மாக்கியவெல்லி அரசியல் சிந்தனைகள்-11: அரசர்கள் அமைக்கும் கோட்டைகளும், மற்றவையும் லாபகரமானவையா?

மாக்கியவெல்லி அரசியல் சிந்தனைகள்-11: அரசர்கள் அமைக்கும் கோட்டைகளும், மற்றவையும் லாபகரமானவையா?

தங்கள் ராஜ்யங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காகச் சில அரசர்கள் நகரவாசிகளை நிராயுதபாணிகளாக்கி விடுகின்றனர். சிலர் தங்கள் ஆட்சிக்கடங்கிய நாடுகளைப் பலபாகங்களாகப் பிரித்திருக்கிறார்கள். சிலர் தங்கள் ஆட்சியின் தொடக்கத்தில் சந்தேகிக்கக் கூடியவர்களாயிருந்தவர்களை வசப்படுத்த முயல்கிறார்கள். மற்றும் சிலர் தமக்குள் பகைமையை வளர்க்கிறார்கள். சிலர் கோட்டைகளைக் கட்டுகிறார்கள். மற்றவர்கள் கோட்டைகளை இடித்துக் தரைமட்டமாக்குகிறார்கள். இம்மாதிரியான பல முறைகளை உபயோகிப்பதற்கு ஏற்படும் காரணங்களை விவரமாய் அறிந்து கொள்ளாமல் தீர்மானமாக ஒன்றும் கூற வியலாதென்றாலும், கூடியமட்டும் பொதுவான முறையில் சொல்லுகிறேன்.


                           ஒரு புதிய அரசன் குடிகளை நிராயுதர்களாக்க மாட்டான்.  அதற்குப் பதிலாக் அவர்கள் ஆயுதமில்லாதவர்களாயிருந்தால், அவர்களுக்கு ஆயுதங்களைக் கொடுத்துத் தரிக்கச் செய்வான். ஏனெனில் அவர்கள் ஆயுதபாணிகளாயிருப்பது அரசனுக்குப் பலம்.  அவர்களுடைய ஆயுதபலம் அரசனுக்கே சொந்தம். இதன் மூலம் அரசனால் சந்தேகிக்கப்பட்டவர்கள் நம்பகமுள்ளவர்களாயும், ஏற்கனவே விசுவாசமுள்ளவர்கள் நிலை  மாறாமலும் இருக்கிறார்கள். இதுவரை வெறும் குடிகளாக மட்டுமிருந்தவர்கள், ராஜாவுடைய சொந்த மனிதர்களாகிவிடுகிறார்கள்.  எல்லோரையும் ஆயுதந்தரிக்கச் செய்வது இயலாது. சிலருக்கு மாத்திரம் அவ்வுரிமையை வழங்குவதால், மற்றவர்களுடன் பத்திரமாக விவகாரம் நடத்தலாம். அவ்வுரிமையைப் பெற்றவர்கள் தங்களை அரசன் மற்றவர்களைக் காட்டிலும் மதிப்புடன் நடத்தினதற்காக அவனிடம் கடமைப்பட்டிருப்பார்கள். இதரர் ஆயுதவுரிமை அளிக்கப்பட்டவர்களுக்கு ஆபத்துக்களும் கடமைகளும் அதிகமாகையால், கௌவரமும் அதிகம் கொடுக்கப்படுகிறது என்று நினைத்து அரசனை மன்னித்து விடுவார்கள். ஆனால் ஏற்கெனவே ஆயுதந் தரித்திருந்த ஜனங்களை நிராயுதர்களாக்கினாலோ, அவர்கள் கடுங்கோபம் கொள்கிறார்கள். அப்படிச் செய்வதால் அரசன் பயங்கொள்ளித்தனத்தினாலோ அல்லது அவநம்பிக்கை கொண்டோ,  ஜனங்களைச் சந்தேகிப்பதாகக் காட்டிக் கொள்கிறான். அவ்விரண்டு குணங்களும் அரசனிடம் குடிகளுக்குத் துவேஷமுண்டாவதற்குக் காரணமாகின்றன.  அரசனும் ஆயுதபலமின்றி இருக்க முடியாதாகையால், கூலி சைனியத்தை வைத்துக் கொள்ளும் படி நேருகிறது.  அதனுடைய சமாசாரந்தான் நமக்கு முன்னமே தெரிந்திருக்கிது. அது நல்லாதாயிருப்பதாக வைத்துக் கொண்டால் கூட பலம் மிகுந்த சத்ருக்களிடமிருந்து அரசனைப் பாதுகாக்க அதற்கு ஆள்பலம்  மிகுந்த சத்ருக்களிடமிருந்து  அரசனைப் பாதுகாக்க அதற்கு ஆள்பலம் போதாது.  ஆகவே புதிய நாட்டை ஆளும் புதிய அரசன் தன் குடிகளை ஆயுதமுள்ளவர்களாகவே இருக்கச் செய்ய வேண்டும்.  சரித்திரத்தில் இதற்கு எவ்வளவோ உதாரணங்களிருக்கின்றன.


