மாக்கியவெல்லி அரசியல் சிந்தனைகள்-4: தேசத்தைக் கைப்பற்றும் போது ஜெயிப்பவர்கள் கவனிக்க வேண்டியதென்ன?

மாக்கியவெல்லி அரசியல் சிந்தனைகள்-4: தேசத்தைக் கைப்பற்றும் போது ஜெயிப்பவர்கள் கவனிக்க வேண்டியதென்ன?

அன்னியருடைய பலத்தினாலாவது அதிர்ஷ்டமத்தில் கிடைக்கப்பெறும் புதிய சமஸ்தானங்கள்
    

அதிர்ஷ்டத்தினால் அரசனாவது பெரிதல்ல. ஆனால், அதிகாரத்தை ஸ்தாபித்துக் கொள்வது தான் சிரமம். அவன் ஒரேயடியாய் உச்சிக்குத் தாவி விடுவதால் வழியில் தொந்தரவில்லை. மேலே சென்றவுடன் தான் தொல்லையெல்லாம் ஆரம்பிக்கிறது. பணத்தைக் கொடுத்து ராஜ்யத்தைப் பெற்றவர்களும். காரியார்த்தமாக அரசர்களாக்கப்பட்டவர்களும்  இவ்விதமானவர்களே. கிரீஸ் தேசத்திலும் ஐயோனியா (Ionia) ஹெல்லஸ்பான்ட் (Hellespont) நகரங்களிலும் டரயஸ் தன் பாதுகாப்புக்காகவும், புகழுக்காகவும் பலரை ராஜாக்களாக்கினான். பல சாமான்ய மனிதர்கள் பட்டாளங்களுக்கு லஞ்சம் கொடுத்துச் சக்கரவர்த்திகளானார்கள். இப்படிப்பட்டவர்கள் தங்களைக் கை தூக்கி விட்டவர்களுடைய நல்லுணர்ச்சியையும் அதிர்ஷ்டத்தையுமே நம்பிக் கொண்டிருக்க வேண்டும். அவை நிலையாக. அவர்களுக்குத் தங்கள் அந்தஸ்தைக் காப்பாற்றிக் கொள்ளத் தெரியாது, முடியவும் முடியாது. அபூர்வமான குணங்கள் பொருந்தியிருந்தாலன்றிச் சாமானிய  நிலையில் இருந்தவனுக்கு அதிகாரம் செய்யத் தெரிவது கஷ்டம். அவனுக்கு ஷிதமும் நம்பகமும் உடைய சைனியமும் (சேனைகள்) கிடையாது. அதுவுமின்றி அவசரத்தில் நிறுவப்பட்ட ராஜ்யங்களும், மற்ற அவசர காரியங்களைப் போலவே வேரூன்றியவையாய்க் கிளையுமாக இருக்கமாட்டர். அதிர்ஷ்ட தேவதை தயவுடன் அளித்ததை அரசன் வெகு திறமையாய்ப் பாதுகாத்துக் கொண்டாலன்றி முதற் புயலே அவனை வீழ்த்திவிடும். முதலில் தன் பதவியைப் பாதுகாத்துக் கொண்டு, மற்றவர்கள் அரச பதவி கிடைக்கு முன் போடும் அஸ்திவாரங்களைப் பிறகாவது போட வேண்டும். 
    

