பூசத்தில் அருளும் மாமதலை!

தை மாதத்தில் பூச நட்சத்திரமும் பெளர்ணமி திதியும் கூடி வரும் நன்னாள் தைப்பூசமாகும்.
பூசத்தில் அருளும் மாமதலை!

தை மாதத்தில் பூச நட்சத்திரமும் பெளர்ணமி திதியும் கூடி வரும் நன்னாள் தைப்பூசமாகும். தைப்பூசத்திற்கும் பெருமாளுக்கும் தமிழகத்தை வளமாக்கும் காவிரிக்கும் ஒரு தொடர்புண்டு. 

நாயக்க மன்னர்களின் ஆட்சிக் காலத்தில்  மன்னார்குடியில் ராஜகோபால சுவாமி திருக்கோயிலுக்கு திருப்பணி நடைபெற்று வந்தது. மன்னரின் உத்தரவுப்படி மன்னார்குடி கோயில் திருப்பணிக்கு திருச்சேறை வழியே கற்கள் கொண்டு செல்லப்பட்டன. அமைச்சர் நரசபூபாலனுக்கு சாரநாதப் பெருமாளின் மீது அளவற்ற பக்தி. திருப்பணிக்கு என்று வண்டிக்கு ஒரு கல் என இங்கே இறக்கி வைத்தான். காதுக்கு வந்த தகவலை உறுதி செய்ய ,மன்னன் தலத்துக்கு வந்தான். பயந்து போன அமைச்சரோ, சாரநாதப் பெருமாளை வேண்டிக் கொண்டார். மன்னன் வந்த அதே நேரம் சாரநாதப் பெருமாள், மன்னார்குடி ராஜகோபாலனாகவே காட்சி தந்தார். மனம் மகிழ்ந்த மன்னனே, இந்தக் கோயிலுக்கும் திருப்பணிகளை சிறப்பாக நிறைவேற்றினான். 

மஹாபிரளயம் நடப்பதற்கு சிறிது காலம் முன்பு  பிரம்மன் மண் எடுத்து ஒரு கடம் செய்து, அதில் வேதங்களை அழிந்து விடாமல் பாதுகாப்பாக வைத்து காப்பாற்ற எண்ணினான்.  உலகெங்கும் பல இடங்களில் மண் எடுத்துப்பானை செய்ய, எல்லாம் உறுதியின்றி உடைந்து போனது. அனைத்தையும் எப்போதும் காக்கும் கடவுளான திருமாலைத் துதி செய்தான். அவருக்குப் பிடித்தமானதும்  பல ரிஷிகள் எப்போதும்  தவஞ்செய்யக்கூடியதும், தனக்கு மிகவும் உவப்பானதுமான ஸார க்ஷேத்திரத்தில் மண் எடுத்துக் கடம் செய்யுமாறு கூறினார். பிரம்மனும் ஸார க்ஷேத்திரம் என்னும் திருச்சேறை வந்து மண் எடுத்துக் கடம் செய்து வேதங்களை அதிலிட்டு வைத்துக் காத்தார். மண் எடுத்த அந்த இடமே இன்றும் சார புஷ்கரணி என்னும் திருக்குளமாக உள்ளது. இத்தலத்தைப் பற்றி பிரம்மாண்ட புராணத்தில் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

காவிரித்தாய் தவமிருந்த தலம் 

ஒரு நேரத்தில் விந்திய மலையடியில் கங்கை, யமுனை, சரஸ்வதி, சிந்து, கோதாவரி நர்மதா காவேரி, ஆகிய 7 நதிகளும் கன்னிகைகளாக  மாறி விளையாடிக் கொண்டிருந்தனர். அவ்வழியில் சென்ற விச்வாவஸ்  என்னும்  கந்தர்வன் இவர்களை கண்டதும் வணங்கிவிட்டுச் சென்றான். இவன் வணங்கியது யாரை என்று அவர்களுக்குள் சந்தேகம் வந்துவிட்டது. அப்போது மீண்டும் அவ்வழியே திரும்பி வந்த அவனைக் கண்டு "தாங்கள் யாருக்கு வணக்கம் செலுத்தினீர்கள்?' என்று கேட்டனர். "உங்களில் யார் உயர்ந்தவரோ, அவருக்கே!' என்று மீண்டும் மறைபொருளாகச் சொல்லிச் சென்றுவிட்டான். 

மற்ற நதிகள்  விலகிக்கொள்ள, கங்கையும் காவிரியும் தாமே நதிகளுள் உயர்ந்தவர் என்று இருவருக்குள்ளும் வாதம் வளர்ந்து முடிவில் பிரம்மனிடமே கேள்வியோடு சென்றனர். காவிரி தனக்கு பெருமைமிக்கவள் என்ற பெயரைத்  தரவேண்டுமென்று கேட்டாள். பிரம்மன் தன்னால் முடியாதென்றும் சர்வ வல்லமை பொருந்திய பெருமாள் திருவடியைத் தொட்டு கழுவியதால் கங்கை பெருமை பெற்றாள். 

