நாட்டின் ஆள்நில எல்லை - (பாகம் 1)

நாட்டின் ஆள்நில எல்லை - (பாகம் 1)

நாட்டின் ஆள்நில எல்லை - (பாகம் 1)

(Territory of State)

நாட்டின் ஆள்நில எல்லை என்பது ஒரு நாட்டிற்கு இருக்க வேண்டிய அத்தியாவசிய ஆக்கக் கூறுகளில் தொடர்ச்சியான நிலப்பகுதியாகும். கெல்சன் ‘நாட்டின் ஆள்நில எல்லை என்பது, ஒரு நாட்டு அரசின் செயல்கள் அதிலும் குறிப்பாக கட்டாயப்படுத்தும் செயல்களும் அதன் சட்டங்களும் செயல்படுவதற்கான அதிகாரம் பெற்றதாக சர்வதேசச் சட்டத்தால் பொதுவாக அனுமதிக்கப்படும் நிலப்பகுதியாகும்.” என்று வரையறுக்கிறார். வேறு விதமாகக் கூறினால் ஒரு நாட்டின் அதிகார வரம்பு (State Jurisdiction) செயல்படும் நிலப்பகுதியே அந்நாட்டின் ஆள்நில எல்லை ஆகும் எனலாம். அது போல ஒரு நாட்டு அரசின் இறையாண்மை (Sovereignity) அதிகாரம் செலுத்த இயலக் கூடிய நிலப்பகுதியே நாட்டின் ஆள்நில எல்லை எனவும் கூறலாம்.

ஆள்நில இறையாண்மை (Territorial Sovereignity)

ஆள்நில இறையாண்மை என்பது, ஒரு நாடு தன் நாட்டின் ஆள்நில எல்லைக்குள் இருக்கும் அனைத்து மக்கள் மீதும் சொத்துக்கள் மீதும் கொண்டிருக்கும் தனிப்பட்ட முழுமையான கட்டுப்படுத்தும் அதிகாரம் ஆகும். வேறு எந்தவொரு நாடும் அக்கட்டுப்பாட்டில் தலையிட முடியாதவாறு அந்நாடு கொண்டிருக்கும் அதிகார வரம்பே ஆள்நில இறையாண்மை எனலாம். ஆள்நில இறையாண்மையின் இன்னொரு அம்சம், அனைத்து நாடுகளும் சமமானவை என்பதாகும். வெவ்வேறு அளவுகளிலான நிலப்பகுதி, மக்கள்தொகை அல்லது பொருளாதார வலிமையைக் கொண்டவையாக இருந்தாலும் சர்வதேசச் சட்டத்தில் அனைத்து நாடுகளும் சமமானவையே. அதாவது குட்டித் தீவு நாடாகிய மைக்ரோனேஷியாவாக இருந்தாலும் பெரும் நிலப்பகுதியைக் கொண்ட ரஷ்யாவாக இருந்தாலும் தங்களது நாட்டின் ஆள்நில எல்லைக்குள் சுயமாகவும் சுதந்திரமாகவும் செயல்படுவதற்கான சம உரிமை கொண்டவையே ஆகும். சர்வதேசச் சட்டத்தில் அனைத்து நாடுகளும் சமமானவை என்பதால் ஒரு நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்கு மற்ற நாடுகள் எதற்கும் உரிமை கிடையாது.

நடைமுறை வழக்கின் அடிப்படையில் ஆள்நில இறையாண்மை என்பது, எந்தவொரு நாடும் மற்றொரு நாட்டின் உள்நாட்டுச் செயல்பாடு ஒன்றை நிறுத்துமாறு உத்தரவிட முடியாது. அதனால் தனக்கோ பொதுவாக மனித சமுதாயத்திற்கோ பாதிப்பு ஏற்படும் மற்ற நாடுகள் கருதினால் அந்நாட்டுடன் பேச்சு வார்த்தை நடத்தலாம் அல்லது ஐ.நா. சபையின் மூலம் தடுத்து நிறுத்த முயலலாம். மாறாக, ஒரு நாடு தன்னைப்போன்ற சமதகுதி உள்ள நாடு ஒன்றின் செயலை தன் உத்தரவின் மூலம் தடுத்து நிறுத்த முடியாது.

ஆள்நில இறையாண்மை எனும் கருத்தாக்கத்தின்படி எந்தவொரு நாடும், மற்றொரு நாடு, அதன் உள்விவகாரங்களை எப்படிக் கையாள வேண்டும் என்று கூற முடியாது. இறையாண்மை என்பது ஒரு நாட்டிற்கு அதிகாரத்தையும் தருகிறது. அதிகாரத்தை தடுக்கவும் செய்கிறது. அது உள்நாட்டைப் பொறுத்த வரை முழு அதிகாரம் வழங்குவதாகவும் மற்ற நாடுகளைப் பொருத்த வரை அதிகாரத்தை தடுப்பதாகவும் உள்ளது.