அரசனாவதற்கான இந்த இரண்டு சாதனங்கள், அதாவது சாமர்த்தியம், அதிர்ஷ்டம், இரண்டுக்கும் பிரான்ஸிஸ்கோ ஸ்போர்ஸாவுடையவும் ஸீஸர் போர்ஜியாவுடையவும் இரண்டு அமைப்புகளைக் கூறுகிறேன்.  பிரான்ஸிஸ்கோ சரியான சாதனங்களாலும், அரிய திறமையினாலும் சாமான்யனாயிருந்தவன் மிலன் நகரத்து டியூக் ஆனான். ஆயிரம் இன்னல்களுக்குள்ளாகிப் பற்றதைக் சிரமம் இன்றி ஸ்தாபித்துக் கொண்டான். இதற்கு மாறாக டியூக் வாலென்டின் என்றழைக்கப்படும் ஸீஸா போர்ஜியா, தன் தந்தையின் செல்வாக்கால் ஒர் ராஜ்யத்தைப் பெற்றான். அந்தச் செல்வாக்கு குறைந்தவுடன் பதவியைத் தோற்றான். தன் பதவியைக் காத்துக் கொள்வதற்குப் புத்திமான்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை எல்லாம் அவன் எடுத்துக் கொண்டும் பலன் பெறவில்லை. பிறருடைய பலத்தாலும் தயவாலும் பெற்ற நாட்டில் அதிகாரத்தை ஸ்திரமாக்குவதற்கு அறவாளிகள் என்ன செய்யக்கூடுமோ அவையனைத்தும் செய்தான்.  நான் முன் சொன்னபடி முதலில் அஸ்திவாரம் போடாதவன் பின்னிட்டாவது தன் சாமர்த்தியத்தைக் கொண்டு அவ்வாறு செய்யக்கூடும். அதனால் சிற்பிக்குத் தொந்தரவும் கட்டடத்துக்குச் சேதமும் வந்தாலும் அக்கறையில்லை. டியூக்கின் நடவடிக்கைகளை யோசித்தால் வருங்காலத்தில் தன்னைப் பலப்படுத்திக் கொள்ள அவன் போட்ட அஸ்திவாரம் எவ்வளவு வலுவானது என்பது தெரிகிறது.  டியூக்கின் செயல்களில் காணப்படும் நீதிகள் ஒரு புதிய அரசன் பின்பற்றுவதற்கு உரியவையாகும்.  அவனுக்கு ஜெயம் கிடைக்காததற்கு அவன் பொறுப்பாளியல்ல. அதிர்ஷ்ட தேவதையின் விபரீத விளையாட்டே காரணம்.

தன் மைந்தனைப் பெரிய பதவிக்குக் கொண்டு வர ஆசைப்பட்ட ஆறாவது அலெக்ஸாண்டர் (போப்) தற்போதைய கஷ்டங்களையும் எதிர்காலத்தில் நேரக்கூடிய சங்கடங்களையும் சமாளிக்க வேண்டியவனாயிருந்தான். முதலாவது, சர்ச்சுக்குச் சொந்தமில்லாத எந்த ராஜ்யத்தையும் அவனுக்குக் கொடுக்க வழியில்லாமலிருந்தது. சர்ச்சுக்குச் சொந்தமான நகரங்கள் எவற்றையும் கொடுப்பதற்கு மிலன் நகரத்து டியூக்கும் வெனிஷியர்களும் ஒப்பமாட்டர்களென்று தெரியும். ஏனெனில் ஏற்கனவே ஃபேன்ஸாவும் (Faenza), ரிமினியும் (Rimini) வெனிஷியர்களுடைய பாதுகாப்பிலிருந்தன. தனக்கு சேவை புரியக்கூடிய ராணுவங்கள் சர்ச்சின் பெருமைக்கு அஞ்சுகிறவர்களின் கைவசம் இருந்தன. ஆர்ஸினி (Orsini) கொலோனா (Colonna) பிரபுக்களிடமும் இன்னும் அவர்களுடைய மனிதர்களுடைய அதிகாரத்திலும் அவை இருந்தன. ராஜ்யத்தின் ஒரு பகுதியைப் பத்திரமாகப் பிடித்துக் கொள்வதற்கு மாகாணங்களில் குழப்பம் விளைவித்து அவற்றின் அமைதியைக் கலைக்க வேண்டியது அவசியமாயிற்று. இது எளிதாயிருந்தது. ஏனெனில் வேறு உத்தேசங்களால் தூண்டப்பட்டு வெனிஷியாட்களுடைய உதவி பெற்று அலெக்ஸாண்டருடைய சம்மதத்துடன் இத்தாலிக்குள் வந்தான். அவன் மிலனில் பிரவேசித்தவுடன் அலெக்ஸாண்டர் அவனிடமிருந்து ராணுவ உதவி பெற்று ரோமானாவைக் கைப்பற்றினான். லூயி அரசனுடைய பிராபல்யமும் இதற்கு ஒரளவு உதவியது. டியூக் இவ்விதமாக ரோமானாவை அடைந்து கொலானா கட்சியினரையும் தோற்கடித்தான். இவ்வாறு பெற்ற ராஜ்யத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்கும் அதற்கு மேற்கொண்டு பிரயத்தனங்களில் இறங்குவதற்கும் இரண்டு தடைகள் இருந்தன. ஒன்று, அவனுடைய படைகளுடைய நாணயத்தைப் பற்றிச் சந்தேகம். மற்றொன்று பிரான்ஸ் அரசனிடம் பயம்.  அதாவது தான் சகாயத்துக்காகப் பெற்ற ஆர்ஸினிப் பிரபுவின் படைகள் தன்னை மோசம் செய்து முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை போடுவது மட்டுமின்றி இருப்பதையும் பிடுங்கிக் கொள்வார்களோ என்றும், பிரான்ஸ் அரசனும் அம்மாதிரியே செய்து விடுவானோ என்றும் அஞ்சினான். ஆர்ஸினி விஷயத்தில் இதை நிதர்சனமாகக் கண்டான் ஃபேன்ஸாவைக் கைப்பற்றிய பின்னர் பொலோனாவைத் தாக்கியபோது படைகளுடைய பிற்போக்கைக் கவனித்தான்.  

