அகதிக்கு ஒரு நாடு அளிக்கும் தங்குமிடமும் - பாதுகாப்பும்

அகதிக்கு ஒரு நாடு அளிக்கும் தங்குமிடமும் - பாதுகாப்பும்

புகலிடம்(Asylum)
        “Asylum” எனும் ஆங்கிலச் சொல் “asulon” என்ற கிரேக்கச் சொல்லின் அடிப்படையாக “asylia” எனும் லத்தின் சொல்லின் வழியாகப் பிறந்ததாகும். “asylia” என்றால் மீறக் கூடாத புனிதமான இடம் என்று பொருளாகும். எனவே புகலிடம் என்பது பிற நாடுகளால் மீற முடியாத வகையில் பாதுகாக்கப்பட்ட இடமாகும். புகலிடம் என்பது மிகப் பழங்காலத்திலிருந்தே நாடுகள் கடைபித்து வரும் பழக்கமாகும். போரில் தோற்ற மன்னர்கள், நட்பு நாட்டு மன்னர்களிடம் தஞ்சமடைதலும், பின்னர் அவர்கள் ஆதரவுடன் படைதிரட்டி மீண்டும் போரிட்டு தன் நாட்டை மீட்பதும் வரலாற்றில் அதிகம் காணப்படும் நிகழ்வாகும்.

வரையறையும் பொருள் விளக்கமும் 
    புகலிடம் என்பது எந்தவொரு சர்வதேச ஆவணங்களிலும் முழுமையாக வரையறுக்கப்படவில்லை. பொதுவாக புகலிடம் என்பது அயல்நாட்டில் இருந்து வரும் அரசியல் அகதி ஒருவருக்கு ஒரு நாடு அளிக்கும் தங்குமிடமும் பாதுகாப்பே புகலிடம் என ஸ்டார்க் வரையறுக்கின்றார். சர்வதேசச் சட்ட நிறுவனம் (Institute of International Law) புகலிடம் என்பதை “தன்னிடம் வந்து பாதுகாப்புகோரும் நபருக்கு, ஒரு நாடு தனது ஆள்நில எல்லையில் அல்லது அதன் அரசு அங்கங்கள் சிலவற்றின் கட்டப்பாட்டில் இருக்கும் சில இடங்களில் அளிக்கும் பாதுபாப்பே  புகலிடம்  என வரையறுக்கின்றது.


    மேற்கண்ட வரைறையின்படி, முதலாவதாக, பாதுகாப்புகோரும் நபர் என்பது புகலிடம் அளிக்கும் நாட்டின் குடிமகன் அல்லாத அயல்நாட்டுக் குடிமகனையே குறிக்கும். ஏனெனில் குடிமகன் என்ற முறையில் அவரது நாட்டுரிமையின் அடிப்படையில் அந்நாட்டின் பாதுகாப்பு அவருக்கு உறுதி செய்யப்பட்ட ஒன்று ஆகும். அத்தகைய பாதுகாப்பை அவர் கோரிப் பெற வேண்டுமென்ற அவசியமில்லை. எனவே புகலிடம் கோரும் நபர் என்பது அயல்நாட்டுக் குடிமகனையே குறிக்கும். இரண்டாவதாக, புகலிடம் கோருபவருக்கு அரசு அளிக்கும் “பாதுகாப்பு” என்பது அவருக்கு அவரது சொந்த நாட்டில் ஏதேனும் அச்சுறுத்தல் அல்லது அபாயம் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. மூன்றாவதாக, புகலிடம் அளிக்கப்படும் நில எல்லையைப் பொறுத்த வரை ஒரு நாட்டின் ஆள்நில எல்லை அல்லது அந்நாட்டு அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் தூதரகம் அல்லது அரசுக்கப்பல்கள் போன்ற எல்லையையும் உள்ளடக்கியதாக வரையறுக்கிறது. நான்காவதாக, புகலிடம் என்பது ஒரு நாட்டு அரசால் அளிக்கப்படும் பாதுகாப்பை மட்டுமே குறிக்கும். அரசு அல்லாத தேவாலயம் அல்லது ஐ.நா.தூதரகம் போன்ற அமைப்புகள் அளிக்கும் பாதுகாப்பு புகலிடம் ஆகாது. அதாவது அரசு அல்லாத பிற அமைப்புகளுக்குப் புகலிடம் அளிக்கும் அதிகாரம் கிடையாது.