         ஆனால் ஒரு அரசன் பழைய ராஜ்யத்துடன் ஒரு புதிய நாட்டைச் சேர்த்துக் கொண்டால்,  அந்த நாட்டை ஜெயிக்கும்போது,  தனக்கு உதவியவர்களுடைய ஆயுதங்களைத் தவிர மற்றவர்களுடையவற்றைப் பிடுங்கி விட வேண்டும். அரசனை ஆதரிப்பவர்களைக் கூடச் சமயோசிதம் போல் பலஹீனப்படுத்தி அவர்களுடைய ஆண்மையைக் குறைக்க வேண்டும்.  புதிய தேசத்திலிருக்கும் ஆயுத சக்தி முழுவதும் தன் பழைய ராஜ்யத்தில் தன்பாலிருக்கும் போர்வீரர்களுடைய கையில் இருக்கும்  படியாக ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும்.


    பிஸ்டோயாவில் கட்சி பேதங்களைத் தூண்டிவிடுவதும் பைஸாவில் கோட்டை கட்டுவதும் அவ்விடங்களில் அரசர்கள் தங்கள் ஆட்சிச் சுலபமாக நிலைபெறச் செய்வதற்கு அவசியமானவை என்று நம் முன்னோர்களும் இன்னும் அறிவிற் சிறந்த பெரியோர்களும் கூறுவது வழக்கம்.  இதற்காகச் சிலர் தம் வசமுள்ள நாடுகளில் பிரித்தாளும் தந்திரத்தை உபயோகித்தார்கள். அக்காலத்தில், இத்தாலியின் பல ராஜ்யங்கள் சமமான பலம் பொருந்தியிருக்கையில்,  இம்முறை நன்றாக உபயோகிக்கப் பட்டது.  ஆனால் அது இக்காலத்துக் கேற்ற நீதியல்ல, இம்மாதிரியாகச் சிருஷ்டிக்கப்பட்ட பிரிவுகள்  நன்மையைத் தருவதேயில்லை.  அதற்கு மாறாகச் சத்ரு வரும்போது. இம்மாதிரிக்கட்சி பேதங்களையுடைய நகரங்களை உடனே இழக்க நேரிடும். பலஹீனமான கட்சி எதிரியுடன் சேர்ந்து கொள்ளும். மற்றக் கட்சி நிலைநிற்காது.


    வெனிஷியர்கள் மேற்குறிப்பிட்ட உத்தேசங்களால் தூண்டப்பட்டுத் தானோ என்னவோ, தங்கள் ஆட்சியின் கீழிருந்த நாடுகளில் குவெல்ப் (Guelf) கட்சியினரையும் கிப்பலின் (Ghibbeline) பிரிவினரையும் கிளப்பிவிட்டுக் கொண்டிருந்தனர். இரத்தம் சிந்துவதற்கும் இடந்தரவில்லை என்றாலும், ஜனங்கள் தங்களுக்குள்ளேயே சண்டையிட்டுக் கொள்வதற்கு ஊக்கமளித்து வந்தார்கள். அவர்களுக்குள்ளேயே சச்சரவு செய்து கொண்டிருந்தால், தங்களுக்கெதிராகக்  கிளம்பமாட்டார்களென்று வெனிஷியர்கள் குடிகளுடைய வேற்றுமைகளுக்குத் தூபம் போட்டு வளர்த்துக் கொண்டு வந்தார்கள்.  இதனால் பலன் கிடைக்கவில்லை. வாய்வாவில் தோல்வியடைந்தவுடன், அக்குடி மக்களில் ஒரு பகுதியினர் துணிவடைந்து ராஜ்ய முழுவதையும் கைப்பற்றிக் கொண்டுவிட்டனர். மித்திரபேதம் செய்வது அரசனுடைய பலக்குறைவைக் காண்பிக்கிறது. ஏனெனில் பலமுள்ள நாடுகளில் இவவேற்றுமைகள் அனுமதிக்கப் படமாட்டா.  இவை சமாதான காலங்களுக்குத்தான் சரி. அப்போது இவ்வுபாயங்களினால் குடிகளை நிர்வகிப்பது எளிதாயிருக்கும். யுத்தம் நேர்ந்துவிட்டால் இக் கொள்கையின் பயனற்ற தன்மை உடனே விளங்கிவிடும்.