பிரான்ஸ் மன்னனுடைய சூழ்ச்சிகளும் அப்படியே வெளியாயின. டீயூக் வாலென்டின் அர்பினோ சிற்றரசை (Dukedom of Urbino) கைக்கொண்ட  டஸ்கனி (Tuscany)மீது படையெடுத்தான். அப்போது பிரான்ஸ் மன்னன் டியூக்கை அம்முயற்சியைக் கைவிடும் படி செய்தான். டியூக் அது முதல் பிறருடைய அதிர்ஷ்டத்தையும் சேனா பலத்தையும் தனக்குத் துணையாகக் கொள்வதில்லை என்று தீர்மானித்தான்.  அவன் முதன்முதல் செய்த காரியம், ஆர்ஸினி, கொலோனா, இரு கட்சிகளையும் சேர்ந்த பெரிய மனிதர்களைக் கலைத்து,  பெருந்தனம், பதவி, முதலியவற்றை வழங்கி அவர்களைத் தன் வசப்படுத்திக் கொண்டான். சில மாதங்களுக்குள் அவர்களுக்குத் தங்கள் கட்சிகளிலிருந்து பற்றுதல் விட்டுப் போய் டியூக்கை முழு மனதுடன் ஆதரிக்கலாயினர். அதன்பின் ஆர்ஸினி வம்சத்தின் முக்கியஸ்தர்களை நசுக்குவதற்குச் சமயம் பார்த்துக் கொண்டிருந்தான். கொலோனாவின் வம்சத்தை இதற்கு முன்பே ஒடுக்கி விட்டிருந்தான். ஆர்ஸினியை ஒழிப்பதற்குச் சமயம் கிடைத்ததும் அதை நன்றாய்ப் பயன்படுத்திக் கொண்டான். இறுதியில் ஆர்ஸினி வம்சத்தார் சர்ச்சினுடனும், டியூக்கினுடனும் பெருமை பெருகுவது தங்களுடைய அழிவுக்கு மூலம் என்பதை உயர்ந்து பெருகினோவில் (Perugione) மாகியோன் (Magione) என்ற இடத்தில் ஒரு சபை (Diet) கூட்டனார்கள். அதிலிருந்து அர்பினோவில் கலகமும், ரோமானாவில் குழப்பமும் நேர்ந்து டியூக்குப் பெரிய ஆபத்தை உண்டாக்கின. அவற்றைப் பிரஞ்சுக்காரர்களுடைய சகாயத்தால் சமாளித்துக் கொண்டான். பழைய மதிப்பைத் திரும்பிப் பெற்றவுடன் பிரதன்ஸையும் இதர சக்திகளையும் நம்பாமல் தந்திரத்தை மேற்கொண்டான். அவனுடைய நோக்கம் ஒருவருக்கும் தெரியவில்லை என்பதால் ஆர்ஸினியார் அவனுடன் சமாதானம் செய்து கொண்டனர். ஸீனர் பாவோ (Signor paulo) அவர்களுடைய பிரதிநிதியாக டியூக்கிடம் சென்ற போது சிறிது சந்தேகம் கொண்டானாயினும் டியூக், பாலோவை மிகவும் கௌரவித்துக் பட்டாடைகள், பணம், குதிரைகள், முதலிய பரிசுகளை வழங்கி அவன் சந்தேகத்தைப் போக்கடித்தான். ஆர்ஸினியார் அதில் மயங்கிப்போய் ஸினிகாலியா (Sinigaglia) என்ற இடத்துக்கு வரும்படி தூண்டப்பட்டவர்களாய் டியூக்கின் கையில் வந்து சிக்கிக் கொண்டனர்.
    