புகலிடம் கோரும் உரிமை உண்டு, ஆனால் புகலிடம் தரவேண்டிய கடமை கிடையாது  
    தன்னுடைய நாட்டில் தன் மீது சுமத்தப்பட்ட  குற்றச்சாட்டின் மீது நியாயமான விசாரணை நடக்காது. தனக்கு நீதி கிடைக்காது என்று நம்பும் ஒவ்வொரு நபருக்கும், அயல்நாட்டில் புகலிடம் கோருவதற்கு உரிமை உண்டு. குற்றவழக்கு நடவடிக்கையில் இருந்து தப்பி மற்ற நாடுகளில் புகலிடம் கோருவதற்கும் புகலிடம் பெறுவதற்கும் ஒவ்வொருக்கும் உரிமை உண்டு என்று சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம் ஷரத்து 14 கூறுகின்றது.
    ஆனால் மனித உரிமைப் பிரகடனம், ஒருவரின் புகலிடம் பெறும் உரிமையை மட்டுமே அங்கீகரிக்கின்றது. அவ்வாறு புகலிடம் கோரும் நபருக்கு கட்டாயம் புகலிடம் அளிக்க வேண்டும் என்ற கடமையை நாடுகளின் மீது அது சுமத்தவில்லை. எனவே எவர் புகலிடம் கோரினாலும் அவருக்கு புகலிடம் அளிக்க வேண்டுமா இல்லையா என்பதை முடிவு செய்வது அந்தந்த நாடுகளின் உரிமையாகும்.

