அரசின் வளர்ச்சி

அரசின் வளர்ச்சி

அரசின் வளர்ச்சி

DEVELOPMENT OF STATE

‘அரசு’ என்பது மனித சமுதாயத்தின் வாழ்விற்கும் வசதிக்கும் ஏற்படுத்தப்பட்ட ஒரு இன்றியமையாத அமைப்பாகும். ‘அரசு’ இயற்கையாக தோற்றுவிக்கப்பட்ட அத்தியாவசியமான அமைப்பாகும். பல்வேறு அரசியல் அறிஞர்கள் ‘அரசு ஒரு தேவையான துன்பம்’ என்ற கூற்றை ஆமோதித்துள்ளனர். லாஸ்கி, ‘‘அரசு என்பது சமூகம் என்ற தோரண வாயிலின் முக்கிய கல்’’ என குறிப்பிடுகிறார். மனிதரில் எளியோரை வலியோரிடமிருந்து காப்பாற்றும் பொருட்டும், மனித சமுதாயத்தின் ஆசாபாசங்களை ஒரு கட்டுக்குள் வைத்திடவும் தோற்றுவிக்கப்பட்ட அமைப்பாக அரசு கருதப்படுகிறது. பைனர் (Finer) என்பவர், அரசு இல்லையெனில் உலகில் சச்சரவும் குழப்பங்களுமே மிஞ்சும் என குறிப்பிடுகிறார்.

நாம் காணும் தற்கால அரசு, பல காலகட்டங்களில் பலவாறாக உருவெடுத்து தற்போதைய நிலையை அடைந்துள்ளது. எனினும், இதுதான் அரசின் பரிணாம வளர்ச்சி என்று அறுதியிட்டு கூற இயலாத அளவிற்கு, அரசு படிப்படியாக வளர்ந்து வந்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

அரசு என்கிற அமைப்பு ஒரே மாதிரியாக இல்லாமல் ஆரம்ப காலத்தில் பழமைப் பேரரசாக, கிரேக்க நகர அரசாக தற்போதைய மக்கள் நல அரசாக மாறுவதற்கு முன் உருப்பெற்றிருந்திருக்கிறது. கீழே சில முக்கியமான வகை அரசுகள் பற்றிய விளக்கங்கள் தரப்பட்டிருக்கின்றன.

1. நகர அரசு

2. நிலப்பிரபுத்துவ அரசு

3. தேசிய அரசு

4. சமஉடைமை அரசு, மற்றும்

5. மக்கள் நல அரசு.

நகர அரசு (CITY STATE)

பழமைப் பேரரசு முடிவுக்கு வந்த பின்னர் கிட்டத்தட்ட கி.மு. 1000வது ஆண்டு சமயத்தில் கிரேக்க நாட்டில் நகர அரசு தோன்றியது. நகர அரசு தோன்றிய அதே காலத்தில் அரசியல் கோட்பாட்டின் தோற்றமும் ஏற்பட்டதாகக் கருதப்படுகிறது. கிரேக்க சமூகங்களே முதன் முதலில் அரசியல் சிந்தனையின், முக்கியத்துவத்தை உணர்ந்து நடைமுறைப்படுத்தின. கிரேக்கர்கள், ‘அரசியல்’ என்பதை வெறும் தர்க்க, தத்துவார்த்த நிலைகளிலேயே வைக்காமல் வாழ்க்கையோடு இணைத்து அதையே அரசாங்கமாகவும் ஏற்படுத்தி பெருமை பெற்றார்கள்.

ஐரோப்பாவில் புலம் பெயர்ந்த கிரேக்கர்கள், சிறு சிறு குழுக்களாக பிரிந்து, ஆங்காங்கே மலைப்பகுதிகளிலும் சமவெளிகளிலும் இதர பிரதேசங்களிலும் குடியேறினர். காலப்போக்கில் அவர்களின் ஒவ்வொரு வாழ்விடமும், அரசின் இருப்பிடமாக, முன்பிருந்த பழமைப்பேரரசுக்கு முற்றிலும் மாறுபட்டுத் திகழ்ந்தது. அவ்வகை ஆட்சி முறை, பழங்குடியினரின் நிர்வாகத்தினை ஒத்திருந்தது எனலாம். இத்தகைய உள்ளாட்சி நிர்வாகமானது காலப்போக்கில் உருப்பெற்று நகர அரசாக திகழ்ந்தது. கிரேக்க நகரம், எல்லா வகையிலும், நவீன அரசின் அத்தனை அம்சங்களையும் கொண்டு உண்மையான அரசாக இருந்ததெனக் கருதப்படுகிறது. மக்களுடைய அரசியல், பொருளாதார, அறிவார்ந்த, ஒழுக்க வாழ்க்கை முழுவதும் நகர அரசைச் சார்ந்திருந்தது.

கிரேக்க நகர அரசின் அம்சங்கள்

ஒவ்வொரு நகர அரசும் சுதந்திர அமைப்பாக செயல்பட்டது. அவ்வாறு சுதந்திரமாக இருப்பதை பெருமையாகக் கருதியது. கிரேக்க நகர அரசுகள் அனைத்தும் அளவில் சிறியவைகளாகவும் மக்கள் தொகையில் குறைவான எண்ணிக்கையும் கொண்டவைகளாக இருந்தன. இத்தகைய அரசில் மட்டுமே சமூக, பொருளாதார, அறிவியல் சார்ந்த வாழ்க்கை அமைய முடியும் எனக் கருதப்பட்டது. இக்கருத்தை அரிஸ்டாட்டிலும் வலியுறுத்தியுள்ளார்.

வரி செலுத்துதலும், தேர்தலில் வாக்களிப்பதும் மட்டுமே குடிமகனின் கடமை என்பது வன்மையாக மறுக்கப்பட்டது. ஒவ்வொரு குடிமகனும் அவன் சார்ந்துள்ள அரசின் மேம்பாட்டிற்கென வாழ்தல் வேண்டும். அவன் தன்னுடைய அரசு சார்ந்தப் பணிகளை தானே செய்தான்.

நகரத்தின் கடவுள்களை அவனுடைய கடவுள்களாக பாவித்தான். அனைத்து விழாக்களிலும் அவன் பங்கு பெற்றான். அரசும் சமுதாயமும் இருவேறு அமைப்பன்று, அவை ஒன்றே என்ற நிலை அக்காலத்தில் இருந்தது. கிரேக்க நகரம் அரசு, திருச்சபை, பள்ளி என்கிற அமைப்புகளின் ஒட்டுமொத்த அமைப்பாக இருந்து மனித வாழ்க்கையை முழுவதுமாக ஆக்ரமித்தது. நல்வாழ்க்கையை பெற்றுத் தருவதுதான் அரசின் குறிக்கோளாக இருந்தது. இதனை நோக்கமாகக் கொண்ட அரசின் நடவடிக்கைகள் எல்லாம் நியாயப்படுத்தப்பட்டன. அரசியல், ஒழுக்கம், சமயம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றிற்கிடையே எவ்வித பாகுபாடும் காணப்படவில்லை. ஆயகலைகள் அறிவியல் மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றை அடைந்த அரசு பங்காளியாக இருக்கிறது என்னும் எட்மண்டு பர்க்கின் கருத்தையொட்டியதாகவே கிரேக்க நகர அரசு திகழ்ந்தது. ஏதென்ஸ் நகர அரசு புகழின் உச்சத்திலிருந்த போது கிரேக்கத்தின் சிறந்த அரசியல் கருத்துக்களின் பிரதி பிம்பமாகக் கருதப்பட்டது.

கிரேக்க நகர அரசுகளில் நேரடி மக்களாட்சி நடைபெற்றது. மக்கள் நேரடியாக அரசாங்கத்தில் பங்கேற்றனர். இது மக்கள் சக்திக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தது. அரசாங்க அமைப்புகள் என்பது மாற்றத்திற்குட்பட்டது என்பதை கிரேக்க அரசியல் தத்துவஞானிகள் கருதினர். அதன்படி முதலில் முடியாட்சி பிறகு உயர் குடியாட்சியென மாற்றம் ஏற்பட்டது. பிறகு சிறு குழுவாட்சி பிறகு மக்களாட்சியென மாறி மாறி சுற்றிச்சுற்றி அரசுகள் ஏற்பட்டன. ஆனால் கிரேக்கர்கள் மக்களாட்சியை மாக்களாட்சியாகக் (Mobocracy) கருதினர்.

கிரேக்கர்கள் தன்னாட்சி, சுதந்திரம் போன்றவைகளை அபரிதமிதமாகப் பின்பற்றினர். அச்சமயத்தில், வடக்கு ஐரோப்பாவில், மாசிடோனியாவை சார்ந்த பிலிப் என்பவரின் தலைமையில் வலிமைமிக்க, முடியாட்சி முறை அரசு எழுச்சி பெற்ற போது, நகர அரசுகள் குலைந்து போயின. கட்டுப்பாடற்ற அதீத சுதந்திரம், கிரேக்க அரசு சமுதாயத்தில் பல்வகை ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தியிருந்தன. இருப்போர், இல்லாதோர், எளியோர், வலியோர் மற்றும் ஏதென்சு அல்லது ஸ்பார்டா ஆகியவற்றின் நண்பர்கள் என சமுதாயம் பிளவுபட்டு மக்களிடையே ஒற்றுமையின்மை நிலவியது. தத்துவஞானியர் பலர், ஒழுக்கம் என்பது என்ன? நற்பண்புகளை போதிக்கும் முறைகள் எவை? என்பதை பற்றி தீவிரமாக சிந்தித்தனர். அப்போதிருந்த மக்கள் கட்டுப்பாடற்ற, ஒழுங்கற்ற வாழ்க்கையை வாழ்ந்ததாகக் கருதினர். இத்தகைய மனப்பான்மை உடையவர்கள், அவர்களை காட்டிலும் மேலான பண்புடையவர்களிடம், வீழ்வது தவறில்லை எனக் கருதினர். அவ்வாறே, கிரேக்கர்களும் வீழ்ந்தனர்.