ஆனால் உலகமயமாக்கல் (Globalisation) வந்த பிறகு நாட்டின் இறையாண்மை பற்றிய கண்ணோட்டம் பெரும் மாற்றத்திற்கு உள்ளாகியுள்ளது. மனித உரிமைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றவை உலக பொது விவகாரங்களாகிவிட்டன. இவற்றை மீறும் வகையில் ஒரு நாடு உள்நாட்டில் செயல்பட்டாலும் உலக நாடுகள் அதில் தலையிடலாம் அல்லது உள்நாட்டி; மனிதஉரிமை மீறல்களை கண்காணிக்கலாம். ஒரு நாட்டின் குடிமகளின் அடிப்படை உரிமைகள் அந்த நாடு மட்டும் சம்பந்தப்பட்ட விஷயம் என்ற நிலையில் இருந்து மாறி, அது உலக சமுதாயத்தின் பொறுப்பு என்ற நிலைக்கு வளர்ச்சியடைந்துள்ளது.

ஆள்நில எல்லையின் கூறுகள் (Parts of State Territory)

ஒரு நாட்டின் ஆள்நில எல்லை என்பது அதன் நிலப்பரப்பை மட்டும் குறிப்பதல்ல. மாறாக அந்நாட்டில் உள்ள நீர்நிலைகளையும் சர்வதேச நீர்நிலைகளில் உள்ள உரிமைகளையும் உள்ளடக்கியதாகும். எனவே ஒரு நாட்டின் ஆள்நில எல்லையின் கூறுகளாக பின்வருவனவற்றை கூறலாம்:-

1. எல்லைகள்

2. தேசிய நீர்நிலைகள்

3. எல்லையோர நீர்நிலைகள்

4. வான் எல்லை

1. நாட்டின் எல்லைகள் (Boundaries)

நாட்டின் எல்லைகள் என்பது, ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டின் ஆள்நில எல்லைகளைப் பிரிக்கின்ற வகையில் பூமியின் மேற்பரப்பில் வரையப்படும் கற்பனையான கோடுகளே என்று ஸ்டார்க் வரையறுக்கின்றார். நாட்டின் எல்லைகளை சம்பந்தப்பட்ட நாடுகள் அது குறித்த உடன்படிக்கைகள் மூலமாகவோ அல்லது நடைமுறை ஒப்புதல் மூலமாகவோ அங்கீகரிக்கின்றன.

நாட்டின் எல்லைகள் (a) இயற்கை எல்லைகள் என்றும் (b) செயற்கை எல்லைகள் என்றும் இரு வகைப்படும். நாட்டின் எல்லைகளாக அமைந்திருக்கும் மலைகள், ஆறுகள், கடற்கரைகள், காடுகள் போன்றவை இயற்கை எல்லைகள் எனப்படும். நாடுகளைப் பிரிக்கும் வகையில் கற்பனையாக பூமியின் அட்சரேகை (Latitude) மற்றும் தீர்க்க ரேகை (Langitude)களுக்கு இணையாக வரையப்படும் கோடுகளே செயற்கை எல்லைகள் எனப்படும்.

நாடுகளுக்கு இடையிலான எல்லையாக ஆறு அமைந்திருந்தால் அந்த ஆறு போக்குவரத்துக்குப் பயன்படாத ஆறு எனில் ஆற்றின் நடுவில் எல்லை அமைந்திருப்பதாகக் கருதப்படும். அது மையக் கோடு (Median Line) எனப்படும். அதுவே போக்குவரத்துக்குப் பயன்படும் ஆறு எனில் அதன் ஆழமரன போக்குவரத்துப் பாதையின் நடுவில் எல்லைக்கோடு செல்வதாகக் கொள்ளப்படும். அது தால்வெக் (Thalweg) அல்லது ஆழ் மையக் கோடு எனப்படும்.