மீட்டொப்படைப்பு துவங்கும் போது புகலிடம் முடிவடைகின்றது (Asylum Stops where Extradition begins)
    மீட்டொப்படைப்பு எங்கு துவங்குகிறதோ, அங்கே புகலிடம் முடிவடைகிறது என்பது ஸ்டார்கின் கூற்றாகும். பொதுவாக தன்நாட்டின் அரசியல் பழிவாங்கும் குற்ற வழக்கு நடவடிக்கைகளில் இருந்து தப்பி, மற்றொரு நாட்டில் தஞ்சமடையும் நபருக்கு அந்நாடு புகலிடம் அளிக்கின்றது. அந்நிலையில் புகலிடம் பெற்றவரின் சொந்த நாடு அந்நபரை தன்னிடம் மீட்டொப்படைப்பதற்கு, புகலிடம் வழங்கிய நாடு மறுத்து விடுமானால் அப்புகலிடம் தொடர்ந்து அவருக்குக் கிடைத்து வரும். ஆனால் புகலிடம் அளித்த நாடு அவரை மீட்டொப்படைக்க ஒப்புக் கொண்டு விட்டால், மீட்டொப்படைப்பு நடைமுறைகள் துவங்கிய நிமிடத்தில் இருந்து அவரது புகலிடம் முடிவடைந்து விடும். அதாவது மீட்டொப்படைக்க மறுக்கும் போது புகலிடம் உருவாவது போல், மீட்டொப்படைக்க ஒப்புக் கொள்ளும் போது புகலிடம் முடிவுக்கு வந்து விடுகிறது. இதனையே ஸ்டார்க் மீட்டொப்படைப்பு துவங்கும் போது புகலிடம் முடிவடைகின்றது என்று கூறுகின்றார்.
    ஆனால் ஸ்டார்க்கின் கூற்று, அரசியல் குற்றம், இராணுவக் குற்றம், மதக் குற்றம் ஆகிய மீட்டொப்படைக்க முடியாத குற்றங்களுக்காக குற்ற வழக்கை எதிர் கொள்பவர்களுக்கு மட்டுமே பொருந்தக் கூடியதாகும். அதனை பொதுவான விதியாக ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனெனில் மீட்டொப்படைப்பும் புகலிடமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையன என்றாலும் அவை இரண்டும் ஒரே உருவத்தின் பிரதிபிம்பங்கள் என்று சொல்ல முடியாது. மீட்டொப்படைப்பு கோரப்படும் நபர்கள் அனைவருமே புகலிடம் பெறுவதற்குத் தகுதியானவர்கள் என்று கூற முடியாது. ஒரு நாட்டில் குற்றச் செயல்களில் ஈடுபட்டுவிட்டு மற்றொரு நாட்டில் தலைமறைவாக இருப்பவரை மீட்டொப்படைக்குமாறு கோரும் போது அவர் தனக்கு புகலிடம் அளிக்குமாறு கோர முடியாது. பொதுவாக இதுபோன்ற குற்றவாளிகள் தங்கள் உண்மையான பெயரில் வருவதும் இல்லை. புகலிடம் கோருவதுமில்லை. மேலும் இத்தகைய குற்றவாளிகளுக்கு புகலிடம் அளிப்பது அந்நாட்டின் உள்நாட்டு அமைதிக்கும் ஊறு விளைவிப்பதாகும். இந்தியா போன்ற பல நாடுகளின் உள்நாடுச் சட்டங்கள், மீட்டொப்படைப்பு உடன்படிக்கை இல்லாவிட்டாலும், இத்தகைய குற்றவாளிகளை மீட்டொப்படைப்பு செய்வதற்கு வழி வகுக்கின்றன. எனவே இத்தகைய மீட்டொப்படைப்பு துவங்கும் போது புகலிடம் முடிவடைகின்றது என்று கூறுவது நடைமுறைப் பொருத்த மற்றதாகும்.
    அதுபோல் ஒரு நாடு மீட்டொப்படைக்க மறுக்கும் போது அங்கு புகலிடம் துவங்குகின்றது என்றும் கூற முடியாது. ஏனெனில் மீட்டொப்படைக்க மறுத்துவிட்டதாலேயே அந்நாடு அவருக்கு புகலிடம் அளித்தாக வேண்டிய கட்டாயமில்லை. மீட்டொப்படைக்க கோரிய நாடு, வேறு தூதரக வழிமுறைகளில் அவரைத் தன் நாட்டிற்குக் கொண்டு வர முயற்சிக்கலாம். அதே சமயத்தில் மீட்டொப்படைக்க மறுத்த நாடு அவருக்கு புகலிடம் அளிக்காமல் வேறு வகையில் மீட்டொப்படைக்க பாதுகாப்பு அளிக்கவும் செய்யலாம். உதாரணத்திற்கு ஸ்னோடென் வழக்கைக் கூறலாம். 
    Snowden’s Asylum Case (2013) வழக்கில் ஸ்னோடென் எனும் அமெரிக்கக் குடிமகன், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புப்  படையின் (NSA) ஒப்பந்தகாரராக இருந்தார். அவரது பணியின் போது, அமெரிக்க தேசிய பாதுகாப்புப் படை உலக அளவில் பல நாட்டு பிரதமர், அதிபர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் போது மக்களின் தனிப்பட்ட தொலைபேசி உரையாடல்கள், இ-மெயில்கள் போன்றவற்றை சட்ட பிரோதமாக கண்காணித்து வருவதற்கான ஆதாரங்களை பத்திரிகையின் மூலம் வெளியிட்டார். அத்தகவல்கள் வெளியிடப்படும் போது அவர் ஹாங்காங்கில் இருந்தார். ஹாங்காங்கில் கைது செய்யப்படுவதில் இருந்து தப்பித்து விமானத்தில் மாஸ்கோ சென்றார். அவர் மாஸ்கோ விமான நிலையத்தில் இறங்குவதற்கு முன்னதாக அமெரிக்க அரசாங்கம் அவரது பாஸ்போர்ட்டை ரத்து செய்துவிட்டது. இதனால் அவர் மாஸ்கோ விமான நிலையத்தில் இருந்து வெளியேற முடியாமல், சர்வதேசக் காத்திருப்பு பகுதியிலேயே 5 வாரங்களுக்கும் மேலாக தங்க வேண்டியதாயிற்று. அங்கிருந்த படியே அவர், ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட 21 நாடுகளிடம் புகலிடம் கோரினார். அவர் வெளியிட்ட தகவலின்படி பல நாட்டு பிரதமர்களின் தொலைபேசிகளும் அமெரிக்காவால் ஒட்டுக் கேட்கப்பட்டிருப்பினும் அமெரிக்காவைப் பகைத்துக் கொள்ள அஞ்சி இந்தியா உட்பட எந்தவொரு நாடும் புகலிடம் தர மறுத்து விட்டன. அமெரிக்க அரசாங்கம், ஸ்னோடென் மீது அரசுக்கு எதிராக உளவு பார்த்தது, அரசுச் சொத்துக்களை திருடியது உள்ளிட்ட குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளதால் அவரை தங்கள் நாட்டிடம் ஒப்படைக்குமாறு ரஷ்யாவிடம் கோரியது. அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே மீட்டொப்படைப்பு உடன்படிக்கை இல்லாததால் ரஷ்யா ஷ்னோடெனை ஒப்படைக்க மறுத்தது. இருப்பினும் ரஷ்ய அமெரிக்க உறவைக் கணக்கில் கொண்டு அவருக்கு புகலிடம் அளிக்கவும் இல்லை. மாறாக ரஷ்யா தற்காலிகமாக ரஷ்யாவில் வசித்துக் கொள்வதற்கான உரிமம் (Permit for temporary residency) வழங்கியது. முதலில் ஒராண்டுக்கு மட்டும் வழங்கப்பட்ட அந்த உரிமம் அதன்பிறகு மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது.