கிரேக்க நகர அரசுகளில் சமூக அமைப்பிலும் குறைபாடுகள் இருந்தன. ஏதென்ஸ் நகரத்தில் அடிமைகள் பெருமளவில் இருந்தனர். அடிமைமுறை நாகரீக மேம்பாட்டிற்கு எதிரானது. மக்களாட்சி முறைக்கு மாறானது. பாகுபாடுகள் இல்லாமல் எல்லா மக்களும் உரிமைகள் மற்றும் சலுகைகளைப் பெற்று அனுபவிக்கும் சூழ்நிலைகள் மக்களாட்சிமுறையில் நிலவும் சகோதரத்துவம் அதன் அஸ்திவாரம். அதன் உறுப்பினர்கள் எல்லோரும் சமமானவர்கள்.

மானிட வாழ்க்கையின் எல்லா அம்சங்களையும் உள்ளடக்கியதாக கிரேக்க நகர அரசு விளங்கியது. இந்த உள்ளடக்கிய நிலை, அரசாங்கம் மற்றும் அதன் பணிகள், அரசாங்கத்திற்கும் இதர கழகங்களுக்குமிடையேயுள்ள வேறுபாடுகள் போன்ற அரசியல் தொடர்பான பிரச்சினைகளை கிரேக்கர்கள் அறியாமல் புறக்கணிக்கும்படி செய்து விட்டது.

‘‘சமூகத்தினின்றும் அரசை பிரித்தறிய தவறியதால் அச்சுதந்திரம் அடையாளம் காணமுடியாத உடைபட்ட சின்னமாகிவிட்டது’’ என்று மாக்ஐவர் (Maclver) என்னும் அறிஞர் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுவதாவது, எல்லாவற்றையும் உள்ளடக்கிய கிரேக்க நகர அரசு, நகரத்திற்கும் மக்களுக்குமிடையேயுள்ள வேறுபாடுகளின் தன்மை மற்றும் சட்டம் மற்றும் வழக்காறுக்களுக்கிடையேயுள்ள வரையறைகளை அறியத்தவறியது. சட்டம் மற்றும் ஒழுங்கை நிலை நாட்டுதல், பண்பாடுகளைப் பாதுகாத்தல் போன்ற பணிகள் சர்வவல்லமை படைத்த அரசின் கடமைகள் என்பதை உணரத் தவறியது. வேற்றுமையில் ஒற்றுமை, எல்லோருக்கும் உரிமைகளைத் தர மறுத்து தன்னிச்சையாக செயல்பட்டது எல்லாமாகச் சேர்ந்து நகர அரசு அழிவதற்குக் காரணங்களாகி விட்டன.

நிலப்பிரபுத்துவ அரசு (THE FEUDAL STATE)

மேற்கத்திய ஐரோப்பாவில் உரோமானிய அரசின் வீழ்ச்சி, ‘அரசு’ என்கிற அமைப்பின் வீழ்ச்சியாகவே கருதப்பட்டது. அவ்வீழ்ச்சிக்கு பின்னர் எங்கும் பெருங்குழப்பமே மேலிட்டது. உரோமானிய அரசின் மீது வடக்கிலிருந்து படையெடுத்த தூத்தோனிய ஆதிவாசிகள் (Teutonic Barbarians), பழங்குடியினர் நிலையிலேயே வாழ்ந்தனர். வலிமைமிக்க, மைய அதிகாரக் கட்டுப்பாடு, வல்லமை பொருந்திய மேம்பட்ட மைய அதிகார அமைப்பு போன்றவை அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. பிரதேச சுதந்திரம் மற்றும் தனிமனித சுதந்திரம் என்பவைகளே அவர்களுக்கு முக்கியமானதாக இருந்தது. அவர்களுடைய அரசர்கள் வெற்றிகரமான படைத்தலைவர்கள் என்பதைத் தவிர, வேறு எந்த அடையாளங்களும் அவர்களுக்கு இல்லை. அரசாங்க நிகழ்ச்சிகளில் சாமானியர்கள் அனைவரும் பங்கு பெற்றனர்.

இத்தகைய குணநலன்களைக் கொண்ட தூத்தோனிய பழங்குடியினருடன் உரோமானிய அரசமைப்பின் ஒழுங்கு, ஒருமைப்பாடு மற்றும் மையப்படுத்தப்பட்ட அதிகாரமுறையோடு தொடர்பு ஏற்பட்டபோது மோதல் ஏற்பட்டது.

இந்த இரண்டு முரண்பட்ட அமைப்புகளின் சங்கமத்தில் ஒரு புதிய அரசுமுறை தோன்றியது. குழு முறை சமுதாய அமைப்பைக் கொண்ட பழங்குடியினர் மற்றும் ஏகாதிபத்திய அரசு முறை அமைப்பைக் கொண்ட உரோமானிய அரசமைப்பு ஆகிய வெவ்வேறு முறைகள் மோதிக் கொண்டபோது நிலப்பிரபுத்துவ அரசு என்ற அரசுமுறை தோன்றியது. நிலப் பிரபுத்துவ அரசு, என்பது ஒரு அரசு முறையே அல்ல, அது ஒரு குழப்பமான அமைப்பு என்றும், இம்முறையை அரசின் பரிணாம வளர்ச்சியில் சேர்ப்பது சரியன்று என்றும் பல விமர்சனங்கள் இருப்பினும், நிலப்பிரபுத்துவ முறையை ஒதுக்கி விடுதல் சரியன்று. உரோமானிய ஆட்சி வீழ்ச்சி பெற்ற காலத்தில், ஐரோப்பிய மக்களுக்கு பாதுகாப்பும், அமைதியான வாழ்க்கையும் தந்தது இம்முறை அரசாகும். ஏகாதிபத்திய உரோமானியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகும் நவீனகால தேசிய அரசு தோன்றுவதற்குமான இடைக்காலத்தில் அவைகளுக்கிடையே பாலமாகத் திகழ்ந்தது நிலப்பிரபுத்துவ அரசாகும் என்பது சரியானதாகும்.

நிலப்பிரபுத்துவ அரசின் எழுச்சி

உரோமானிய சாம்ராஜ்ஜியம் வீழ்ந்த பின்னர், அந்நாட்டின் நிலப்பரப்பு, வலிமை பெற்று விளங்கிய பிரபுக்களின் முழுக்கட்டுப்பாட்டிற்குள் வந்தது. ஒவ்வொரு பிரபுவும் அவரது கட்டுப்பாட்டில் இருந்த குறிப்பிட்ட நிலப்பரப்பிற்கு தலைவராக இருந்து அதன் நிர்வாகத்தையும் கவனித்து வந்தார். அவர் அவரது பொறுப்பில் இருந்த நிலங்களை அவரைச் சுற்றியிருந்தவர்களுக்கு குத்தகைக்கு விட்டு குத்தகையை பெற்று அவர்கள் மேல் ஆதிக்கம் செலுத்தினார். அவரிடமிருந்து நிலத்தை நேரிடையாகப்பெற்றவர்கள் தலைமைக் குத்தகைதாரர்கள் எனப்பட்டனர். அவர்களுக்கு அடுத்தபடியாக இருந்தவர்கள் குத்தகைதாரர்கள் எனப்பட்டனர். அவர்களுக்கும் கீழே இருந்தவர்கள் துணைக் குத்தகைதாரர்கள் எனவும், குத்தகைதாரர்களின் நேர்மேற்பார்வையில் நிலத்தை சாகுபடி செய்த இதர சிலர் அடிமைகள் அல்லது பண்ணையாட்கள் என அழைக்கப்பட்டனர். இவர்கள் ஒவ்வொரு வகையினரும் அவர்களுக்கு நேர் மேல் மட்டத்திலிருந்தவர்களுக்கு குத்தகை, காணிக்கை மற்றும் இதர பணிகளைச் செய்து வந்தனர். இத்தகைய அமைப்பில் விசுவாசம் என்பது உடனடி மேலாளருக்கேயில்லாமல் அவருக்கும் மேலேயுள்ளவர்களுக்கு கிடையாது. எனவே பிரபுக்கள் தலைமைக் குத்தகைதாரர்களைத் தாண்டி இதரர்கள் மேல் அதிகாரம் செலுத்தவோ அல்லது கட்டளைகளை நிறைவேற்றும்படியோ வற்புறுத்த முடியாது. மேலே கூறப்பட்டுள்ள பண்ணையாள்முறை இக்காலத்திலும் தென்னாட்டின் பல பகுதிகளிலும் நடைமுறையிலிருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதே போல ராணுவமும் அவரவர்களால் ஏற்படுத்தப்பட்டு அவரவர் கட்டுப்பாட்டில் இயங்கியது. எனவே இறைமைய காரம் முழுமையானதாக இல்லை. ஒவ்வொரு மட்டத்திலும் இருந்தவர்கள் அதனைப் பெற்றிருந்தனர். இச்சூழ்நிலையில் அரசியல் முன்னேற்றத்திற்கு வழியில்லாதிருந்தது, இம்முறையிலான விசுவாசம் பிற்காலத்தில் இங்கிலாந்து போன்ற நாடுகளில் தேசிய அரசு ஏற்பட வகை செய்தது. நிலப்பிரபுத்துவ முறை அரசின் முக்கிய சாதனை மக்களுக்கு அமைதியைப் பெற்று தந்ததாகும் என்பதை மறுக்க இயலாது.