New Moore Island Case (2014) வழக்கில், இந்தியாவிற்கும், பங்காளதேஷிற்கும் இடையில் சுந்தரவனக் காடுகள் வழியே வாயும் ஹரியவங்கா (Harianbanga) ஆறு கடலில் கலக்கும் முகத்துவாரத்தில் இருக்கும் நியூமூர் அல்லது தெற்கு தல்பதி (South Talpatti) தீவு, யாருக்குச் சொந்தம் என்ற பிரச்சனை எழுந்தது. ஹரியவங்கா ஆறு சில ஆண்டுகள், அத்தீவுக்கு கிழக்கிலும் சில ஆண்டுகள், அத்தீவுக்கு மேற்கிலும் மாறி மாறி பாய்ந்ததால் தால்வெக் அல்லது ஆழ்மையக் கோட்டை இருநாடுகளும் தங்களுக்கு சாதகமாக வரையறுத்தன. இவ்வழக்கை விசாரித்த சர்வதேசச் தீர்ப்பாயம் பிரச்சனைக்குரிய மொத்த பகுதியான 25,000 ச.கி.மீட்டர் பரப்பில் பெரும்பகுதி அதாவது 19,467 ச.கி.மீட்டர் பரப்பு பங்களாதேஷிற்கச் சொந்தம் என்றும் மீதமுள்ள பகுதி இந்தியாவுக்குச் சொந்தம் என்றும் முடிவு செய்தது. இந்தியாவிற்கு உரியதாக அறிவிக்கப்பட்ட பகுதியில் நியூமூர் தீவு அமைந்திருந்தால் அத்தீவும் இந்தியாவிற்குச் சொந்தம் என்று முடிவு செய்யப்பட்டது.

Temple of Preach Vihear [ICJ Reports (1962) 6] என்ற வழக்கில் கம்போடியாவிற்கும் சியாமிற்கும் (தற்போது தாய்லாந்து) இடையில் உள்ள பிரயாக் விஹார் எனும் கோயில் சரணாலயப் பகுதி தொடர்பாக எல்லைப் பிரச்சனை எழுந்தது. எல்லை தொடர்பான 1904 ஆம் ஆண்டு உடன்படிக்கைகளுக்கும் 1907ஆம் ஆண்டு வரை படத்திற்கு இடையே இரு நாடுகளுக்கும் முரண்பாடு ஏற்பட்டது. 1904 ஆம் ஆண்டு உடன்படிக்கையின்படி அப்பகுதியில் இயற்கையாக ஏற்பட்டிருந்த ஆற்றுப் பள்ளத்தாக்கு எல்லையாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது. ஆனால் 1907 ஆம்ஆண்டு வரையப்பட்டு 1908 ஆம் ஆண்டு சியாம் (தாய்லாந்து) அரசாங்கத்திற்கு அனுப்பப்பட்ட அக்கோயில் பகுதி கம்போடியாவிற்குள் இருந்தது. அவ்வரைபடத்திற்கு சியாம் அரசாங்கம் ஆற்றுப் பள்ளத்தாக்கு எல்லையைக் குறிப்பிட்டு எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. எனவே 1907 ஆம் ஆண்டு வரைபட எல்லையை சியாம் (தாய்லாந்து) தன் நடத்தையின்மூலம் ஏற்றுக் கொண்டுவிட்டது. எனவே, வரைபடத்தின் எல்லையே இரு நாட்டிற்கும் இடையிலான எல்லையாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். பிரயாக் விஹார் கோவில் பகுதி கம்போடியாவிற்குட்பட்ட பகுதியே என்று சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

2. தேசிய நீர்நிலைகள் (National Waters)

நாட்டின் எல்லைக்குள் இருக்கும், ஏரிகள் (Lakes) கல்வாய்கள் (Canals) ஆறுகள் (Rivers) துறைமுகங்கள் () மற்றும் கப்பல் துறைகள் (Harbours) ஆகியவற்றில் உள்ள நீர்நிலைகள் அந்நாட்டின் தேசிய நீர்நிலைகள் ஆகும். இவையும் அந்நாட்டின் ஆள்நில எல்லையின் ஒரு பகுதியே ஆகும். தேசிய நீர்நிலைகள் என்பது அதன்படி நிலப்பகுதியை (Sub-Soil) யும் உள்ளடக்கியதாகும்.

3. எல்லையோர நீர்நிலைகள் (territorial Waters)

எல்லையோர நீர்நிலைகள் என்பது, அந்நாட்டின் எல்லையோரத்தில் அல்லது அந்நாட்டைச் சுற்றி அமைந்திருக்கும் வளைகுடாக்கள் (Gulfs) விரிகுடாக்கள் (Bays) மற்றும் நீரிணை (ஜலசந்தி) (Straits) களை உள்ளடக்கிய கடற்பகுதி (Maritime Zone) அல்லது கடல்சுற்று (Maritime Belt) ஆகும். இவை ஒரு நாட்டின் ஆள்நில எல்லை வரம்புகளுக்கு உட்பட்ட பகுதியாகும். எல்லையோர நீர்நிலைகள் என்பது, கண்டத்திட்ட தொடர்ச்சியான கடல் மண்டலம், தனியுரிமை பொருளாதார மண்டலம் மற்றும் கடல் அடி நிலப்பகுதியையும் உள்ளடக்கியதாகும்.

