அரசாங்கமும் அதன் வடிவங்களும்

அரசாங்கமும் அதன் வடிவங்களும்

அரசாங்கமும் அதன் வடிவங்களும்

(FORMS OF GOVERNMENT)

அரசாங்கம் அரசின் முக்கிய கூறுகளில் ஒன்றாகும். அரசின் செயலியாக (working agency) அரசாங்கம் கருதப்படுகிறது. அரசாங்கத்தின் தேவை மற்றும் அதன் பணிகளை பற்றி தற்காலத்தில் மக்கள் அறிந்திருப்பதோடு அவற்றின் முக்கியத்துவத்தையும் உணர்ந்திருக்கிறார்கள். அரசு கண்ணுக்குத் தெரியாத மானசீகத்தன்மையுடையது. ஆனால் அரசாங்கம் அவ்வாறில்லாமல் மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் அமைந்திருக்கின்றது. இத்தகைய அரசாங்கம் பலவகைப்பட்டதாகும். தொன்றுதொட்டு இன்று வரையிலும் நடைமுறையில் இருந்து வந்திருக்கின்ற அரசாங்கம் பல மாறுதல்களை சந்தித்திருக்கிறது. அவ்வாறு அதில் ஏற்பட்ட மாற்றங்கள் வகைகளைப் பார்ப்போம்.

அரசாங்கத்தின் வடிவங்கள்

சி.எப். ஸ்டராங் (C.F.Strong) தன்னுடைய  ”A History Of Modern Political Constitutions’ புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள அரசாங்க வடிவங்கள்:-

வரிசை எண்

வகைப்படுத்தல் ஆதாரங்கள்

A

B

 

I

அரசாங்கத்தின் அதிகார

எல்லைகள்

மக்களாட்சி

சர்வாதிகார ஆட்சி

 

II

a. அரசின் இயல்பு

ஒன்றிய அரசு

 

 

b. அரசியலமைப்பின் இயல்பு

 

நெகிழும் தன்மையுடையது.

 

இறுகிய தன்மையுடையது

 

c. தேர்தல் தொகுதியின் இயல்பு

 

(i)அனைவருக்கும் வாக்குடைய அரசு முறை

வரையறுக்கப்பட்ட வாக்குரிமையுடைய அரசு

 

 

(ii) ஒற்றை உறுப்பினர் தொகுதிகளுடைய அரசுகள்

பல உறுப்பினர் தொகுதிகளுடைய அரசுகள்

iii

சட்டமன்றத்தின் இயல்பு

ஈரவை உடைய அரசு

ஓரவை உடைய அரசு

 

சட்டமன்றத்தின் அமைப்பு

மேலவையில்

தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் கொண்ட அரசு

மேலவையில் தேர்ந்தெடுக்கப்படாத உறுப்பினர்கள் கொண்ட அரசு

Iv

செயலாட்சிக்குழுவின்

இயல்பு

பாராளுமன்றம் மற்றும் பொறுப்புடைய அரசாங்கம்

தலைவர்முறை அரசாங்கம்

v

நீதித்துறையின் இயல்பு

சட்ட ஆட்சி

பின்பற்றப்படும் அரசுகள்

நிர்வாக சட்டத்தை பின்பற்றும் அரசுகள்

மேற்கூறப்பட்ட சி.எப். ஸ்டராங்கின் அரசாங்க வடிவங்கள் சட்டப்படி அமைந்த அரசாங்க வடிவங்களை பற்றி கூறுவனவாகும்.

