ஒரு நாட்டிற்கு விமானங்கள், விண்வெளி மீதான அதிகாரவரம்பு

ஒரு நாட்டிற்கு விமானங்கள், விண்வெளி மீதான அதிகாரவரம்பு

விமானங்கள் மீதான அதிகாரவரம்பு (Jurisdiction on Aircrafts)

    உலகில் விமானக் கடத்தல்கள் (Aircraft Hijacking) அதிகரித்ததன் விளைவாக  சர்வதேசச் சட்டத்தில் விமானங்கள் மீது நாடுகளுக்கு இருக்கும் அதிகாரவரம்பு தொடர்பான விதிகள் வளர்ச்சியடையத் தொடங்கின. குறிப்பாக விமானக் கடத்தல்களின் போது விமானங்கள் மீதான அதிகாரவரம்பு பற்றிய சர்வதேச மாநாடுகளில் பின்வருவன முக்கியமானவையாகும்.

1.    டோக்கியா மாநாடு(1963)
2.    ஹேக் மாநாடு(1970)
3.    மாண்ட்ரீல் மாநாடு(1971)

1. டோக்கியா மாநாடு,1963 (The Tokyo Convention)                                                                                        14 செப்டம்பர், 1963 அன்று டோக்கியோவில், சர்வதேச விமான போக்குவரத்தில் சிவில் விமானத்தில் நபர்களுக்கோ அல்லது சொத்துக்களுக்கோ பாதுகாப்பற்ற எந்தவிதமான செயல்களிலும் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இந்த மாநாடு நடைபெற்றது.

    பறந்து கொண்டிருக்கும் விமானங்கள் மீது எந்த நாட்டிற்கும் அதிகாரவரம்பு இல்லை என்ற நிலைமையை சாதகமாக்கிக் கொண்டு விமானக் கடத்தல் உள்ளிட்ட பிற குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் எளிதில் தப்பி விடக்கூடாது என்பது டோக்கியா மாநாட்டின் நோக்கங்களில் அதிகாரங்களை விமானத்தின் தலைவருக்கு வழங்குவதும் இம்மாநாட்டின் நோக்கமாக இருந்தது.
    இம்மாநாடு, விமானம் பதிவு செய்யப்பட்டிருக்கும் நாட்டிற்கே அவ்விமானத்தில் நடைபெற்ற குற்றச் செயல்களுக்கு நடவடிக்கை எடுக்கும் அதிகாரவரம்பு உண்டு என்று தீர்;மானித்தது. ஆனால், இராணுவம், சுங்கம் அல்லது காவல்துறைப் பணியில் இருக்கும் விமானங்களுக்கு இம்மாநாடு பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது. இம்மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்ட விதிகளுக்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில் இந்திய நாடாளுமன்றம் டோக்கியோ மாநாட்டுச் சட்டம், 1975-ஐ இயற்றியுள்ளது.

2. ஹேக் கடத்தல் ஒப்பந்தம் ,1970 (Hague Hijacking Convention) 
                                  டோக்கியோ மாநாட்டிற்குப் பிறகும் விமானக் கடத்தல்கள் அதிகரித்த வண்ணமே இருந்தால் டோக்கியோ மாநாட்டின் விளைவாக சர்வதேசக் குடிமை விமாப் போக்குவரத்து அமைப்பு (ICAO), விமானக் கடத்தலைத் தடுப்பதற்கும் தண்டிப்பதற்கும் போதுமான வகைமுறைகளுடன் கூடிய மாநாட்டு வரைவு விதிகளை உருவாக்கியது. அவ்வரைவு விதிகளை விவாதித்து ஏற்றுக் கொள்வதற்காக 1970 ஆம் ஆண்டு ஹேக் மாநாடு கூட்டப்பட்டது. ஹேக் மாநாடு பிரதானமாக விமானக் கடத்தல் பற்றியே விவாதித்தது.
                   இம்மாநாடு, விமானக் கடத்தல் என்றால் என்ன என்பதை வரையறுத்ததுடன், உறுப்பு நாடுகள் ஒவ்வொன்றும் விமானக் கடத்தலில் ஈடுபடுபவருக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என்பதைக் கட்டாயமாகவும் ஆக்கியது. அதனடிப்படையில் இந்தியாவிலும் விமானக் கடத்தல் தடுப்புச் சட்டம், 1982 (The Anti-Hijacking Act, 1982) இயற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