    கஷ்டங்களையும் எதிர்ப்பையும் ஜெயிப்பதால், அரசர்கள் சந்தேகமின்றிப் பெருமையடைகிறார்கள்.  பரம்பரை அரசனைவிடப் புதிய மன்னனுக்குக் கீர்த்தி அதிக அவசியமாக இருக்கிறதாகையால், அதிர்ஷ்ட தேவதை ஒரு புதிய அரசனைச் சிறப்புறச் செய்ய விரும்புங்கால், அவனுக்கு விரோதிகளை உண்டாக்கி,  அவனை யுத்தம் புரியும் படி கட்டாயப்படுத்துகிறது.  அவன் யுத்தத்தில் வெற்றிமாலை சூடிப்பகைவர்களால் கொண்டுவந்து  வைக்கப்பட்ட புகழேணியின் வழியே ஏறிச்சென்று கீர்த்தியின் சிகரத்தை அடைகிறான். ஆகையால் ஒரு அரசன் சமயம் வாய்த்தபோது துவேஷத்தைத் தூண்ட வேண்டும்.  அந்தக் துவேஷத்தை அடக்குவதால் அவனுடைய கியாதி பெருகும் என்று பலர் கருதுகிறார்கள்.

பாண்டால்போ பெட்ருசி


 அரசர்கள், சிறப்பாகப் புதியவர்கள் தங்கள் புதிதாக ராஜ்யத்தை ஜயித்த சமயத்தில் தங்களிடம் உண்மையுடன் நடந்துக் கொண்டவர் களைவிடத் தாங்கள் சந்தேகத்துடன் நோக்கியவர்களை அதிக விசுவாசமும் உபயோகமும் உள்ளவர்களாகக் காண்கிறார்கள். ஸீனாவின் (Scina) அரசனாகிய பாண்டால்போ பெட்ருசிளுடைய (Pandolfo Petrucci) சகாயத்தையே அதிகமாய் பெற்றுத் தான் முதலில் சந்தேகித்தவர்களுடைய சகாயத்தையே அதிகமாய்ப் பெற்றுத் தன் ராஜ்யத்தை ஆண்டுவந்தான்.  இதைப்பற்றி அதிகம் கூறினால்,  இடைச் செருகல் ஆகும். இதுமட்டும் கூறுவேன். புதிய அரசாங்கத்தின் ஆரம்பகாலத்தில் பதைவர்களாயிந்தவர்கள் தங்களுடைய நிலைமையைக் காப்பாற்றிக் கொள்வதற்கு ஆதரவும் வேண்டுகிறவர்களாயிருந்தால், அரசன் அவர்களை எளிதில் வசப்படுத்திக் கொள்ளலாம்.  தங்களைப் பற்றி அரசன் கொண்டிருக்கும் கெட்ட அபிப்பிராயத்தைத் தங்கள் செய்கைகள் மூலம் உழைத்தாக வேண்டும்.

 ஒருவிதப்பயமுமின்றிப் பத்திரமாக இருந்து அரசனுக்குச் சேவை செய்கிறவர்கள் அவனுடைய அக்கறைகளில் அசட்டையாக இருப்பார்கள். ஒரு புதிய நாட்டை அந்நாட்டினரின் ரகசிய உதவியினால் கைப்பற்றிய ஒரு புதிய அரசன், அந்நாட்டினர் எந்த நோக்கங்களைக் கொண்டு தனக்கு ஆதரவளித்தார்கள் என்பதை நன்றாக யோசிக்க வேண்டும் என்பதை இங்கே ஞாபகமூட்டுகிறேன். அரசன் பாலுள்ள இயற்கையான அன்பினாலன்றி ஏற்கனவே தங்களுடைய அரசாங்கத்தின் தன்மையைக் கண்டு அதிருப்தியுற்றுப் புதிய அரசனுக்கு உடந்தையாக இருந்தார்களென்றால்,  அவர்களுடைய நட்பைக் காத்துக் கொள்வது சிரமமாயிருக்கும். ஏனெனில், அவர்களைத் திருப்தி செய்வது முடியாத காரியம். இதன் காரணத்தைப் பழையனவும் புதியனவுமாகிய திருஷ்டாந்தங்களைக்கொண்டு பரீட்சித்துப் பார்ப்போமாமயின்,  பழைய நிலைமையில் திருப்தியுடனிருந்து முதலில் அரசனுடைய பகைவர்களாகளாயிருந்து அரசனுடைய சிநேகிதர்களாய் அவன் ராஜ்யத்தை ஜெயிப்பதற்குத் துணை புரிந்தவர்களுடைய நட்பைப் பாதுகாத்தலைவிட எவ்வளவோ எளிது என்பது விளங்கும். 


