நாடு அங்கீகாரத்தின் வகைகள்

நாடு அங்கீகாரத்தின் வகைகள்

நாடு அங்கீகாரத்தின் வகைகள் (Kinds of Recognition)

1.    உட்கடை அங்கீகாரமும் வெளிப்படையான அங்கீகாரமும்  (Implied and Express Recognition)
    

அங்கீகரிக்கும் நாட்டின் வெளிப்படையான அறிவிப்பு அல்லது அங்கீகாரத்திற்கான உடன்படிக்கையின் மூலம் வழங்கப்படுவது வெளிப்படையான அங்கீகாரமாகும்.  இதுவே சட்டநிலை அங்கீகாரம்  என்றும் அழைக்கப்படுகிறது.
    

இதற்கு மாறாக அங்கீகரிக்கும் நாட்டின் நடத்தைகள் மூலமாக வழங்கப்படும் நடப்புநிலை அங்கீகாரமே உட்கிடையான அல்லது மறைமுக அங்கீகாரம் எனப்படும்.  உட்கிடை அங்கீகாரம் என்பது, சர்வதேசச் சூழ்நிலைகளின் நடப்பில் இருந்து, அப்புதிய நாடு சர்வதேசச் சமுதாயத்தின் உறுப்பினராக ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டது என்று ஊகிக்கப்படக் கூடிய அங்கீகாரமாகும்.  

பின்வரும் சூழ்நிலைகள் உட்கிடை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்துவனவாகும். 
(i) சம்பந்தப்பட்ட புதிய நாடு பல நாடுகளின் கூட்டு உடன்படிக்கைகளில் பங்கெடுப்பது
(ii) சர்வதேச மாநாடுகளில் புதிய நாடு கலந்து கொள்வது
(iii) அங்கீகரிக்கப்படும் புதிய நாட்டிற்கும் அங்கீகரிக்கும் நாடுகளுக்கும் இடையல் பேச்சு வார்த்தைகள் துவங்கப்படுவது.
    

இவை தவிர பின்வருவன உட்கிடை அங்கீகாரத்தையே சட்டநிலை அங்கீகாரமாகவும் கருதப்படக் கூடிய சூழ்நிலைகளாகும். அவை:
(i) அங்கீகரிக்கும் நாடும் அங்கீகரிக்கப்படும் புதிய நாடும் இருதரப்புஉடன்படிக்கை ஒன்றில் கையொப்பமிடுவது.
(ii) புதிய நாட்டுடன் தூதரக உறவுகளை துவக்குவதும் வணிகத் தூதர்களையும் பரிமாறிக் கொள்வதும்.

2.    நிபந்தனை அங்கீகாரம்  (Conditional Recognition)
    

அங்கீகாரம் வழங்குவது என்பது அங்கீகரிக்கும் நாட்டின் அரசியல் முடிவு என்பதால் சில சமயங்களில் அந்த அங்கீகாரம் நிபந்தனையுடனும் வழங்கப்படலாம். ஆனால் அந்நிபந்தனைகள் அங்கீகரத்திற்குப் பின்னர் விதிக்கப்பட முடியாது.  அங்கீகாரம் வழங்கும் போதே அதனுடன் இணைந்தே வழங்கப்பட வேண்டும்.  உதாரணத்திற்கு 1878 ஆம் ஆண்டில் பல்கேரியாவையும் ருமேனியாவையும் அங்கீகரிக்கும் போது ஜெர்மனி, அந்நாடுகள், தங்கள் குடிமக்களிடையே மத அடிப்படையில் பாடுபாடு காட்டக் கூடாது என்ற நிபந்தனையை விதித்ததைக் கூறலாம்.
    