புகலிடத்தின் வகைகள்(Kinds of Asylum)
    புகலிடம் இரு வகையாகப் பிரிக்கப்படலாம். அவை 1) ஆள்நில எல்லைப் புகலிடம் 2) ஆள்நில எல்லைக்கு அப்பால் புகலிடம் ஆகியவனவாகும். 

1. ஆள்நில எல்லைப் புகலிடம் (Territorial Asylum) 
    ஆள்நில எல்லைப் புகலிடம் என்பது ஒரு நாடு தன் நாட்டின் ஆள்நில எல்லைக்குள்ளேயே ஒருவருக்கு அளிக்கும் புகலிடம் ஆகும். ஒரு நாட்டு அரசுக்கு அதன் ஆள்நில எல்லைக்குள் முழு இறையாண்மை உள்ளது. எனவே அந்நாட்டு எல்லைக்குள் அடைக்கலம் கோரும் நபர் எவருக்கும் புகலிடம் அளிக்கும் உரிமை அந்த நாட்டு அரசின் இறையாண்மை அதிகாரத்தைச் சார்ந்ததாகும். எனவே ஒரு நாடு தனது ஆள்நில எல்லைக்குள் அளித்த புகலிடத்தை வேறெந்த நாடும் கேள்விக்குள்ளாக்க முடியாது. அந்நாடு அளித்த ஆள்நில எல்லைப் புகலிடத்தை மதித்து நடக்க வேண்டிய சர்வதேசக் கடமை மற்ற நாடுகளுக்கு உண்டு.


1945 மார்ச் 28 அன்று காரகாஸில் (Caracas) ஏற்கப்பட்ட ஆள்நில எல்லைப் புகலிடம் பற்றிய மாநாட்டின் 1 வது ஷரத்து, “தனது இறையாண்மை அதிகாரத்தின் கீழ் எவருக்கும் தனது ஆள்நில எல்லைப் புகலிடம் அளிப்பதற்கு ஒவ்வொரு நாட்டிற்கும் உரிமை உண்டு. ஒரு நாடு தனது புகலிடம் அளிக்கும் உரிமையை செயல்படுத்தியது பற்றி குற்றம் சொல்வதற்கு எந்தவொரு நாட்டுக்கும் உரிமை கிடையாது” என்று கூறுகின்றது. இங்கிலாந்து, அமெரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகள் தங்களது உள்நாட்டுச் சட்டத்திலேயே புகலிடம் அளிப்பதற்கான உரிமையை அறிவித்துள்ளன. 1959 இல் திபெத்தில் சீன அரசுக்கு எதிராக கலவரங்களைத் தூண்டிவிட்டதாக சீன அரசால் குற்றம் சாட்டப்பட்ட திபெத்தின் தலாய்லாமாவிற்கு தன் ஆள்நில எல்லைக்குள் இந்தியா புகலிடம் அளித்தது இங்கு நினைவு கூறத்தக்கதாகும்.
    நாடுகளின் இறையாண்மை அதிகாரத்திற்கு உட்பட்ட ஆள்நில எல்லையில் புகலிடம் அளிக்கும் உரிமையை, எந்தவொரு சர்வதேசச் சட்டத்தாலும் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் ஒரு நாடு மற்ற நாட்டுடன் செய்து கொள்ளும் மீட்டொப்படைப்பு உடன்படிக்கை போன்ற உடன்படிக்கைகளின் மூலம் தனது புகலிடம் அளிக்கும் அதிகாரத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ளலாம்.