நிலப்பிரபுத்துவ அரசில் அடிமைகளான பண்ணையாட்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமானதாக இருந்தது. இதன் காரணமாக அவர்கள் வழிபட்ட கிறிஸ்துவ மதம் நன்கு வளர்ந்தது. இதனால் உரோமானிய அரசின் வீழ்ச்சிக்கு பிறகு, நிலப்பிரபுத்துவ அரசமைப்பால் பிழைத்த மாபெரும் நிறுவனமாக, திருச்சபை கருதப்படுகிறது.

நிலப்பிரபுத்துவ அரசமைப்பு திருச்சபையின் ஆதிக்கத்திற்கு வலு சேர்ப்பதாகவே இருந்தது. மதத்தலைமைக்கெதிராக எந்த ஒரு பெரிய அமைப்பையும், அக்காலத்திய திருச்சபை விரும்பவில்லை. பல்வகை படிநிலைக்குட்பட்டு, எவர் ஒருவருக்கும், அதிக முக்கியத்துவம் தராத நிலப் பிரபுத்துவ ஆட்சி, திருச்சபையின் ஆதிக்கம் வேரூன்ற முக்கிய காரணமானது. இவ்வாதிக்கத்திற்கு எதிராக பிற்காலத்தில் தோன்றிய மதச்சீர்த்திருத்த இயக்கம் (Reformation) திருச்சபையின் தலைமையை வலுவிழக்கச் செய்ததுடன், தேச முடியாட்சி தோன்றிட காரணமும் ஆனது.

இத்தகைய குறைபாடுகள் மற்றும் பலவீனங்களுக்கிடையேயும், நிலப்பிரபுத்துவ அரசு, ஐரோப்பிய அரசியலுக்கு பலவகையில் பங்களித்துள்ளது. மேற்கத்திய ஐரோப்பாவில், அரசியல் ஒற்றுமையையும், வாழ்வியல் முறைகளையும் தோற்றுவித்த உரோமானிய அரசு, நாகரீக முறை பழங்குடியினரால் வீழ்த்தப்பட்டு, சிதைக்கப்பட்டாலும் தனிமனித விசுவாசத்தினாலும், நிலத்தை சார்ந்த பற்றின் பேரால் ஏற்படுத்தப்பட்ட நிலப்பிரபுத்துவ அரசு, சமூக கட்டமைப்பு சிதறா வண்ணம், குழப்பங்கள் ஏற்படா வண்ணம் ஒரு ஒழுங்கை தோற்றுவித்தது. இரண்டாவதாக, பெரிய நிலச்சுவான்தாரர்கள் சுயமாக, தனிமனித சுதந்திரத்தை விரும்பியவண்ணம், தன்னாட்சி பெற்றிருந்தனர். அவர்களுடைய சுதந்திரம் முழுமை பெற்றிருந்தது. இதனை ‘மையர்ஸ்’ என்கிற அறிஞர், ‘‘நிலப்பிரபுத்துவ அரசு இடைக்காலத்தின் பிந்தைய பகுதியில், சுதந்திரத்தின் மாட்சிமையை கட்டி காத்தது’’ என்று குறிப்பிடுகிறார்.

நிலப்பிரபுத்துவ அரசில், பொது மற்றும் தனி உரிமைகள் வரையறுக்கப்படாமலிருந்தது. வலிமை மிக்க இன அரசாங்கம் உருவாக இடையூறாக, நிலப்பிரபுத்துவ அரசு, பல்வகை சிறிய அரசுகளாக பிரிந்திருந்தது. ஐரோப்பிய அரசியலில், ‘‘நிலப்பிரபுத்துவ அரசு, ஒழுங்கற்ற முறையில் ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்பு’’ என்ற ஆடம்ஸின் கூற்றில் பெருமளவு உண்மை உள்ளது.

இந்தியாவில் நிலப்பிரபுத்துவ அரசு

இடைக்கால இந்தியாவில் நிலவிய நில உடைமை மற்றும் நிலவரி முறைகள், ஐரோப்பிய நிலப்பிரபுத்துவ முறையை ஒத்திருந்தாலும், இரண்டையும் சமமாக கருதுவது சரியானதன்று. அவ்வாறாக இந்தியாவில் நிலவிய நிலஉடைமை அமைப்பு ‘‘ஜமீன்தாரி’’ முறை எனப்பட்டது.

ஜமீன்தாரி அமைப்பு (Zamindari System)

பன்னெடுங்காலமாக, இந்தியாவில் நிலத்தின் விளைச்சலில் ஒருபகுதி நிலவருவாயாக பெறப்பட்டது. இவ்வருவாய் அரசு அலுவலர்கள் மூலமாக நேரிடையாகவோ அல்லது இடைத்தரகர்கள் வாயிலாகவோ பெறப்பட்டது. இவர்கள் வசூலித்த வரியின் ஒரு பகுதியை தங்கள் பங்காக எடுத்துக் கொண்டனர். இவர்களே ஜமீன்தார்கள் என அழைக்கப்பட்டனர். நிலவரி வசூல் செய்த இடங்களில் அவர்களுக்கு சில சமயங்களில் சொந்த நிலமும் இருந்தது.

பிரிட்டிஷர் காலத்தில், இந்த ஜமீன்தாரி முறையானது. வடக்கு மற்றும் வடமேற்கு இந்தியாவில், மாற்றியமைக்கப்பட்டு மகல்வாரி (Mahalwari) முறையாக அறிமுகம் செய்யப்பட்டது. இந்த முறையில் கிராமம் கிராமமாக, ஆதினங்கள் வாரியாக, நிலஉடைமை அமல்படுத்தப்பட்டது. நிலஉடைமையானது, மேட்டுக்குடி குடும்பத்திற்கு கூட்டு உடைமையாக ஆக்கப்பட்டது.

இன அரசின் தோற்றம் (THE NATION-STATE)

நிலப்பிரபுத்துவ ஆட்சிமுறை, ஐரோப்பிய மக்களுக்கு, தற்காலிமான பாதுகாப்பு அமைப்பாக இருந்ததேயல்லாமல், மக்களிடையே தேசிய இன உணர்ச்சியையும், வாழ்க்கை முறையையும் அமைத்து கொள்வதற்கு எவ்வகையிலும் உதவி செய்யவில்லை.

நிலப்பிரபுக்களாட்சி முறை சாதாரண மக்களை அடக்கி அவர்கள் மீது, ஆதிக்கம் செலுத்துவதாகவே இருந்தது. எனவே இதற்கெதிராக, மக்கள் செயல்பட்டதோடு வலிமைமிக்க ஆதிக்கம் செலுத்தக் கூடிய அரசுகள் தோன்ற ஆரம்பித்த போது அவற்றை ஆதரித்தார்கள். இதற்கு வேறு சில நிகழ்வுகளை காரணிகளாக குறிப்பிடலாம். அவற்றுள் அப்போது மக்களிடையே ஏற்பட்ட மறுமலர்ச்சி, மத சீர்திருத்த இயக்கம் போன்றவைகளை குறிப்பிடலாம். இதனை அப்போது, இங்கிலாந்து நாட்டை ஆட்சி செய்த டியோடர் பரம்பரையைச் சேர்ந்த அரசர்கள் அதிகார குவிப்பு மற்றும் அதிகாரத்தை திறமையாக கையாளும் முறையால் மக்களை தேசிய உணர்வு உடையவர்களாக மாற்றலாம் என்பதையும் அவர்களை ஒற்றுமைப்படுத்தி அரசுக்கு சாதகமாக செயல்பட செய்யமுடியும் என்பதையும் எடுத்துக்காட்டினார்கள்.

மக்களிடையே தொடர்ந்து ஒற்றுமை உணர்வைப் போற்றவும், இன உணர்வுகள் அடிப்படையில் அவர்களைத் திரட்டி, வளர்ச்சி ஏற்பட உதவ முடியும் என்பதையும் அவர்கள் இதர ஐரோப்பிய நாடுகளுக்கு புரியுமாறு செய்தார்கள். இத்தகைய அரசியல் மாற்றம் இங்கிலாந்து நாட்டில் ஏற்படுவதற்கு அடிப்படையான மற்றும் முக்கியமான காரணமாக இங்கிலாந்தை ஐரோப்பிய கண்டத்தினின்றும் ஆங்கிலக் கால்வாய் பிரித்து அதனால் அது தனித்தன்மை உடையதாக இருந்ததேயாகும். காலப்போக்கில் குறிப்பாக பதினைந்தாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் ஆங்கிலேயர்கள் பிரான்சு போன்ற நாடுகளில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தனர். இந்த போக்கு, பிரான்சு, ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் நாடுகளில் மேலே கூறப்பட்ட தேசிய இன உணர்வு ஏற்பட ஏதுவாயிற்று. இதே போல பதினாறாம் நூற்றாண்டில் டென்மார்க், மற்றும் சுவீடன் மக்களிடையே இவ்வுணர்வை தோற்றுவித்து ஒருமைப்பாட்டை மேம்படுத்தியது.

இவ்வாறாக, புதிய அரசு ஒன்று தோன்றியது. அரசு பற்றிய பழைய கருத்துக்கள் மறைந்து ‘தேசியம்’ என்ற உணர்ச்சி மேலோங்கி மக்களிடையே ஏற்பட்ட ஒற்றுமை, இத்தகைய அரசுகளை பாதுகாத்தது. அந்த அடிப்படையில் தான் பதினைந்து மற்றும் பதினாறாம் நூற்றாண்டில் அரசுகள் தோன்றவும், இந்த அரசுகளுக்கிடையே சமநிலை மற்றும் இறைமை அதிகாரம் ஏற்கப்பட்டு, நிலைநாட்டப்பட வேண்டும் என்ற உறுதிப்பாடு அரசுகளுக்கிடையிலும் மக்களிடத்திலும் மேலோங்கி இருந்தது. இம்மாற்றம், பன்னாட்டு சட்டம் தோன்றுவதற்கு துணை நின்றது.