3. மாண்ட்ரீல் சிவில் விமானப் பாதுகாப்புக்கு எதிரான சட்டவிரோதச் காரியங்களை அடக்குவதற்கான மாநாடு, 1971 (The Montreal Convention for the Suppression of Unlawful Acts against the Safety of Civil Aviation)
                            ஹேக் மாநாடு நிறைவுற்று ஒன்பது மாதங்கள் கழித்து பயணிகள் விமானங்களின் பாதுகாப்புக்கு எதிரான சடட விரோத நடவடிக்கைகளை ஒடுக்குவதற்கான மாநாடு ஒன்றும் மான்ட்ரீல் முடிவடைந்தது. இம்மாநாடு விமானக் கடத்தலுடன் பயணிகள் விமானத்திற்கு எதிராக நடத்தப்படும் ஆயுதத் தாக்குதல், சேதப்படுத்துதல், பிற வன்முறைகள் போன்ற விமாக் குற்றங்கள் தொடர்பான வகைமுறைகளை வகுப்பதற்காகக் கூட்டப்பட்டது. இம்மாநாடு பறந்து கொண்டிருக்கும் விமானத்திற்கு மட்டுமல்லாது பறப்பதற்கு தயாராகிக் கொண்டிருக்கும் விமானத்திற்கும் பொருந்தக் கூடியதாகும்.
                                 உறுப்பு நாடுகள் ஒவ்வொன்றும் அதனதன் ஆள்நில எல்லைக்குள் அல்லது அந்நாட்டில் பதிவு செய்யப்பட்ட விமானத்தில் நடைபெற்ற விமானக் குற்றங்களின் மீதான அதிகாரவரம்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இம்மாநாடு கூறுகின்றது.

வான்வெளியைத் தவறாகப் பயன்படுத்துதல்(Abuse of Air Space)
    ஒவ்வொரு நாட்டிற்கும் அதன் ஆள்நில எல்லைக்கு மேலுள்ள வான்வெளியின் மீது முழு அதிகாரவரம்பு உள்ளது என்பதை முன்னரே கண்டோம். ஆனால், அதற்காக மற்ற நாடுகளுக்கு ஊறு விளைவிக்கும் வகையில் தன்நாட்டு வான்வெளியைத் தவறாகப் பயன்படுத்துவதற்கு எந்த நாட்டிற்கும் உரிமையில்லை. வான்வெளியைத் தவறாகப் பயன்படுத்தும் இரண்டு பிரச்சனைகள் சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெறுகின்றன. அவை: 

1. ரேடியோ அலை ஒலிபரப்பு (Radio Wave Communication)
ரேடியோ ஒலி பரப்பு தொடர்பாக பின்வரும் கோட்பாடுகள் சர்வதேச அளவில் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளன.

(a) ஒவ்வொரு நாடும், தீங்கு விளைவிக்கக் கூடிய ரேடியோ அலைகள் தன் நாட்டு வான்வெளியைக் கடந்து செல்வரைத் தடை செய்வதங்கான  உரிமைமையப் பெற்றுள்ளன.

(b) ஒவ்வொரு நாட்டிற்கும் தன் நாட்டு ஆள்நில எல்லையை பிற நாட்டுக்கு தீங்கு விளைவிக்கும் ரேடியோ அலைகளை ஒலி பரப்புவதற்குப் பயன்படுத்துவரைக்  தடுக்கும் கடமை உள்ளது.

