வங்கதேச பொதுத் தேர்தல் டிச.30-க்கு ஒத்திவைப்பு

வங்கதேசத்தில் வரும் டிசம்பர் மாதம் 23-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த பொதுத் தேர்தல் ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
வங்கதேச பொதுத் தேர்தல் டிச.30-க்கு ஒத்திவைப்பு

வங்கதேசத்தில் வரும் டிசம்பர் மாதம் 23-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த பொதுத் தேர்தல் ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
 தேர்தலை ஒரு மாதத்துக்கு தள்ளிவைக்குமாறு அந்த நாட்டு எதிர்க்கட்சிக் கூட்டணி கோரிக்கை விடுத்த சூழலில், தேர்தல் ஆணையம் இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையர் நூருல் ஹூடா திங்கள்கிழமை கூறியதாவது:
 பொதுத் தேர்தலை வரும் டிசம்பர் மாதம் 30-ஆம் தேதி நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
 எதிர்க்கட்சி கூட்டணி இந்தத் தேர்தலில் பங்கேற்பதாக உறுதியளித்ததையடுத்து, 5 உறுப்பினர்களைக் கொண்ட ஆணையக் குழு இந்த முடிவை எடுத்துள்ளது என்றார் அவர்.
 முன்னதாக, முக்கிய எதிர்க்கட்சியான வங்கதேச தேசியவாதக் கட்சியின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள "தேசிய ஐக்கிய முன்னணி', இந்தத் தேர்தலில் பங்கேற்க முடிவு செய்திருப்பதாக அதன் ஒருங்கிணைப்பாளர் கமால் ஹுசைன் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.
 இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
 மிகவும் மோசமான அரசியல் சூழல் நிலவி வரும் நிலையிலும், இந்தத் தேர்தலில் பங்கேற்க தேசிய ஐக்கிய முன்னணி முடிவு செய்துள்ளது.
 நாட்டின் ஜனநாயகத்தைப் பேணுவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
 எனினும், நாங்கள் இந்தத் தேர்தலில் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டுமென்றால், தேர்தல் ஒரு மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட வேண்டும் என்றார் அவர்.
 அதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே, தேர்தலை ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கும் அறிவிப்பை தேர்தல் ஆணையர் திங்கள்கிழமை வெளியிட்டுள்ளார்.
 வங்கதேசத்தில் தற்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆட்சிக் காலம் நிறைவடைவதையொட்டி, வரும் டிசம்பர் மாதத்தில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.
 இந்தத் தேர்தல் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், தற்போதைய அமைச்சரவையைக் கலைத்துவிட்டு, அனைத்து தரப்பினரும் பங்கு பெறும் புதிய இடைக்கால அரசை அமைக்க வேண்டும் என்று பிஎன்பி தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணி வலியுறுத்தியது.
 எனினும், அவ்வாறு இடைக்கால அரசு அமைப்பது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது எனக் கூறி, அந்தக் கோரிக்கையை ஆளும் அவாமி லீக் அரசு நிராகரித்தது.
 வங்கதேசத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னரும், நேர்மையான, சுதந்திரமான தேர்தலை நடத்துவதற்கு ஏற்ற வகையில் இடைக்கால அரசை அமைக்க வேண்டும் என்று பிஎன்பி கட்சி வலியுறுத்தியது.
 இதற்காக, நாடு முழுவதும் பிஎன்பி ஆதரவாளர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டங்களின் போது ஏற்பட்ட வன்முறைக்கு 18 பேர் பலியாகினர்.
 எனினும், இடைக்கால அரசை அமைக்க முடியாது என்று ஆளும் அவாமி லீக் கட்சி திட்டவட்டமாகத் தெரிவித்ததையடுத்து, முக்கிய எதிர்க்கட்சியான பிஎன்பி தேர்தலைப் புறக்கணித்தது.
 இதன் காரணமாக, அதிக எதிர்ப்புகள் இன்றி அவாமி லீக் கட்சி வெற்றி பெற்று, ஷேக் ஹசீனா மீண்டும் பிரதமரானார்.
 போராட்டங்களின்போது நடைபெற்ற வன்முறைகள் தொடர்பாகவும், ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரிலும் பல்வேறு வழக்குகளை எதிர்கொண்டுள்ள பிஎன்பி தலைவர் கலீதா ஜியாவுக்கு, ஊழல் வழக்கில் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com