எல்லை விவகாரம்: இந்தியா-சீனா நாளை பேச்சுவார்த்தை

எல்லை விவகாரங்கள் தொடர்பாக, இந்தியா, சீனா இடையே 21-ஆவது கட்ட பேச்சுவார்த்தை வெள்ளிக்கிழமை (நவ.23) தொடங்கவுள்ளது.


எல்லை விவகாரங்கள் தொடர்பாக, இந்தியா, சீனா இடையே 21-ஆவது கட்ட பேச்சுவார்த்தை வெள்ளிக்கிழமை (நவ.23) தொடங்கவுள்ளது.
சீனாவின் செங்டு நகர் அருகேயுள்ள டுஜியாங்யான் பகுதியில் 2 நாள்கள் நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில், இந்தியா சார்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும், சீனா சார்பில் அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ-யும் பங்கேற்கவுள்ளனர்.
இதுதொடர்பாக, அந்நாட்டு வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் கெங் சுயாங், பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது: இந்தியா, சீனா இடையேயான உறவுகள், இரு நாட்டு தலைவர்களின் வழிகாட்டுதலின் பேரில் வேகமாக மேம்பட்டு வருகின்றன. அனைத்து துறைகளிலும் இருதரப்பு ஒத்துழைப்பு வலுவடைந்துள்ளது. எல்லை விவகாரங்களில் நெருங்கிய தகவல்தொடர்புகளையும் ஒருங்கிணைப்பையும் பராமரித்து வருகிறோம்.
இரு நாடுகளுக்கும் இடையேயான பல்வேறு கருத்து வேறுபாடுகள், பேச்சுவார்த்தை மற்றும் ஆலோசனைகள் மூலம் முறையாக கையாளப்பட்டு வருகின்றன. எல்லை விவகாரங்களுக்கு, இரு நாடுகளுமே மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகின்றன. பரஸ்பர நலன்கள், உறவுகளைக் கருத்தில் கொண்டு, இரு நாடுகளின் தலைவர்கள் இடையே கருத்தொற்றுமை எட்டப்பட்டுள்ளது. எனவே, அவர்களது வழிகாட்டுதலின் அடிப்படையில், இருதரப்பு பிரதிநிதிகளும் கருத்துகளை பகிர்ந்துகொள்வர் என்றார் கெங் சுயாங்.
இந்தியாவும் சீனாவும் சுமார் 3,488 கிமீ தொலைவு எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளன. இந்தியாவின் அருணாசலப் பிரதேச மாநிலத்தை, தெற்கு திபெத் என்று கூறி சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது.
டோக்கா லாம் எல்லைப் பகுதியில் சீன ராணுவத்தினர் கடந்த ஆண்டு அத்துமீறி நுழைந்து சாலைப் பணிகளை மேற்கொள்ள முயன்றனர். இதனை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. மேலும், இரு தரப்பு உறவுகளும் பாதிக்கப்பட்டன. பின்னர், இரு நாடுகளும் தங்களது படைகளை வாபஸ் பெற ஒப்புக் கொண்டதால், சுமார் 73 நாள்களுக்கு பிறகு டோக்கா லாம் பிரச்னை முடிவுக்கு வந்தது.
இந்தச் சூழலில், பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஷீ ஜின்பிங்கும், சீனாவின் வூஹான் நகரில் கடந்த ஏப்ரலில் சந்தித்துப் பேசினர். இதைத் தொடர்ந்து, இருதரப்பு உறவுகள் மேம்பட்டு வருகின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com