ஒற்றை அரசாங்க முறை (unitary form of government)

ஒற்றை அரசாங்கமுறையில் மத்திய அரசில் அதிகாரங்கள் குவிக்கப்பட்டு இருக்கின்றன. மத்திய அரசாங்கம் மாநில மற்றும் பகுதி  அரசாங்கங்களை ஏற்படுத்தி  அவைகளுக்கு அதிகாரங்களை மாற்றி தருகிறது. இது நிர்வாகம் சீராக நடப்பதற்கான ஏற்பாடாகும். இந்த அமைப்புகள் பிரதேச அரசாங்கம் என அழைக்கப்படுகின்றன. ஒற்றை அரசாங்க முறைக்கு இங்கிலாந்து, பிரான்ஸ், ஜப்பான், ஸ்ரீலங்கா நாடுகள் உதாரணங்கள் ஆகும்.

ஒற்றை அரசாங்கமுறை பற்றிய சில அறிஞர்களுடைய விளக்கங்களைப் பார்ப்போம்.

கார்னர் (GARNER): மத்தியில் அமைந்துள்ள அரசாங்க அமைப்புக்கு அரசியல் சட்டம் சகல அதிகாரங்களையும் அளித்தல்.

எ.வி.டைசி. (A.V.DICEY): ‘‘மத்திய அரசாங்கம் வழக்காறு அடிப்படையில் உயரிய சட்டம் இயற்றும் அதிகாரத்தை செலுத்துவது’’

சி.எப்.ஸ்டராங்: இரண்டு முக்கியமான தகுதிகள் பற்றி குறிப்பிடுகிறார். அவையாவன

1. மத்திய அரசாங்கத்தின் உயரிய தன்மை

2. இறையாண்மை அதிகாரம் உடைய இதர அமைப்புகள் எதுவுமில்லாமல் இருப்பது.

இறையாண்மை அதிகாரம் இல்லாத இதர அமைப்புகளுடன் மைய அரசாங்கம் உள்ள முறை ஒற்றை அரசாங்க வகையை சேர்ந்தது. மத்திய அரசாங்கம் மற்றும் மாநில அரசாங்கம் சட்டம் இயற்றும் அதிகாரம் பெற்ற அமைப்பு கூட்டாட்சி முறை எனப்படுகிறது.

நிறைகள்

1. ஒற்றுமை, ஒரே மாதிரியான சட்டமுறை, கொள்கை மற்றும் நிர்வாகம்.

2. ஆட்சி அதிகாரம் மற்றும் பொறுப்பு வகிப்பவர்களிடையே சச்சரவுகள் இல்லாத தன்மை.

3. முடிவுகள் விரைவாக எடுக்கப்பட்டு அவை விரைவாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.

4. செலவு குறைவான அமைப்பு.

5. அரசியல் சட்டத்தை எளிதில் மாற்றக்கூடிய நிலை.

குறைகள்

1. அதிகார குவிப்பு மத்திய அரசாங்கத்தின் சர்வாதிகாரத்திற்கு ஏதுவாகும்.

2. மத்திய அரசாங்கம் பல சிக்கலான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.மேலும் பிரதேச அலுவல்களை கவனிப்பதற்கு நேரம் இல்லாமல் போகும்.

3. மத்திய அரசாங்கத்திற்கு பிரதேச பிரச்சினைகள், அவற்றின் துவக்கம் மற்றும் அவற்றில் ஈடுபாடு இல்லாமல் போகும்.

4. அளவில் பெரிய நாடுகளுக்கு ஒத்து வராது.

கூட்டாட்சி அரசாங்கம் (FEDERAL)

ஒப்பந்தம் என்று பொருள்படும் இலத்தீனிய போடஸ் (foedus”) என்ற சொல்லிலிருந்து கூட்டாட்சி என்ற சொல் ஏற்பட்டது. இதற்கு கூட்டாட்சி அரசாங்கத்திற்கும் மாநில அரசாங்கங்களுக்கிடையேயும் ஒப்பந்தம் இருக்கிறது என்று பொருள். தேசிய ஒற்றுமையோடு மாநில உரிமைகளை பாதுகாத்து தர அமைக்கப்படும் அரசாங்க முறைக்கு கூட்டாட்சி என்று பேராசிரியர் டைசி என்பவர் விளக்கம் அளிக்கிகிறார்.