இவ்விதமாகத் தலைவர்களை அடக்கி அவர்களை ஆதரிப்பவர்களை கைக்குள் போட்டுக்கொண்டு தன் பலத்துக்கு வெகு நல்ல அஸ்திவாரம் நாட்டிக் கொண்டான். ரோமனா முழுவதும், அர்பினோ சிற்றரசும் அவன் வசமிருந்ததுடன் குடிமக்களின் நல்லுறவும் அவனுக்குக்  கிடைத்தது.  அவர்கள் அவன் ஆட்சியில் நன்மைகளைக் காணலானார்கள்.
    

இவ்விஷயம் பிறர் பார்த்து அனுசரிக்கத்தக்கதாயிருப்பதால், இதையும் கூறியாக வேண்டும். டியூக் ரோமானாவைக் கைப்பற்றியபோது, அது நல்ல ஆளுகையைப் பெற்றிருக்கவில்லை. முன்னாலிருந்த பலவீனமாக ராஜாக்கள் ஜனங்களுடைய ஹிதத்தை (அன்பை) நாடாமல் அவர்களைக் கொடுமைப் படுத்தினார்கள்.  அவர்களைக் கொள்ளையடித்தார்களே தவிர அரசாளவில்லை. ஜனங்களுக்குள் ஒற்றுமைக்குப் பதிலாகப் பிளவுகள் அதிகரிப்பதற்கு அரசர்கள் காரணமாயிருந்தனர். ஆகையால் அம்மாகாணத்தில் கொள்ளை, அடிக்கடி, இன்னும் சகலவிதமான தீமைகளும் தலைவிரித்தாடின. நல்ல அரசாட்சியைப் பெற்றால் தான் மக்கள் அடங்கி அமைதியாயிருப்பார்கள் என்பதை டியூக் கண்டான். இதற்காக அவன் மெஸ்ஸா ரெமிரோடி ஆர்கோ (Messer Remirrode orco) என்பவனுக்குப் பூர்ண அதிகாரம் கொடுத்து நியமித்தான். அந்த அதிகாரி சாமர்த்தியமும் குரூரத்தன்மையும் கொண்டவன். கொஞ்ச நாட்களுக்குள்ளேயே  ராஜ்யத்தில் ஒழுங்கையும் பரவச் செய்து விட்டான். பிறகு டியூக் அவ்வளவு கடுமையான அதிகாரம் இனிமேல் அவசிய மில்லை என்று கண்டான். அதிகாரமும் அளவுக்கு மேல் போய்விட்டால் வெறுப்பைத்தருமென்று அறிந்து மாகாணத்தின் தலைநகரில் ஒரு நியாய ஸ்தலத்தை ஏற்படுத்தி அதற்கு ஒரு சிறந்த நீதிபதியை (president) நியமித்தான். ஒவ்வொரு நகரத்தில் இருந்தும் பிரதிநிதியாக நியாயவாதிகள் (Advocate) அந்த நியாய சபையிலிருந்தார்கள். முன்னால் செய்யப்பட்ட கொடுமைகளால்  ஜனங்கள்  மனதில் கொஞ்சம் துவேஷ உயர்ச்சியிருப்பதை அறிந்து, அதைப்போக்கி ஜனங்களை முற்றிலும் தன் வசப்படுத்திக் கொள்வதற்கு ஒரு யுக்தி செய்தான். இதுவரை ஏதாவது கொடுமைகள் நேர்ந்திருந்தால் அவை தன் உத்தரவின் மீது செய்யப்பட்டவை அல்ல, தன் அமைச்சருடைய குரூர புத்தியால் தான் என்று மக்களுக்கு காண்பிக்க எண்ணிச் சமயம் பார்த்து ரெமிரோடி ஆர்கோவை இரண்டு துண்டாக வெட்டி ரத்தம் தோய்ந்த கத்தியுடன்  ஸிஸிசோவில் நாற்சந்தியில் போடச் செய்தான். துன்மார்க்கத்தின் மூலம் கிடைத்த ராஜ்யம்