2.காற்று மண்டலத்தில் கதிர் வீச்சு(Radiation in the Atmosphere)
                             ஒரு நாட்டின் எல்லைக்குள்  நடைபெறும் அணு வெடிப்புச் சோதனைகள், செயற்கை மழை வரவழைக்க ரசாயனங்களைப் பயன்படுத்துதல் போன்றவை காற்று மண்டலத்தில் கதிர்வீச்சுப் பாதிப்புகளை உண்டாக்குகின்றன.  இந்தக் கதிர்வீச்சுக்கள் அந்நாட்டின் எல்லைக்குள் மட்டும் நிற்பதில்லை.  அது மற்ற நாடுகளின் வான்வெளிக்கும் பரவுகின்றன.  ஆனால் சர்வதேச அளவில் இது குறித்து ஒருமித்த கருத்து இன்னமும் எட்டப்படவில்லை என்றே சொல்ல வேண்டும். ஒரு சாரார், அத்தயை சோதனைகள் அந்நாட்டின் பாதுகாப்பு நலன்களுக்கு அவசியம் தேவைப்படக் கூடியவை என்பதால் அவற்றை அனுமதிக்க வேண்டும் என்கின்றனர். மற்றொரு சாரார் அத்தகைய சோதனைகள் மற்ற நாடுகளின் வான்வெளிக்கு பாதிப்பை ஏற்படுத்துவதால் தடை செய்யப்பட வேண்டும் என்று வாதிடுகின்றனர்.

விண்வெளி குறித்த அதிகாரவரம்பு(Jurisdiction on Outer Space)
                                      விண்வெளியும் சர்வதேசச சட்டமும் (Outerspace and International Law) விமானம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு வான்வெளி குறித்த சர்வதேசச் சட்டம் வளர்ச்சியடையத் துவங்கியது. அதுபோல் வான்வெளியைத் தாண்டி விண்கலங்கள் அனுப்பத் தொடங்கிய பிறகு விண்வெளி குறித்த சர்வதேசச் சட்டமும் வளர்ச்சியடையத் துவங்கியது. 1957 ஆம் ஆண்டு சோவியத் யூனியன் அனுப்பிய ஸ்புட்னிக்-1 விண்கலமே மனிதன் விண்வெளியில் எடுத்து வைத்த முதல் அடி ஆகும். அதன்பிறகு அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ், இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் விண்வெளிக்கு விண்கலங்களையும் செயற்கைக் கோள்களையும் அனுப்பிக் கொண்டிருக்கின்றன. ஆனால், வேகமாக வளர்ந்து வரும் விண்வெளித் தொழில் நுட்பத்தின் வளர்ச்சிக்கேற்ப ஈடு கொடுத்து விண்வெளி குறித்த சர்வதேசச் சட்டம் வளரவில்லை என்பதே உண்மையாகும்.

                              விண்வெளிப் பயணம் தொடர்பான நவீனதொழில் நுட்பத்தின் வளர்ச்சி சர்வதேசச் சட்டத்தில் சில சிக்கல்களைத் தோற்றுவித்துள்ளது. ஒவ்வொரு நாட்டிற்கும் அதன் மேலே இருக்கும் வான்பரப்பில் வரம்பற்ற உயரத்திற்கும் இறையாண்மை அதிகாரம் உண்டு என்ற கோட்பாடு காலாவதியான பழைய விதியாக மாறிவிட்டது. இந்தக் காலங்களில் தன் நாட்டிற்கு மேல் உள்ள வான்பரப்பின் மேல் கண்ணுக்கு எட்டாத உயரத்தில் வேற்று நாட்டின் விண்கலங்கள் பறந்து செல்வதை எந்தவொரு நாடும் தடை செய்யவில்லை அல்லது தடைசெய்ய முடியவில்லை. விண்வெளிக்கு நேர்கீழே அமைந்துள்ள நாடுகளுக்கு அதன் மேலுள்ள விண்வெளியின் மீது இருக்கும் சுதந்திரங்கள் வழக்காற்று விதியாக நிலைபெற்று விட்டன என்று ஒரு பக்கம் வாதிடப்பட்டாலும், ஒரு நாடு தனக்கு மேலுள்ள விண்வெளியின் மீது இறையாண்மை அதிகாரத்தை நிலைநிறுத்துவது நடைமுறை சாத்தியமற்ற ஒன்றாகவும் உள்ளது. ஏனெனில் பூமியும் அது அமைத்திருக்கும் சூரிய மண்டலமும் அது அமைந்திருக்கும் அண்ட வெளியும் எப்போதும் சுற்றிக் கொண்ட இருப்பதால் எந்தவொரு நாட்டிற்கு மேல் உள்ள விண்வெளியும் நிரந்தரமாக ஒரே இடத்தில் இருப்பதில்லை.