இன அரசின் வளர்ச்சி

இன அரசுகள் வரம்பற்ற அதிகாரம் செலுத்தும் முடியாட்சிகளாக இருந்தன. திருச்சபை அதிகாரம் ஒதுக்கப்பட்டு பிரபுக்களாட்சி மறையத் தொடங்கிய காலத்தில் மக்கள் அவர்களுடைய உயிர்களுக்கு பாதுகாப்பு தரத்தக்க அரசுகள் மேல் நம்பிக்கை கொண்டு, அவற்றை ஆதரித்தனர். புரட்சி கிறிஸ்துவ மதமும் கூட நான்கு எல்லைகளுக்குட்பட்ட பகுதிக்கு தான் அதிகாரம் செலுத்த அரசர்களுக்கு உரிமை உண்டு என்று கூறி வந்த போதிலும், சமயத்தை கட்டுப்படுத்துவதற்கு அதிகாரம் அரசர்களுக்கு உண்டு என ஏற்றுக்கொண்டது. எனவே தான் தெய்வீக தோற்றக் கொள்கை அடிப்படையில், அரசர்கள் வரம்பற்ற அதிகாரம் படைத்த முடியாட்சிகளை ஆதரித்தனர். இருப்பினும், இத்தகைய அரசர்களின் ஆதிக்கம் மக்களிடையே தொடர்ந்து நடைபெறமுடியவில்லை. அடுத்த கட்டமாக, இன அரசுகளில் அரசருக்கும் மக்களுக்குமிடையே, பூசல்கள் ஏற்பட்டு மக்கள், தங்களுடைய உரிமைகளுக்காக அவர்களுடைய எண்ணங்கள். வாழ்க்கை முறைகளை சிறந்த முறையில் அமைத்துக் கொள்ள போராடினார்கள். மக்களுக்கு பிரதிநிதித்துவம் தரும் அரசாங்கம் சிறந்ததென கருதி குடியாட்சி முறை வேண்டுமென வற்புறுத்தினார்கள்.

குடியாட்சி முறை மூன்று முக்கிய கோட்பாடுகளை வற்புறுத்துகிறது. அவை சமத்துவம், மக்கள் இறையாண்மை மற்றும் தேசியம் என்பனவாகும். முதலில் சொல்லப்பட்ட சமத்துவ கோட்பாடு, பிரெஞ்சு புரட்சியாளர்கள் 1789-ம் ஆண்டு வெளியிட்ட ‘மனித உரிமைகள் பிரகடனத்தில்’ வற்புறுத்தப்பட்டுள்ளது. அப்போது முதல் ஏழை எளிய மக்கள் முதல் அனைவரும் அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டு சமூக, சமய மற்றும் பொருளாதார துறைகளில் எவ்வித பாகுபாடும் இல்லாமல் சுதந்திரமாக வாழவேண்டும் என்ற கருத்து தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. மக்களிடத்தில் தேசியம், சுதந்திரம் மற்றும் சமத்துவ உணர்வுகள் மேலோங்கி அவற்றை அடைவதற்கு அவர்கள் உத்வேகத்துடன் நடவடிக்கைகள் பலவற்றை மேற்கொண்டார்கள். இத்தகைய உணர்வு அவர்களிடையே ஏற்படுவதற்கு பிரெஞ்சு புரட்சியும் முக்கியமான காரணமாகும் என்று சொல்லப்படுகிறது.

வரம்பற்ற முடியாட்சி முறை மறைந்த போது அதனுடைய நடைமுறைகளும் மறைந்து போனதோடு எதிர்காலத்தில் அத்தகைய ஆட்சி முறைகள் தோன்ற முடியாதபடி பார்த்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாயிற்று. இவ்வாறாக, ஐரோப்பிய கண்டத்தில் குடியாட்சி முறையை பின்வரும் நவீன கால தேசிய இன அரசுகள் ஏற்பட்டன. இவ்வரசுகள் தொழில், வர்த்தகம் மற்றும் வியாபாரம் ஆகியவற்றில் தடைகள் இல்லாமல் மக்கள் பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், அவற்றை விரிவுபடுத்தவும் புதியனவற்றை கண்டுபிடிக்கவும், சுதந்திரமாக இவை எல்லாவற்றிலும் செயல்படவும் வழிவகை செய்தன. இதன் காரணமாக நிலம் மற்றும் முதலீட்டில் தெளிவான அதே சமயத்தில் உறுதியான முற்போக்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இவ்வகையான தேசிய இன அரசுகள் உலகெங்கிலும், விரைவில் ஏற்பட்டன. இதன் விளைவாக தன்னைத்தானே ஆட்சி செய்துக்கொள்ள சுதந்திரம் வேண்டும் என்ற ‘தன்னாட்சி’ உறுதிப்பாடு மக்களிடையே மேலோங்கி நின்றது. மக்கள் எந்தெந்த அரசுகளில் வாழ்ந்தார்களோ, அந்த அரசுகளின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அவர்களுடைய தொழில்கள் மற்றும் வியாபாரம் போன்றவைகளை அமைத்து முன்னேறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டதன் காரணமாக, கிட்டத்தட்ட ஐந்து நூற்றாண்டுகளுக்கு இம்முறை பின்பற்றப்பட்டது. மேற்சொல்லப்பட்ட கொள்கைகள் அடிப்படையில் ஏற்பட்ட இன அரசில் குடிமக்களிடத்தில் ஒற்றுமையை ஏற்படுத்தியதோடு அவற்றின் பாதுகாப்பினையும் உறுதி செய்து கொண்டனர்.

சமதர்ம அரசு (SOCIALIST STATE)

சமதர்ம கொள்கையை பின்பற்றுபவர்கள் அரசு நன்மை தரும் நிறுவனம் என்பதாக கருதுகிறார்கள். எனவே மக்களுக்கு சமூக நீதி கிடைப்பதற்கு அதிக அளவில் பொருள் உற்பத்தி அதனை பகிர்ந்தளித்தல் போன்றவற்றில் அரசு கட்டுப்பாடு அவசியம் என கருதுகிறார்கள். சமதர்ம அரசில் பொருள் உடைமை, பொருள் உற்பத்தி சாதனங்கள் மற்றும் பரிவர்த்தனை போன்றவைகளும், தரப்படும் வேலைக்கான ஊதியமும் அவரவர் தேவைக்கு தகுந்தாற் போல இருக்கவேண்டும் என்று சமதர்மவாதிகள் கருதுகிறார்கள். இந்த அடிப்படையில் தான் சமதர்ம அரசு ஏற்பட்டது.

சமதர்ம அரசின் முக்கிய சிறப்புகள்

J.W.கார்னர் (J.W. Garner )என்பவர் சமுதாயத்தில் உள்ள குறைகள் மற்றும் கெடுதல்களை குறைத்து தீவிர மாற்றங்களை சமதர்ம அரசு ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார். அதற்கு அவர் பின்வரும் காரணங்களை எடுத்துக்காட்டாக சொல்கிறார். பணமும், அதிகாரமும் சிலரிடத்தில் குவிந்திருக்கின்றன. உழைப்போர் அவர்களுடைய உழைப்பிற்கேற்ற ஊதியத்தை பெறுவதில்லை. முதலாளிகளோடு அவர்களுக்கு போராடுவதற்கான சக்தியோ பேரம் பேசுகின்ற திறமையோ இருக்கவில்லை. இப்போதுள்ள இம்முறை சிலரிடம் அதிகமாக செல்வம் சேரக்கூடிய வாய்ப்புகளை தந்து மக்களிடையே ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்துகிறது. இதில் கால தாமதமும், தேவையில்லாத அலுவல்களும் அதிகரிக்கின்றன. தேசிய பொருளாதாரம் திட்டமிடப்படாமல், கட்டுப்பாடற்ற உற்பத்தி போக்கு இருப்பதால் பொருள்கள் மலிவாக கிடைக்கின்றன. ஊதியம் குறைவாக இருக்கின்றது. அதே சமயத்தில் வேலை கிடைக்காத நிலையும் ஏற்படுகின்றது. இவை எல்லாமும் நியாயமற்ற தன்மை, நேர்மையற்ற போக்கு, பொருள் சேர்த்தலில் அபரிமித விருப்பம் போன்றவைகள் மேலோங்கி தனிமனித நடத்தையின் தரம் குறைகிறது என்றும் கார்னர் எடுத்துக் காட்டியுள்ளார்.

சமதர்ம அரசின் சில முக்கியமான தன்மைகள் 

1. முதலாளித்துவ முறையை நீக்குகிறது

சமுதாயத்தில் பொருளாதார ரீதியாக ‘‘பணக்காரர்’’ மற்றும் ‘‘ஏழை’’, ‘‘பொருள் உடையவர்’’ மற்றும் ‘‘பொருளற்றவர்’’, ‘‘சுரண்டுவோர்’’ மற்றும் ‘‘சுரண்டப்படுவோர்’’ என்று ஏற்றத்தாழ்வுகளை ஊக்குவித்து மக்களை இருவகையாக பிரிக்கின்ற முதலாளித்துவ முறையை ஒழித்து ஏற்றத்தாழ்வில்லாத சமுதாயத்தை ஏற்படுத்துகிறது.

2. போட்டிகளை எதிர்க்கிறது

எல்லா வகையான போட்டிகளையும் ஒழித்து வேலை கொடுப்போர் மற்றும் வேலை செய்வோர் இடையே ஒற்றுமையையும், ஒத்துழைப்பையும் ஏற்படுத்த முயலுகிறது.

