கவானா வகித்த மாகாண நீதிபதி பதவிக்கு இந்திய-அமெரிக்கப் பெண் நியமனம்

அமெரிக்க உச்ச நீதிமன்றத்துக்கு சமீபத்தில் நியமிக்கப்பட்ட நீதிபதி பிரெட் கவானா ஏற்கெனவே வகித்து வந்த மாகாண முறையீட்டு நீதிமன்ற நீதிபதி பதவிக்கு,
கவானா வகித்த மாகாண நீதிபதி பதவிக்கு இந்திய-அமெரிக்கப் பெண் நியமனம்


அமெரிக்க உச்ச நீதிமன்றத்துக்கு சமீபத்தில் நியமிக்கப்பட்ட நீதிபதி பிரெட் கவானா ஏற்கெனவே வகித்து வந்த மாகாண முறையீட்டு நீதிமன்ற நீதிபதி பதவிக்கு, இந்திய-அமெரிக்கப் பெண் நீதிபதியான நியோமி ஜெஹாங்கிர் ராவ் (45)  பெயரை அதிபர் டொனால்ட் டிரம்ப் பரிந்துரைத்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ரூஸ்வெல்ட் அறையில் செவ்வாய்க்கிழமை அமெரிக்க வாழ் இந்தியர்களுடன் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடிய போது, அதிபர் டிரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இது குறித்து, அவர் மேலும் கூறியதாவது:
அமெரிக்காவின் கொலம்பியா மாகாண முறையீட்டு நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதி பதவிக்கு, நீதிபதி நியோமி ஜெஹாங்கிர் ராவை நியமனம் செய்ய நாடாளுமன்ற மேலவைக்குப் பரிந்துரைத்துள்ளேன். அவர் மிகச் சிறந்த நபர். அவர் சிறப்பாகப் பணியாற்றுவார் என்று டிரம்ப் தெரிவித்தார்.
அதையடுத்துப் பேசிய நியோமி, தன் மீது அளவு கடந்த நம்பிக்கை வைத்ததற்காக டிரம்ப்புக்கு நன்றி தெரிவித்தார். அப்போது, முக்கிய அமெரிக்க வாழ் இந்தியர்கள், அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் நவ்தேஜ் சிங் சர்னா ஆகியோர் உடனிருந்தனர்.
இது குறித்த அதிகாரப்பூர்வ பரிந்துரை அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் உச்ச நீதிமன்றத்துக்கு அடுத்து பலம் வாய்ந்த நீதித்துறை அமைப்பாக கொலம்பியா மாகாண முறையீட்டு நீதிமன்றம் உள்ளது.
தற்போது தகவல் மற்றும் ஒழுங்குமுறை விவகார அலுவலக நிர்வாகியாகப் பொறுப்பு வகித்து வரும் நியோமி, அந்நிர்வாகத்தின் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது உள்ளிட்ட பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
நியோமி, உச்ச நீதிமன்ற நீதிபதி கிளாரன்ஸ் தாமஸின் எழுத்தராகவும், முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ் நிர்வாகத்தில் சிறப்பு உதவியாளராகவும் பணியாற்றியுள்ளார்.
வெள்ளை மாளிகையின் முன்னாள் ஆலோசகர் டான் மெக்கேஹன், நியோமியை டிரம்ப்புக்குப் பரிந்துரை செய்திருந்தார். இதனையடுத்து, கடந்த மாதம் டிரம்ப் நியோமியிடம் நேர்காணல் நடத்தினார். 
அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் துணை நீதிபதியாக இருந்த அந்தோணி கென்னடியின் பதவிக் காலம் முடிவடைந்ததையடுத்து, அந்தப் பதவிக்கு பிரெட் கவானாவின் பெயரை அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த ஜூலை மாதம் அறிவித்தார்.
அவரது நியமனத்துக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, அவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாகக் கடந்த மாதம் 8-ஆம் தேதி பொறுப்பேற்றார்.
அதையடுத்து, அவர் ஏற்கெனவே வகித்து வந்த கொலம்பியா மாகாண முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதி பதவி காலியானது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com