கூட்டாட்சி கொள்கை அல்லது கூட்டாட்சி அரசியல் முறை என்பது மத்திய அரசு மற்றும் மாநில அரசாங்கங்களுக்கிடையே அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டு அரசியலமைப்பு ரீதியாக செயல்படக்கூடிய அமைப்பென்று கூறப்படுகிறது. இவ்வமைப்பு ஒற்றையரசு முறைக்கு எதிரானது. இறையாண்மை அதிகாரம் இருவகை அரசாங்கங்களுக்குமே குறிப்பிட்ட சில துறைகளில் இருக்கிறது. இத்தகைய அமைப்பில் மத்திய அரசாங்கம் தேச பாதுகாப்பு இதர நாடுகளுடனான கொள்கை தேசம் முழுவதற்குமான பாதுகாப்பு போன்ற நடவடிக்கைகளை அதற்கு என்று கொடுக்கப்பட்டுள்ள அதிகார எல்லைக்குள் செயல்படுகிறது. இதே போல மாநில அரசாங்கங்களும் அவற்றிற்கு என்று தரப்பட்டுள்ள அதிகார எல்லைக்குள் செயல்படுகின்றன.

கூட்டாட்சி அரசாங்கத்தின் கூறுகள்:

1. அரசியலமைப்பின் உன்னத நிலைமை.

2. மத்திய மாநில அரசாங்கங்களுக்கிடையே அதிகார பங்கீடு

3. அரசியலமைப்பின் இறுகிய தன்மை

4. நீதித்துறை சுதந்திரம் இவற்றின் விளக்கம் வருமாறு

1. அரசியலமைப்பின் உன்னத நிலைமை: அரசியலமைப்பு எழுதப்பட்டிருக்க வேண்டும். மத்திய மாநில அரசாங்கங்களுக்கிடையே இருக்க வேண்டிய அதிகாரங்கள் என்னென்ன என்று தெளிவாக சொல்லப்படவேண்டும். இரண்டிற்குமிடையே அரசியல் சட்டமே உயரியது அல்லது மேலானது.

2. அதிகார பங்கீடு: கூட்டாட்சி முறை அரசாங்கத்தில் மத்திய அரசாங்கத்திற்கென சில இனங்களும் மாநில அரசாங்கத்திற்கென சில இனங்களும் பிரித்து ஒதுக்கப்படுகின்றன. இவ்வாறு ஒதுக்கப்பட்ட இனங்கள் அல்லது துறைகளில் ஒவ்வொரு வகை அரசாங்கமும் சட்டம் இயற்றவும் அவற்றை நிறைவேற்றவும் அதிகாரம் படைத்தவைகளாக, சுதய ரம் உடையவைகளாக இருக்கின்றன.

3. அரசியலமைப்பின் இறுகிய தன்மை: பேராசிரியர் டைசி என்பவர் கருத்துப்படி அரசியலமைப்பில் சொல்லப்பட்டிருக்கின்ற விதிகள் அவற்றின் அடிப்படையில் இயற்றப்படும் சாதாரண சட்டங்கள் அல்லாத இதர சட்டங்களை எளி ல் மாற்றமுடியாது. அவைகள் ஆதார சட்டங்கள் எனப்படுகின்றன. அரசியல் சட்டம் சாதாரண சட்டங்களை விட மேலானது. அதை எளிதில் மாற்றமுடியாது.

