பொருநை போற்றுதும்! 28 - டாக்டர் சுதா சேஷய்யன்

ராஜராஜ சதுர்வேதி மங்கலத்துப் பிடாகையாக விளங்கியபோதிலும், சோழர் ஆட்சிக் காலத்திலும், தொடர்ந்து வந்த சோழ பாண்டியர் ஆட்சிக் காலத்திலும் அம்பாசமுத்திரம்,
பொருநை போற்றுதும்! 28 - டாக்டர் சுதா சேஷய்யன்

ராஜராஜ சதுர்வேதி மங்கலத்துப் பிடாகையாக விளங்கியபோதிலும், சோழர் ஆட்சிக் காலத்திலும், தொடர்ந்து வந்த சோழ பாண்டியர் ஆட்சிக் காலத்திலும் அம்பாசமுத்திரம், பிரம்மதேசம், மன்னார் கோயில் போன்ற இடங்களுக்குக் கிட்டிய முக்கியத்துவம், கல்லிடைக்குறிச்சிக்குக் கிட்டவில்லை. ஆனால், இதன் பின்னர், பிற்காலப் பாண்டியர்களின் ஆட்சிக் காலம், கல்லிடைக்குறிச்சிக்குப் பொற்காலம் எனலாம். இந்தக் காலகட்டத்தில்தான், ஏராளமான திருக்கோயில்கள் இங்கு எழுப்பிக்கப்பெற்றன; சிதிலம் நோக்கிச் சென்ற பழங்கோயில்கள் திருப்பணி செய்யப்பெற்றன. சமீபகாலங்களில், மங்கல இசைக்கும் நாயன மேளத்திற்கும் இங்கு இருக்கும் ஈடுபாட்டைக் கண்டு, ஸ்ரீ ஜகத்குரு சிருங்கேரி பீடாதிபதி ஸ்ரீ பாரதி தீர்த்த சுவாமிகள், "கல்லிடைக்குறிச்சியா, கல்யாணக்குறிச்சியா' என்றே சிலாகித்தார்களாம்.
 இதெல்லாம் சரி, அதென்ன "கல்லிடைக்குறிச்சி' என்கிறீர்களா? மலையும் மலை சார்ந்த பகுதியும் குறிஞ்சி நிலம், இல்லையா? குறிஞ்சி நிலப் பகுதியின் மக்கள் குடியிருப்புகளுக்குக் "குறிச்சி' என்று பெயர். அதாவது, குறிச்சி என்பது குறிஞ்சி நிலத்து ஊர். நெல்லைச் சீமையின் பல பகுதிகள், மேற்குத் தொடர்ச்சி மலையின் சரிவுகளிலும், சரிவுகளை ஒட்டியும் அமைந்துள்ளன. இதனால், ஆங்காங்கே மலைக் குன்றுகளும் பாறைகளும் விரவிக் கிடக்கும். மேற்குத் தொடர்ச்சி மலையின் கடைப்பகுதியின் கிழக்குச் சரிவில் உள்ளது கல்லிடைக்குறிச்சி; மலைக் குன்றுகளுக்கு இடையில், தமிழ்நாட்டுக்கும் கேரளத்துக்கும் இடையிலான கணவாய்ப் பகுதியில் இருப்பதால், அவ்வப்போது சேரர் ஆளுகைக்குள்ளும் இவ்வூர் இருந்துள்ளது.
 "செண்பகராம மஹாராஜா' என்று செல்லமாக அழைக்கப்பட்ட கோதை ஆதித்ய வர்மன், வேணாட்டின் அரசராக 1469 -இல் பட்டமேறி 1484 - வரை ஆட்சி நடத்தினார். தம்முடைய ஆட்சிக்காலம் முழுவதும் கல்லிடைக்குறிச்சியையே தலைநகரமாகத் தேர்ந்தெடுத்துக்கொண்டு, இங்கிருந்தே ஆட்சி புரிந்தார்.