அரசனாவதற்கு அதிர்ஷ்டத்தையும் சாமர்த்தியத்தையும் தவிர இன்னும் இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒருவழி துஷ்டத்தனத்தினாலும், வஞ்சனையாலும் அரசானதால், இன்னொன்று தன் போன்ற நகரவாசிகளின் தயவால் அரசனாதல். ஸிராகள் நகரத்தினான அகாதக்ளிஸ் (Agathocles) சாமானியமானவர் மட்டுமல்ல, மிக ஹீனமான நிலையிலிருந்து ஸிராகஸ் மன்னனுடைய அந்தஸ்துக்கு வந்தவன். அவன் வாழ்க்கையில் ஒவ்வொரு நிலையிலும் அயோக்கியத்தனமே நிரைந்திருந்தது.

இருமுறை கார்த்திஜீயர்களால் முறியடிக்கப்பட்டுக் கடைசியில் அவர் நகரம் அவர்களால் முற்றுகையிடப்பட்ட போதும், தன் நகரத்தின் பாதுகாப்புக்காக ஒரு பாகம் சேனையை வைத்துவிட்டு, மிகுந்திருந்த படைகளுடன் ஆப்பிரிக்காவைத் தாக்கினான். கொஞ்ச காலத்திற்குள் கார்த்தஜினியர்களுடைய தாக்குதலின்று ஸிராகஸ் நகரத்தை விடுவித்துக் கார்த்தஜினியர்களைப் பணியவைத்தான். அவர்கள் ஸிஸிலியை அவனுக்கே விட்டுவிட்டு ஆப்பரிக்காவிலிருந்த தங்கள் உரிமைகளுடன் திருப்தியடைய வேண்டியவர்களானார்கள். அகதக்கிஸின் முன்னேற்றத்துக்கு அதிர்ஷ்டத்தைக் காரணமாகச் சொல்ல முடியாது. பட்டாளத்தில் பிறருடைய தயவின்றித் தானாகவே படிப்படியாக உயர்ந்து ஆயிரம் இன்னல்களையும் ஆபத்துக்களையும் தாண்டி ராஜ பதவிளை அடைந்தான். அப்பதவியைத் தனது தீரத்தால் பல ஆபத்துக்களுக்கு ஈடுகொடுத்துக் காத்துக்  கொண்டான்.  தன் சகோதர  பிரஜைகளைக் கொல்வது, சிநேகிதர்களுக்குத் துரோகம் செய்வது, விசுவாச காதகம் செய்வது, ஈவு இரக்கம், பக்தி முதலியவை இல்லாமலிருப்பது, இவற்றை உத்தம குணங்களென்று சொல்ல முடியாது. இந்த முறைகளால் ஒருவன் வலிமையைப் பெறலாமேயன்றிக் கீர்த்தியை அடைய முடியாது.  ஆபத்துக்களுக்குத் துணிந்து அவற்றைச் சமாளிப்பதும், தடங்கல்களை லட்சியம் செய்யாமல் காரியத்தை முடிப்பதுமான அவனுடைய தன்மைகளை ஆலோசித்தால், மிகப் பிரக்கியாதி வாய்ந்த ஒரு தளபதிக்கு அவன் எவ்விதத்திலும் குறைந்தவனல்ல. அவனுடைய மிருகத் தனமான குரூர குணமும், இரக்கமற்ற தன்மையும், அவன் புரிந்த எண்ணற்ற அட்டூழியங்களுந்தான் அவனைக் கீர்த்தியிற் சிறந்த பெரியோர்களுடன்  ஒப்பிட முடியாமல் செய்கின்றன. அவனுடைய வெற்றிக்கு அதிர்ஷ்டமோ,  ஒழுக்கமோ, காரணமென்று சொல்ல முடியாது. அவை ரண்டும் அவனுக்கில்லை. 
    