நிபந்தனை அங்கீகாரம், ஒரு சட்டநிலை அங்கீகாரம் ஆகும்.  எனவே விதிக்கப்பட்ட நிபந்தனை  பின்னாளில் மீறப்பட்டாலும் கொடுத்த அங்கீகாரத்தை திரும்ப பெற முடியாது. நிபந்தனையை மீறிய நாட்டின் மீது பொறுப்புநிலையைச் சுமத்த வேறுபல சர்வதேச நடைமுறைகளையே பின்பற்ற வேண்டும்.

3.    கூட்டு அங்கீகாரம் (Collective Recognition)
    

பொதுவாக அங்கீகாரம் என்பது ஒவ்வொரு நாடும் தனித்தனியாக வழங்குவதே வழக்கமாகும்.  சில நேரங்களில் பல நாடுகள் ஒன்று சேர்ந்து ஒரே ஆவணம் மூலமும் ஒரு புதிய நாட்டிற்கு அங்கீகாரம் வழங்கலாம்.  அத்தகைய அங்கீகாரம் கூட்டு அங்கீகாரம் எனப்படும்.
    

சர்வதேச நீதிமன்றம் ஒரு நாட்டை ஐக்கிய நாடுகள் சபையில் சேர்ப்பதற்கான நிபந்தனைகள் குறித்து தனது கருத்துரை (ICJ Rep. (1948) P4)- இல் ஒரு நாடு ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினராக சேர்க்கும் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த அனைத்து நாடுகளின் கூட்டு அங்கீகாரமாகவே கருதப்பட வேண்டும் என்று கூறியுள்ளது. ஆனால் அக்கூட்டு அங்கீகாரம் என்பது ஐ.நா.சபையின் அனைத்து உறுப்பினர்களின் அங்கீகாரமாக ஆகாது.  ஆதரவாக வாக்களிக்காத நாடுகளைக் பொறுத்த வரை அக்கூட்டு அங்கீகாரம் ஓர் அங்கீகாரமாக கருதப்பட முடியாது.

4.    கிளர்ச்சிநிலை அங்கீகாரம்  (Recognition of Insurgency)
    

கிளர்ச்சிநிலை என்பது அதன் உள்ளடக்கத்தில் உள்நாட்டுப் போரைக் (Civil War) குறிப்பதாகும்.  ஒரு நாட்டின் அரசுக்கு எதிராக அந்நாட்டுக் குடிமக்களின் ஒரு பகுதியினரே கிளர்ந்து எழுந்து நாட்டின் அரசுக்கு போரிடும் நாட்டின் நிலைமையே கிளர்ச்சி நிலை எனப்படும். கிளர்ச்சிப்படை நாட்டின் பெரும் பகுதியைக் கைப்பற்றி தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து விடும் போது அப்பகுதியில் நடப்புநிலை அரசதிகாரம் கிளர்ச்சி அரசாங்கத்திடமே இருக்கும்.  

இந்நிலையில் கிளர்ச்சிப் படையினரின் வசம் இருக்கும் பகுதியில் உள்ள தங்கள் நாட்டு முதலீடுகள், வர்த்தக நலன்கள், துறைமுக வசதிகள் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு, மற்ற நாடுகள் அக்கிளர்ச்சி அரசாங்கத்திற்கு நடப்புநிலை அங்கீகாரம் வழங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். ஆத்தகைய சூழ்நிலைகயில் கிளர்ச்சி நிலை அங்கீகாரம் வழங்கப்படலாம். கிளர்ச்சிப் படையினர் வசமிருக்கும் நாட்டின் பகுதிக்கு கிளர்ச்சி நிலை அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கும் அதே சமயத்தில், முந்தய அரசாங்கப் படையினர் வசமிருக்கும் மீதமுள்ள பகுதியிலுள்ள முந்திய அரசு சட்டநிலை அங்காரம் பெற்ற அரசாக நீடிக்கலாம்.
    

உதாரணத்திற்கு 1936 – 1938 கால கட்டங்களில் ஸ்பெயினில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின் போது, இங்கிலாந்து கிளர்ச்சிப் படை வசமிருந்து பகுதிக்கு நடப்புநிலை அங்கீகாரமும் முந்தய குடியரசு அரசாங்கம் வசமிருந்த பகுதிக்கு சட்டநிலை அங்கீகாரமும் ஒரே சமயத்தில் வழங்கியிருந்ததைக் குறிப்பிடலாம்.