4. வான் எல்லை (Aireal Territory)

ஒரு நாட்டின் ஆள்நில எல்லைக்குட்பட்ட நிலம் மற்றும் நீர்ப்பகுதியின் மேலே உள்ள வான் பகுதியும் அந்நாட்டின் அதிகார வரம்பிற்குட்பட்ட எல்லைப்பகுதியே ஆகும். ஆரம்பத்தில் ஒரு நாட்டின் ஆள்நில எல்லைக்குட்பட்ட பகுதியின் மேல் வரம்பற்ற உயரம் வரையிலுமுள்ள வானம் அந்நாட்டிற்கே சொந்தம் என்று கூறப்பட்டது. ஆனால் இக்கருத்து அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படாவிட்டாலும் ஒரு நாட்டின் வலிமைக்கேற்ப அந்நாட்டால் பாதுகாக்க முடிந்த அளவு உயரம் வரை அந்நாட்டிற்கே சொந்தமாக கருதப்படுகிறது. அந்த எல்லைக்குள் அத்துமீறி நுழையும் மற்ற நாட்டின் போர் விமானங்களை (முடிந்தால்) சுட்டு வீழ்த்தும் உரிமை ஒவ்வொரு நாட்டிற்கும் உண்டு. ஆனால் பயணிகள் போக்குவரத்து போன்ற தீங்கற்ற வழியுரிமை அனைத்து நாடுகளுக்கும் உண்டு என்பது சர்வதெச அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் கொள்கையாகும்.

ஆள்நில எல்லைகளை அடையும் வழிமுறைகள்

(Modes of Acquiring Territoris)

ஒரு தனிமனிதன் சொத்துக்களை முயன்று அடைவது போலவே நாடுகளும் தன் இறையாண்மைக்குரிய ஆள்நிலப்பகுதிகளை பல்வேறு வழிமுறைகளில் அடைகின்றன. அவற்றில் முக்கியமான வழிமுறைகள் சில: -

1. ஆக்கிரமிப்பு

2. நிலப்பெருக்கம் அல்லது நில மீட்பு

3. நாட்டுப் பிரிவிணை

4. விட்டுக்கொடுத்தல்

5. நீடானுபோகம்

6. இணைத்தல்

7. குத்தகை

8. அடமானம்

9. பொது வாக்கெடுப்பு

1. ஆக்கிரமிப்பு (Occupation)

ஆள்நில எல்லைப் பகுதியை அடைவதற்கான வழிமுறைகளில் மிகப் பழமையான வழிமுறை ஆக்கிரமிப்பு ஆகுமு;. இதுவரை எந்த ஒரு நாட்டின் ஆள்நிலப்பரப்பாகவும் இல்லாத புதிய நிலப்பகுதிகளைக் கண்டுபிடித்து தனது ஆட்சி நிர்வாகத்தை ஏற்படுவது ஆக்கிரமிப்பே ஆகும்.

ஸ்டார்க், ஆக்கிரமிப்பு என்பது, வேறெந்த நாட்டின் அதிகாரத்தின் கீழும் இல்லாத புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட அல்லது ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டும் அதனை கண்டுபிடித்த நாடு தேவையற்றது என கைவிட்ட நிலப்பகுதியின் மீது ஒரு நாடு தன் இiறாண்மையை நிலைநாட்டுவதாகும் என்றுவரையறுக்கிறார். எனவே தான் ஒப்பன் ஹெய்ம், ஆக்கிரமிப்பு என்பது மற்றொரு நாட்டிடமிருந்து இறையாண்மையைப் பெறுவதல்ல. அது தானே முயன்று இறையாண்மையை அடையும் அசலான வழிமுறையாகும் என்கிறார்.

நாட்டின் ஆள்நில எல்லையை அடைகின்ற ஆக்கிரமிப்பாக கருதப்பட வேண்டுமெனில் இண்டு முக்கியக் கூறுகள் இருக்க வேண்டும் என ஒப்பன்ஹீய்ம் கூறுகிறார். அதாவது கூற்றுப்படி, (i) உடைமை (Possession) மற்றும் (ii) நிர்வாகம் (Administraion) ஆகிய இரு கூறுகள் இருக்க வேண்டும். அதாவது (i) ஆக்கிரமித்த நாடு அந்நிலப்பகுதியை தனது உடைமையில் இருக்கும் பகுதியாக அறிவித்திருக்க வேண்டும். (ii) அந்நிலப்பகுதியில் தனது ஆட்சி நிர்வாகத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிக் பகுதிகளை ஆக்கிரமிப்பு சாத்தியமா?

