உலகம்

ராஜபட்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி

DIN


இலங்கை நாடாளுமன்றத்தில் பிரதமர் மகிந்த ராஜபட்சவுக்கு எதிராக புதன்கிழமை கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றது. அவரை இப்பதவியில் நியமித்த அதிபர் மைத்ரிபால சிறீசேனாவுக்கு இது பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து சிறீசேனா பிறப்பித்த உத்தரவுக்கு, அந்நாட்டு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்த நிலையில், புதன்கிழமை கூடிய நாடாளுமன்ற அவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து, நாடாளுமன்றம் வியாழக்கிழமை காலை 10 மணி வரையில் ஒத்திவைக்கப்படுவதாக அவைத்தலைவர் கரு ஜெயசூர்யா அறிவித்தார்.
அதே சமயம், இந்த விவகாரத்தில் அரசமைப்புச் சட்டத்தின்படி மேற்கொள்ள வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு சிறீசேனாவுக்கு, அவைத்தலைவர் ஜெயசூர்யா கடிதம் எழுதியுள்ளார்.
அரசியல் குழப்பத்தின் தொடக்கம்: இலங்கையில் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கவுக்கும், அதிபர் சிறீசேனாவுக்கும் இடையே, பொருளாதாரம், பாதுகாப்புத்துறை சார்ந்த முக்கிய முடிவுகளை எடுப்பதில் அதிகாரப் போட்டி நிலவியதாகத் தெரிகிறது. இந்நிலையில், ரணிலை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, புதிய பிரதமராக ராஜபட்சவை கடந்த மாதம் 26-ஆம் தேதி சிறீசேனா நியமித்தார். மேலும் நாடாளுமன்றத்தையும் அவர் முடக்கி வைத்தார்.
ஆனால், சட்டப்படி பிரதமர் பதவியில் தாம் நீடிப்பதாகவும், தன்னை பதவி நீக்கியது செல்லாது என்றும் விக்ரமசிங்க கூறி வந்தார்.
இந்நிலையில், திடீர் திருப்பமாக, இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்ட சிறீசேனா, ஜனவரி 5-ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்தார்.
நீதிமன்றம் தடை: சிறீசேனாவின் இந்த முடிவுக்கு எதிராக, ரணிலின் ஐக்கிய தேசிய கட்சி, ஜனதா விமுக்தி பெரமுனா உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் தேர்தல் ஆணைய உறுப்பினர் ரத்னஜீவன் ஹூலே உள்பட பலரது தரப்பில் இலங்கை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், நாடாளுமன்றத்தை கலைக்கும் உத்தரவு மற்றும் புதிய தேர்தலுக்கான முன்னேற்பாடுகளுக்கு டிசம்பர் 7-ஆம் தேதி வரையில் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.
நம்பிக்கையில்லா தீர்மானம்: நீதிமன்ற உத்தரவையடுத்து நாடாளுமன்றத்தை அவைத்தலைவர் கரு ஜெயசூர்யா புதன்கிழமை கூட்டினார். அப்போது பிரதமர் ராஜபட்சவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன. ஆனால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜபட்ச ஆதரவு எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது.
இருப்பினும், அமளிக்கு இடையே குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில், ராஜபட்சவுக்கு எதிராக 122 வாக்குகள் பதிவாகின. குறிப்பாக, ராஜபட்ச அமைச்சரவையில் புதிதாக பதவியேற்ற மூன்று அமைச்சர்கள், மற்றொரு இணையமைச்சர் ஆகியோர் திடீர் திருப்பமாக, நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவளித்தனர். இதேபோன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம் கட்சிகளின் எம்.பி.க்களும் ராஜபட்சவை எதிர்த்து வாக்களித்தனர்.
இதுகுறித்து கரு ஜெயசூர்யா கூறுகையில், குரல் வாக்கெடுப்பின் அடிப்படையில், அரசுக்குப் பெரும்பான்மை இல்லை என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்றார்.
மேலும், ராஜபட்சவுக்கு எதிராக 122 எம்.பி.க்கள் கையெழுத்திட்ட தீர்மானத்தின் நகலை அதிபர் சிறீசேனாவுக்கு அனுப்பி வைத்து, அடுத்தக்கட்ட நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு ஜெயசூர்யா கேட்டுக் கொண்டார்.

மீண்டும் அரசமைப்போம்
இலங்கையில் பதவியில் இருந்த பழைய அரசை மீண்டும் நிறுவுவோம் என்று ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.


அக்டோபர் 26-ஆம் தேதிக்கு முன்னதாக இருந்த அரசை மீண்டும் பதவியில் அமர்த்துவதற்கான நடவடிக்கைகளை நாங்கள் தற்போது முன்னெடுப்போம். மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்க முடியாத அரசு ஏதேனும் சட்டவிரோத உத்தரவுகளை பிறப்பித்தால் அதை அரசு ஊழியர்கள், காவல்துறையினர் உள்ளிட்டோர் பின்பற்றத் தேவையில்லை என்பதை அறிவித்துக் கொள்கிறேன் என்றார் ரணில்.

சீனா நம்பிக்கை 
சீன ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டவராகக் கருதப்படும் ராஜபட்சவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இலங்கையின் அரசியலில் ஸ்திரத்தன்மை மீண்டும் திரும்பும் என்று நம்பிக்கை கொண்டுள்ளோம் என்று சீனா தெரிவித்துள்ளது. 
இதுகுறித்து, பெய்ஜிங்கில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஹூவா சுன்யிங் பதில் அளிக்கையில், சீனா இலங்கையின் பாரம்பரிய நட்பு நாடாகும். அங்கு நிலவும் நிலையில்லாத் தன்மை குறித்து நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இலங்கையில் மீண்டும் ஸ்திரத்தன்மை ஏற்படும் என நம்புகிறோம். இந்த இக்கட்டான சூழலை எதிர்கொள்ளும் திறனும், சாதுர்யமும் இலங்கையில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு உண்டு என நம்பிக்கை கொண்டுள்ளோம் என்றார்.
முன்னதாக, ராஜபட்ச அதிபராக இருந்த காலத்தில் ரூ.7,000 கோடி அளவில் துறைமுகத் திட்டங்களில் சீனா முதலீடு செய்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

காற்று மாசுபாடு அடைந்த நகரங்கள் - புதுதில்லி முதலிடம்

நாட்டின் நலன் கருதி பாஜகவுடன் கூட்டணி: அன்புமணி ராமதாஸ்

ஆப்கானிஸ்தானில் பலத்த நிலநடுக்கம்!

பா.ம.க.வுக்கு 10 தொகுதிகள்: பா.ஜ.க.வுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது!

தாய் தெய்வ வழிபாட்டு கற்சிலை கண்டெடுப்பு

SCROLL FOR NEXT