5.    போர்நிலை அங்கீகாரம் (Recognition of Belligerency)

கிளர்ச்சியாளர்கள் நாட்டின் ஒரு பகுதியைக் கைப்பற்றி ஓர் கிளர்ச்சி அரசாங்கத்தை ஏற்படுத்திய பின்னர், அக்கிளர்ச்சிக் காரர்களின் பகுதிக்கு நடப்புநிலை அங்கீகாரம் பெற்ற நாடாக் கருதி கிளர்ச்சி நிலை அங்கீகாரமும் வழங்கப்படும் போது, அது நடைமுறையில் ஒரு நாடாகவே ஆகிவிடுகிறது.  

அந்நிலையை அடைந்த பின்னர் உள்நாட்டில் ஏற்கனவே இருந்த சட்டநிலை அங்கீகாரம் பெற்ற நாட்டுக்கும் புதிதாக நடப்புநிலை அங்கீகாரம் பெற்ற கிளர்ச்சியாளரின் நாட்டுக்கும் இடையே நடக்கும் உள்நாட்டுப் போர், இரு நாடுகளுக்கு இடையிலான போர் என்ற நிலைக்கு வளர்ச்சியடைகிறது.  

இந்நிலையில் போர்கள் தொடர்பான சர்வதேச விதிகள் மீறப்படாமல் முழுமையாக கடைபிடிக்கப்படுவதற்கு அல்லது போர் நிறுத்தம் தொடர்பான பேச்சு வார்த்தைகளைத் தொடங்குவதற்கு முந்தய நாட்டு அரசாங்கம் அல்லது பிற நாடுகள் போரில் ஈடுபட்டிருக்கும் புதிய நாட்டிற்கு நடப்புநிலை அங்கீகாரம் வழங்க வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்படும்.  அத்தகைய போர் நிலையில் வழங்கப்படும் அங்கீகாரம் போர் நிiலை அங்கீகாரம் எனப்படும்.
    

கிளர்ச்சி நிலை அங்கீகாரமும் போர்நிலை அங்கீகாரமும் நடப்புநிலை அங்கீகாரங்களேயாகும்.

அங்கீகாரம் வழங்க வேண்டியது நாடுகளின் கடமையா?

பொதுவாக ஒரு நாட்டிற்குரிய அனைத்துக் கூறுகளையும் கொண்ட நிலப்பகுதி ஒரு நாடாக அங்கீகரிக்கப்படுவது வழக்கமாகும்.  ஆனால், நாட்டின் கூறுகளை அடைந்த எந்ததொரு நிலப்பகுதியையும் நாடாக அங்கீகரித்தே ஆக வேண்டும் என்று சர்வதேசச் சட்டம் எந்ததொரு நாட்டையும் கட்டாயப்படுத்தவில்லை. எனவே அங்கீகாரம் வழங்க வேண்டியது எந்ததொரு நாட்டிற்கும் கட்டாயமோ கடமையோ அல்ல.  ஒவ்வொரு நாடும் தன் நாட்டு நலனையும் அரசியலையும் கணக்கில் கொண்டு புதிய நாட்டை அங்கீகரிக்கலாம் அல்லது அங்கீகரிக்க மறுக்கலாம்.


ஸ்டிம்சன் கோட்பாடு அல்லது அங்கீகரியாமை கோட்பாடு (Doctrine of Simson or Doctrine of Non-Recognition)
    

ஒரு புதிய நாட்டிற்கு அங்கீகாரம் வழங்க வேண்டிய கடமை ஒரு நாட்டிற்கு இல்லையென்ற போதிலும் சில சூழ்நிலைகளில் வழங்காமல் இருக்க வேண்டிய கடமை ஒவ்வொரு நாட்டுக்கும் உருவாகிறது.  அத்தகைய கடமையினையே ஸ்டிம்சன் கோட்பாடு கூறுகிறது.
    