2. ஆள்நில எல்லைக்கு அப்பால் புகலிடம்(Extra-Territorial Asylum)
    ஒரு நாடு தனது நாட்டின் ஆள்நில எல்லைக்கு வெளியே அளிக்கும் புகலிடம் ஆள்நில எல்லைக்கு அப்பால் புகலிடம் எனப்படும். ஒரே நாட்டின் ஆள்நில எல்லைக்கு அப்பால் இருக்கும் அந்நாட்டின் தூதரகங்கள், வணிகத் தூதரக வளாகங்கள், போர்க் கப்பல்கள் போன்றவற்றில் அவை அமைத்திருக்கும் உள்நாடு அரசிடமிருந்து ஒருவருக்கு பாதுகாப்பு அளிப்பது ஆள்நில எல்லைக்கு அப்பால் புகலிடம் ஆகும். இவ்வாறு ஒரு நாட்டின் இறையாண்மைக்கு எதிராகப் புகலிடம் அளிக்கப்படுவதால் இது சர்வதேசச் சட்டத்தில் முழுமையான ஏற்றுக் கொள்ளப்பட்ட புகலிடம் அல்ல என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


ஆள்நில எல்லைக்கு அப்பால் அளிக்கப்படும் புகலிடம் பற்றி காண்போம்:

(1) தூதரகங்களில் புகலிடம் (Asylum in Legation or Embassies)
    அயல்நாட்டில் இருக்கும் தூதரகங்கள், அளிக்கும் புகலிடம் என்பது, அவை அமைந்திருக்கும் உள்நாட்டு அரசின் அதிகாரவரம்பில் தலையிடுவதற்கு ஒப்பாகும். எனவே சர்வதேசச் சட்டத்தின் பொதுவான விதி, தூதரகங்களின் தலைமைக்கு புகலிடம் அளிக்கும் அதிகாரம் கிடையாது என்பதே ஆகும். ஆனால் ஒரு நாட்டில் இருக்கும் அயல்நாட்டுத் தூதரகம் என்பது தூதரகத்தின் தேசியக் கொடிக்குரிய நாட்டின் ஆள்நில எல்லைப் பகுதியின் ஒரு துண்டு நிலப்பகுதியாகவே சர்வதேசச் சட்டத்தில் கருதப்படும். எனவே சில நாடுகளில் குறிப்பாக லத்தீன் அமெரிக்க நாடுகளில் சில விதிவிலக்கான சூழ்நிலைகளில் தூதரகங்களில் புகலிடம் அளிக்கப்படலாம் என்பது வழக்காறாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

பின்வரும் மூன்று சூழ்நிலைகளில் தூதரகங்களில் புகலிடம் அளிக்கப்படலாம் என்று ஸ்டார்க் கூறுகின்றார்.
(i) உள்நாட்டில் ஏற்பட்ட கலவரத்தில் உயிருக்கு ஆபத்தான நிலைமையில் இருப்பவருக்கு அல்லது உள்நாட்டு அரசியல் சூழ்லின் காரணமாக அபாயத்தில் இருக்கும் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு தற்காலிகமாக புகலிடம் அளிக்கலாம்.
(ii) அவ்வாறு தூதரகங்களில் புகலிடம் அளிப்பது அந்த உள்நாட்டில் நீண்ட காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் வழக்காறாக இருந்தால் புகலிடம் அளிக்கலாம்.
(iii) தூதரக நாட்டிற்கும் அது அமைந்திருக்கும் ஆள்நில நாட்டிற்கும் இடையே உள்ள உடன்படிக்கையில் குறிப்பாக புகலிடம் அளிக்கும் உரிமை வழங்கப்பட்டிருந்தால் புகலிடம் அளிக்கலாம்.