4. நீதித்துறை சுதந்திரம்: கூட்டாட்சி அரசாங்க முறையில் மத்திய அரசாங்கத்திற்கும் மாநில அரசாங்கங்களுக்குமிடையே அல்லது மாநில அரசாங்கங்கள் மட்டத்தில் அவைகளுக்கு இடையே சச்சரவுகள் ஏற்படும். இந்த சச்சரவுகளை தீர்த்துவைப்பதற்காகவும் அரசியலமைப்பு விதிகளை தேவைப்படும் போது விளக்குவதற்காகவும் நீதித்துறை தேவைப்படுகிறது. இத்துறையினுடைய ஆணைகள் மற்றும் விளக்கங்கள் சம்மந்தப்பட்ட அரசாங்கங்களால் ஏற்றுக்கொள்ளப் படவேண்டும். நிறைவேற்றப்படவும் வேண்டும்.

பாராளுமன்ற முறை அரசாங்கம் (PARLIAMENTARY)

பாராளுமன்ற அரசாங்க முறையில் செயலாட்சிக்குழு சட்டமன்றத்திற்கு பொறுப்புடையதாக விளங்குகிறது. அவ்வரசு காபினெட் அரசாங்கம் அல்லது பொறுப்புடைய அரசாங்கம் என்றழைக்கப்படுகிறது.

உதாரணம்: இந்தியா, இங்கிலாந்து

முக்கிய அம்சங்கள்

1. செயலாட்சிக்குழு இரண்டு வகையான பண்புகளை உடையது. ஒன்று பெயரளவிலானது. மற்றொன்று உண்மையானது. பெயரளவிலான தலைவர் அரசின் தலைவராகிறார். உண்மையான தலைவர் அரசாங்கத்தின் தலைவர். இங்கிலாந்தில் அரசின் தலைவர் ராணி அல்லது ராஜா. அரசாங்கத்தின் தலைவர் பிரதமர். பெயரளவிலான செயற்குழுவுக்கு இங்கிலாந்தில் அரசர் அல்லது அரசியாரும் இந்தியாவில் குடியரசுத்தலைவரும் உதாரணமாவார்கள். இவர்கள் சட்டப்படி எல்லா அதிகாரங்களும் உடையவர்கள். உண்மையான அல்லது நிகழ்முறை குழுவுக்கு இங்கிலாந்து மற்றும் இந்தியாவில் பிரதம அமைச்சர் உதாரணமாவார்கள். இவர்கள் எல்லா அதிகாரங்களையும் பெயரளவிலான செயற்குழு பெயரில் செலுத்துகிறார்கள்.

2. நாட்டை ஆட்சி செய்யும் கட்சி தெளிவான மற்றும் திடமான பெரும்பான்மை சட்டமன்றத்தில் பெற்றிருக்க வேண்டும். ‘‘தொங்கும் பாராளுமன்றம்’’ கூட்டணி ஆட்சி ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. உதாரணம் இந்தியா மைய அரசாங்கத்தில் திரு.தேவேகௌடா பிரதமராக இருந்த போதும் (1996) ஐ.கே.குஜரால் (1998) (தொங்கும் பாராளுமன்றம்) கூட்டணி ஏற்பட்ட போதும்.

3. இம்முறையில் மக்கள் பிரதிநிதித்துவமுடைய மன்றத்தின் பெரும்பான்மை கட்சி தலைவர் அமைச்சரவையின் தலைவராக இருக்கிறார். அவரே பிரதம அமைச்சராகவும் இருக்கிறார்.

4. பிரதம அமைச்சரும் இதர காபினெட் அமைச்சர்களும் பாராளுமன்றத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

5. ஒவ்வொரு அமைச்சரும் அவர் மேற்பார்வையிலுள்ள துறையின் நடவடிக்கைகளுக்கு பொறுப்பு ஏற்கிறார். அதே போல அரசாங்கத்தினுடைய நடவடிக்கைகளுக்கு எல்லா அமைச்சர்களும் கூட்டுப்பொறுப்பு கொள்கை அடிப்படையில் பாராளுமன்றத்திற்கு பொறுப்புடையவர்களாக இருக்கிறார்கள்.

நிறைகள்

1. இம்முறை அரசாங்கத்தில் நிர்வாக துறைக்கும் சட்டதுறைக்கும் இடையே ஒற்றுமையும், ஒத்துழைப்பும் பெருமளவில் காணப்படுகிறது.