இக்கோட்பாடு 1931 காலகட்டத்தில் அமெரிக்காவின் அரசுச் செயலராக இருந்த ஸ்டிம்சன் என்பவரால் முன் மொழியப்பட்டதால் அது ஸ்டிம்சன் கோட்பாடு என்று அழைக்கப்படுகிறது. இக்கோட்பாட்டின் படி, போர் மூலம் எந்தவொரு நாட்டையும் ஆக்கிரமிக்கக் கூடாது என்ற 1928 ஆம் ஆண்டு பாரிஸ் உடன்படிக்கைக்கு விரோதமாக ஆக்கிரமிப்பினால் உருவாக்கப்பட்ட நாட்டிற்கு எந்தவொரு நாடும் அங்கீகாரம் வழங்கக் கூடாது.  ஏதேனுமொரு நாடு அதையும் மீறி அங்கீகாரம் வழங்கினால் அந்த அங்கீகாரம் சர்வதேசச் சட்டத்தில் செல்லாத அங்கீகாரமாகவே கருதப்படவேண்டும். எனவே இக்கோட்பாடு எனவும் அழைக்கப்படுகிறது. இக்கோட்பாடு 1931-இல் பாரிஸ் உடன்படிக்கையை மீறி ஜப்பான், மஞ்சூரியாவைக் கைப்பற்றிய போது அதற்கு அங்கீகாரம் வழங்க மறுக்கும் வகையில் உருவாக்கப்பட்டதாகும்.
    

ஸ்டிசம்சனின் இக்கோட்பாடு சர்வதேசச் சட்டக் கொள்கை (Policy) தானேயொழிய சர்வதேசச் சட்ட விதியல்ல. எனவே நடைமுறையில் இக்கோட்பாடு நாடுகளால் பின்பற்றப்படவில்லை என்பதே உண்மையாகும் இத்தாலி, ஆக்கிரமிப்பின் மூலம் அபிசீனியாவை கைப்பற்றிய போது பெரும்பாலான நாடுகள் அதற்கு அங்கீகாரம் வழங்கின என்பது குறிப்பிடத்தக்கது. ஹிட்லரின் ஆக்கிரமிப்புகளும் அவ்வாறே அங்கீகரிக்கப்பட்டன.
    

ஆனால் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் வல்லரசு நாடுகள் போர் அல்லது ஆக்கிரமிப்பின் மூலம் அடைந்த நாடுகளை அங்கீகரிக்க மறுக்கும் கோட்பாட்டை தொடர்ச்சியாக பின்பற்றி வந்துள்ளன. உதாரணத்திற்கு, அமெரிக்கா 1960-களில் ரொமீஷயாவின் வெள்ளை சிறுபான்மையின் அரசின் சுதந்திரப் பிரகடனத்தை அங்கீகரிக்கக் கூடாது  என்று அனைத்து நாடுகளையும் கேட்டுக் கொண்டது.  அதுபோல 1980களில் தென்னாப்பிரிக்காவின் நிறவெறி அரசு, அதன் நிறவெறிக் கொள்கையின் ஒரு பகுதியாக வெள்ளை இனத்தவரின் தாய்மண் என்ற பொருளில் உருவாக்கிய பந்துஸ்தான் (Bantustans) சுதந்திர அரசுகளை அங்கீகரிக்காமலிருக்க சர்வதேச அளவில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.  1990இல் இராணுவத்தின் மூலம் இராக்,  தன் அண்டை நாடான குவைத்தை(Kuwait) இணைத்துக் கொண்டதையும் உலக நாடுகள் அங்கீகரிக்கவில்லை.