நம் காலத்தில் ஆறாவது அலெக்ஸாண்டர் போப் பதவி வகித்தபோது ஆலிவரோட்டோ டாபெர்மோ (oliverotto da ferma)  என்ற தந்தையற்ற சிறுவன் தன் தாய்மாமனான ஜியோவானி போக்லியானியிடம் (Giovanni Fogliani ) வளர்ந்து வந்தான் மாமன்  அவனை இளமையிலேயே பாலோ விடல்லியிடம் (Paola Vittelli) போர் தொழில் கற்பதற்கு விட்டான்.  அவனிடம் பயிற்சி பெற்றால் படையில் பெரிய பதவிக்கு வரக்கூடும் என்று கருதினான். பாலோ இறந்தபின் அவனுடைய சகோதரனான விடலெஸோவின் (vittellezzo) கீழ் போர்புரிந்த மிகக் குறுகிய காலத்துக்குள் மிகவும் புத்திசாலியும் சுறுசுறுப்புள்ளவனுமான ஆலிவரோட்டோ துருப்புக்களின் தலைவர்களில் ஒருவனானான். ஆனால் அன்னியரின் கீழ் வேலை செய்வது அடிமைத்தனமென்று எண்ணினான். தங்கள் நாட்டின் சுதந்திரத்தைத் துச்சமென்று மதித்து, அதை அடிமைப்படுத்த மனம் வந்த சிலருடைய உதவியாலும் விடலியின் ஆதரவாலும் பெர்மோவைக் கைப்பற்றத் தீர்மானித்தான். ஆகையால் அவன் தன் மாமனுக்கு ஒரு கடிதம் எழுதினான். ஆதில், தான் ஊரை விட்டு வந்து பல நாட்களாய் விட்டமையால் ஊருக்கு வந்து மாமனையும் பார்த்துவிட்டு முடிந்தவரையில் தன் நிலம், நீரையும் பார்க்க விரும்புவதாக எழுதியிருந்தான். கௌரவத்தைப் பெறுவதற்காகவே தான் இவ்வளவு காலம் உழைத்த படியால் நகரமாந்தர்களுக்குத் தன் பெருமையைக் காண்பிப்பதற்காகவும், தான் இத்தனை நாட்களை வீணாகக் கழிக்கவில்லை என்பதை அவர்கள் அறிவதற்காகவும் தன்னோடு நூறு குதிரை வீரர்களையும் சில சிநேகிதர்களையும் தன் பரிஜனங்களையும் அழைத்து வர அனுமதிக்க வேண்டும் என்றும், பெர்மோ நகரவாசிகள் தன்னை மரியாதையுடன் வரவேற்க தகுந்த ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தான். ஜியோவானி தன் மருமகனுக்கு மரியாதை செய்யத் தவறவிலலை. பெர்மோ நகரவாசிகளைக் கொண்டு கௌரவத்துடன் வரவேற்கச் செய்து அவனைத் தன் மாளிகைகளில் ஒன்றில் இருக்கச் செய்தான். தன் துர் எண்ணங்களை உருப்படுத்துவதற்காகக் கொஞ்சம் ஒய்வெடுத்துக் கொண்ட பிறகு, ஆலிவரோட்டோ தன் மாமனையும் பெர்மோவின் மற்ற முக்கியஸ்தர்களையும் ஒரு விருந்துக்கு அழைத்தான். விருந்துக்கப்புறம் வழக்கமான ஆட்டம் பாட்டங்களெல்லாம் முடிந்தபிறகு ஆலிவிரோட்டோ தந்திரமமாகச் சில முக்கிய விஷயங்களைக் குறித்துப் பேச்சை ஆரம்பித்தான். போப் அலெக்ஸாண்டர், அவன் மகன் ஸீஸர், அவர்களுடைய துணிகரமான செயல்கள்,  போன்றவற்றைச் சம்பாஷணையில் புகுத்தினான்.  ஜியோவானியும் மற்றவர்களும் பதில் கூறியவுடன் அவன் திடீரென்று எழுந்து இம்மாதிரி விஷயங்கள் தனிமையில் விவாதிக்கப்பட வேண்டியவை என்று சொல்லிவிட்டு ஒரு தனி அறைக்குச்  சென்றான். ஜியோவானியும் மற்ற நகரவாசிகளும் பின் தொடர்ந்தனர். அவர்கள் உள்ளே சென்று உட்கார்ந்தும் உட்காராததுமாய் மறைவிடங்களிலிருந்து  போர் வீரர்கள் பாய்ந்து வந்து அவர்கள் எல்லோரையும் கொன்று  தீர்த்தனர். இப்படுகொலைக்கு பிறகு ஆலிவரோட்டோ குதிரை மீது ஆரோகணித்து பட்டணத்து வீதிகளின் வழியே சென்று பிரதான மாஜிஸ்ட்ரேட்டை (நீதிவானை) அவனுடைய அரண்மனையிலேயே தாக்கினான். பிரதான மாஜிஸ்ட்ரேட்டும் மற்றவர்களும் நடுநடுங்கிப் போய் அவனிடம் அடங்கி ஒரு அரசாங்கத்தை அமைக்க ஒப்புக் கொண்டார்கள். அந்த அரசாங்கத்துக்கு ஆலிவரோட்டோ தன்னை ராஜாவாக நியமித்துக் கொண்டான். தன்னை எதிர்க்க கூடியவர்கள் எல்லோரும் இறந்தொழித்துவிட்டதால் ராணுவத்திலும் நாகரீக வாழ்விலும் புதிய முறைகளை ஏற்படுத்தித் தன்னைப் பலப்படுத்திக் கொண்டு, ஒரு வருட காலத்திற்குள் ராஜ்யத்தை நிலைக்கச் செய்து கொண்டதும் இன்றி வேற்றரசர்களுக்குப் பயங்கரமானவனாக மாறிவிட்டான்.  ஸீஸர் போர்ஜியாவிடம் மாத்திரம் அவன் ஏமாந்திராதிருந்தால் அகாதக்ளிசைப் போலவே அவனையும் எவரும் எளிதில் தொலைத்திருக்க முடியாது. ஸின்காலியாவில் ஆர்ஸினியையும் விடலியையும் ஸீஸர் போர்ஜியா சிறைப்பிடித்தபோது, இவன் செய்த படுகொலைக்கு மறுவருஷம் இவனும் அங்கே போய் அகப்பட்டுக் கொண்டு விட்டான்.  அங்கே அக்கிரமங்களுக்கும் சாதுர்யத்துக்கும் தன்னுடைய குருவான விடலெஸோவுடன் கொல்லப்பட்டான்.  
    