2. அவசியப்படும் போது விட்டுக்கொடுத்து நடக்கும் முறை நிலவுகிறது. நெருக்கடி காலங்களில் அமைதியான முறையில் அரசாங்க மாற்றம் ஏற்படுகிறது.

3. எதிர்க்கட்சிகள் நடைமுறைக்கு சாத்தியமான ஆலோசனைகள் வழங்குவதோடு நியாயமான குறைகளை எடுத்துக்கூறுகின்றனர்.

4. இம்முறை மக்களுடைய விருப்பத்திற்கேற்ப செயல்படுகிறது.

குறைகள்

1. இது அதிகாரப் பிரிவினை கோட்பாட்டிற்கு எதிரானது. நிர்வாகத்துறை மற்றும் சட்டத்துறைகளுக்கு இடையே ஒற்றுமை அடிப்படையில் பணிகள் நிறைவேற்றப்படுவதால் பிரதம அமைச்சர் அதிகாரம் மேலோங்கியவராக சர்வாதிகாரியாக மாறிவிடக்கூடிய சூழ்நிலை இருக்கிறது.

2. சட்டமன்றத்தில் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத போது பல கட்சிகள் ஒன்று சேர்ந்து கூட்டு அரசாங்கம் ஒன்றை அமைக்கின்றன. இத்தகைய அரசாங்கம் கட்சிகளுக்கிடையே காணப்படும் பிரச்சினைகள் காரணமாக அரசியல் நிலையற்ற தன்மை ஏற்படுவதோடு அரசாங்கமும் வலிமை குன்றி காணப்படும்.

3. ஆட்சியிலிருக்கும் கட்சி பதவியிருந்து விலகுகின்ற போதோ அல்லது சட்டமன்றத்தில் தோற்கடிக்கப்படும் போதோ எதிர்க்கட்சி ஆட்சி செய்யும் உரிமையை பெறுகிறது. இந்த அரசாங்கம் முன்னால் இருந்த அரசாங்கத்தினுடைய முடிவுகளை ஏற்காமல் போகக்கூடும். இத்தகைய சூழ்நிலையில் பின்பற்றும் கொள்கையில் தொடர்ச்சி இல்லாமல் போகும்.

தலைவர்முறை அரசாங்கம் (PRESIDENTIAL)

தலைவர்முறை அரசாங்கத்தில் தலைவர் சட்டமன்றத்திற்கு பொறுப்புடையவராக இருக்கமாட்டார். இதற்கு சிறந்த உதாரணம் அமெரிக்க ஐக்கிய குடியரசு ஆகும்.

இம்முறையின் சிறப்பு அம்சங்கள்

1. குடியரசு தலைவர் நடைமுறையிலும் அரசியலமைப்பு அடிப்படையிலும் உண்மையான அதிகாரம் உடையவராக இருக்கிறார்.

2. அரசாங்கத்தின் பிரிவுகளான சட்டத்துறை, செயல்துறை மற்றும் நீதித்துறை ஆகியவற்றின் அதிகாரங்கள் பிரிக்கப்பட்டு ஒவ்வொன்றும் அதற்கென சில அதிகாரங்களை பெருகின்றன. இந்த அளவில் ஒவ்வொன்றும் தனித்தன்மையுடயதாக இருக்கிறது.

3. இவ்வாறு அதிகாரப்பிரிவினை இருந்தபோதும் ஒரு துறை பிறிதொரு துறையை கண்காணித்து தகுந்த நடவடிக்கையை மேற்கொள்ளும் வகையில் சமநிலை மற்றும் தடை கோட்பாடு பின்பற்றப்படுகிறது. எந்த ஒரு துறையும் எந்த ஒரு சூழ்நிலையிலும் எதேச்சதிகாரம் செலுத்த முடியாது.