எஸ்ட்ராடா கோட்பாடு  (Doctrine of Estrada)

நாடுகளுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டிய கடமை எந்தவொரு நாட்டிற்கும் கிடையாது என்பது போலவே அங்கீகாரம் வழங்கக் கூடாது என்பதும் சர்வதேசச் சட்ட விதியல்ல. எனவே அங்கீகாரம் வழங்குவது ஒவ்வொரு நாட்டின் தனியுரிமை. அதனை சர்வதேசச் சட்டவிதிகள் கட்டுப்படுத்தக் கூடாது என்ற அடிப்படையில் மெக்ஸிகோ நாட்டில் பாஸ்கல் ஆர்டிஸ் ரூபியோ (Pascual Ortiz Rubio) அதிபராயிருந்த காலத்தில் அயல்நாட்டு அமைச்சராயிருந்த, எஸ்ட்ராடா என்பவரால் அறிவிக்கப்பட்டதே எஸ்ட்ராடா கோட்பாடு ஆகும்.
    

இக்கோட்பாட்டின் படி, மற்ற நாடுகளுடன் தூதரக உறவுகளை ஏற்படுத்துவதில், ஒவ்வொரு நாட்டின் நடப்பு உண்மைகள் மற்றும் சூழ்நிலைகளின் படி முடிவு எடுப்பதற்கு மெக்ஸிகோ நாட்டிற்கு முழு சுதந்திரம் உண்டு. அதாவது, எந்தவொரு நாட்டிலும் புரட்சியின் மூலம் அரசாங்கம் மாற்றப்பட்ட பிறகு அப்புதிய அரசாங்கம் மக்களின் பேராதரவைப் பெற்றதாக இருக்கிறது எனில், அந்த அரசாங்கத்துடன் மெக்ஸிகோ தூதரக உறவுகளை ஏறபடுத்தும்.
    

இக்கோட்பாடு அங்கீகாரம் பற்றிய சாவதேசச்சட்டத்தின் பொதுவிதியை மீறுவதாக இருப்பதாகக் கூறி பல்வேறு நாடுகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

அங்கீகாரத்தை திரும்பப்பெற இயலுமா?
    

பொதுவாக, நடப்புநிலை அங்கீகாரம், சட்டநிலை அங்கீகாரமாக மாறுவதற்கு முன்னரே அங்கீகரிக்கப்பட்ட நாடு நிலைத்தன்மையை இழந்து போய்விட்டால், அதற்கு முன்னர் வழங்கப்பட்ட நடப்புநிலை அங்கீகாரம் திரும்பப் பெறப்படலாம். ஆனால் ஒரு முறை சட்டநிலை அங்கீகாரம் வழங்கப்பட்டுவிட்டால் அதனை திரும்பப் பெற இயலாது.
    

சில நேரங்களில் சட்டநிலை அங்கீகாரம் வழங்கப்பட்ட பின்னர், அப்புதிய நாடு நாட்டிற்குரிய தகுதிகளை இழந்து விட்டால் அல்லது அந்த நாடே இல்லாமல் போய்விட்டால் அதற்கு வழங்கப்பட்ட அங்கீகாரம் திரும்பப் பெறப்படலாம்.  

சர்வதேசச் சட்ட நிறுவனம் 1936 ஆம் ஆண்டு தீர்மானத்தில், “சட்டநிலை அங்கீகாரம் திரும்பப் பெற இயலாத அங்கீகாரமாகும். ஆனால் நாட்டுத் தகுதிகளில் ஏதேனுமொன்றை அந்நாடு இழந்துவிட்டால் அதற்கு வழங்கப்பட்ட அங்கீகாரம் முடிவுக்கு வந்துவிடும்” என்று கூறியுள்ளது. எனவே அத்தகைய சூழ்நிலைகள் தவிர பொதுவில் சட்டநிலை அங்கீகாரத்தை திரும்பப் பெற இயலாது.  