3. அனைவருக்கும் பொருளாதார சமத்துவம்

சமுதாயத்தின் பல்வேறு பிரிவுகளுக்கிடையே உள்ள பொருளாதார ரீதியான அதிக அளவிலான இடைவெளியை குறைத்து பொருளாதார சமத்துவம் ஏற்பட உதவுகிறது. செல்வம் குறிப்பிட்ட சிலரிடம் குவிக்கப்படுவதை எதிர்த்து ஏழை மற்றும் பணக்காரர் என்ற நிலைமையை அகற்றி எல்லோரும் சமவாய்ப்புகள் பெறவும், அதனால் கிடைக்கும் நன்மைகளின் பலனை அனுபவிக்கவும் உதவுகிறது. லேவலி என்ற பொருளியல் நிபுணர், ‘‘சமதர்ம அரசு ஏற்றத்தாழ்வுகளை அகற்றி எல்லோரையும் சமமாக்குகிறது’’ என்று குறிப்பிடுகிறார்.

4. தனியார் உடைமையை எதிர்க்கிறது

தனி நபர்கள் சொத்து குவிப்பதை சமதர்ம அரசு எதிர்க்கிறது. அதை நீக்குவதற்கு முயற்சிக்கிறது. தனியார் உடைமை என்பது திருட்டுக்கு சமமானது என்றும், சமுதாயத்தில் தீங்குகளை தோற்றுவிக்கிறது என்றும் கருதுகிறது. நிலமும் மூலதனமும் எல்லோருக்கும் பொதுவானது என்றும், குறிப்பிட்ட சிலருக்கு உரியதல்ல என்றும் விவரிக்கிறது.

5. உற்பத்தியின் மீது சமுதாயக் கட்டுப்பாடு

தனிநபர் பொருள் உற்பத்தி முயற்சிகளில் ஈடுபடுவதை தடுத்து அரசே அதனை தேசியமயமாக்கி நடைமுறைப்படுத்தவேண்டும் என்பது சமதர்ம அரசின் கோட்பாடுகளில் முக்கியமானது. உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் பொதுமக்களுக்கே பயன்படவேண்டும். எனவே அரசு அவற்றை தேசிய மயமாக்கி மக்கள் அனுபவிக்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்.

6. சமுதாயத்திற்கு முக்கியத்துவம் தருகிறது

தனிநபர் நலனுக்கு மாறாக, சமூகநலன் ஏற்கப்பட்டு சமுதாயத்திற்கு சமதர்ம அரசு முக்கியத்துவம் தருகிறது. குறுகிய மற்றும் சுயநல போக்குகளுக்கு எதிராக பொதுநலனை சமூக அரசு காப்பாற்றுவதற்கு விரும்புகிறது. சமுதாயத்திற்கு எவை எவை தேவையோ, அவை அவை அரசாலேயே உற்பத்தி செய்யப்படவேண்டும் என்பது முக்கியமான குறிக்கோளாகும்.

7. தேவைக்கேற்ப உழைப்பாளிகளுக்கு நன்மை தருகிறது

உழைப்புக்கேற்ற ஊதியம் மற்றும் பலன்கள் உழைப்பாளிகளுக்கு கிடைக்க வேண்டும். ஒருவனது உழைப்பிற்கேற்றவாறு ஊதியமளித்தல் என்பது சமதர்ம அரசின் பிரதான கொள்கையாகும். அதன் சித்தாந்தம் ‘‘ஒருவனின் திறமைக்கேற்றாற் போன்ற பணி, அவன் தேவைக்கேற்றார் போல் ஊதியம்’’.

8. முறைகள்

ஜனநாயக - மற்றும் பரிணாம வளர்ச்சியினையே சோசலிஸ அரசு விரும்புகிறது. தற்காலத்தில் நிலவுகின்ற அரசியல் மற்றும் பொருளாதார அமைப்புகளில், படிப்படியாகவும், ஜனநாயக ரீதியிலுமே மாற்றத்தை கொண்டுவர முயற்சிக்கிறது. சோசலிஸ சித்தாந்தம், அரசியல் ரீதியிலான அமைதியான வழிகளையே நம்புகிறது.

மதிப்பீடு (Evaluation)

சித்தாந்த ரீதியிலும், பொருளாதார இயக்கம் என்ற முறையிலும் சமதர்ம அரசின் நிறைகள் மற்றும் குறைகள் பின்வருமாறு.

அ. சமதர்ம அரசின் நிறைகள்

உலகெங்கிலும் பல்வேறு வடிவங்களில் சமதர்ம அரசுகள் உள்ளன. பொது நன்மை குறித்த அனைத்து நடவடிக்கைகளிலும் அரசு அங்கே தலையிடுவதை காணலாம். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பொருளாதார மற்றும் தொழில் நடவடிக்கைகளை அரசே தன் வசம் எடுத்துக் கொண்டு, அவற்றை கட்டுப்படுத்துகிறது. அனைத்து அரசுகளின் போக்குகளும், சோசலிஸ சித்தாந்தத்தின் பாதையில் செல்வதாகத் தெரிகிறது.

1. அரசு தனிமனிதனைக் காட்டிலும், மாட்சிமை கொண்டதாகக் கருதப்படுகிறது. உற்பத்தியின் முக்கிய அம்சமாக மக்கள் நலன் கருதப்படுகிறது.

2. சமூக ஏற்றத்தாழ்வுகளை அறிவியல் பூர்வமாக விளக்குவதுடன், அத்தகைய சமனற்ற நிலைகளை போக்குவதே சோசலிஸ சித்தாந்தத் ன் தலையாய கடமைகளாக கூறப்படுகிறது. பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், வளங்களின் பயனற்ற உபயோகம், மற்றும் முறையற்ற திட்டமிடல் போன்றவற்றை அறவே நீக்குகிறது.

3. சமுதாயத்தில் நிலவுகின்ற பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை அறவே போக்கும் வகையில், தனி உடைமையினை அடியோடு போக்க எத்தனிக்கிறது. இதனால் எளியோர் வலியோரால் சுரண்டப்படுவது அறவே தவிர்க்கப்பட்டு மேம்பட்ட சமுதாயம் உருவாக வழிகோலப்படுகிறது.

4. உற்பத்தியின் கோட்பாடு, சமூக பயன்பாடே தவிர, தனிமனித லாபம் அன்று. தொழிற்சாலைகளை லாப நோக்கத் ற்காக அன்றி, சமூக நலனுக்காகவே முறைப்படுத்தி நிர்வாகம் செய்கிறது.

5. உழைக்கும் வர்க்கத்தினரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி சமுதாயத்தில் முக்கிய அந்தஸ்த்தை ஏற்படுத்தித் தருவதுடன், அவர்களின் பணிச்சூழலினை மேம்படுத்தவும் சோசலிஸ அரசு முயற்சிக்கிறது.

6. விரும்பும் மாற்றங்கள் அனைத்தையும் படிப்படியாகவும், அரசியல் ரீதியாகவும் மட்டுமே ஏற்படவேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. இவ்வகையில் ஜனநாயகம் வெற்றிப்பாதையில் செல்லவும் உதவுகிறது.

7. இவை அனைத்திற்கும் மேலாக தனிமனிதனை தேவைகளிலிருந்தும், பசிப்பிணி பட்டினிகளிலிருந்தும் விடுவித்து அவன் அரசியல் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளில் பங்கேற்க பலவகைகளில் உதவுகிறது.

சமதர்ம அரசின் குறைகள்

மேற்கூறப்பட்ட சாதகத் தன்மைகளை பெற்றிருப்பினும், சோசலிஸ அரசானது கீழ்க்காணும் காரணங்களினால் கடுமையாக விமர்சனம் செய்யப்படுகிறது.

1. தனிமனிதனுக்கு மேலான அமைப்பாக அரசு செயல்படுவதால், தனிமனித சுதந்திரம் பாதிக்கப்படுகிறது. அரசு எஜமானனாகவும், குடிமக்கள் அரசின் சேவகர்களாகவும் ஆகிவிடக்கூடும். இது ஏற்புடையதன்று.

2. தனிஉடைமை மற்றும் தனிநபர் முயற்சிகள் புறந்தள்ளப்படுவதால், அதிக பட்ச உழைப்பினை காட்ட மனிதர்கள் முற்படமாட்டார்கள்.

3. சித்தாந்த ரீதியில் பல நன்மைகள் இருப்பதாக தோன்றினாலும், நடைமுறைக்கு ஒவ்வாத அமைப்பாகவே இது கருதப்படுகிறது. அரசே அத்தனை அலுவல்களையும் கவனிக்க இயலாது. இது காலப்போக்கில், தாமதத்தையும், ஊழலையும், யதேச்சதிகாரத்தையும் தோற்றுவித்து விடும். இம்முறை அரசில் தொழிற்சாலை லாபத்தில் இயங்க வாய்ப்பில்லை.

4. நுகர்வோர் ஆர்வம் மற்றும் திருப்தி என்பதை சோசலிஸ கொள்கை அங்கீகரிக்கவில்லை. இதனால் நுகர்வோர்களுக்கு எவ்விதமான தேர்ந்தெடுக்கும் உரிமைகளும் அளிக்கப்படுவதில்லை. அரசு அளிக்கும் பொருட்களை மட்டுமே பயன்படுத்தும் நிலைக்கு நுகர்வோர் தள்ளப்படுகிறார்.

5. சோசலிஸ சித்தாந்தப்படி செயல்படும் நாடுகளை விட, தலையீடு இல்லாத வணிக முறைகள் கொண்ட நாடுகள் பல வகையில் முன்னேறியுள்ளன. உதாரணத்திற்கு சோசலிஸ ரஷ்யா மற்றும் சீனாவை விட அமெரிக்கா பன்மடங்கு முன்னேற்றம் கண்டுள்ளது.