 கல்லிடைக்குறிச்சியின் திருக்கோயில்கள் புகழ் பெற்றவை. பண்டைய காலத்தில் பிரபலமாகவிருந்த சில கோயில்கள் இன்றில்லை; அல்லது சிதிலமாக மட்டுமே உள்ளன. நிலையுடைய பாண்டீச்வரமுடையார் கோயில், நாலாயிரம் உடையார் கோயில், நாகேச்வரமுடையார் கோயில், கொசக்குடி பெருமாள் கோயில் போன்றவை இவ்வகையைச் சேரும். குலசேகரமுடையார் கோயிலும் பகழிக்கூத்தர் கோயிலும் வரலாற்றுப் பெருமை கொண்டவை. ஊரின் கிழக்குப் பகுதியில் உள்ள மானேந்தியப்பர் ஆலயமும் மேற்குப் பகுதியில் உள்ள லக்ஷ்மிவராஹர் கோயிலும் பற்பல திசைகளிலிருந்தும் பக்தர்களை ஈர்க்கின்றன.
 லக்ஷ்மிவராஹர் மீது ஆபோகி ராகத்தில் "ஸ்ரீ லக்ஷ்மி வராஹம் பஜேஹம்' என்னும் க்ருதியை இயற்றியுள்ள முத்துஸ்வாமி தீக்ஷிதர், "சங்கர ப்ரியகரம் குபேர ப்ரதிஷ்டிதம் சங்க சக்ரதரம்' என்றே பாடுகிறார். இந்தக் கோயிலைக் குபேரன் எழுப்பினானா? சிலை பிரதிஷ்டை செய்தானா?
 தலபுராணத்தில் காணப்படுகிற சுவாரசியம் இது. சிலசாலிபுரத்தில் ஆட்சி நடத்திய விஷ்ணுதர்மன் என்னும் மன்னன், பெரும் யாகம் ஒன்றைச் செய்தான். இந்த யாகத்துக்கு, பிரம்மா, மஹேச்வரன், தேவேந்திரன், குபேரன் ஆகியோர் தத்தம் சுற்றம் நட்புடன் வந்திருந்தனர். யாகம் நிறைவடைந்தவுடன், பிறரெல்லாம் புறப்பட்டுச் சென்றுவிட, புறப்பட மனமில்லாத குபேரன் மட்டும் தயங்கினான். பின்னர், யாகம் நடைபெற்ற இடத்தில் கோயில் எழுப்பச் சொன்னான். அவனுடைய யோசனைப் படியே லக்ஷ்மி வராஹர் கோயில் எழுப்பப்பட்டதால், "குபேர ப்ரதிஷ்டிதம்'. மூல விக்ரஹத்தைக் குபேரனே ப்ரதிஷ்டை செய்தான் என்றும் கூறப்படுகிறது. இந்த வராஹர் மீது, ஆதிவராக வருக்கக்கோவை என்னும் நூல் பாடப்பெற்றுள்ளது. கரந்தையார் பாளையம் என்பதைச் சுருக்கிக் கரந்தை ஆதிவராகர் வருக்கக்கோவை என்றே வழங்கப்பட்டுவரும் இந்நூலின் ஆசிரியர் யாரென்று தெரியவில்லை.
 "கரந்தையார் பாளையம்' என்னும் பெயர் நம் கவனத்தை ஈர்க்கிறதல்லவா? கரந்தையார் பாளையம் சமூகம் என்னும் அமைப்பு, கல்லிடைக்குறிச்சியை மையமாகக் கொண்டு செயல்பட்டுப் பல்வகையானும் தொண்டாற்றியுள்ளது. இவ்வூரில் வசித்த அந்தண இனத்தார் (பிராமணர்கள்), வணிகத்தில் ஈடுபட்டு, பற்பல ஊர்களுக்கும் வியாபாரப் பொருட்களைக் கொண்டு சென்று தொழில் நடத்தியுள்ளனர். பொருட்களை வண்டிகளில் எடுத்துச் செல்லும்போது, வண்டிகள் பலவும் பெருந்தொடர் போல் செல்லுமாம். வழிப்பறியிலிருந்து பாதுகாத்துக் கொள்ள ஆயுதங்களோடும் ஆட்படையோடும் சென்றது மட்டுமின்றி, பயணத் தொலைவுக்கு இடையில் தங்கி இளைப்பாறுவதற்காக, ஆங்காங்கே சத்திரங்களையும் கட்டியுள்ளனர். இந்தச் சத்திரங்களைக் கரந்தையார் பாளைய சமூக அமைப்பே பராமரித்தும் வந்தது. கரந்தையார் பாளையத்தைச் சேர்ந்தவர்கள் என்பதே கரந்தையார் பாளையத்தார் என்னும் பெயருக்குக் காரணமானது.
