சாதுக்களுக்கான சாதுர்மாஸ்யம்!

'சாதுர்மாஸ்யம்' என்பது நான்கு இறை மாதங்கள் என்று பொருள். இந்த மாதங்களை பொதுவாக சந்நியாசிகளுக்கான மாதமாக, ஆனி மாதம் பெளர்ணமியில் ஆரம்பித்து
சாதுக்களுக்கான சாதுர்மாஸ்யம்!

'சாதுர்மாஸ்யம்' என்பது நான்கு இறை மாதங்கள் என்று பொருள். இந்த மாதங்களை பொதுவாக சந்நியாசிகளுக்கான மாதமாக, ஆனி மாதம் பெளர்ணமியில் ஆரம்பித்து ஐப்பசி மாதம் பெளர்ணமி (சுக்ல பட்சம்) அன்று முடிவுறும் இதனை, சாதுர்மாஸ்ய விரதமாகக் கூறுகிறார்கள்.
 ஒரு சந்நியாசிக்கு ஓரிடத்தில் தங்குவதற்கு மூன்று நாள்களுக்கு மேல் அனுமதியில்லாததால், மழைப் பொழிவு அதிகம் இருக்கும் இந்த மாதங்களில் அவர்களால் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு இடம் பெயர்வதில் சிக்கல் அதிகம் உள்ளதாலும் இந்த மாதங்களில் ஓரிடத்திலிருந்து விரதம் அனுஷ்டிக்க அனுமதித்து உள்ளார்கள். இந்த மாதங்களில் ஒரு பூச்சிக்குக்கூட எந்த கேடும் விளைவிக்கக்கூடாது என்பதால் அவர்களது சஞ்சாரம் கட்டுப்படுத்தப்படுகிறது. இந்துக்களுக்கு மட்டுமின்றி, பெளத்த, ஜைனத் துறவிகளாலும் இந்த சாதுர்மாஸ்ய விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.
 இந்து புராணத்தில் மஹாவிஷ்ணுவானவர்; தேவ் ஷயானி ஏகாதசியன்று திருப்பாற்கடலில் சயனத்திற்குச் சென்று நான்கு மாதம் முடிந்து தேவ் உதானி ஏகாதசியன்று உறக்கம் கலைந்தெழுந்தார் என்று கூறுகிறது. இதனை சாதுர்மாஸ்யா என்று கூறுகிறார்கள். விஷ்ணுவின் இந்த ஆழ்நிலை தியானத்தை "யோகநித்ர' என அழைக்கின்றனர். இந்த நான்கு மாதங்களும் சாதுர்மாஸ்ய விரதம் அனுஷ்டிக்கும் யோகிகளையோ, மகான்களையோ, சாதுக்களையோ அல்லது கடவுளையோ, அவர்களைப் பின் தொடரும் சீடர்கள் அவர்களை தொந்தரவு செய்யாமல் இருக்க வேண்டுமென்பது விதி. சாதுக்கள் இந்த மாதங்களில் அனைவருக்கும் குருவான வியாசபகவானை மனதில் நினைத்து வழிபட்டு மனதை ஒருநிலைப்படுத்தி அவரது படைப்புகளை தியானம் செய்ய வேண்டும்.
 அத்வைதத்தை ஸ்தாபிதம் செய்யும் முகமாக புறப்பட்ட நம் லோககுரு ஆதிசங்கரர், நம் பாரதத்தின் பல்வேறு இடங்களுக்குச் சென்று ஷண்மத ஸ்தாபனம் செய்தார். சக்தி வழிபாட்டை உயிர்ப்பிக்குமுகமாக சாக்தம் என்ற மார்க்கத்தை தொடர்ந்து பரப்பி வந்தார். சிருங்கேரியில் சாரதாபீடத்தை நிறுவி, தன் சீடரிடம் அதை ஒப்படைத்துவிட்டு, அன்னை சாரதா தேவியின் கட்டளையை ஏற்று பாரத தேச யாத்திரை புறப்பட்டார். உபநிஷதங்கள், பகவத்கீதை, விஷ்ணு சஹஸ்ரநாமம், யோக சூத்திரம் மற்றும் வேதாந்தத்தை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் எளிமைப் படுத்தி உலகுக்கு அர்ப்பணித்தார்.
 சிவன், அம்பாள், விஷ்ணு முதலான ஐந்து கடவுளர்களையும் ஒன்றாய் சேர்த்து வழிபடும் "பஞ்சாயதன' பூஜையை அறிமுகப்படுத்தினார். இதனால் காலத்தால் அழிக்க முடியாத ஹிந்து தர்மத்தின் பாதை சீராகி வளர ஆரம்பித்தது. தமக்கு பின் இந்த சனாதன தர்மப் பிரச்சாரம் தொடர பாரதத்தின் நான்கு திசைகளிலும் நான்கு பீடங்களை தோற்றுவித்தார். அதில் முதலாவது, தெற்கில் சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடம்; மேற்கில் ஸ்ரீதுவாரகா பீடம்; வடக்கில் பத்ரிகாஸ்ரமம்; கிழக்கில் பூரி என்பன ஆகும். ஸ்ரீ காஞ்சி சங்கரபீடம்; ஆதி சங்கரர் தென் தமிழ்நாட்டில் பல இடங்களுக்கு விஜயம் செய்து பல கோயில்களில் யந்திர பிரதிஷ்டை செய்து பின் ஆதிசங்கரரால் காஞ்சிபுரத்தில் கி.மு.482 -இல் ஸ்தாபிதம் செய்யப்பட்டது.
 ஜைனத்துறவிகள் கொல்லாமை விரதம் பூண்டுள்ளதால் மழைக் காலத்தில் ஊர்ந்து செல்லும் கண்ணுக்குத்தெரியாத பூச்சிகளைக்கூட நடந்து சென்றால் அழியும் ஆதலால் இந்த காலத்தில் ஒரு வேளை உணவருந்தி, மெளன விரதமிருந்து ஓரிடத்தில் தங்கி இறைபணியாற்றுவார்கள். பெளத்தர்களும் இந்த காலத்தில் ஜைனர்களைப் போலவே ஓரிடத்தில் இருந்து அவர்களின் வேதம் ஓதிக்கொண்டிருப்பார்கள். அனைத்துத் துறவிகளும் இந்த சாதுர்மாஸ்ய விரதத்தில் முதல் மாதம் இலைகளும், கறிகாய்களும், இரண்டாம் மாதம் தயிர், மோர் இவைகளையும், மூன்றாம் மாதம் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களையும், நான்காம் மாதம் உளுத்தம் பருப்பினால் ஆன பொருட்களைத் தவிர்த்து; பிற பொருட்களை ஒரு வேளை மட்டும் ஆகாரமாக உட்கொண்டு விரதமிருப்பர்.
 16.7.2019 செவ்வாய்க் கிழமை, மிதுன கிருஷ்ண பெளர்ணமி அன்று சாதுர்மாஸ்யம் ஆரம்பித்து, 11.11.2019 திங்கட்கிழமை பாஷாண வைகுண்ட சதுர்தசி அன்று நிறைவு பெறுகிறது. இந்த நாள்களில் நம் பகுதிகளில் சாதுர்மாஸ்யம் மேற்கொண்டு வரும் சாதுக்களை வழிபட்டு நம்மிடையே உள்ள பிணியினை அகற்றி பேரானந்தம் அடைவோம்.
 - எஸ். எஸ். சீதாராமன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com