சோசலிஸ அரசு என்பது குழப்பங்களின் கிடங்கு என்றும் கருதப்படுகிறது. அதன் உண்மையான இலட்சியங்கள் எவை என்பதை எவரும் அறிந்திலர். எனினும், இது உலகம் முழுவதும் வரவேற்பை பெற்றுள்ளது. கம்யூனிசத்தை விமர்சிப்பவர்கள் சோசலிசத்தை ஒரு மிதவாத பாதையாக பாராட்டுகின்றனர். இன்றைய உலகில் அனைத்து வளர்ச்சி பெற்ற நாடுகளும், சோசலிஸ பாதையிலேயே செல்கின்றன. மக்கள் தங்களுக்கு உதவ முன்வரும் அரசையே வரவேற்கின்றனர்.

பொதுநல அல்லது மக்கள் நல அரசு(WELFARE STATE)

பொது நல அரசு என்பது இன்றைய இந்திய நாட்டிற்கு பொருந்தும். இந்திய அரசியல் சட்டத்தில் அரசு வழிகாட்டும் கோட்பாடுகளில் பொது நல அரசின் சிந்தனைகள் விரிவாக தரப்பட்டிருக்கின்றன.

அரசியல் சட்டவிதி 98, நீதி , சமூக, பொருளாதார அரசியல் ரீதியிலான சமுதாய அமைப்பொன்றை ஏற்படுத்தி எந்தளவிற்கு முடியுமோ, அந்த அளவிற்கு அதனை பாதுகாத்து தரக்கூடிய நிறுவனங்களை ஏற்படுத்தி, மக்களின் தேசிய வாழ்க்கைக்கு ஆதாரமாக இருக்கும் பொதுநலத்தை மேம்படுத்த அரசு முனையும் என்று கூறுகிறது.

அரசியல் சட்ட விதி 39(அ) வாழ தேவையான ஆதாரங்கள் (ஆ) பொதுநலன் காக்கும் இயற்கை வளங்கள் பகிர்வு (இ) சொத்து குவிப்பிற்கு எதிர்ப்பு (ஈ) ஆண்கள் மற்றும் பெண்களுக்கு அவரவர் உழைப்பிற்கேற்ப பாரபட்சமற்ற ஊதியம் (உ) உழைப்பவர் உடல்நலன் மற்றும் நல்வாழ்வு, பாதுகாப்பு - குறிப்பாக பெண்கள் மற்றும் குழயதைகள் மேலும் (ஊ) குழந்தைகளை வேலைக்கமர்த்துதல் ஆகியவற்றைப் பற்றியும் எடுத்துக்கூறுகிறது.

அரசியல் சட்டவிதி 41 கூறுவதாவது

வேலைக்கு உரிமை, கல்விக்கு உரிமை, மற்றும் வேலை இல்லாதோர், முதியோர் நோயினால் தாக்கப்பட்டவர்கள் மற்றும் உடல் ஊனமுற்றோருக்கான உரிமைகளை அரசு பெற்றுத்தரும்.

விதி 41 வேலை வாய்ப்புகள் ஏற்படுத்துதல், கல்வி அளித்தல், முதியோர், நோய்வாய்ப்பட்டோர், ஊனமுற்றோர்க்கு உதவுதல், உணர்வு பூர்வ நிலையில், மனித நேயம் கட்டிக்காக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது. அவற்றுள் மகளிருக்கு பேறு கால சலுகை, உழைக்கும் வர்க்கத்தினருக்கு நியாயமான கூலி, தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் மற்றும் நலிவுற்ற பிரிவுகளின் கல்வி மற்றும் பொருளாதார அபிலாஷைகள், மக்களுக்கு சத்துணவு, பொது சுகாதார மேம்பாடு ஆகியன அடங்கும். இவை அனைத்தும், மக்களின் நலன் கருதி, ஆட்சியாளர்களால் நிறைவேற்றப்படவேண்டிய இனங்கள். இவற்றை மாநில அரசுகள் நிறைவேற்றாமல் போனாலும், நீதிமன்றம் அவை குறித்த இனங்களில் தலையிட முடியாது. (அரசியலமைப்பு சட்டம்: பகுதி 37)

மக்கள் நல அரசின் தோற்றம் மற்றும் வளர்ச்சி

இன்றைய நிலையில், உலகில் உள்ள ஒவ்வொரு அரசும், தன்னை ‘‘மக்கள் நல அரசாக’’ முன்னிறுத்திக் கொள்வதில், அதீத ஆர்வம் காட்டுகின்றது. ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில், நிலைமை வேறுவிதமாக இருந்தது. பெரும்பான்மையான அரசுகள், ‘‘காவல்’’ அரசுகளாகவே இருந்தன. சட்ட ஒழுங்கு பேணுதலையே அரசுகளின் தலையாய பணியாக கருதப்பட்டது. ‘மக்கள் நலன்’ என்பது தனிமனிதர்களிடத்தும், தனிமனித குழுக்களிடத்தும் விடப்பட்டது. மேற்படி ‘காவல்’ அரசுகள், ‘மக்கள் நல அரசுகளாக’ மாறவேண்டும் என்று உலகத்தின் கவனத்தை ஈர்த்த அரசியல் தத்துவஞானியரில், லாஸ்கி நினைவு கூறத்தக்கவர். முதன்முதலில் இங்கிலாந்து நாட்டில், மக்கள் நல அரசின் சிந்தனை ஆழ்ந்து வேரூன்றியது. ஆயினும், எஞ்சிய பகுதிகளில் நிகழ்ந்தது போல் அல்லாமல், இங்கிலாந்து நாட்டில், மக்கள் நல அரசு வேறு வகைகளில் வளர்ந்தது. இங்கிலாந்து நாட்டில், தொழிற் சங்கங்கள், பேபியன்கள் முதலான சோசலிஸ சிந்தனையாளர்கள் இந்த சித்தாந்தம் தழைத்து வளர காரணமாயினர்.

இங்கிலாந்து பிரதமர் அட்லியின் தலைமையில் உருவான அரசு, தேசிய சுகாதாரப் பணிகளுக்கு இறுதி வடிவம் கொடுத்தது. இரயில்வே துறை, நிலக்கரி சுரங்கங்கள், எஃகு தொழிற்சாலைகள், இங்கிலாந்து வங்கி, போக்குவரத்து துறை முதலியன நாட்டுடமையாக்கப்பட்டன. பழமைவாத கட்சியினர் ஆட்சிக்கு வந்தவுடன், நாட்டுடைமையாக்கல் தொய்வு பெற்றது.

இங்கிலாந்தில், மிகப்பெரிய அளவிலான சமூக காப்பீட்டு திட்டம் இன்றளவிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. வீட்டுப் பெண்மணிகள் நீங்கலாக, பணிபுரியும் அனைவரும் அதற்கான பங்களிப்பினை தரவேண்டும். இதன் மூலம், வயது முதிர்ந்தோர் ஓய்வூதியம், கைம்பெண்கள் பயன்பெரும் வண்ணம் உதவித் திட்டங்கள், வேலையற்றோருக்கு பிழைப்புத் திட்டங்கள், இரு குழந்தைகளுக்கு மேலுள்ள குடும்பத்திற்கு படிகள், பள்ளிக் குழந்தைகளுக்கு பால், கர்ப்பிணி தாய்மார்களுக்கு பால் மற்றும் விசேஷ உணவு, இலவசதிமருத்துவ சேவை, இலவசதிமேல்நிலைக் கல்வி மற்றும் தாராளமான கல்வி ஊக்கத்தொகை ஆகியன செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இம்மாபெரும் திட்டம், பலமுனை வரிவிதிப்புகளாலும், மக்களின் சுயகட்டுப்பாட்டு ஒழுக்கத்தினாலும் இங்கிலாந்து நாட்டில் சாத்தியமானது. இதில் வியப்பு தரும் செய்தி யாதெனில், இத்தனை கடுமையான வரிவிதிப்புகளுக்கு பின்னரும், நாட்டின் உற்பத்தி வளர்ச்சி பெற்றது தான்! அந்நாட்டில் அதிக அளவு பொருளாதார தன்நிறைவு காணப்படுகிறது.

ஐக்கிய அமெரிக்க குடியரசு, வலிமை பெற்ற தனிமனிதத்துவ சித்தாந்தங்களை தன் அரசியல் அமைப்பில் வலியுறுத்துகிறது. எனவே, ‘‘மக்கள் நலன்’’ என்பது பெரும்பான்மையோருக்கு ஏற்புடைய கருத்தாக இருப்பதில்லை. அவர்கள் மனிதன் முழுமையாக தன்னையே சார்ந்திருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றனர். எனினும், ‘‘மக்கள் நல அரசின்’’ திட்டங்கள் பெருமளவு அந்நாட்டில் காணப்படுகின்றன. விரிவான சமூக பாதுகாப்பு திட்டங்கள், பொதுப்பணிகள், சிறந்த சாலைகள், வேளாண் உற்பத்திகளுக்கு மானியம், இலவச கல்லூரிகல்வி, உயர் கல்விக்கு நடுவண் அரசின் நிதி உதவி ஆகியன அவற்றுள் அடங்கும். இதற்கு உதாரணமாக டென்னஸி பள்ளத்தாக்கு ஆணையத்தின் பணிகளை சொல்லலாம்.

ஸ்வீடன், நார்வே, டென்மார்க் போன்ற நாடுகளில், அதிக வரிவிதிப்பின் வாயிலாக விரிவான அளவில் மக்கள் நலத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. ஐரோப்பிய நாட்டின் ஒரு சில நாடுகளில் உயர்ந்த மற்றும் குறைந்த வருவாய்களின் வித்தியாசம் பத்துமடங்கிற்கு குறைவாகவே உள்ளது.