அங்கீகாரம் வழங்கிய நாடு, அந்நாட்டுடன் தூதரக உறவுகளை துண்டித்துக் கொண்டாலும் கூட, அதற்கு முன்னர் வழய்கப்பட்ட அங்கீகாரத்தை அது எவ்விதத்திலும் பாதிக்காது.  உதாரணத்திற்கு, இங்கிலாந்து, 1924 இல் சோவியத் யூனியனுக்கு சட்டநிலை அங்கீகாரம் வழங்கியது. ஆதன் பின்னர் 1927இல் அது சோவியத் யூனியனுடனான தூதரக உறவுகளை துண்டித்துக் கொண்டது.  1939 இல் சர்வதேசச் சங்கத்தில் (league of Nations) இருந்து சோவியத் யூனியன் வெளியேற்றப்பட்டது.  ஆனால் தூதரக உறவுகளை துண்டித்துக் கொண்டதோ, சர்வதேசச் சங்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதோ சோவித் யூனியனின் அங்கீகாரத்தை எவ்விதத்திலும் பாதிக்கவில்லை.

அங்கீகாரமின்மையின் விளைவுகள் (Effects of non-Recognition)
    

ஒரு நாடு மற்ற நாடுகளால் அங்கீகாரிக்கப்பட்ட வில்லையெனில், அந்நாடு அங்கீகரிக்காத நாட்டைப் பொறுத்து சில விளைவுகளைச் சந்திக்க நேரிடுகிறது. அவை:
1. அங்கீகரிக்கப்படாத நாடு, தன்னை அங்கீகரிக்காத நாட்டின் நீதிமன்றங்களில் வழக்கிடவோ அல்லது அதற்கு எதிராக வழக்குத் தொடரப்படவோ முடியாது. (Russian Socialist Federal Soviet Republic-Vs-Cibrario N.Y.255 (1923))
2. அங்கீகரிக்கப்படாத நாடுகளுடன் சர்வதேச மரியாதை உறவுகள் (International Comity) கிடையாது என்பதால், அங்கீகரிக்கப்படாத நாட்டின் சட்டங்களை அங்கீகரிக்காத நாட்டின் நீதிமன்றங்கள் ஏற்றுக் கொள்வதில்லை.
3. அங்கீகரிக்கப்படாத நாட்டு அரசின் பிரதிநிதிகளுக்கு, அங்கீகரிக்காத நாட்டின் சட்டங்களில் இருந்து எவ்வித விலக்களிப்புகளும்  வழங்கப்படாது.
4. அங்கீகரிக்கப்படாத நாடு, அல்லது அரசாங்கத்திற்குச் சொந்தமான சொத்துக்கள், அங்கீகரிக்காத நாட்டின் எல்லைக்குள் இருக்குமானால் அச்சொத்துக்களை அங்கீகரிக்கப்படாத நாடு கோர முடியாது.  மாறாக அச்சொத்துக்களை அதற்கு முன்பிருந்த சட்டநிலை அங்கீகாரம் பெற்ற பழைய அரசே கோர முடியும்.(Bank of China-Vs-wells Fargo bank & Union Trust Co (19520 104 F.Supp.59)
5. அங்கீகரிக்கப்படாத நாடு அங்கீகரிக்காத நாட்டுடன் தூதரக உறவுகளையோ வணிக உறவுகளையோ மேற்கொள்ள முடியாது.

அங்கீகாரத்தின் சட்ட விளைவுகள் (Legal Effects of Recognition)
    