தங்கள் ராஜ்ய பாரத்தைப் பத்திரத்துடன் வகிக்கவும். சூழ்ச்சி செய்பவர்களை கட்டுக்குள் வைப்பதற்கும், திடீரென்று எதிரிகள் தாக்குதல் ஏற்பட்டால் பத்திரமான அடைக்கல ஸ்தலமாக உபயோகிப்பதற்கும், கோட்டைகள் கட்டுவது மன்னர்களுடைய வழக்கம், இது பழைய நாளைய வழக்கமாகையால், இதை ஒப்புக் கொள்ள வேண்டும். இருந்தாலும் நம் காலத்தில் மெஸ்ஸர் நிகோலோ  விடல்லி, ஸிட்டாடி காஸிலோ (Cittadi castello) வைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அங்கே இரண்டு கோட்டைகளை இடித்தான். ஸீஸர் போர்ஜியாவால்  நாட்டை விட்டு விரட்டப்பட்டிருந்த அர்பினோ சிற்றரசனான கிட் உபால்டோ (Guid Ubaldo) தன் சமஸ்தானத்தைத் திரும்பி வந்தடைந்தும். அம்மாகாணத்திலிருந்து கோட்டைகளையெல்லாம் இடித்துத் தகர்த்து விட்டான். அவையில்லாதிருநதால் பகைவர்கள்தன்னைத் தோற்கடிக்க முடியாதென்று நினைத்தான். பென்டிவோக்லிகளும் பொலேனாவுக்கும் வந்ததும் அப்படித்தான் செய்தார்கள். ஆகையால் கோட்டைகள் சந்தர்ப்பத்துக்குத் தக்கபடி உபயோகமுள்ளவையாயும் உபயோகமற்றவையாயும்; போகின்றன.  ஒரு விதத்தில் நன்மையாயிருந்தால், இன்னொரு விதத்தில் கெடுதியாக இருக்கின்றன. ஆகையால் இதை இவ்வாறு விவரிக்கலாம். 

அன்னியரைக் காட்டிலும் தம் சொந்தக் குடிகளையே கண்டு அஞ்சுபவர்களுக்குக் கோட்டைகள் அவசியம் வேண்டியவை.  தன் ஜனங்களைவிட அயலாரிடத்தில் அதிகம் பயப்படுகிறவர்களுக்குக் கோட்டைகள் கூடாது. பிரான்ஸிஸ்கோ ஸ்போர்ஸா கட்டிய மிலன் கோட்டை, அவனுடைய வம்சத்தினருக்கு எல்லாவற்றையும் வட அதிகத் தொந்தரவுகளைக் கொடுத்து வந்திருக்கிறது. இனியும் கொடுத்துக் கொண்டுதான் இருக்கும்.  ஆகையால் அரசனுக்கு மிகச் சிறந்த அரணாயிருப்பது மக்களின் நல்லுணர்ச்சிதான்.  மக்கள் பகைத்தனராயின் மற்ற கோட்டைகள் அரசனைக் காக்கும் வலிமை பெற்றவையல்ல. மக்கள் அரசனை எதிர்த்தராயின், அவர்களுக்குத் துணைபுரிய வரும் அயல் நாட்டார்களுக்குக் குறைவிராது.  நம்காலத்தில் கோட்டைகள் எந்த அரசனுக்கும் பிரயோஜனமாக இருக்கக் காணோம். போர்லி சீமாட்டிக்கு (Countess of Forli) மாத்திரம் கோட்டை பயனள்ளதாயிருந்தது. அவள் தன் கணவனான ஜிரோலாமோ பிரபு (Girolamo) இறந்தவுடன் பொதுஜன எழுச்சியின்றும் தப்பவேண்டி, மிலனிலிருந்து உதவி வரும் வரையில் கோட்டைக்குள் பத்திரமாயிருந்து,  சகாயம் கிடைத்ததும்,  மறுபடியும் ராஜ்யத்தைப் பிடித்துக் கொண்டாள்.  அந்த சமயம் குடிகளுக்கு அயல் நாட்டிலிருந்து துணை கிடைப்பதற்கு அனுகூலமாயில்லாமலிருந்தது. ஆனால் பிற்பாடு ஸீஸர் போர்ஜியா அவளை எதிர்த்தபோது,  கோட்டைகள் பிரயோஜனமற்றுப் போயின. மக்கள் அவளிடம் வெறுப்புக் கொண்டிருந்த படியால், எதிரியுடன் சேர்ந்துகொண்டு விட்டார்கள்.  அப்பொழுதும் அதற்கு முன்னும் அவளுக்குக் கோட்டைகளைவிடக் குடிகளின் நல்லெண்ணம் அதிகப் பாதுகாப்பை அளித்திருக்கும். ஆகையால் கோட்டைகள்  கட்டுவோர்,  கட்டாதிருப்போர், எல்லோரும் புகழப்பட வேண்டியவர்களென்றே கூறுவேன். ஆனால் கோட்டைகளை நம்பிக் குடிகளுடைய பகைமையை லட்சியம் செய்யாமலிருப்பவர்கள் குற்றங்கூறத் தக்கவர்கள்.

தொடரும்...

C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com