அகாதக்ளிஸ் போன்ற எல்லையற்ற வஞ்சகமும் குரூரத்தன்மையும் உள்ளவர்கள் நெடுங்காலம் தம் ராஜ்யங்களில்  பத்திரத்துடன் அதிகாரம் வகித்து அன்னியர் ஆக்கிரமிப்பைத் தடுத்துக் கொண்டிருப்பதும் அவர்களுக்கு விரோதமாகச் சதி செயல்கள் நடவாமலிருப்பதும் எவ்வாறு என்று சிலர் அதிசயப்படலாம். சாமாதான காலத்திலேயே கொடுங்கோல் மன்னர்கள் பாடு கஷ்டம். யுத்தக் காலங்களில் கேட்க வேண்டியதில்லை. இப்படிப்பட்டவர்கள் தப்பித்துக் கொள்வதற்கும், அழிந்து போவதற்கும் இவர்கள் குரூரச் செயல்களைச் செய்யும் விதந்தான் காரணம். நன்றாகச் செயல்படும் கொடுமைகள் (கொடுமைக்கு என்னும் சொல்லை உபயோகிப்பது அனுமதிக்காததனால்) ஒரு முறை தற்காப்பின் பொருட்டுச் செய்யப்பட்டுப் பிறகு தொடர்ந்து செய்யப்படாமல் அவை மக்களுக்கு சேஷமத்தைத் தரும் காரியங்களாக மாறவேண்டும். அதைத்தான் செவ்வையாகச் செய்யப்படும் கொடுமை எனக் கூறலாம். சிலருடைய கொடுஞ் செயல்கள் நாளாக நாளாக அதிகரித்துக் கொண்டே போகின்றன. அதைச் சரியாகச் செய்யப்படாத கொடுமை என்று கூற வேண்டும். முதலில் சொல்லப்பட்டவர்கள் அகாதக்ளிஸ் மாதிரி கடவுள் முன்னும் மனிதன் முன்னும் தன் நிலைமையைச் சீர்திருத்திக் கொள்ளலாம்.  மற்றவர்களுக்குக் கதிமோட்சம் கிடையாது.
    