புதிதாக உருவான நாடு ஏற்கனவே இருக்கும் நாடுகளின் அங்கீகாரத்தைப் பெறும்பொழுது, அந்த அங்கீகாரம் அப்புதிய நாட்டின் சர்வதேசத் தகுநிலையில் குறிப்பிடத்தக்க சட்ட விளைவுகளை ஏற்படுத்துகிறது. அவை:
1. சர்வதேசச் சட்டத்தில், அங்கீகாரத்தின் மூலம் பெறக்கூடிய முக்கியமான விளைவு, அங்கீகரிக்கப்படும் நாடு சர்வதேசச் சமுதாயத்தில் ஒரு உறுப்பினராக ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
2. அங்கீகாரம் பெற்ற நாடு மற்ற நாடுகளுடன் தூதரக உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளவும் வணிகத் தூதர்களைப் பரிமாறிக் கொள்ளும் உரிமை பெறுகின்றது. அதுபோல மற்ற நாடுகளுடன் உடன்படிக்கைகளை ஏற்படுத்திக் கொள்ளும் தகுதியையும் பெறுகின்றது.
3. அங்கீகாரம் பெற்ற புதிய நாட்டிற்கு, அதன் முந்தய நாட்டின் வாரிசு என்ற இறங்குரிமை  கிடைக்கின்றது.
4. அங்கீகரிக்கப்பட்ட நாடு, அங்கீகரிக்கும் நாட்டின் நீதிமன்றங்களின்  வழக்குத் தொடர்வதற்கான உரிமையைப் பெறுகிறது.
5. அங்கீகரிக்கப்பட்ட நாட்டின் சட்டங்களும் அரசின் நிர்வாக நடவடிக்கைகளும் அங்கீகரிக்கும் நாட்டின் நீதிமன்றங்களில் ஏற்கப்படும்.
6. அங்கீகரிக்கப்பட்ட நாடு, தனது தூதரக முகவர்களுக்கும் சொத்துக்களுக்கும் அங்கீகரிக்கும் நாட்டின் நீதிமன்றங்களின் அதிகார வரம்பில் இருந்து விலக்களிப்பு பெறலாம்.
7. அங்கீகரிக்கும் நாட்டின் எல்லைக்குள் இருக்கும் தனக்கு முந்தய அரசாங்கத்தின் சொத்துக்களின் மீது உரிமை கோர முடியும்.

நாட்டின் அங்கீகாரமும் புதிய அரசாங்கத்தின் அங்கீகாரமும் (Recognition of State and New Government)
    

நாடு  என்பது வேறு, அந்நாட்டை நிர்வகிக்கும் அரசாங்கம் அல்லது அரசுத் தலைவர் (Head of State) என்பது வேறு ஆகும். அரசாங்கம் என்பது ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட ஒரு நாட்டில், அந்நாட்டின் சட்டத்திற்கு உட்பட்டு அந்நாட்டை நிர்வகிக்கும் அதிகார அமைப்பாகும்.  ஒரு நாட்டில் அதன்  சட்டத்திற்கு உட்பட்டு குறிப்பிட்ட கால இடைவெளிகளில் புதிய அரசுத் தலைவர் அல்லது புதிய அரசாங்கம் மாறிக் கொண்டே இருக்கலாம்.  அவ்வாறு மாறும் புதிய அரசாங்கம் அல்லது புதிய அரசுத் தலைவரை மற்ற நாடுகள் முறைப்படி அங்கீகரிப்பதும் ஒரு நாட்டை அங்கீகரிப்பதும் ஒன்றல்ல.  இரண்டும் அடிப்படையில் வேறுபட்ட இருவேறு செயல்களாகும்.
    

தற்கால சர்வதேச நடைமுறைகளில் புதிய அரசாங்கம் அல்லது புதிய அரசுத் தலைவரின மாற்றத்திற்கு தனியே அங்கீகாரம் எதுவும் வழங்கப்படுவதில்லை. மாறாக அம்மாற்றத்திற்கு பிறகு பதவியேற்கும் புதிய அரசாங்கம் அல்லது அரசுத் தலைமைக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பும் சம்பிரதாயத்துடன் அது முடித்துக் கொள்ளப்படுகிறது. அவ்விதம் சம்பிரதாயமாக வாழ்த்துச் செய்தி அனுப்பாவிட்டாலும் அது அந்நாட்டின் அங்கீகாரத்தையோ தூதரக உறவுகளையோ எவ்விதத்திலும் பாதிக்காது.

தொடரும்...

Lr.C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com