விண்வெளியும் இறையாண்மையும்( Outer space and Sovereignty)
                           விண்வெளியின் மீது நாடுகளுக்கு இருக்கும் இறையாண்மை அதிகாரம் குறித்த வழக்காற்றுச் சட்டம் எதுவும் தெளிவாக உருவாகவில்லை என்பது உண்மையே. இருப்பினும் ஐக்கிய நாடுகள் சபை போன்ற சர்வதேச அமைப்பிகளின் இடைவிடாத முயற்சிகளின் பலனாக பின்வரும் பொதுவான கோட்பாடுகள், உலக நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அவை:
1. விண்வெளிக்கு நேர்கீழே உள்ள நாட்டிற்கு வரம்பற்ற உயரம் வரை இறையாண்மை அதிகாரம் உண்டு எனும் கோட்பாடு நடைமுறை சாத்திமற்றது. ஏனெனில் பூமியின் சுழற்சி காரணமாக அத்தகைய செங்குத்தான பகுதி நிரந்தரமாக அந்நாட்டின் மீது இருப்பதில்லை. இருப்பினும் அந்நாட்டின் பாதுகாப்பு நலன் கருதி ஒரு குறிப்பிட்ட உயரம் வரை அந்நாட்டிற்கும் இறையாண்மை இருக்கு வேண்டும் என்று பொதுவாக ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் எவ்வளவு உயரம் வரை இருக்க வேண்டும் என்பதில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை.
2. ஒவ்வொரு நாட்டின் மேலுள்ள வான்வெளியின் இந்த மேல் எல்லைக்கு வெளியே உள்ள விண்வெளியானது சர்வதேசச் சட்டத்திற்கும் ஐ.நா வின் பிரகடன்ங்களுக்கும் உட்பட்டதாகும். அத்தகைய விண்வெளி எந்தவொரு நாட்டிற்கும் தனிப்பட்ட உரிமையுடையது அல்ல. அது சர்வதேசச் சட்டத்திற்கும் உட்பட்டு அனைத்து நாடுகளும் சுதந்திரமாப் பயன்படுத்திக் கொள்ளக் கூடியதாகும்.
3. பூமியின் சுற்று வட்டத்தில் அல்லது அதற்கு அப்பால் செயற்கைக் கோள் அல்லது விண் ஏவுபொருட்களை அனுப்பும் ஒவ்வொரு நாடும் அது நிலைநிறுத்தப்படும் சுற்று வட்டப் பாதை, அதன் எடை, ரேடியோ அலைவரிசைகள் ஆகிய விபரங்களை உலக நாடுகளுக்குத் தெரிவிக்க வேண்டியது அவற்றின் கடமையாகும்.
4. பூமியின் சுற்று வட்டத்தில் அல்லது அப்பால் செயற்கைக் கோள் அல்லது விண் ஏவுபொருட்களை அனுப்பும் ஒவ்வொரு நாட்டிற்கும் மற்ற நாடுகளுக்கு தீங்கு ஏற்படாமல் பார்த்துக் கொள்வது, காற்று மண்டலத்தின் மேல் அடுக்கு அல்லது விண்வெளியை மாசுபடுத்தாமல் இருப்பது அல்லது அவற்றின் தடையற்ற பயன்பாடு அல்லது அறிவியல் ஆராய்ச்சிக்கு ஊறு விளைவிக்காமல் இருப்பதற்கான கடமை உண்டு.
5. தொலைத் தொடர்பு செயற்கைக் கோள்கள் மூலம் கிடைக்கும் தொலைத் தொடர்பு வசதியானது உலகளவில் எவ்வித பாகுபாடும் இன்றி அனைத்து நாடுகளுக்கும் கிடைக்க வேண்டும்.
6. விண்வெளிக்கு அனுப்பப்படும் விண் ஏவுபொருட்கள் எதுவாயினும் அவை விண்வெளியின் எந்த இடத்தில் இருந்தாலும் அப்பொருளை அனுப்பிய நாட்டிற்கே அதன் மீது இறையாண்மை அதிகாரம் உண்டு. எனவே அப்பொருளால் ஏற்படும் சேதத்திற்கும் அந்நாடே பொறுப்பேற்க வேண்டும்.
7. அமைதி நோக்கங்களுக்காக விண்வெளியை ஆராய்வதற்காக அனுப்பப்படும் விண்பொருட்களுக்கு பாதை வசதி ஏற்படுத்தித் தருவதும், விண்கப்பல்கள் கட்டாயமாக தரையிறங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் போது அவை தரை இறங்க தன் நாட்டு எல்லைக்குள் அனுமதி தருவதும் உலக நாடுகள் ஒவ்வொன்றின் கடமையாகும். இவற்றில் பெரும்பாலான கோட்பாடுகள் ஐ.நா.சபையின் 1961 ஆம் ஆண்டு டிசம்பர் 20 ஆம் தேதிய தீர்மானத்தின் மூலம் உலக நாடுகள் மீது சுமத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

