பக்தர்கள் சங்கமிக்கும் பண்டரிபுரம்!

மகாராஷ்டிர மாநிலத்தில், ஷோலாப்பூர் மாவட்டத்தில், சந்திரபாகா நதிக்கரையில் அமைந்துள்ளது பண்டரிபுரம் என அழைக்கப்படும் (பந்தர்பூர்) திருத்தலம்.
பக்தர்கள் சங்கமிக்கும் பண்டரிபுரம்!

மகாராஷ்டிர மாநிலத்தில், ஷோலாப்பூர் மாவட்டத்தில், சந்திரபாகா நதிக்கரையில் அமைந்துள்ளது பண்டரிபுரம் என அழைக்கப்படும் (பந்தர்பூர்) திருத்தலம். இங்குள்ள ஸ்ரீ பண்டரிநாதர் (விட்டோபா) கோயிலில் ஆடி மாதம் ஏகாதசியன்று மக்கள் விரதமிருந்து விட்டலனை வணங்கிச் செல்வது வழக்கம். அப்பொழுது லட்சக்கணக்கான மக்கள் இந்நகரத்தில் கூடுகின்றனர். பக்தர்களின் மிகப்பெரிய சங்கமத்தை அன்று காணலாம். இதன் சிறப்பை மேலும் அறிவோம்.
 மராட்டிய மாநிலத்தில் அவதரித்தவர் மகான் ஞானேஸ்வரர்! இவர் மராத்திய மொழியில் கீதைக்கு பாஷ்யம் உரை இயற்றியுள்ளார். இதற்கு "ஞானேஸ்வரி' என்று பெயர். இவர்தான் "வாரகரி' என்ற சம்பிரதாயத்தை தோற்றுவித்தவர். பூனாவுக்கு அருகில் ஆலந்தி என்ற ஊரில் இவருடைய சமாதிக்கோயில் உள்ளது. ஆரம்பத்தில் இவருடைய சீடர்கள் ஆஷாட (ஆடி) ஏகாதசியன்று வெள்ளிக்கவசம் பூண்ட இவருடைய மரப்பாதுகையை பல்லக்குகளில் 21 நாள்கள் ஊர்வலமாக வந்து விட்டலனின் அபங்கங்களை பாடியவண்ணம் பண்டரிபுரத்தை அடைவார்கள். பின்னர் நாளடைவில் இதர மகான்கள் அவதரித்த மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள ஊர்களிலிருந்தும் அவர்களது மூர்த்தங்களையும், பாதுகைகளையும் பல்லக்குகளில் சுமந்து கொண்டு பக்தர்கள் பண்டரிபுரம் வர ஆரம்பித்தார்கள். இதற்கு "பண்டரிபுரம் ஆஷாட ஏகாதசி வாரியாத்ரா" என்று பெயர்.
 1685 -ஆம் ஆண்டு சந்த்துகாராம் அவர்களுடைய புதல்வர் நாராயண மகராஜ் அவர்களால் இந்த புனித யாத்திரை தொடங்கப்பெற்றது. தற்போது தேஹீவிலிருந்து "துகாராம்'; ஆலந்தியிலிருந்து "ஞானேஸ்வர்'; நார்சியிலிருந்து "நாமதேவர்'; பைதானிலிருந்து "ஏகநாதர்'; திரியம்பகேஸ்வரிலிருந்து "நிவ்ருத்தி'; முக்தாய் நகரிலிருந்து "முக்தாபாய்'; ஸஸ்வாடியிலிருந்து "சோபான்'; ஷேகானிலிருந்து "கஜானன் மகராஜ்' இன்னும் மகராஷ்டிரத்திற்கு அருகிலுள்ள ஊர்களிலிருந்தும் இந்த பாதயாத்திரைக்குழு கிளம்பி மகான்களின் திரு உருவங்களையும், பாதுகைகளையும் சுமந்து கொண்டு விட்டலனின் அபங்க பஜனையுடன் அனைவரும் பண்டரிபுரத்தில் கூடுவார்கள்.
 ஏகாதசி முழுவதும் விரதமிருந்து, துவாதசியன்று காலை ஒரு பக்தருக்கு உணவளித்த பின்னரே உண்பார்கள். பெண்களும் பங்கேற்பார்கள். யாத்திரையில் பங்கேற்பவர்கள் "வாரி' உறுப்பினர்கள் என அழைக்கப்படுகின்றார்கள். ஆஷாட ஏகாதசி முடிந்த பின் பௌர்ணமியன்று கோபாலபுரியில் சோளப்பொரி, தயிர், மிளகாய் பொடி, மாதுளை, பெருங்காயம், சர்க்கரை, உலர்ந்த பழங்கள், உப்பு ஆகியவற்றைக் கலந்து பகவானுக்கு நிவேதித்து பிரசாதமாக விநியோகிக்கிறார்கள். இதற்கு "காலா" என்று பெயர். காலா பிரசாதம் பெற்றுக் கொள்வதோடு வாரகரி யாத்திரை பூர்த்தியாவதாக பக்தர்கள் கருதுகிறார்கள்.
 சந்திர பாக ஸ்நானம், ஷேத்ர பிரதட்சணம், பாண்டுரங்க தரிசனம், ஹரிகீர்த்தனம் ஆகிய நான்கும் பண்டரியில் செய்ய வேண்டிய சதுர்வித அனுஷ்டானங்களாகும். ஆஷாட ஏகாதசி "சயன ஏகாதசி' என்றும் அழைக்கப்படுகிறது. (மஹாவிஷ்ணு சயனிக்க ஆரம்பிக்கிற சாதுர்மாஸ்ய ஆரம்பத்தில் வருகிற ஏகாதசி) இவ்வாண்டு, வட இந்திய பஞ்சாங்கத்தின் அடிப்படையில் ஆஷாட சுக்ல ஏகாதசி விரதம் ஜூலை 12 -ஆம் தேதி அமைகின்றது.
 - எஸ்.வெங்கட்ராமன்
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com