 இந்தியாவின் தொழில் புரட்சியில் கல்லிடைக்குறிச்சிக்கு முக்கிய பங்குண்டு. என்ஃபீல்ட் சுந்தரம் ஐயர், ஈசன் எஞ்சினியரிங் ஈஸ்வர ஐயர், சிமெண்ட் தந்தை சங்கரலிங்க ஐயர் போன்ற பெயர்கள், வரலாற்றின் பொன்னெழுத்துகள்.
 வரலாற்றுக்கே வரலாறு கொடுத்தவரும் கல்லிடைக்குறிச்சிக்காரர்தாம்! திரு. கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியார்! 1892- ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 12-ஆம் நாள், கல்லிடைக்குறிச்சியில், ஏழை நியோகி பிராமணக் குடும்பம் ஒன்றில் தோன்றினார் கல்லிடைக்குறிச்சி அய்யா நீலகண்ட சாஸ்திரியார். திருநெல்வேலி ஹிந்துக் கல்லூரியிலும் சென்னை கிறித்தவக் கல்லூரியிலும் பயின்ற சாஸ்திரியார், அண்ணாமலைப் பல்கலையின் கலைக் கல்லூரி முதல்வராகவும், திருச்சி தேசியக் கல்லூரி வரலாற்றுப் பேராசிரியராகவும், சென்னைப் பல்கலையின் வரலாறு மற்றும் தொல்லியல் பேராசிரியராகவும், மைசூர் பல்கலையின் இந்தியவியல் பேராசிரியராகவும், மைசூர் மாநிலத்தின் தொல்லியல் துறை இயக்குநராகவும், பல்வேறு காலகட்டங்களில் பணியாற்றினார். யுனெஸ்கோ அமைப்பின் தென்கிழக்காசிய பாரம்பரிய கலாசாரக் கழகத்தின் இயக்குநராகவும் சிகாகோ பல்கலையின் வருகைப் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ள இவரின் வரலாற்று நூல்கள், தென்னிந்திய வரலாறு குறித்த அதிகாரபூர்வ ஆவணங்கள். இவருடைய தமிழ் மொழிப் புலமை குறித்த சர்ச்சைகள் பல இருந்திருப்பினும், இவருடைய வரலாற்றுப் புலமை குறித்தும் தென்னிந்திய வரலாற்றை கூரிய பார்வையோடு இவர் தொகுத்திருப்பது குறித்தும் எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது.
 கல்லிடைக்குறிச்சி என்றவுடனேயே எல்லோருடைய நினைவையும் வருடுவது, "கன்னடியன் கால்வாய்' பற்றிய சிந்தனைதான்! கன்னடியன் கால்வாய் உருவானது குறித்தும் இதற்குக் காரணமானவர்கள் குறித்தும், தம்முடைய கருத்தை மிக விரிவாகவும் தெளிவாகவும் பதிவு செய்கிற ஸ்ரீ ஜகத்குரு காஞ்சி மாமுனிவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி அவர்கள், இவ்வாறு கூறுகிறார்கள்: கால்வாய்க்கே காரணபூதம், கருவி எல்லாமாயிருந்தவன் தன் பெயரே உலகுக்குத் தெரியாமலிருந்து அப்படியே போய்விட்டான்! இன்றைக்கும் ஆயிரக்கணக்கான ஏக்கர் சாகுபடிக்கும், ஆயிரக்கணக்கான மனுஷ்யர்கள், மிருகங்கள் குடிக்கவும் குளிக்கவும் நீரைத் தந்துகொண்டு அக்கால்வாய் மாத்திரம் இருக்கிறது. பேர் தெரியாதவனுடைய ஊரை வைத்து அதைக் "கன்னடியன் கால்வாய்' என்றே சொல்கிறார்கள். "கர்நாடக குல்யா' என்று சேரமாதேவி சாஸனத்தில் சமஸ்கிருதப் பெயர் கொடுத்திருக்கிறது.
 அகத்தியரோடு வந்தபோதே ஆங்காங்கே தன்னுடைய இளைய சகோதரிகளாம் துணைநதிகளைத் தவழவிட்ட பொருநையாளுக்கு, சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய குட்டித் தங்கச்சிதான் "கன்னடியன் கால்வாய்'!
 - தொடரும்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com