Colombia-Vs-Peru (1950 &51) அல்லது புகலிட வழக்கு (Asylum Case) என்று அழைக்கப்படும் இவ்வழக்கே புகலிடம் பற்றிய சர்வதேசச் சட்டம் குழந்தைப் பருவத்தில் இருந்த போது எழுந்த ஆரம்பகால வழக்காகும். இவ்வழக்கில், 1948 இறுதியில் பெரு நாட்டில் ஒரு இராணுவக் கிளர்ச்சி ஏற்பட்டு அது பின்னர் அடக்கப்பட்டது. அதன்பிறகு மூன்று மாதங்கள் கழித்து அந்த இராணுவக்கிளர்ச்சிக்கு மூல காரணமாக இருந்தவர் என்று குற்றம் சாட்டப்பட்ட விக்டர் ரால் ஹயா டேலா டோரே (Victor Rani Hays Dela Torre) எனும் பெரு நாட்டுக் குடிமகனுக்கு 1949 ஜனவரி 3 அன்று பெரு நாட்டில் இருந்த கொலம்பியா தூதரகம் அரசில் புகலிடம் அளித்தது. அதன்பிறகு அவரை கொலம்பியாவிற்கு அனுப்பி வைக்க பாதுகாப்பான வழியேற்படுத்தித் தருமாறு கொலம்பியா அரசு பெரு அரசிடம் வேண்டுகோள் விடுத்தது. டோரேவை பெருவை விட்டு வெளியேற அனுமதிக்க முடியாது என்று மறுத்த அரசாங்கம், அவருக்கு அரசியல் புகலிடம் அளித்ததே செல்லாது என்ற வாதிட்டது. சர்வதேச நீதிமன்றம், இராணுவக் கிளர்ச்சி முடிந்து மூன்று மாதம் கழித்து எவ்வித அவசரச் சூழலும் இல்லாத போது கொலம்பியா தூதரகம் அரசியல் புகலிடம் அளித்தது தவறு என்றும் அவருக்கு பெருவை விட்டு வெளியேற பாதுகாப்பான வழி ஏற்படுத்தித் தர வேண்டிய கடமை பெருவுக்கு இல்லை என்றும் (1950 இல்) முடிவு செய்தது.

