செய்தியாளர் ஜமால் கஷோகி கொல்லப்பட்டது உறுதி: அமெரிக்க அதிபர் மாளிகை வருத்தம்

செய்தியாளர் ஜமால் கஷோகி கொல்லப்பட்டுள்ள செய்தி வருத்தமளிப்பதாக அமெரிக்க அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் சனிக்கிழமை தெரிவித்தார்.
செய்தியாளர் ஜமால் கஷோகி கொல்லப்பட்டது உறுதி: அமெரிக்க அதிபர் மாளிகை வருத்தம்

செய்தியாளர் ஜமால் கஷோகி கொல்லப்பட்டுள்ள செய்தி வருத்தமளிப்பதாக அமெரிக்க அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் சனிக்கிழமை தெரிவித்தார்.  

செய்தியாளர் ஜமால் கஷோகி உயிரிழந்திருப்பது முதற்கட்ட விசாரணையில் உறுதியாகியுள்ளது என்று சவூதி அரேபிய அட்டர்னி ஜெனரல் தெரிவித்தார். தூதரகத்தில் நடைபெற்ற சண்டையில் அவர் கொல்லப்பட்டதாக அட்டர்னி ஜெனரல் தெரிவித்தார். மேலும், இந்த வழக்கு தொடர்பாக சந்தேகிக்கப்படும் 18 பேரையும் சவூதி அரேபிய அரசு கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது என்றும் அவர் தெரிவித்தார். 

இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் தனது சுட்டுரை பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, 

"ஜமால் கஷோகி தொடர்பான விசாரணையை சவூதி அரேபியா நடத்தி வருகிறது. இதுதொடர்பாக சந்தேகிக்கப்படும் நபர்கள் அனைவரும் அடையாளம் காணப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவின் இந்த அறிவிப்பை அமெரிக்கா ஒப்புக்கொள்கிறது. 

இந்த கோர சம்பவம் தொடர்பாக சர்வதேச விசாரணையை தொடர்ந்து பின்பற்றுவோம். இந்த சம்பவத்துக்கு நீதி கிடைக்க வெளிப்படைத்தன்மையாக வாதாடுவோம். 

காஷோகியின் மறைவு உறுதியானது வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தார் மற்றும் நண்பர்களுக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்" என்றார். 

முன்னதாக, இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுகையில், 

"துருக்கியின் இஸ்தான்புல் நகரிலுள்ள சவூதி அரேபிய துணைத் தூதரகத்துக்குச் சென்ற செய்தியாளர் ஜமால் கஷோகி, அதற்குப் பிறகு மாயமான விவகாரத்தில் அவர் கொல்லப்பட்டதாகவே தெரிகிறது.
இது மிகவும் வருத்தமளிப்பதாக உள்ளது. இந்த விவகாரத்தில் சவூதி சம்பந்தப்பட்டிருந்தால், அதற்கான நடவடிக்கை மிகக் கடுமையானதாக இருக்கும். இருந்தாலும் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. அதன் முடிவுகள் விரைவில் வெளிவரும். அதுவரை காத்திருப்போம்" என்றார் அவர்.

இந்நிலையில், செய்தியாளர் கஷோகி கொல்லப்பட்டுள்ள செய்தி சனிக்கிழமை உறுதியாகியுள்ளது. 

சவூதி அரேபிய செய்தியாளரான ஜமால் கஷோகி, சர்ச்சைகள் காரணமாக சொந்த நாட்டிலிருந்து தப்பி லண்டன் சென்றார். தற்போது அமெரிக்காவில் வசித்து வந்த அவர், அங்கு வெளியாகும் வாஷிங்டன் போஸ்ட் நாளிதழில் கட்டுரைகள் எழுதி வந்தார். சவூதி அரச குடும்பத்தோடு நெருக்கமாக இருந்தாலும், அரசின் கொள்கைகளுக்கு எதிராகவும், பட்டத்து இளவரசருக்கு எதிராகவும் அவர் கருத்துகளைத் தெரிவித்து வந்தார்.

இந்தச் சூழலில், துருக்கி நாட்டுப் பெண்ணை திருமணம் செய்ய விரும்பிய அவருக்கு, அந்த நாட்டுச் சட்டப்படி சில ஆவணங்கள் தேவைப்பட்டன. அதனைப் பெறுவதற்காக அவர் துருக்கியின் இஸ்தான்புல் நகரிலுள்ள சவூதி அரேபிய துணைத் தூதரகத்துக்கு இந்த மாதம் 2-ஆம் தேதி சென்றார். ஆனால், அதற்குப் பிறகு அவரைக் காணவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com