உலகில் உள்ள ஏழு கண்டங்களில் மனித வாழ்க்கை சாத்தி மற்ற இரண்டு கண்டஙக்ளான ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிக் கண்டங்களின் மீது சில நாடுகள் இறையாண்மை உரிமை கோரின. அவை அப்பகுதிகளில் தாங்கள் நாட்டுத் தேசியக் கொடிகளை நட்டு வைப்பதன் மூலம் தங்கள் நாட்டிற்குட்பட்ட பகுதிகள் என அவை அறிவித்துக் கொண்டன. ஆனால் சர்வதேசச் சட்டம் அந்நாடுகளின் இறையாண்மை கோரிக்கையை ஏற்கவில்லை. ஏனெனில் Island of Pahmas Arbitration Case [A.J.I.L Vol.22(1968).P.P867-912] வழக்கிலும், வெறும் அறிவிப்பு மட்டுமே இறையாண்மை உரிமையை தந்துவிடாது. உண்மையில் அப்பகுதி அந்நாட்டின் ஆக்கிரமிப்பில் இருந்தால் மட்டுமே இறையாண்மை அதிகாரம் உண்டாகும் என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிக் பகுதிகளில் உண்மையான ஆக்கிரமிப்பை ஏற்படுத்தி அதன் மீது உண்மையான கட்டுப்பாட்டை செலுத்த முடியாது. ஏனெனில் அவற்றின் மிதமிஞ்சிய குளிர்நிலையில் அத்தகைய உண்மையான ஆக்கிரமிப்பும் கட்டுப்பாடும் சாத்தியமல்ல. எனவே அவ்விரு பகுதிகள் மீதும் எந்த நாடும் இiறாண்மை உரிமை கோர முடியாது என்ற சர்வதேச நிலையே நீடிக்கிறது. ஆனால் எந்தவொரு நாடும் ஆராய்ச்சி உள்ளிட்ட அமைதி நடவடிக்கைக்காக அப்பகுதிகளில் ஆராய்ச்சி நிலையங்களையும் தங்குமிடங்களையும் தொலைத் தொடர்பு மையங்களையும் ஏற்படுத்தலாம். அதற்கென பல நாடுகளிடையே சர்வதேச உடன்படிக்கைகள் ஏற்பட்டுள்ளன.

அண்டார்டிக் உடன்படிக்கை , 1959 (Antartic Treaty,1959)

அண்டார்டிகாவின் பகுதிகளின் (Sectors) மீது முதன் முதலில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, சிலி, பிரான்ஸ், நியூசிலாந்து, நார்வே, இங்கிலாந்து ஆகிய ஏழு நாடுகளே அதிகாரபூர்வமாகஆள்நில இறையாண்மை கோரின. அமெரிக்காவின் சார்பாக அட்மிரல் பைர்ட் (Byrd) அதன் ஒரு பகுதியின் மீது உரிமை கோரினர். ஆனால் அமெரிக்கா அதனை அதிகாரப்பூர்வமாக ஏற்காததுடன் மற்ற நாடுகளுக்கும் உரிமை கிடையாது என்ற நிலையை எடுத்தது. இந்நிலையில் 1959ஆம் ஆண்டு மேற்கண்ட ஏழு நாடுகளுடன், அண்டார்டிகாவின் பகுதிகளில் ஆராய்ச்சி மேற்கொண்டிருந்த பெல்ஜியம், ஜப்பான், தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா, சோவியத் யூனியன் ஆகிய ஐந்து நாடுகளும் சேர்ந்து அண்டார்டிகா உடன்படிக்கை ஒன்றினை மேற்கொண்டன. அண்டார்டிகா உடன்படிக்கை கையழுத்தானவுடன் அந்த ஏழு நாடுகளின் ஆள்நில இறையாண்மைக் கோரிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

1959 டிசம்பர் 1 முதல் அமலுக்கு வந்த அண்டார்டிகா உடன்படிக்கை, 60 அட்சரேகை (Latitude)க்கு தெற்கே உள்ள பகுதிகளின் மீது சிறப்புக் கட்டுப்பாடுகளை விதித்தது. அவ்வுடன்படிக்கையின் முக்கிய வகைமுறைகள் வருமாறு:-

(a) ஏற்கனவே அண்டார்டிகா பகுதிகளின் மீது இறையாண்மை உரிமை கோரிய நாடுகளின் கோரிக்கை, இவ்வுடன்படிக்கை செயலில் இருக்கும் காலங்களில் நிறுத்தி வைக்கப்படும். வேறெந்த நாடுகளும் புதிய இறையாண்மைக் கோரிக்கைகளை முன்வைக்கக் கூடாது.

(b) அண்டார்டிகா பகுதி அமைதி நோக்கங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படவேண்டும். எந்தவொரு நாடும் அப்பகுதியில் இராணுவ பாசறைகளை அமைப்பதோ கோட்டைகள் அமைப்பதோ அணு ஆயுதம் உள்ளிட்ட ஆயுத சோதனைகள் மேற்கொள்வதோ கூடாது.

(c) அண்டார்டிகா பகுதியில் அறிவியல், ஆராய்ச்சியாளர்களை நடத்துவதற்கு முழு சுதந்திரம் உண்டு.