சோசலிஸ அரசுகளும் மக்கள் நல அரசுகள் தான். ஆனால் அங்கே நலத் திட்டங்கள் மேல்நிலையில் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன. தார்மீக மற்றும் ஆன்மீக நலன்களைக் காட்டிலும், பொருள் முதல் வாதமே நிலைநாட்டப்படுகிறது. ரஷ்யா, நவீன நாடுகளில் முதன் முதலில், திட்டமிட்ட பொருளாதாரத்தை கொண்டிருந்தது. வெற்றிகரமான ஐந்தாண்டு திட்டங்களினால், இரண்டாம் உலகபோரின் போது, நல்ல வருவாயினை ரஷ்யா ஈட்டியது.

இந்தியாவில் மக்கள் நல அரசு என்பது முழுமை பெற்றதாக இல்லை. அநேக திட்டங்களில், முழு வேலை வாய்ப்பு என்பது எட்டாக் கனவாகவே இன்னும் உள்ளது. இலவசதி மற்றும் கட்டாயக் கல்வி குறிப்பிடத்தகுந்த அளவில் முன்னேற்றம் அடைந்தாலும், இன்னும் குறிப்பிட்ட இலக்கினை அதில் நாம் அடையவில்லை. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு, பதினான்கு வயது வரையில் இலவசக் கட்டாய கல்வி அளிக்கப்படும் என்பதையும், குடிமக்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பு தரப்படும் என்பனவாகும்.

மக்கள் தொகையை கட்டுப்படுத்தவும் முழு வீச்சில் நடவடிக்கைகள் தொடரப்படவில்லை. முன்னேற்றப்பாதையில் இந்தியா செல்வதில் முட்டுக்கட்டையாக, அதீத பற்றாக்குறை, பிணிகள், அறியாமை, ஒழுங்கின்மை மற்றும் சோம்பல் ஆகியன திகழ்கின்றன என்றால் அது மிகையில்லை.

இந்தியாவில் வகுக்கப்பட்ட ஐந்தாண்டு திட்டங்கள் முழு அளவில் பயனை தந்தது எனக் கருதலாம். ஆறுகளின் குறுக்கே அணைகள் கட்டியது, பாசன வசதிகளை ஏற்படுத்தியது, இரும்பு மற்றும் எஃகு தொழிற்சாலைகள் நிர்மாணம் செய்தது, இரயில் எஞ்சின்கள் மற்றும் பெட்டிகள் தயாரிப்பு, தந்தி மற்றும் தொலை தொடர்பு உபகரணங்களின் உற்பத்தி போன்றவை அதில் அடங்கும். தனியார் துறை நிறுவனங்களை விட, பொதுத்துறை நிறுவனங்கள் நன்கு ஊக்குவிக்கப்பட்டன. ‘‘பொதுத்துறை நிறுவனங்கள் வளர்ச்சி பெற்று ஆதிக்கம் செலுத்த வேண்டும்’’ என்பது பண்டித நேருவின் அளப்பறிய ஆசையாகும்.

மக்கள் நல அரசு: வரையறையும், இயல்பும்

ஆபிரகாம் என்பவர் ‘‘அனைத்து குடிமக்களும் சரியான சந்தை மதிப்புக்குட்படாத விகிதத்தில், குடிமக்களும், சரியான ஊதியம் பெறத்தக்க வகையில் பொருளாதார சக்திகளை மாற்றி அல்லது திருத்தி அமைக்கும் திறனுடைய அரசையுடைய சமூகம்’’ என பொருளாதார ரீதியில் வரையறுக்கிறார்.

T.W. கென்ட், ‘‘குடிமக்களுக்கு பலதரப்பட்ட சமூக சேவை செய்கிற அரசு’’ என மக்கள் நல அரசை வர்ணிக்கிறார். மேலும் ஒரு குடிமகன், தன்னுடைய சாதாரண வருவாயினை இழக்கும் பட்சத்தில் அவனுக்கு உரிய பாதுகாப்பு தருவது, மக்கள் நல அரசின் அடிப்படை நோக்கம் எனவும் அவர் கூறுகிறார்.

ஹாப்மேன் என்பவர், மக்கள் நல அரசை, கம்யூனிசத்திற்கும் தனிமனித தத்துவத்திற்கிடையே ஏற்படுத்தப்பட்ட மத்தியஸ்த அமைப்பாக கருதுகிறார். தனியார்த்துறைக்கு மானியம் வழங்கும் அதே சமயம், மனித சமூகத் ற்கு குறையத பட்ச உதவிகளை செய்வது மக்கள் நல அரசு தருகின்ற உத்திரவாதம் எனவும் குறிப்பிடுகிறார். அனைத்து தரப்பு மக்களுக்கும் மக்கள் நல அரசு உதவிகளை செய்கிறது.

‘மக்கள் நல அரசு’ என்கிற சிந்தனை, அரசியல் கோட்பாட்டிற்கு புதிது அல்ல. இது குறித்த சிந்தனை, அரசு என்ற அமைப்பின் நோக்கம் மற்றும் செயல்பாடுகளுக்கு, புதிய பரிமாணத்தை அளித்துள்ளது எனலாம். மக்களுடைய நலனை பேணுவதே அரசின் தலையாய கடமை என பிளாட்டோ மற்றும் அரிஸ்டாட்டில் போன்ற மேற்கத்திய அரசியல் தத்துவஞானியர்கள் கருதியுள்ளனர். இதையே பண்டைய இந்திய அரசியல் சிந்தனையாளர்களும் கூறினர். அரசின் கடமை மக்கள் நலனை காப்பதே என்கிற இவர்களது சிந்தனை பெருமளவு நடைமுறைக்கு ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பின்பகுதியின் தான் மக்கள் நல அரசின் முக்கியத்துவம் நன்கு உணரப்பட்டது. தொழிற்புரட்சியின் விளைவாக அநேக பிரச்சினைகள் எழுந்தன. பணியாளர்களுக்கு மோசமான பணிச் சூழ்நிலைகள், அதீத செல்வம் ஓரிடத்தில் குவிந்த நிலை, நகரங்கள் மற்றும் குடிசைப் பகுதிகளின் அதிகரிப்பு, தொற்றுநோய்களின் பரவல்கள், வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு, கூடுதலான விலைவாசி முதலியன அத்தகைய பிரச்சினைகளில் ஒரு சிலவாகும்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாகவும் சில எதிர்மறை விளைவுகள் மனித சமுதாயத்திற்கு ஏற்பட்டன. இதனால் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இரண்டாம் பகுதியில் பெருமளவு மக்கள் நலன் காக்க ஒழுங்குபடுத்தும் சட்டங்கள் பெருமளவு இயற்றப்பட்டன. தொழிற்சாலை சட்டம் பிறப்பிக்கப்பட்டதை மக்கள் நல அரசு பிறந்த காலமாக கருதப்படுகிறது.

பொது நல அரசின் விளக்கம்

1. அதிக அளவில் சமூக சேவைகளும் பாதுகாப்பையும் அளிப்பதே மக்கள் நல அரசாகும் என்கிறார் T.W. கென்ட்.

2. ‘‘பற்றாக்குறை, பிணிகள், அறியாமை, ஒழுங்கின்மை, சோம்பல் ஆகிய மக்களின் ஐந்து எதிரிகளுடன் போரிட்டு, அழிப்பது மக்கள் நல அரசின் நோக்கம்’’ என்கிறார் பண்டித நேரு.

3. குறைந்த பட்ச வாழ்க்கைத்தரமும், வாய்ப்பும் ஒவ்வொரு குடிமகனுக்கும் உத்தரவாதம் அளிப்பது மக்கள்நல அரசாகும் என்கிறார் ஜி.டி.எச்.கோல்.

4. வேலைவாய்ப்பு, வருவாய், கல்வி, மருத்துவ உதவி, சமூக பாதுகாப்பு மற்றும் அனைத்து குடிமக்களுக்கும் வசிக்க வீடு என்பதை வழங்கக்கூடிய அரசாங்கத்தை கொண்ட அமைப்பு மக்கள் நல அரசாகும். - அமர்த்தியா குமார் சென்.

மக்கள் நல அரசின் தன்மைகள்

1. சமுதாயத்தில் தனிமனிதனுடைய மதிப்பினையும் தகுதியினையும் வலியுறுத்தி, அவன் மதிக்கத்தக்க வாழ்க்கை நடத்த உதவுகிறது. அனைவரையும் சமமாக பாவிக்கிறது.

2. முன்னேற்ற பணிகளை மேற்கொள்கிறது. நிலச்சீர்திருத்தம், வேளாண்மையில் வளர்ச்சி, விலைகளின் கட்டுப்பாடு, நியாய விலை, அத்தியாவசிய உணவுப் பொருள் அங்காடி சுகாதாராம், கல்வி, பொதுநல வாழ்வு மற்றும் பொருளாதார நிலைகளை உயர்த்துவது போன்ற முன்னேற்ற பணிகளை மக்கள் நல அரசு மேற்கொள்கிறது.

3. பரந்த அளவில் சமூக சேவைகளை மேற்கொள்கிறது. குடிமக்கள் நல்லமுறையில் வாழ, வேண்டிய சமூக சேவைகளை மக்கள் நல அரசு மேற்கொள்கிறது. தீண்டாமை ஒழிப்பு, வரதட்சணை, குழந்தை திருமணம், உடன் கட்டை ஏறுதல் போன்ற சமூக அவலங்களை ஒழித்து விட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. மக்கள் பயன் பெற பள்ளிகள், மருத்துவமனைகள் போன்றவற்றை அமைக்கிறது. அத்துடன் வேலை இல்லா திண்டாட்டத்திற்கான நிவாரணம், பேறு கால சலுகைகள், முதியோர் பராமரிப்பு போன்ற சமூக சேவைகளும் மக்கள் நல அரசால் செய்யப்படுகின்றன.

