இலங்கை நாடாளுமன்றத்தில் மிளகாய் பொடி தாக்குதல்: அவைத்தலைவர் இருக்கை ஆக்கிரமிப்பு

இலங்கை நாடாளுமன்றம் வெள்ளிக்கிழமை கூடியபோதும், பிரதமர் ராஜபட்ச ஆதரவு எம்.பி.க்களின் போராட்டம் காரணமாக களேபரமாகக் காட்சியளித்தது. குறிப்பாக, அவைத்தலைவர்


இலங்கை நாடாளுமன்றம் வெள்ளிக்கிழமை கூடியபோதும், பிரதமர் ராஜபட்ச ஆதரவு எம்.பி.க்களின் போராட்டம் காரணமாக களேபரமாகக் காட்சியளித்தது. குறிப்பாக, அவைத்தலைவர் கரு ஜெயசூர்யா அமர வேண்டிய இருக்கையை, ஆளும் கூட்டணி எம்.பி. அருந்திகா பெர்ணான்டோ ஆக்கிரமித்துக் கொண்டார். மேலும், எதிர்தரப்பு எம்.பி.க்கள் மீது ராஜபட்ச ஆதரவு எம்.பி.க்கள் மிளகாய் பொடியை தூவினர். நாற்காலிகளும் தூக்கி வீசப்பட்டன. இறுதியில் காவலர்களை உள்ளே வரவழைத்த ஜெயசூர்யா, அவையை திங்கள்கிழமை வரை ஒத்திவைப்பதாக அறிவித்துவிட்டு, அவர்களது துணையுடன் வெளியேறினார்.
முன்னதாக, ராஜபட்சவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கடந்த புதன்கிழமை நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து, வியாழக்கிழமை ஆளும் கூட்டணி மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்களிடையே கைகலப்பு ஏற்பட்டது. அதற்கு அடுத்த நாளான வெள்ளிக்கிழமையும் அதுபோன்ற களேபரம் தொடர்ந்தது.
ஐக்கிய தேசிய கட்சியின் ரணில் விக்ரமசிங்க, இலங்கை பிரதமராக இருந்தார். அவரை அதிபர் மைத்ரிபால சிறீசேனா கடந்த மாதம் 26-ஆம் தேதி பதவி நீக்கம் செய்தார். அதைத்தொடர்ந்து புதிய பிரதமராக பதவியேற்ற ராஜபட்சவுக்கு, பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவு கிடைக்காத நிலையில், நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தல் அறிவிப்பை வெளியிட்டார் சிறீசேனா.
இருப்பினும், சிறீசேனாவின் உத்தரவுக்கு இலங்கை உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இந்நிலையில், புதன்கிழமை கூடிய நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 225 எம்.பி.க்களில் 122 பேருடைய ஆதரவுடன் ராஜபட்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேற்றப்பட்டது. அதற்கு அடுத்த நாள் அவை கூடிய போது, இருதரப்பு எம்.பி.க்களிடையே கைகலப்பு நடைபெற்றது.
இறங்கி வந்த சிறீசேனா: நம்பிக்கையில்லா தீர்மானத்தை தொடர்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு அவைத்தலைவர் ஜெயசூர்யா முன்வைத்த பரிந்துரையை நிராகரித்த சிறீசேனா, ராஜபட்சவே பிரதமராக தொடருவார் என்று கூறியிருந்தார். இந்நிலையில், ரணில் ஆதரவு கூட்டணியினருடன் வியாழக்கிழமை இரவில் பேச்சுவார்த்தை நடத்திய அவர், மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கு ஒப்புக்கொண்டார்.
அவைத்தலைவர் இருக்கை ஆக்கிரமிப்பு: இத்தகையை சூழலில், வெள்ளிக்கிழமை அவைத்தலைவர் வருவதற்கு முன்பாகவே, ராஜபட்ச ஆதரவு எம்.பி.க்கள் அவரது இருக்கையை சூழ்ந்து கொண்டு போராட்டம் நடத்த தொடங்கினர். அப்போது அருந்திகா பெர்ணான்டோ என்ற எம்.பி. அவைத்தலைவரின் இருக்கையை ஆக்கிரமித்துக் கொண்டார். இந்த களேபரங்கள் 45 நிமிடங்கள் வரை நீடித்தன.
இதற்கிடையே, அவைக்கு வந்த கரு ஜெயசூர்யா, மற்றொரு இருக்கையில் அமர்ந்தார். நம்பிக்கையில்லா தீர்மானம் திருத்தம் செய்யப்பட்டு மறுவாக்கெடுப்புக்கு விடப்படுவதாக அறிவித்தார். அப்போது, எதிர்க்கட்சியினர் அதற்கு ஆதரவளித்த நிலையில், ராஜபட்ச ஆதரவு எம்.பி.க்கள் தொடர்ந்து கூச்சலிட்டபடி இருந்தனர். குறிப்பாக, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மீது மிளகாய் பொடியை தூவியதுடன், அவையில் இருந்த நாற்காலிகளையும் அவர்கள் அடித்து உடைத்தனர்.
இறுதியாக, அவைத்தலைவர் காவலர்களை வரவழைத்தார். அவர்கள் மீதும் சில எம்.பி.க்கள் புத்தகங்களை வீசியெறிந்தனர். இதையடுத்து, அவையை ஒத்திவைத்துவிட்டு ஜெயசூர்யா வெளியேறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com