டிரம்ப்பின் நெருக்கடி நிலைக்கு எதிராகத் தீர்மானம்

மெக்ஸிகோ எல்லைச் சுவர் எழுப்ப நிதி பெறும் வகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள அவசர நிலையை ரத்து செய்வதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய ஜனநாயகக் கட்சியினர்

மெக்ஸிகோ எல்லைச் சுவர் எழுப்ப நிதி பெறும் வகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள அவசர நிலையை ரத்து செய்வதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய ஜனநாயகக் கட்சியினர் முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து பிரதிநிதிகள் சபைத் தலைவரும், ஜனநாயகக் கட்சி எம்.பி.யுமான நான்சி பெலோசி கூறியதாவது:

அதிபர் டிரம்ப் கடந்த வாரம் அறிவித்த தேசிய அவசர நிலையை ரத்து செய்வதற்கான தீர்மானம், நாடாளுமன்றத்தில் வரும் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்படும்.
அவசர நிலையை அறிவிக்கும் அளவுக்கு மெக்ஸிகோ எல்லையில் பாதுகாப்பு அச்சுறுத்தல் எதுவும் ஏற்படவில்லை. எனவே, டிரம்ப்பின் அவசர நிலை பிரகடனம் தேவையில்லாத ஒன்றாகும்.
அமெரிக்காவில் மன்னராட்சி நடைபெறவில்லை; இங்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. எனவே, சர்ச்சைக்குரிய மெக்ஸிகோ எல்லைச் சுவரை எழுப்புவதற்காக அதிபர் டிரம்ப் தன்னிச்சையாக அவசர நிலை அறிவித்துள்ளது கண்டிக்கத்தக்கது ஆகும் என்றார் அவர்.
"வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்துவேன்': அவசர நிலைக்கு எதிரான தீர்மானங்கள் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டால், அந்தத் தீர்மானத்தை தனது "வீட்டோ' அதிகாரத்தைப் பயன்படுத்தி ரத்து செய்யப்போவதாக டிரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மெக்ஸிகோ வழியாக அமெரிக்காவுக்குள் அகதிகள் வருவதைத் தடுக்கும் வகையில், எல்லை நெடுகிலும் தடுப்புச் சுவர் எழுப்புவதற்காக பட்ஜெட்டில் 570 கோடி டாலர் (சுமார் ரூ.40,300 கோடி) நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று அதிபர் டிரம்ப் வலியுறுத்தி வந்தார். 
அதற்கு எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 
இந்தச் சூழலில், எல்லையில் தடுப்புச் சுவர் எழுப்பவதற்கு நாடாளுமன்ற அனுமதியில்லாமலேயே நிதி ஒதுக்கீடு செய்வதற்கு வழிவகுக்கும் வகையில், நாட்டில் அவசர நிலையை அமல்படுத்தப் போவதாக டிரம்ப் கடந்த வாரம் அறிவித்தார்.
இதற்கு ஜனநாயகக் கட்சியினர் மட்டுமன்றி, ஆளும் குடியரசுக் கட்சி எம்.பி.க்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அவசர நிலையை ரத்து செய்வதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டுவரப் போவதாக நான்சி பெலோசி தெரிவித்துள்ளது அமெரிக்க அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com