பாகிஸ்தான் சிறுமி பலாத்காரம், கொலை: குற்றவாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

பாகிஸ்தானில் 7 வயது சிறுமியைக் கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற இம்ரான் அலி (24) புதன்கிழமை தூக்கிலிடப்பட்டார்.


பாகிஸ்தானில் 7 வயது சிறுமியைக் கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற இம்ரான் அலி (24) புதன்கிழமை தூக்கிலிடப்பட்டார்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
கசூர் நகரில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, படுகொலை செய்த வழக்கில் இம்ரான் அலிக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனை புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது.
கொல்லப்பட்ட சிறுமியின் தந்தை அமீன் அன்சாரி மற்றும் மாஜிஸ்திரேட் அடில் சர்வார் முன்னிலையில், கோட் லக்பத் மத்தியச் சிறையில் அதிகாலை 5.30 மணிக்கு அவர் தூக்கிலிடப்பட்டார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம், கசூர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் 5-ஆம் தேதி மாயமான ஜைனப் அன்சாரி (7) நான்கு நாள்கள் கழத்து சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
அந்தச் சிறுமி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டதாகவும், சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டதற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் பிரேத விசாரணையில் தெரிய வந்தது.
இந்தச் சம்பவம் பாகிஸ்தானில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.
அந்தப் பகுதியில் சிறுமிகள் மீதான இத்தகைய தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெறும் நிலையில், காவல்துறையினரின் மெத்தனத்தைக் கண்டித்து தொடர்ந்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. ஆர்ப்பாட்டத்தின்போது போலீஸார் நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்புகளும் ஏற்பட்டன.
இந்த நிலையில், சிறுமியைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ததும், அவரை படுகொலை செய்ததும் சிறுமியின் வீட்டருகே வசித்து வந்த இம்ரான் அலி என்று விசாரணையில் தெரிய வந்தது.
அதைத் தொடர்ந்து பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றத்தில் இதுதொடர்பாக நடைபெற்ற வழக்கில், இம்ரான் அலிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், இம்ரான் அலியை பொது இடத்தில் தூக்கிலிட வேண்டும் என்று படுகொலை செய்யப்பட்ட ஜைனப் அன்சாரியின் தந்தை அமீன் அன்சாரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு நிராகரிப்பட்டது. அதையடுத்து, இம்ரான் அலிக்கு வழங்கப்பட்டிருந்த மரண தண்டனை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com