எனவே பெரு அரசாங்கம் ஹயா டெலா டோரேவை தம்மிடம் ஒப்படைக்குமாறு கொலம்பியா அரசைக் கோரியது. ஆனால் கொலம்பிய அரசாங்கம் அவ்வாறு ஒப்படைக்க மறுத்து மீண்டும் சர்வதேச நீதிமன்றத்தில் முறையிட்டது. சர்வதேச நீதிமன்றம், கொலம்பியா தூதரகம் புகலிடம் அளித்தது சட்ட விரோதம் என்றாலும் தூதரகத்தில் புகலிடம் அளிக்கப்பட்ட வரை கொலம்பியா, பெருவிடம் திருப்பி ஒப்படைக்க வேண்டிய அவசியமில்லை என்று முடிவு செய்தது. எனவே பெரு, ஹயா டெலா டோரேவை திரும்பபெற வேறு வழிகளிலேயே முயற்சிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
Julian Assange Asylum Case (2010)-  வழக்கிலும்  இந்தச் சட்ட நிலையே தொடர்கிறது. இவ்வழக்கில், ஜுலியன் அசாஞ், ஆஸ்திரேலியக் குடிமகன் ஆவர். அவர் விக்கிலீக்ஸ் என்ற புலனாய்வு இணைய இதழின் ஆசிரியர். அவர் பொதுமக்களின் தகவல் அறியும் அடிப்படை உரிமையை நிலைநாட்ட சட்ட விரோதாமாக அமெரிக்க அரசின் இணைய தளங்களில் ஊடுருவி அமெரிக்காவின் இரகசிய ஆவணங்கள் பலவற்றை வெளியிட்டு வந்தார். ஈராக்கில் அமெரிக்கப் படையால் நிராயுதபாணிகளாக ஈராக்கிய மக்கள் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டது, உலகில் பல்வேறு நாடுகளில் இயங்கும் அமெரிக்க தூதரகங்கள், அமெரிக்க அரசிற்கு அனுப்பிய ரகசியக் கடிதப் போக்குவரத்துக்கள் போன்றவையும் அவற்றுள் அடங்கும். இந்நிலையில் 2010 ஆம் ஆண்டு அவர் ஸ்வீடனில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் உரையாற்றுவதற்காகச் சென்றார். அப்போது அவர் தங்கியிருந்த ஹோட்டலில், இரண்டு பெண்களை அவர் கற்பழித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. முதலில் அவரை விசாரணை செய்த ஸ்வீடன் காவல்துறையினர் அவர் மீது குற்றச்சாட்டு எதனையும் பதிவு செய்யவில்லை. அவர் அங்கிருந்து லண்டன் சென்று விட்டார். அதன்பிறகு ஸ்வீடன் காவல்துறை அவர் மீது வழக்குப் பதிவு செய்து தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது. இங்கிலாந்தில் இருக்கும் அசாஞ்சை தம்மிடம் மீட்டொப்படைக்குமாறு ஸ்வீடன் கோரியது. ஆனால் ஸ்வீடனிடம் தன்னை ஒப்படைத்தால், ஸ்வீடன் அமெரிக்காவிடம் ஒப்படைத்துவிடும். அமெரிக்காவிற்கு எதிராக இரகசிய ஆவணங்களை வெளியிட்டுள்ளதால் அங்கு தனக்கு நீதி கிடைக்காது என அசாஞ் ஆட்சேபனை தெரிவித்தார். ஆனால் இங்கிலாந்து நீதிமன்றம் அவரை ஸ்வீடனிடம் மீட்டொப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. எனவே அசாஞ் 2012 ஜீன் 19 அன்று இங்கிலாந்தில் இருக்கம் ஈக்வடார் நாட்டின் தூதரகத்தில், தஞ்சடைந்தார். ஈக்வடார் அவருக்கு புகலிடம் அளித்தது. அதன் பன்னர், ஈக்வடார் தூதரகத்தைச் சுற்றிலும் தனது காவலர்களை நிறுத்தியது. ஈக்வடார் தூதரகத்தில் அளிக்கப்பட்ட புகலிடத்தை இங்கிலாந்து அங்கீகரிக்காவிட்டாலும், தூதரகம், உள்நாட்டு அதிகாரவரம்பில் இருந்து காப்பு விலக்குப் பெற்றுள்ளதால் இங்கிலாந்து காவல்துறையால் தூதரகத்தினுள் நுழைய முடியவில்லை. ஆனால் அசாஞ் தூதரகத்தை விட்டு வெளியே வரவும் முடியவில்லை.

வணிகத் தூதரகங்களில் புகலிடம் (Asylum in Consulate)
    தூதரகங்களில் அளிக்கப்படும் புகலிடம் பற்றிய சட்டநிலையே வணிகத் தூதரகங்களுக்கும் பொருந்தக் கூடியதாகும்.

போர்க் கப்பலில் புகலிடம் (Asylum in Warship)
    ஒரு நபரின் உயிருக்கு ஆபத்தான விதிவிலக்கான சூழ்நிலையில் மனிதாபிமான அடிப்படையில் ஒரு நாட்டின் போர்க் கப்பலில் புகலிடம் அளிக்கப்படலாம்.

வணிக்கப்பலில் புகலிடம் (Asylum in Merchant Vessels)
    வணிகக் கப்பலில் - அது அரசுக்குச் சொந்தமானதாகவே இருந்தாலும் அதில் -புகலிடம் அளிப்பதற்கு உரிமை கிடையாது.