விண்வெளி குறித்த சர்வதேச உடன்படிக்கைகள்
                         விண்வெளி விஞ்ஞானத்தின் வளர்ச்சி வேகத்திற்குச் சர்வதேசச் சட்டத்தின் வளர்ச்சியால் ஈடுகொடுக்க முடியவில்லை என்பது உண்மையே. ஆயினும் பின்வரும் இரண்டு சர்வதேச உடன்படிக்கைகள் அந்த வகையில் முக்கியமான மைல்கற்களாகும் என்றால் மிகையில்லை.

1. 1963 ஆம் ஆண்டு அணு ஆயுத சோதனை தடை ஒப்பந்தம் (The Nuclear Waepon’s Test Ban Treaty, 1963)

இந்த ஒப்பந்தத்தின் படி, அதன் தரப்பு நாடுகள், காற்ற மண்டல எல்லைக்கு அப்பால், விண்வெளியை உள்ளடக்கிய பகுதியில் எந்தவொரு நாடும் அணு ஆயுத சோதனை நடத்தக் கூடாது என்று ஒப்புக் கொண்டுள்ளன.

2. 1967 ஆம் ஆண்டு விண்வெளி ஒப்பந்தம்(The Space Treaty, 1967)

நிலா மற்றும் பிற விண்பொருட்கள் உள்ளிட்ட விண்வெளியின் ஆராய்ச்சியிலும் பயன்பாட்டிலும் நாடுகளின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் கோட்பாடுகள் பற்றிய ஒப்பந்தம், 1967 எனும் விண்வெளி ஒப்பந்தம், 1967 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் நாள் ஒப்பமிடப்பட்டது 
இந்த ஒப்பந்தத்தில்,
(a) நிலா மற்றும் பிற விண்பொருட்கள் உள்ளிட்ட விண்வெளி எந்தவொரு நாட்டின் இறையாண்மை கோரிக்கை மூலமாகவோ பயன்பாடு அல்லது ஆக்கிரமிப்பு மூலமாகவோ வேறு ஏதேனும் வழிகள் மூலமாகவோ எந்தவொரு நாட்டின் தனிப்பட்ட உடைமைக்கும் உட்பட்டதல்ல.
(b) விண்வெளி ஆராய்ச்சிகள் அனைத்து நாடுகளின் நன்மைக்காகவும்  நலனுக்காகவுமே நடத்தப்பட வேண்டும்.
(c) எந்தவொரு நாடும் பூமியின் சுற்று வட்டப் பாதையில் அல்லது விண்வெளியில் பேரழிவு ஆயுதங்களை நிறுவக் கூடாது.
(d) விண்வெளியில் உள்ள நிலா மற்றும் பிற விண்பொருட்கள் யாவும் அமைதி நோக்கங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்று தரப்பு நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன.

தொடரும்...

Lr.C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com