலேயும், நெல்லைச் சீமையானது, பெரும் பண்டிதர்களைப் பலரைக் கண்டுள்ளது. தமிழுக்குத் தனிப்பெருமை சேர்த்த குமரகுருபர சுவாமிகளை நாம் ஏற்கெனவே சந்தித்தோம். அவருடைய இளைய சகோதரர் குமார கவிராயர் என்றழைக்கப்பட்டார். இவரும் கவிநூல்கள் செய்தார். 

சங்கர நமச்சிவாயர் என்னும் புலவர், ஊற்றுமலை ஜமீன்தாரின் ஆஸ்தானப் புலவராகத் திகழ்ந்தார். ஜமீன்தார் மருதப்பப் பாண்டியரின் வேண்டுகோளுக்கிணங்க, நன்னூலுக்கு விருத்தியுரை வகுத்தார். இதுவே நன்னூலுக்கான உரைகளில் மிகச் சிறந்ததாகப் போற்றப்படுகிறது. 

ஊற்றுமலை என்பது சங்கரன்கோவிலுக்கு அருகில் இருக்கும் பகுதி. வீரை என்று வழங்கப்படும் வீரகேரளம்புதூர்தான், இதன் முக்கிய ஊர். ஊற்றுமலை ஜமீனுக்குக் குலதெய்வமாக விளங்கிய வீரை நவநீதகிருஷ்ணன் திருக்கோயில் நைவேத்யத்தில் லட்டு என்பது தேங்காய் அளவும், தேன்குழல் என்பது பெரிய சந்தனக்கல் அளவும் இருக்குமாம். 

ஊற்றுமலையோடும் நெல்லையோடும் எண்ணிப் பார்க்கவேண்டிய மற்றுமொரு 17- ஆம் நூற்றாண்டுப் பெரும்புலவர், கடிகை முத்துப் புலவர் ஆவார். எட்டையபுரத்தில் பிறந்து, சமஸ்தானப் புலவராக இருந்தார். திக் விஜயம், பக்தி, அகவாழ்க்கை என்ற வகை நூல்களைப் பாடினார். கடலரசனை நோக்கித் தலைவி இரங்குவதாக அமைந்த "சமுத்திர விலாசம்' என்னும் நூல், இவருக்கு மிக்க புகழ் தந்தது. இவருடைய மாணாக்கரே, இஸ்லாமியத் தமிழுக்குப் பெருந்தொண்டாற்றிய உமறுப்புலவர் ஆவார். 

தாமிரவருணிக் கரை, பல்வேறு தமிழ்ப் புலவர்களைத் தந்துள்ளது. புலவராற்றுப்படை (1695) பாடிய திருமேனி ரத்தினக் கவிராயர் (நாம் ஏற்கெனவே கண்டுள்ள தென்திருப்பேரை காரி ரத்தினக் கவிராயரின் மைந்தர் இவர்), சங்கர நமச்சிவாயரின் திருக்குமாரரும் தத்துவ சித்தாந்த நூல்களை எழுதியவருமான முத்துக்குமாரசுவாமிப் பிள்ளை, திருச்செந்தூர் புராணம் பாடிய திருச்செந்தூர்க் கோயில் குருக்களான வென்றிமாலைக் கவிராயர் (17-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி), வடமொழி-தென்மொழி இலக்கண ஒற்றுமைகளை எடுத்துக் காட்டும் "பிரயோக விவேகம்' என்னும் நூல் செய்த ஆழ்வார் திருநகரி சுப்பிரமணிய தீக்ஷிதர் (17-ஆம் நூற்றாண்டு), பொதிகை நிகண்டு கொடுத்த கல்லிடைக்குறிச்சி சாமிநாதக் கவிராயர், அவருடைய திருமகனார் சிவசுப்பிரமணியக் கவிராயர், அணியாபரண நல்லூர் வைரவநாதக் கவிராயர், ஆழ்வார் திருநகரி வேங்கடத்துறைவான் கவிராயர், கருவை தலபுராணம் இயற்றிய கருவை எட்டிச்சேரி திருமலைவேல் கவிராயர், குருகை மாலை பாடிய ஆழ்வார் திருநகரி ராமரத்தினக் கவிராயர், வாசுதேவ நல்லூர் புராணம் பாடிய சொக்கம்பட்டி பொன்னம்பலம் பிள்ளை, வண்ணம் பாடுவதில் வல்லவராகத் திகழ்ந்து "புலவர் கோடாலி' என்றழைக்கப்பட்ட தென்காசிப் பொன்னம்பலம் பிள்ளை, தேசிகர் வண்ணமும் இரட்டை மணிமாலையும் இயற்றிய திருநெல்வேலி அம்பலவாணக் கவிராயர் (19-ஆம் நூற்றாண்டு), திருப்புடைமருதூர் பதிற்றுப்பத்து அந்தாதி பாடிய அவருடைய மகன் முத்துக்குமாரசுவாமிக் கவிராயர், ஆழ்வார் திருநகரியின் வெள்ளூர்க் கவிராயர், செங்கோட்டை கவிராச பண்டாரம் என்று இந்தப் பட்டியல் தொடர்கிறது. 

