உலகம்

பாகிஸ்தானில் 2.25 கோடி குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதில்லை: ஆய்வில் தகவல்

DIN


பாகிஸ்தானில் சுமார் 2.25 கோடி குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதில்லை எனவும், அவர்களுள் பெரும்பாலானோர் சிறுமிகள் என்பதும் பன்னாட்டு மனித உரிமைகள் அமைப்பு ஒன்று நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
சிறுமிகள் கல்வி கற்பதில் உள்ள தடைகள் என்ற தலைப்பில், மனித உரிமைகள் காவல் அமைப்பு பாகிஸ்தானில் ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வின் அறிக்கை இந்த வாரத் தொடக்கத்தில் வெளியிடப்பட்டது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பாகிஸ்தானில் கடந்த ஜுலை மாதம் பதவியேற்ற புதிய அரசின் தேர்தல் அறிக்கையில், ஏறத்தாழ 2.25 கோடி குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதில்லை எனவும், அவர்களுள் பெரும்பாலானோர் சிறுமிகள் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதனடிப்படையில் மேற்கொண்ட ஆய்வில், பள்ளி செல்லும் வயதில் உள்ள சிறுமிகளுள் 32 சதவீதம் பேர் பள்ளிக்குச் செல்வதில்லை. அதே போல், 21 சதவீதம் சிறுவர்கள் பள்ளிக்குச் செல்வதில்லை. 
59 சதவீதம் மாணவிகள் ஆறாம் வகுப்புடன் பள்ளிக்குச் செல்வதை நிறுத்திக் கொள்கின்றனர். இதுவே மாணவர்களிடம் 49 சதவீதமாகக் காணப்படுகிறது. 13 சதவீதம் மாணவிகளே ஒன்பதாம் வகுப்பு வரை செல்கின்றனர். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி(ஜிடிபி)-யில், கல்விக்கு 4 முதல் 6 சதவீதம் வரை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று ஐ.நா. தெரிவித்துள்ள நிலையில், கடந்த 2017-ஆம் ஆண்டு வரை பாகிஸ்தான் 2.8 சதவீதம் மட்டுமே கல்விக்கு ஒதுக்கியுள்ளது.
அரசியல் நிலையற்ற தன்மை, அரசு நிர்வாகத்தில் ராணுவத்தின் தலையீடு, மக்கள் மற்றும் ஊடகங்கள் மீது நடத்தப்படும் ஒடுக்குமுறைகள், தீவிரமான கிளர்ச்சிகள் போன்றவை கல்வியில் கவனம் செலுத்துவதில் இருந்து அரசை திசை திருப்புகின்றன.
கடந்த 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற ஓஸ்லோ கல்வி வளர்ச்சி மாநாட்டில் வெளியிடப்பட்ட, கல்வி வழங்குவதில் மோசமான நாடுகள் பட்டியலில், பாகிஸ்தானும் இடம்பெற்றிருந்தது. கல்வி கற்க பள்ளிக்குள்ளும், பள்ளிக்கு வெளியிலும் மாணவிகள் பல்வேறு சவால்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. கல்வி அளிப்பதில் பாகிஸ்தான் அரசின் தோல்வி, கோடிக்கணக்கான மாணவிகளைப் பாதித்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

மத்திய அமைச்சர் பசுபதி பராஸ் ராஜிநாமா!

கேரளத்தில் வாகனப் பேரணியில் ஈடுபட்டுள்ள பிரதமர் மோடி!

கேரளத்தில் காங்கிரஸை எதிர்த்து போட்டியிடும் இந்திய கம்யூ. -சசி தரூருக்கு கண்டனம்!

ஆகாயம் என்ன நிறம்? கியாரா அத்வானி!

தென் இந்தியாவின் உ.பி.யா, தமிழ்நாடு?

SCROLL FOR NEXT