4. குடியரசு தலைவரது பதவிக்காலம் வரையறை செய்யப்பட்டது. எந்த காரணத்தை கொண்டும் பதவிக் காலத்தை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ அல்லது அவரை பதவியிலிருந்து தேசத் துரோக குற்றச்சாட்டு அடிப்படையில்லாமல் விலக்கமுடியாது.

நிறைகள்

1. நிலையான அரசு சாத்தியமாகிறது.

2. குடியரசு தலைவர் விருப்பப்படி கட்சியை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் வெளியில் உள்ளவர்களும் அரசாங்கத்தின் துறைகளுக்கு தலைமை தாங்க பொறுப்பு ஏற்க நியமிக்கப்படலாம். அவசியமானால் எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் கூட இப்பொறுப்புகளை ஏற்க நியமிக்கப்படலாம்.

3. கொள்கை தொடர்ந்து பின்பற்றப்படுவதால் செயலாக்கம் இணக்கமாக இருக்கிறது.

4. தேசிய நெருக்கடிகள் ஏற்படும்போது இத்தகைய அரசாங்கம் சிறந்ததாக இருக்கிறது.

5. அதிகார குவிப்பிற்கு வாய்ப்பு இல்லை.

குறைகள்

1. நிர்வாகத்துறை சட்டத்துறைக்கு பொறுப்பு ஏற்காமல் இருப்பதால் அதன் விருப்பப்படி செயல்படமுடிகிறது.

2. நிர்வாகத்துறைக்கும் சட்டத்துறைக்கும் இடையே பிரச்சனைகள் தீர்க்கப்படமுடியாத சூழ்நிலைகள் அதிகம்.

3. இம்முறை அரசாங்கம் இறுக்கமானதாக இருக்கிறது.

4. சட்டத்துறைக்கும் நிர்வாக துறைக்கும் இடையே சுமூகமாக சூழ்நிலை இல்லாமல் போகும் போது சுதந்திரமான வெளிநாட்டுக்கொள்கையை பின்பற்றுவதற்கு முடியாமல் போகிறது. நிர்வாகத்துறை பின்பற்றும் கொள்கை சட்டத்துறையால் ஏற்கப்படாமலும் போகலாம்.

குழுமுறை அரசாங்கம் (COLLEGIATE)

குழுமுறை அல்லது பன்மை நிர்வாக அமைப்பு முறையில் இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்டவர்கள் சமதகுதியும் அதிகாரமும் உடையவர்களாக இருக்கிறார்கள். இம்முறையில் பாராளுமன்றமுறை அரசாங்கம் மற்றும் தலைவர் முறை அரசாங்கத்தில் நல்ல அம்சங்களையும் அதே சமயத்தில் குறைகளையும் பெற்றிருக்கிறது. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு சுவிட்ஸர்லாந்து அரசாங்கமாகும்.

சுவிட்ஸர்லாந்து நாட்டில் கூட்டாட்சி முறையில் குழுவாட்சி முறை பின்பற்றப்படுகின்றன. இங்குள்ள செயற்குழு உறுப்பினர்கள் ஏழுபேர் நான்கு ஆண்டு பதவி காலத்திற்கு கூட்டுக்கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு அமைச்சரும் ஒருதுறைக்கு பொறுப்பு ஏற்கிறார். இவ்வடிப்படையில் அரசாங்க துறைகள் ஏழாக இருக்கிறது. கவுன்சிலர் என்று அழைக்கப்படும் அமைச்சர் பொறுப்பிற்கு தேர்ந்தெடுக்கப்படுவர்கள் கூட்டாட்சி சட்டமன்ற உறுப்பினர் பதவியிருந்து விலகவேண்டும். இவர்கள் எத்தனை முறைவேண்டுமானாலும் திரும்ப திரும்ப தேர்ந்தெடுக்கப்படலாம். கூட்டாட்சி கவுன்சில் என்று அழைக்கப்படும் அரசாங்கத்தில் தலைவர் பொறுப்பு, உதவி தலைவர் பொறுப்பு, சுழற்சி முறையில் ஒவ்வொரு கவுன்சிலருக்கிடையே மாறி மாறி ஓராண்டு காலத்திற்கு தரப்படுகிறது.