மக்கள் நல அரசின் செயல்பாடுகள்

மக்கள் நல அரசின் பல்வேறு செயல்பாடுகளை மூன்று இனங்களாக பிரிக்கலாம்.

1. ஒழுங்குமுறைப்படுத்தும் பணிகள்

2. பாதுகாப்பு பணிகள்

3. நலப் பணிகள்.

1. ஒழுங்குமுறைப்படுத்தும் பணிகள்

சட்ட ஒழுங்கு பராமரிப்பு, சமாதானத்தை நிலைநாட்டல், சமூக விரோதிகள் மற்றும் சமூக விரோத நடவடிக்கைகளை ஒடுக்குதல், வகுப்பு வாத கலவரங்களை அடக்குதல், தொழிலாளர்கள் சுரண்டப்படாமல் தடுத்தல் போன்றவை ஒழுங்குமுறைப்படுத்தும் பணிகளில் அடங்கும்.

2. பாதுகாப்பு பணிகள்

உள்நாட்டு சட்டம் ஒழுங்கு பராமரிப்பு, பிராந்திய ஒற்றுமையை காத்தல், அடிப்படை நிறுவனங்களில் மேலாண்மை, விரிவுப்படுத்தப்பட்ட தொலை தொடர்பு மற்றும் தரைவழி போக்குவரத்து, ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட வணிக நடவடிக்கைகள், திருட்டு மற்றும் இதர குற்றங்களின் தடுப்பு, அயல்நாட்டு நல்லுறவு, நீதிபரிபாலனம் மற்றும் நாட்டின் மாட்சிமையையும் இறையாண்மையையும் பேணுதல் போன்றவை பாதுகாப்பு பணிகளாக கருதப்படுகிறது.

3. நலப்பணிகள்

மலேரியா, காலரா போன்ற கொள்ளை நோய்களை ஒழித்தல், கல்வி நிறுவனங்கள் மூலம் கல்லாமையை போக்குதல், தேசிய வருமானத்தை சமச்சீராய் பங்கிடல், தகுதி உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பளித்தல், சிறைத்துறை சீர்திருத்தம், நிலசீர்த்திருத்தம், சிறு தொழில்கள் வளர்ச்சி, சமூக வளர்ச்சி திட்டங்கள், சமூக அவலங்களை அடியோடு அழித்தல் போன்றவை நலப்பணிகள் என கருதப்படுகிறது. சுருங்கக்கூறின், மக்கள் நல அரசு, மக்களுடைய அத்தியாவசிய மற்றும் அறிவு சார்ந்த தேவைகளைப் பூர்த்தி செய்கிறது.

மக்கள் நல அரசின் குறைபாடுகள்

.1. அதிக செலவு பிடிக்கும் அமைப்பு

பல்வகையிலான சமூக சேவைத் திட்டங்களுக்கு அதிக நிதி செலவாகும். இதனால் ஏழை நாடுகளுக்கு இத்தகைய அரசமைப்பு எட்டாக் கனியாகவே திகழ்கிறது.

2. தனிமனித முயற்சி மற்றும் சுதந்திரத்தை ஒடுக்கி விடுகிறது.

மனிதனின் தனிமனித சுதந்திரத்தையும், தன்னைத்தானே சார்ந்திருத்தலையும் மக்கள் நல அரசு அனுமதிப்பதில்லை. மனிதனின் நெறிசார்ந்த வளர்ச்சியை, முழு ஆற்றலையும் இவ்வகை அரசில் பேண இயலாது. அனைத்திற்கும் மனிதர்கள் அரசை சார்ந்து வாழ வேண்டிய பழக்கத்திற்கு ஆளாவதால், மக்கள் தங்களைப் பற்றிய ஒரு தாழ்வு மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளும் வாய்ப்புள்ளது.

3. அதிகாரவர்க்கத்தினருக்கு தேவையற்ற முக்கியத்துவம்

அரசின் கொள்கைகளை உருவாக்குவதிலும், அவற்றை நடைமுறைப்படுத்துவதிலும் அதிகார வர்க்கத்தினருக்கு அதிக பங்கிருப்பதால், அவர்களுக்கு அதீத முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. இதன் காரணமாக, பல்வகையில் நாட்டின் முன்னேற்றம் பாதிப்படைவதாக மார்க்ஸ் முதலான அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

4. திறனற்ற நிர்வாகத்தினை தோற்றுவிக்கும்

மிக அதிகமான பணிகளை அரசே ஏற்று செய்வதால், திறனற்ற நிர்வாகம் தோற்றுவிக்க வாய்ப்புள்ளது. மனித வளங்கள் மற்றும் இயற்கை வளங்களின் தவறான மேலாண்மைக்கும் அது வழிவகுக்கும்.

5. தன்னார்வ தொண்டு நிறுவனங்களை மந்தமாக்கிவிடும்

அரசு சாரா தன்னார்வத் தொண்டு நிறுவனங்களையும் அரசு ஒழுங்குமுறைப்படுத்துவதால், அத்தகைய நிறுவனங்கள் சுணக்க நிலைக்கு தள்ளப்படுகின்ற அபாயம் எழுகிறது.

மக்கள் நல அரசின் முக்கியத்துவம்

மக்கள் நல அரசின் மீது கூறப்படுகின்ற விமர்சனங்கள் சரியானவை என்று கருத இயலாது. அத்தகைய அரசின் மீது குறைபாடுகள் இருப்பின், அக்குறைபாடுகளைக் களைந்து அதனை செம்மைப்படுத்த முயற்சிக்க வேண்டுமே தவிர, அதனை அவ்வாறே விட்டுவிட முடியாது.

சீரிய நோக்கங்கள் மற்றும் குறிக்கோள்களை ஊக்குவித்தல், அசாதாரண நிர்வாக தாமதங்களை களைதல், நலத்திட்டங்களை பருவ இடைவெளியில் சீராய்வு செய்தல், ஆதிக்கம் செலுத்தும் நபர்களை கண்டறிந்து அவர்களை நீக்குதல், தன்னார்வ அமைப்புகளை ஊக்குவித்தல் போன்ற நடவடிக்கைளால் மக்கள் நல அரசை செம்மைப்படுத்த இயலும்.

மக்கள் நல அரசை நிறுவுவதில் உள்ள சிக்கல்கள்

செம்மைப்படுத்தப்பட்ட மக்கள் நல அரசு என்பது ஏட்டளவில் அனைவரையும் கவர்ந்தாலும், நிலவுகின்ற சமூக, அரசியல் மற்றும் பொருளாதார பிரச்சினைகளால், ஏட்டளவில் உள்ள சித்தாந்தங்களை நடைமுறைக்கு கொண்டு வருவது மிக கடினமானதாக கருதப்படுகிறது. கீழ்க்கண்ட காரணிகள் அதற்கு காரணம் என்றும் கூறலாம்.

1. மக்கள் தொகைப் பெருக்கம்

அதீத மக்கள் தொகையினால், அனைத்து வகையிலும் வளங்கள் பற்றாக்குறையாகி விடுகிறது. நிர்வாகமும் சிக்கலுற்றதாகி விடுகிறது.

2. அதிகாரிகளின் ஆணவப் போக்கு

நலத்திட்டங்கள் நல்லமுறையில் வெற்றி பெற அவற்றை அமல் படுத்தும் அரசாங்க அதிகாரிகள் தங்களை முழுமையாக அதில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். அத்தகைய அர்ப்பணிப்பு அரிதாகி விடுகிறது. இதனால் தீட்டப்பட்ட திட்டங்கள், பயனற்றதாகி விடுகிறது.

3. பொருளாதாரச் சுமை

இந்தியா போன்ற வளரும் நாடுகளில், வளர்ச்சி மற்றும் திட்டப்பணிக்களுக்காக செலவிடப்படும் தொகை, நாட்டின் வருவாயை விட அதிகமாகி விட வாய்ப்புள்ளது. இதனால் அந்நிய நிறுவனங்களிடமிருந்து நிதி கடனாக பெறுதல் போன்ற பிரச்சனைகள் எழக்கூடும். இதன் காரணமாக அதீத நிதி நெருக்கடி ஏற்படவும் இடமுண்டு.

4. மக்களுடைய குறுகிய மனப்பான்மை

பரந்த சிந்தனையும், தெளிந்த நோக்கும், மக்களுடைய மனப்பாங்கில் மாற்றமும் மிக அவசியம். குறுகிய ஜாதி, மத கண்ணோட்டத்தில் மக்கள் தங்களுக்குள்ளாகவே வேற்றுமை பாராட்டக்கூடாது. தேச நலனை போற்றிப் பாதுகாக்க வேண்டும்.

5. சமூக அவலங்கள்

காலம் காலமாக, நமது சமூகத்தின் புரையோடிப் போய் உள்ள தீண்டாமைக் கொடுமை, கொத்தடிமை முறை, நிலச்சுவான்தார்களின் யதேச்சதிகாரம் முதலியன அரசாங்கத்தின் நலத் திட்டங்களை வெகுவாக பாதித்துள்ளது.

6. அறநெறிகளுக்கு முக்கியமின்மை

பொருள் சார்ந்த வாழ்க்கையே பிரதானம் என்று ஆகிவிட்ட நிலையில், மக்கள் அறநெறிகளுக்கு முக்கியத்துவம் தருவதில் தயக்கம் காட்டுகிறார்கள். கடமை உணர்வும், எடுத்துக் கொண்ட பணியில் முழு அர்ப்பணிப்பும் அரிதாகிக் கொண்டு வருகிறது. நாட்டின் நல திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்த, மக்களின் முழு ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும். நல்ல குடிமக்களால் மட்டுமே சிறந்த மக்கள் நல அரசை உருவாக்கிக் கொள்ள இயலும்.

தொடரும்...

Lr. C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com