ஆகையால் ஒரு தேசத்தைக் கைப்பற்றும் போது ஜெயிப்பவர்கள் கவனிக்க வேண்டியது எது என்றால், அவன் செய்ய விரும்பும் ஹிம்ஸைகளனைத்தையும் ஒரேயடியாக நிறைவேற்றிவிட வேண்டும். நாள்தோறும் கொடுமை புரிவதிலேயே ஈடுபடும்படி நேரக்கூடாது. பிறகு புதிய மாறுதல்கள் எதுவும் செய்யாமலே மக்களுக்கு நன்மைகளை வழங்கி அவர்களை உற்சாகப்படுத்தி வசப்படுத்திக் கொள்ள வேண்டும். மிருதுத் தன்மையினாலோ துர்மந்திரிககளின் பேச்சைக் கேட்டோ, இதற்கு மாறாக நடப்பவர்கள், எப்போதும் கத்தியும் கையுமாக நிற்க வேண்டியது தான். அவர்கள் தன் குடிகளின் ஒத்துழைப்பை எதிர்பார்க்க முடியாது. இதைவிடாமல் புதிது புதிதான ஹிம்சைகளை அனுபவிக்கும் ஜனங்கள் அரசனை நம்பமாட்டார்கள். ஆகையால் ஹிம்சைகளை ஒரேயடியாக இழைத்து விட வேண்டும். அவற்றின் கசப்பை அனுபவிக்கும் குறைவாக இருந்தால், அவற்றால் ஏற்படும் கோபமும் குறைவாக இருக்கும். நன்மைகளைச் சிறுகச் சிறுக வழங்கி அவற்றை ஜனங்கள் ருசித்து அனுபவிக்கும்படி செய்ய வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு அரசன் தன் குடிகளுடன் பழகும் மாதிரியில் அதிர்ஷ்ட வித்தியாசங்கள் குறுக்கிடும்படி விடலாகாது. ஏனெனில் சிரமமான காலம் வந்த போது அவசியமானால் கொடுமைப் புரிய வேண்டி வரும்.  அப்போது கொடுஞ் செயல்களைச் சரியான சமயத்தில் செய்யக்கூடாமல் போகும்.  நல்ல காரியங்கள் பலவந்தத்தின் மீது செய்யப்பட்டவையாக நினைக்கப்படும். ஆகையால் அவற்றாலும் பலன் கிட்டாது.  ஆகையால் எந்தச் சந்தர்ப்பத்திற்கும் ஏற்றதாயிருக்கும் முறையில் மக்களுடன் அரசன் பழக வேண்டும்.

தொடரும்...

C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com