நிறைகள்

1. இந்த நாட்டில் உள்ள கூட்டு செயற்குழு நிலையானதாகவும் பொறுப்புடையதாகவும் இருக்கிறது.

2. தனி அமைச்சர் ஒருவரிடம் அதிகாரங்கள் குவிப்பதற்கான சந்தர்ப்பமே கிடையாது.

3. கொடுங்கோன்மை மற்றும் சர்வாதிகார போக்கு இந்த செயல்துறையில் ஏற்படவாய்ப்பில்லை.

4. நாட்டில் உள்ள பகுதிகள் அனைத்திற்கும் எல்லா மக்களுடைய கருத்துக்களை பிரதிபலிப்பதாகவும் இச்செயற்குழு பணியாற்றுகிறது.

5. இத்தகைய செயற்குழு கொள்கை மற்றும் அதனை நடைமுறைப்படுத்துதல் தொடர்ச்சி இருக்கவும் மரபுகள் பின்பற்றப்படவும் உதவுகிறது.

குறைகள்

1. கூட்டாட்சி மன்றத்தில் பல்வேறு கட்சிகளை சேர்யதவர்கள் உறுப்பினராக இருப்பதால் முடிவுகள் எடுப்பதில் தாமதம் ஏற்படுகிறது.

2. இதன் உறுப்பினர்கள் வெவ்வேறு கட்சியை சேர்ந்தவர்களாக இருப்பதால் அமைச்சரவை முடிவுகள் பாதுகாக்கப்படாமல் வெளியார்களுக்கு அவ்வப்போது தெரிந்து விடுகின்றன.

3. நெருக்கடி காலங்களில் மட்டும் தான் இத்தைகைய அரசாங்கம் விரைந்து செயல்படுகிறது.

4. பன்மை கொள்கை அடிப்படையில் கூட்டுக்குழு உறுப்பினர்கள் பல கட்சிகளிலிருந்து நியமிக்கப்படுவதால் அவர்களிடையே ஒற்றுமை மற்றும் சுதந்திரம் இருப்பதில்லை.

இக்கால சர்வாதிகார அரசுகள் (MODERN DICTATORSHIP)

சர்வாதிகாரி என்னும் சொல் பழங்கால உரோமாபுரி அரசு முறையிலிருந்து பெறப்பட்டதாகும். இம்முறை அரசாங்கம் மக்களாட்சிக்கு எதிரானது. மக்களாட்சியில் சுதந்திரம் நிலைநாட்டப்படுகிறது. ஆனால் சர்வாதிகார ஆட்சியில் அது ஒடுக்கப்படுகிறது. நியூமன் (F.NEUMANN) என்னும் அறிஞர் தனிமனிதர் அல்லது கூட்டாக சேர்ந்த சிலர் அரசு அதிகாரத்தை தாங்களே எடுத்துக்கொண்டு கட்டுப்பாடில்லாமல் ஆட்சி செய்யக்கூடிய அமைப்பு சர்வாதிகார அரசு என்று கூறுகிறார். தற்கால சர்வாதிகார அரசுகள் மக்களாட்சிக்கு எதிராக பின்வரும் காரணங்களால் ஏற்பட்டன என்று சொல்லலாம்.

1. 1914-1918 முதலாம் உலகப்போரில் வெற்றி பெற்ற இங்கிலாந்து மற்றும் பிரான்சு நாடுகள் போரில் தோற்ற ஜெர்மனி போன்ற நாடுகளை மதிக்காமல் எதேச்சதிகாரம் செலுத்தின.

