இலங்கை: தோல்வியில் முடிந்தது அனைத்துக் கட்சிக் கூட்டம்

இலங்கையில் நிகழ்ந்து வரும் அரசியல் குழப்பங்களுக்கும், அசாதாரண சூழல்களுக்கும் தீர்வு காண்பதற்காக அந்நாட்டு அதிபர் சிறீசேனா ஞாயிற்றுக்கிழமை கூட்டிய அனைத்து கட்சிக் கூட்டம் தோல்வியில் முடிந்தது.
இலங்கை: தோல்வியில் முடிந்தது அனைத்துக் கட்சிக் கூட்டம்

இலங்கையில் நிகழ்ந்து வரும் அரசியல் குழப்பங்களுக்கும், அசாதாரண சூழல்களுக்கும் தீர்வு காண்பதற்காக அந்நாட்டு அதிபர் சிறீசேனா ஞாயிற்றுக்கிழமை கூட்டிய அனைத்து கட்சிக் கூட்டம் தோல்வியில் முடிந்தது.
அதிபரின் நிலைப்பாட்டையும், முடிவையும் ஏற்க முக்கியக் கட்சிகள் மறுத்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் நிலவி வரும் பிரச்னைகளுக்கு அதிபர் சிறீசேனாவே காரணம் என்றும், அதற்கு அவர்தான் முடிவு கட்ட வேண்டும் என்றும் கூறிய அக்கட்சி எம்.பி.க்கள், கூட்டத்தில் காரசார விவாதத்தில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. இதற்கு நடுவே, அனைத்து கட்சிக் கூட்டத்தை மக்கள் விடுதலை முன்னணி புறக்கணித்துவிட்டது. அக்கூட்டத்தில் பங்கேற்க வேண்டிய அவசியமோ, காரணமோ தங்களுக்கு இல்லை என்று அக்கட்சி விளக்கமளித்துள்ளது.
முன்னதாக, இலங்கை நாடாளுமன்றத்தில் முன்னெப்போதும் நிகழ்ந்திராத அளவுக்கு அரங்கேறிவரும் களேபரங்களால் அந்நாட்டின் ஜனநாயக சூழல் கவலைக்கிடமானது. பிரதமர் பதவியில் இருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை நீக்கிவிட்டு, அவருக்கு பதிலாக முன்னாள் அதிபர் ராஜபட்சவை அப்பதவியில் சிறீசேனா நியமித்ததன் விளைவாகவே இத்தகைய நிகழ்வுகள் அங்கு நடைபெற்றன. அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட அரசியல் மாற்றங்களும், நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் உத்தரவிட்டதும் புதிய பிரச்னைகளுக்கு வழிவகுத்தது. இதனிடையே, நாடாளுமன்ற கலைப்புக்கு இலங்கை உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்ததால், ராஜபட்சவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
கடும் அமளிக்கு நடுவே அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இலங்கையில் பிரதமர் பதவியில் எவரும் இல்லை என்று நாடாளுமன்றத் தலைவர் கரு. ஜெயசூர்யா கடந்த வாரம் அறிவித்தார்.
அதன் பின்னர், அந்நாட்டு நாடாளுமன்றம் போர்க்களமானது. ஆளும் கட்சி தரப்புக்கும், ரணில் தரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. நாடாளுமன்றத் தலைவரின் இருக்கை ஆக்கிரமிக்கப்பட்டது. மிளகாய்ப் பொடி வீசப்பட்டதாலும், நாற்காலிகள் உடைக்கப்பட்டதாலும் அவையே கலவர பூமியாகக் காட்சியளித்தது.
இதையடுத்து நாடாளுமன்றத்துக்குள் போலீஸாரை வரவழைத்த கரு. ஜெயசூர்யா நிலைமையைக் கட்டுப்படுத்த உத்தரவிட்டார். இத்தகைய சூழலில்தான் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அதிபர் சிறீசேனா அழைப்பு விடுத்திருந்தார்.
அதன்படி, ஞாயிற்றுக்கிழமை அக்கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி.க்கள், அதிபரை நோக்கி பல்வேறு கேள்விகள் எழுப்பியதாகத் தெரிகிறது. ஆனால், அவை எதற்கும் சிறீசேனா முறையாக பதிலளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால், அனைத்து கட்சிக் கூட்டம் தோல்வியில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com