(d) இவ்வுடன்படிக்கை வரம்பற்ற காலத்திற்கு செயலில் இருக்கும். ஆனால் 1991 ஜீன் 23-க்குப் பிறகு உடன்படிக்கையை மறு ஆய்வு செய்யலாம்.

அதன் பின்னர் அண்டார்டிகாவின் தாது வள நடவடிக்கைகளை (Mineral Resource Activities) ஒழுங்கு படுத்துவதற்கான மாநாடு 1988ஆம் ஆண்டில் இறுதி செய்யப்பட்டது. ஆனால் ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகள் சுற்றுச்சூழல் பாதிப்பு காரணங்களைக்கூறி அண்டார்டிகாவில் தாது வளங்களை சுரண்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. அதன் விளைவாக 1991 அக்டோபரில் ஏற்பட்ட மாட்ரிட் (Madrid) ஒப்பந்தத்தின்படி, இன்னும் 50 ஆண்டு காலத்திற்கு (2041 வரை) அண்டார்டிகா பகுதிகளில் தாது வளம் தொடர்பான அறிவியல் ஆராய்ச்சியைத் தவிர வேறெந்த நடவடிக்கையும் மேற்கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் இந்த இடைப்பட்ட 50 ஆண்டு காலம் தடை என்பது அண்டார்டிகாவின் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக அல்ல, தாது வளம் தொடர்பான ஆராய்ச்சிகளுக்கான கால அவகாசமே என்று சர்வதேச அரசயில் நோக்கர்கள் கருதுகின்றனர்.

2. நிலப்பெருக்கம் அல்லது நில மீட்பு (Accretion)

ஒரு நாடு தனது ஆள்நில எல்லைப் பகுதிக்குள் கடல் பின் வாங்குதல், ஆறுகள் வற்றிப்போதல், எல்லையோரக் கடற்பகுதியில் புதிதாக தீவு ஒன்று உருவாதல் போன்ற காரணங்களால் ஏற்கனவே இருக்கும் நிலப்புகுதியுடன் கூடுதலான பகுதி சேர்வது நிலப்பெருக்கம் ஆகும் என்று எட்வர்டு காலின்ஸ் (Edward Collins) கூறுகிறார். இத்தகைய நிலப்பெருக்கம் இயற்கை நிலப்பெருக்கம் எனப்படும். சில நாடுகள் செயற்கையாக ஆறுகளின் போக்கை மாற்றி நிலப்பகுதியை உருவாக்கலாம் அல்லது கடலுக்குள் தடுப்புச் சுவர் எழுப்பி நிலப்பகுதியை மீட்கலாம். இது போன்று பெறப்படும் நிலப்பெருக்கும் செயற்கை நிலப்பெருக்கம் அல்லது நில மீட்பு எனப்படும். இவ்வாறு நிலப்பெருக்கம் அல்லது நில மீட்பின் மூலம் பெறப்படும் ஆள்நில எல்லைப் பகுதியை தன் அதிகார வரம்பின் கீழ் கொண்டு வருவதற்கு அந்நாடு குறிப்பாக எந்த அறிவிப்பையும் வெளியிடத் தேவையில்லை. அந்நிலப்பெருக்கம் நிகழ்ந்தவுடன் தானாகவே அப்பகுதி அந்நாட்டின் ஆள்நில எல்லைப் பகுதியாக ஆகிவிடும் என்று ஒப்பன்ஹீய்ம் கூறுகிறார்.

3. நாட்டுப்பிரிவினை (Partition)

ஒரே நாடாக இருக்கும் ஆள்நில எல்லைப் பகுதி இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளாகப் பிரிக்கப்படும் போது புதிய நாடுகள் தங்களது இறையாண்மைக்கு உட்பட்ட ஆள்நில எல்லைப் பகுதிகளைப் பெறலாம். உதாரணத்திற்கு இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் போது பாகிஸ்தான் எனும் புதிய நாடு ஆள்நில எல்லைப் பரப்பைப் பெற்றதைக் கூறலாம்.

4. விட்டுக் கொடுத்தல் (Cessation)

மற்றொரு நாடு தன் நிலப்பகுதியை விட்டுக் கொடுப்பதன் மூலமாகவும் ஒரு நாடு தன் ஆள்நில எல்லைப் பகுதியை அடையலாம். ஒரு இறையாண்மை பெற்ற நாடு இன்னொரு இறையாண்மை பெற்ற நாட்டிற்கு தன் நிலப்பகுதியை விட்டுக் கொடுப்பதே செல்லத்தக்க (Valid) விட்டுக்கொடுத்தல் ஆகும். இறையாண்மை அல்லாத நபருக்கு நிலப்பகுதியை விட்டுக் கொடுக்க முடியாது.