தாமிரவருணியின் ஜீவப் பிரவாகத்தைப் போலவே, இவளின் கரையிலிருந்து புறப்படும் தமிழின் பிரவாகமும் என்றும் வற்றாத ஜீவநதிதான்! 

பொருநைத் தமிழின் பேரலைகளில் ஒருவர், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்! சங்கரலிங்கம் என்னும் இயற்பெயரோடு, திருநெல்வேலியில் 1839-இல் தோன்றிய இவர், எட்டு வயதிலேயே கவிதை மழை பொழிந்தார்; இதனால், "ஓயா மாரி' என்று பாராட்டப்பெற்றார்.  முருக பக்தரானார்.  உச்சி முதல் உள்ளங்கால் வரை திருநீற்றை உத்தூளனமாகப் பூசிக்கொண்டு, கையில் தண்டம் ஏந்தினார்; இக்கோலத்தைக் கண்டோர் இவரை "தண்டபாணி சுவாமிகள்' என்றழைத்தனர். சந்த யாப்பில், "வண்ணம்' என்று வழங்கப்படும் கவிதைகளை அதிகம் பாடினார்; ஆகவே, வண்ணச் சரபம் சுவாமிகள் ஆனார். 
லட்சக்கணக்கில் பாடல்கள் இயற்றினார். இசைக் கீர்த்தனைகள் வரைந்தார். தமிழலங்காரம், அருணகிரிநாதர் புராணம், புலவர் புராணம், வருக்கக் குறள், சத்திய வாசகம், தில்லைத் திருவாயிரம், திருவரங்கத் திருவாயிரம், திருமயிலைக் கலம்பகம், சென்னைக் கலம்பகம், பழநித் திருவாயிரம் உள்ளிட்ட ஏராளமான நூல்களையும் குருபர தத்துவம் என்னும் பெயரிலான தன் வரலாற்றையும் படைத்தார். 

பெண் விடுதலை, விதவை மறுமணம் ஆகியவற்றை ஆதரித்துப் புரட்சிக் குரல் கொடுத்தார். ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்தார். "நீசர் குடை நிழலில் வெம்பித் தரைமகள் அழும் துயர் சகிக்கிலேன்' என்று பாடி அந்நிய ஆதிக்கத்தைச் சாடினார். கடும் தவத்தில் ஈடுபட்ட வண்ணச் சரபம் சுவாமிகள், 1898-இல் மறைந்தார். 

நெல்லைத் தச்சநல்லூரில் 1885-இல் பிறந்தவர் அழகிய சொக்கநாதப் பிள்ளை. அனவரத நாதர் பதிகம், சங்கரநயினார் கோவில் அந்தாதி, நெல்லை நாயக மாலை, கோதைக் கும்மி போன்ற நூல்களையும் பத சாகித்யங்கள் பலவற்றையும் யாத்தார். இவர் பாடிய காந்திமதியம்மைப் பிள்ளைத் தமிழ் கேட்டு, ராஜவல்லிபுர வள்ளல் முத்துசாமி, இவருக்கு வைரக் கடுக்கன் இட்டுப் பெருமைப்பட்டாராம். 

"தமிழ் வளர்த்த திருநெல்வேலி' என்னும் நிலையில், மிக முக்கியமாக எண்ணப்படவேண்டியவர்,  நெல்லை வண்ணாரப் பேட்டைத் திருப்பாற்கடல் நாதன் கவிராயர். முத்து வீரியம் என்னும் இலக்கண நூலுக்கு உரை வகுத்த இவர், உ.வே.சா. அவர்களுக்குப் பத்துப்பாட்டு, சீவக சிந்தாமணி, கொங்குவேள் மாக்கதை போன்ற நூல்களின் ஏட்டுச் சுவடிகளைக் கொடுத்தார்.  

- தொடரும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com