உனக்கு அப்பதம் வேண்டுமென்றால் ஸார புஷ்கரணிக் கரையில் உள்ள அரச மரத்தடியில் திருமாலைக் குறித்து தவஞ்செய் ! என்றார். காவேரி கோடையில் பஞ்சாக்கினி நடுவிலும், குளிர் காலத்தில் நீரின் மத்தியிலும் கடுந்தவஞ் செய்தாள். திருமால் ஒரு தைமாத பூச நட்சத்திரத்தன்று சிறு குழந்தையாய்த் தோன்றித் தவழ்ந்து வந்தார். ஆயிரம் கோடி சூரிய ஒளியோடு வந்த குழந்தையை கண்ட காவிரி, அது  எம்பெருமானே என்று தீர்மானித்து தொழுது வாரி எடுத்து மடியிலிருத்திக் கொண்டாள். 

எம்பெருமான் தனது மழலை உருவிலிருந்து மாறி ஸ்ரீதேவி, பூமாதேவி, நீளா தேவி, மகாலெட்சுமி, ஸாரநாயகி என்னும் 5 தேவிகள் புடைசூழ சங்கு சக்ரத்துடன் காட்சியளித்தார். இக்காட்சியில் பேரானந்தம் கொண்ட காவேரி பலவாறு போற்றி எம்பெருமானை வணங்கினாள். காவேரிக்கு என்ன வேண்டும் என பெருமாள் கேட்டார். தாங்கள் இதே கோலத்தில் இங்கு பஞ்ச (ஐந்து) லட்சுமிகளுடன் நிரந்தரமாக காட்சியருள வேண்டுமென்றும், கங்கையைவிட மேன்மையை தனக்கு தந்தருள வேண்டுமெனவும் வேண்டினாள். 

"அவ்விதமே ஆகுக' வென வாக்கு அருளிய எம்பெருமான் நான் திரேதாயுகத்தில் உன்னிடத்தில் வந்து  தங்குவேன் என்று கூறினார். அதன்படி, ராமாவதாரம் முடிந்து, விபீஷணன் ராமனின் குல சொத்தான எம்பெருமானை இலங்கைக்கு கொண்டு செல்கையில் அரங்கநாதனாக காவிரியில் பள்ளிகொண்டு காவிரிக்கு மரியாதையும்  சிறப்பும் சேர்த்தார். திருமால் காவிரிக்கு நேரிடையாகக் காட்சி தந்தது தை மாதம் பூச நட்சத்திரத்தில் வியாழன் சஞ்சரித்த காலமாகும். எனவே 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை தை மாதம் பூசம் நட்சத்திரத்தில் வியாழன் சஞ்சரிக்கும்போது இந்த ஸார புஷ்கரணியில் நீராடுவது 12  மகாமகத்தில் நீராடியதற்கு ஈடானதாகும் எனப்படுகிறது.

திவ்ய பிரபந்தத்தில் 13 பாசுரங்களில் திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்கிறார். பெரியவரான எம்பெருமான் "மதலை' எனப்பட்ட குழந்தையாகத் தவழ்ந்து வந்ததால் "மாமதலை' யாய் என அழைக்கிறார் காவிரிக்கும் மேன்மை கிடைத்ததால் கங்கையிற் புனிதமாய காவேரி என்று தொண்டரடிப்பொடி ஆழ்வாரும் அழைக்கிறார்.

இதன் அடிப்படையான உற்சவங்கள் தைப்பூசத் திருத்தேரோட்டத் திருவிழா எதிர்வரும் 2019 ஜனவரி 13ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, தினமும் சூரியபிரபை, சேஷவாகனம், கருடவாகனம், அனுமந்தவாகனம் என தினம் ஒரு வாகனப்புறப்பாடு நடைபெறுகிறது.  உற்சவத்தில் முக்கிய நிகழ்வாக ஜனவரி 18ஆம் தேதி மாலை திருக்கல்யாணமும், இரவு யானை வாகனமும் நடைபெறும். 19ஆம் தேதி பஞ்சலட்சுமிகளுடன் கோ ரத சேவையும், 20-ம் தேதி குதிரை வாகனப் புறப்பாடும் 22ம் தேதி  தைப் பூசத்தன்று திருத்தேரில் பஞ்ச லட்சுமிகளுடன் காவிரிக்குக் காட்சி கொடுத்த நிகழ்வும் நடைபெறுகின்றது. 22-ஆம் தேதி திருக்கொடி இறங்கி 28ஆம் தேதி தெப்ப உற்சவமும் நடைபெறும்.  

கும்பகோணம் அருகே உள்ள திருச்சேறை பெருமாள் கல்யாண வரம் தரும் பெருமாளாக, ஐந்து லட்சுமியருடன் திகழ்கிறார். எனவே, புதன் அல்லது வெள்ளிக் கிழமைகளில் கோயிலில் கல்யாண உற்சவம் செய்வதாகவும் பக்தர்கள் வேண்டிக் கொள்கின்றனர். திருமணம் முடிந்த பின்னர், தம்பதியாக கோயிலுக்கு வந்து, பெருமாள், தாயாருக்கு வஸ்திரம்  சாத்துகின்றனர். இங்கே பெருமாள் பாபத்தைப் போக்கி, புண்ணியத்தைக் கூட்டுகிறார். காவிரித் தாய்க்கு புண்ணிய மகிமையை அளித்தவர் என்பதால், இங்கே பெருமாளை வழிபட்டாலே, காவிரியில் நூறு முறை முழுகி எழுந்த புண்ணியம் கிடைக்கும் எனப்படுகிறது.

சந்நிதி திறக்கும் நேரம்:

காலை 6-11 ;  மாலை 5-8 வரை. 

தொடர்புக்கு: 0435}2468001/ 94435 16075.

- இரா.இரகுநாதன் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com