சரப்ஜித் சிங்கை கொலை செய்த 2 பேரும் விடுவிப்பு

லாகூர் சிறையில் இந்தியர் சரப்ஜித் சிங்கை கடந்த 2013ஆம் ஆண்டு கொலை செய்த 2 பேரை பாகிஸ்தான்  நீதிமன்றம் சனிக்கிழமை விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.

லாகூர் சிறையில் இந்தியர் சரப்ஜித் சிங்கை கடந்த 2013ஆம் ஆண்டு கொலை செய்த 2 பேரை பாகிஸ்தான்  நீதிமன்றம் சனிக்கிழமை விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.
இந்தியரான சரப்ஜித் சிங், பாகிஸ்தானுக்குள் வழிதவறி சென்றபோது அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அப்போது அவர் மீது பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கடந்த 1990ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்த தொடர்  குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த பாகிஸ்தான் நீதிமன்றம், சரப்ஜித் சிங்குக்கு தூக்குத் தண்டனை விதித்தது.
இதைத் தொடர்ந்து, லாகூர் சிறையில் சரப்ஜித் சிங் அடைக்கப்பட்டிருந்தார். இந்த சூழ்நிலையில், லாகூர் சிறையில் சரப்ஜித் சிங்குடன் அடைக்கப்பட்டிருந்த கைதிகள் சிலர், அவரை 2013ஆம் ஆண்டு தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த சரப்ஜித் சிங் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக அமிர் தாம்பா, முடாஸர் ஆகிய 2 கைதிகள் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு எதிராக லாகூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கில் லாகூர் குற்றவியல் நீதிமன்றம் தனது தீர்ப்பை சனிக்கிழமை வெளியிட்டது. அப்போது நீதிபதி முகமது மொயின் கூறுகையில், " அமிர் தாம்பா, முடாஸர் ஆகிய 2 பேருக்கு எதிராக யாரிடமும் வாக்குமூலம் பெறப்படவில்லை; ஆதலால் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதிய ஆதாரம் இல்லை என்பதன் அடிப்படையில், இருவரையும் விடுவித்து உத்தரவிடுகிறேன்' என்றார்.
லாகூர் நீதிமன்றம் தீர்ப்பு வெளியிட்டதையொட்டி, பாதுகாப்பு காரணங்களுக்காக சிறையில் இருந்தபடியே அமிர் தாம்பா, முடாஸர் ஆகிய இருவரும் விடியோ கான்பரன்சிங் மூலம் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தபட்டனர்.
சரப்ஜித் சிங் கொலை தொடர்பான வழக்கில் லாகூர் குற்றவியல் நீதிமன்றத்தில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணை நடைபெற்று வந்தது. கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேரும், சரப்ஜித் சிங்கை கொலை செய்ததை பகிரங்கமாக ஒப்புக் கொண்டிருந்தனர். இருப்பினும், அவர்கள் இருவரையும் லாகூர் நீதிமன்றம் விடுவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com