In re Berubari union and Exchange of Enclaves [AIR 1960 SC 845] என்ற வழக்கில் 1958 ஆம் ஆண்டு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஏற்பட்ட உடன்படிக்கையின் மூலம் இந்தியாவின் பெருபாரி ஒன்றியம் எண். 12 இரண்டாகப் பிரிக்கப்பட்டு ஒரு பகுதி கிழக்கு வங்காளத் (தற்போது பங்காளதேஷ்)திற்கு கொடுக்கப்பட்டு இந்தியாவிற்கும் கிழக்கு வங்காளத்திற்கும் இடையிலான எல்லை திருத்தியமைக்கப்பட்டது. அந்த உடன்படிக்கையை செயல்படுத்துவதற்கான அரசமைப்புச் சட்ட ஆலோசனை வழங்குமாறு மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டது. அப்போது இந்திய உச்ச நீதிமன்றம், இறையாண்மை பெற்ற நாடு உடன்படிக்கையின் மூலம் ஆள்நில எல்லையை அடையலாம் என்பது போலவே அவசியம் ஏற்பட்டால் தன் ஆள்நிலப் பகுதியில் ஒரு பகுதியை மற்றொரு நாட்டிற்கு விட்டுக் கொடுக்கவும் செய்யலாம் என்று கூறியது.

விட்டுக் கொடுத்தல் உடன்படிக்கை மூலமாக மட்டுமல்லாமல், கொடையாகவோ விற்பனையாகவோ அல்லது பரிமாற்றமாகவோ கொடுக்கப்படலாம். விட்டுக் கொடுத்தல் என்பது இறுதியானதாகும். ஒரு முறை விட்டுக்கொடுத்த பகுதியை திரும்பக்கோர முடியாது.

5. நீடானுபோகம் (Prescription)

மற்றொரு நாட்டின் ஆள்நிலப்பகுதி ஒன்றின் மீது ஒரு நாடு, நெடுங்காலமாக எவ்வித இடையூறுமின்றி இறையாண்மையை செலுத்தி வருகிறது எனில், அந்நாடு அந்நிலப்பகுதியின் உரிமையை நீடானுபோகத்தின் மூலம் அடையலாம். அதன் பிறகு அந்நிலப்பகுதி அந்நாட்டின் ஆள்நில எல்லைக்குட்பட்ட பகுதியாகிவிடும். அம்மற்றொரு நாடு அதன் மீது உரிமை கோர முடியாது.

D.H. ஜான்சனின் கூற்றுப்படி ஒரு நாடு நீடானுபோகத்தின் மூலம் ஆள்நில எல்லையை அடைவதற்கு பின்வரும் நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.

(a) அந்நிலப்பகுதியின் உடைமை, நீடானுபோக உரிமைகோரும இறையாண்மை நாட்டின் உடைமையில் இருக்க வேண்டும்.

(b) அத்தகைய உடைமை, அப்பகுதிக்கு உரிமையுள்ள நாட்டின் இடையூறு இல்லாததாகவும் தொடர்ச்சியானதாகவும் இருக்க வேண்டும்.

(c) அவ்வுடைமை எல்லோருக்கும் தெரியும் வகையில் வெளிப்படையானதாக இருக்க வேண்டும்.

(d) அந்த உடைமை கணக்கில் கொள்ளத்தக்க அளவிற்கு நெடுங்கால உடைமையாக இருக்க வேண்டும். எது கணக்கில் கொள்ளத்தக்க அளவுக்கான நெடுங்காலம் என்பது சர்வதேச நீதிமன்றத்தால் முடிவு செய்யப்பட வேண்டும்.

ஆனால் சில சட்டவியலாளர்கள், சர்வதேசச் சட்டம் நீடானுபோகத்தின் மூலம் ஆள்நில எல்லையை அடைவதை ஏற்றுக் கொள்ளவில்லை என்கின்றனர். அதற்கு ஆதரவாக அவர்கள், சர்வதேச நீதிமன்றமோ தீர்ப்பாயமோ நீடானுபோகத்திற்குரிய நெடுங்காலம் எது என்பதை இன்று வரை வரையறை செய்யவில்லை என்பதை சுட்டிக் காட்டுகின்றனர். இருப்பினும் வேறு சில சட்டவியலாளர்களோ பால்மாஸ் தீவு வழக்கில் நெதர்லாந்தின் நீடானுபோகம் ஏற்றுக் கொள்ளப்பட்டதை சுட்டிக்காட்டி நீடானுபோகத்தின் மூலம் ஆள்நில எல்லையை ஒரு நாடு அடைய முடியும் என்று வாதாடுகின்றனர்.