2. இரண்டாம் உலகப்போருக்கு முற்பட்ட 1919-39 கால கட்டத்தில் மக்களாட்சி முறை வெற்றி பெறாமல் தோல்வியுற்ற சூழ்நிலையில் சர்வாதிகாரம் தலையெடுத்தது.

3. எத்தியோப்பியாவை முஸோலினி தலைமையிலான இத்தாலி இணைத்துக்கொண்ட போதும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளை சோவியத் ரஷ்யா தாக்கியபோதும், மஞ்சூரியாவை சீனாவிடமிருந்து ஜப்பான் கைப்பற்றிய போதும் இவற்றிக்கெல்லாம் சிகரம் வைத்தார் போல ஜெர்மனியை சேர்ந்த ஹிட்லர் இதர நாடுகள் மேல் படையெடுத்து அவைகளை தாக்கியபோதும் மக்களாட்சி முறையை காப்பாற்ற சர்வதேச சங்கம் நடவடிக்கை எடுக்காமல் போயிற்று.

இக்கால சர்வாதிகார அரசின் சிறப்பம்சங்கள்

1. இத்தகைய அரசு தனிமனித எதேச்சதிகாரமுடையது.

2. ஒரு கட்சி ஆட்சிமுறை. இதற்கு உதாரணம் சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி.

3. தனிமனித சுதந்திரம் கிடையாது.

4. பயம் மற்றும் பீதி காரணமாக சர்வாதிகாரிக்கும் மக்களுக்குமிடையே உள்ள இடைவெளி.

நிறைகள்

1. சர்வாதிகாரிகள் மனஉறுதியுடன் எடுத்த காரியத்தையும் முடிக்கிறார்கள். அதுபற்றி விரைவில் முடிவெடுக்கிறார்கள்.

2. நிர்வாகச் செலவு குறைவாக இருக்கிறது.

3. ஒரே கட்சி, ஒரு தலைவர், ஒரே மாதிரியான  திட்டமிடுதல் நடைமுறைதான் சர்வாதிகாரத்திற்கு உரியது.

4. தேசிய ஒற்றுமை மற்றும் மக்களிடத்தில் காணப்படும் நாம் எல்லோரும் ஒன்று என்ற உணர்ச்சி சர்வாதிகாரத்தினால் ஏற்பட்ட நன்மைகளில் ஒன்றாகும்.

குறைகள்

1. வலிமை மற்றும் பயம் சர்வாதிகாரத்தின் ஆதாரமாகும்.

2. மக்களுக்கு உரிமைகள் ஏதும் தரப்படுவதில்லை.

3. சர்வாதிகாரிகள் தங்களுடைய சுயநலம் சார்ந்த குறிக்கோள்களை அடைவதற்கு அவர்களுடைய சக்தியை செலவிடுகிறார்கள்.

4. சர்வாதிகாரிகள் புரட்சி அடிப்படையில் மாறுதல்களை தோற்றுவிக்கிறார்கள்.

இருபதாம் நூற்றாண்டின் சர்வாதிகாரிகள்

(Dictators of 20th  Century)

மாஸே துங் (1893-1976), முஸோலினி (1883-1945), காஸ்ட்ரோ, ஹிட்லர் (1889-1945).

கியூபாவில் காஸ்ட்ரோவும், இத்தாலியில் முஸோலினியும், ஜெர்மனியில் ஹிட்லரும், சீனாவில் மாசேதுங்கும் இக்கால சர்வாதிகாரத்திற்கு உதாரணம் ஆவார்கள். இத்தைகைய சர்வாதிகாரத்தில் தனிமனித விருப்பம் மற்றும் வாழ்க்கை மதிக்கப்படுவதில்லை. மாறாக அவர்கள் மேல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு சுதந்திர கருத்துக்கள் தோன்றாமல் தடை செய்யப்படுகின்றன.


தொடரும்…

Lr. C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com