Kasikili/ Sedudu Island Case (Botsvana-Vs-Namibia) (1999) என்ற வழக்கில் போஸ்வானாவிற்கும் நமீபியாவிற்கும் இடையில் எல்லையாக ஓடும் சோபே (Chobe) ஆற்றின் நடுவில் உள்ள கஸிகிலி (செடுடு) தீவு எந்த நாட்டின் எல்லைக்குட்பட்டது என்பதை வரையறுக்குமாறு சர்வதேச நீதிமன்றத்திடம் இருநாடுகளும் கேட்டுக்கொண்டன. நமீபியாவின் முந்தய ஆட்சியாளரான ஜெர்மனி அத்தீவை ஆட்சேபணையின்றி நெடுங்காலம் பயன்படுத்தி வந்துள்ளதால், நீடானுபோக உரிமை மூலம் அத்தீவு தனக்கே சொந்தம் என்று வாதிட்டது. ஆனால் ஜெர்மனி மீது ஒரு நாளும் இறையாண்மை அதிகாரம் கோரியதில்லை என்பதால், நமீபியாவிற்கு அத்தீவு நீடானுபோக உரிமை மூலம் சொந்தமாகாது என்றும் 1890 ஆம் ஆண்டு ஆங்கிலோ- ஜெர்மன் உடன்படிக்கையின்படி அத்தீவு போஸ்வாவிற்குச் சொந்தமான ஆள்நிலப் பகுதி என்றும் சர்வதேச நீதிமன்றம் முடிவு செய்தது.

6. இணைத்தல் (Annexation)

ஒரு நாடு தனது படைபலத்தின் மூலம் மற்றொரு நாட்டை போரில் வெற்றி கொண்டு அந்நாடு முழுவதையும் அல்லது அதன் ஒரு பகுதியை தனத நாட்டுடன் இணைத்துக் கொண்ட நாடு தான் இணைத்த நிலப்பகுதியில் தனத இறையாண்மை நிர்வாகத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டியது கட்டாயமாகும். ஆனால் ஐ.நா. சாசனம் இவ்வாறு ஒரு நாடு இன்னொரு நாட்டை வலுகட்டாயமாக இணைத்துக் கொள்வதை தடை செய்கிறது. எனவே தற்போது இணைத்தல் முறையின் மூலம் ஆளநில எல்லையை அடைவது சர்வதேசச் சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட முறையல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

7. குத்தகை (Lease)

ஒரு நாடு மற்றொரு நாட்டின் நிலப்பகுதியை குத்தகைக்குப் பெறுவதன் மூலமும் ஆள்நில எல்லையை அடையலாம். ஒரு நாடு தனது நிலப்பகுதி ஒன்றை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு குறிப்பிட்ட மறு பயனுக்காக மற்றொரு நாட்டிற்கு குத்தகைக்கு விடலாம். அவ்வாறு குத்தகை பெற்ற நாடு அந்நிலப்பகுதியில் வரம்பிற்குட்பட்ட சில இறையாண்மை அதிகாரங்களைப் பெற்றிருக்கும். இருப்பினும் ஒரு நிலப்பகுதி குத்தகைக்கு விடப்பட்டாலும் அதன் மீதான பகுதி இறையாண்மை அதிகாரம் குத்தகைக்கு விட்ட நாட்டின் வசமே இருக்கும்.

உதாரணத்திற்கு 1974 இல் இந்தியா தின் பிகா (Tin Bigha) பகுதியை பங்காளதேஷிற்கு நிரந்தர குத்தகைக்கு (999 வருடம்) விட்டதைக் குறிப்பிடலாம். 1903 இல் பனாமா கால்வாய் பகுதியை பனாமா குடியரசு, அமெரிக்காவிற்கு நிரந்தர குத்தகைக்கு விட்டதும் ஓர் குத்தகை மூலம் ஆள்நில எல்லையை அடைவதற்கானதொரு உதாரணமே ஆகும்.

8. அடைமானம் (Pledge)

ஒரு நாடு மற்றொரு நாட்டின் நிலப்பகுதியை அடைமானம் பெறுவதன் மூலம் ஆள்நில எல்லையை அடையலாம். அடைமானம் வைக்கும் நாட்டின் தவிர்க்க முடியாத பணத்தேவைக்காக தன் ஆள்நிலப்பரப்பில் ஒரு பகுதியை மற்றொரு நாட்டிற்கு அடைமானம் வைக்கலாம். உதாரணத்திற்கு 1768இல் கினியா குடியரசு (Republic of Genea) தனது கோர்ஷிகா தீவை பிரான்ஸிற்கு அடைமானம் வைத்ததைக் குறிப்பிடலாம். அடைமானம் எதிர் விளைவுகளே பெரும்பாலும் ஆள்நில எல்லைகளை இழப்பதற்குரிய வழிமுறைகளாகவும் இருக்கின்றன.

தொடரும்...

C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com