அகதி (Refugee)
                                            அகதி என்பவர், இனம், சமயம், தேசிய இனம், குறிப்பிட்ட சமூகக் குழுவொன்றில், அரசியல் கருத்து என்பவை காரணமாகக் குற்றம் சாட்டப்பட்டவரும், அவருடைய நாட்டுக்கு அல்லது சொந்த இடத்துக்கு வெளியில் இருப்பவரும், அந்நாட்டினுடைய பாதுகாப்பைப் பெற முடியாத அல்லது பயம் காரணமாக அவ்வாறான பாதுகாப்பை நாட விரும்பாதவருமான ஒருவரைக் குறிக்கும். அரசியல், போர் உள்ளிட்ட காரணங்களால் தம் நாட்டிலிருந்து வெளியேறி பிற நாட்டிலோ அல்லது அதே நாட்டில் பிற இடங்களுக்கோ அடைக்கலம் புகுந்தவர். இடம் பெயர்ந்தவர், ஆதரவற்றோர், நாடிழந்தவர், புலம் பெயர்ந்தவர் , தஞ்சம் புகுந்தவர் அகதி எனப்படுவர்.
    பொதுவாக புகலிடம் என்பதும் ஒரே பொருளிலியே பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இவர்களுக்குள் மெல்லிய வேறுபாடுகள் இருக்கவே செய்கின்றன. பரந்த பொருளில் நோக்கும் போது, புகலிடம் கோரும் நபர்களுக்கு அடைக்கலாம் தரும் ஒரு சட்ட நிறுவனமே  புகலிடம் ஆகும். அகதி என்பது அவ்வாறு புகலிடம் அளிக்கப்பட்ட நபரின் சட்டத் தகுநிலையாகும். புகலிடம் என்பது ஒரு நாட்டின் உள்நாட்டுச் சட்டத்தால் ஒழுங்குப்படுத்தப்படுகிறது. ஆனால் அப்புகலிடம் பெற்ற அகதிகளின் சட்டநிலை சர்வதேசச் சட்டத்தால் ஒழுங்குப்படுகின்றது.

அகதிகளின் சட்டத் தகுநிலை (Legal Status of Refugee)
                            அகதிகளின் சர்வதேசச் சட்டத் தகுநிலையும் சர்வதேசப் பாதுகாப்பும் 1951 ஆம் ஆண்டு அகதிகளின் தகுநிலை பற்றிய ஐ.நா.மாநாட்டையும் அதன் தொடர்ச்சியான 1967 ஆம் ஆண்டு முதல் குறிப்பையுமே அடிப்படையாகக் கொண்டுள்ளன. இவ்விரண்டிலும் இந்தியா கையொப்பமிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். 1951 ஆம் ஆண்டு மாநாட்டின் வகைமுறைகள், 1951 ஜனவரி 1 ம் தேதிக்க முன்பாக உள்ள அகதிகளுக்கு அகதிகள் மட்டுமே பொருந்துவதாக இருந்தது. ஆனால் 1967 ஆம் ஆண்டு முதற்குறிப்பு என்பதற்கான வரையறையை சமூகக் குழுவின் உறுப்பினர் அல்லது ஒரு அரசியல் கருத்தைக் கொண்டிருத்தல் ஆகிய காரணங்களுக்காக தங்கள் நாட்டில் தாம் அச்சுறுத்தப்படலாம் என்று பலமான ஆதாரங்களின் அடிப்படையில் ஏற்பட்ட அச்சத்தின் பாரணமாக தாம் முன்பு வசித்த வீட்டை விட்டு வெளியில் இருக்கும் நபர் எவரும் அகதியே ஆவார்.
    

அகதிகளின் தகுநிலை பற்றிய ஐ.நா.மாநாடு பின்வரும் இரண்டு கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டிருந்தது. அவை:
(i) ஒரு நாட்டின் குடிமக்களுக்கும் அந்நாட்டில் இருக்கும் அகதிகளுக்கும் இடையில் கூடுமான வரை பாரபட்சம் காட்டப்படக்கூடாது.
(ii) ஒரு நாட்டில் இருக்கும் அகதிகளுக்கு இடையே அவர்களின் இனம், மதம் அல்லது அவர்களின் பூர்விக நாடு ஆகியவற்றின் அடிப்படையில் பாரபட்சம் காட்டக்கூடாது.


    ஒரு நாட்டில் சட்ட விரோதமாக நுழையும் அகதிகள், உள்ளே நுழைந்தவுடன் உரிய அதிகார அமைப்பிடம் சரணடைந்து உரிய விளக்கம் அளித்து விட்டால், சட்டவிரோதமாக நுழைந்த குற்றத்திற்காக அவர்களைத் தண்டிக்கக் கூடாது என்று அகதிகள் தகுநிலை பற்றிய ஐ.நா.மாநாடு ஷரத்து 31 கூறுகின்றது. மேலும் ஒரு நாட்டில் அகதிகளாக அனுமதிக்கப்பட்டவர்கள் அந்நாட்டில் சுதந்திரமாக எங்கு வேண்டுமானாலும் செல்வதற்கு அந்நாடு தேவையற்ற கட்டுப்பாடுகளை விதிக்கக்கூடாது.
    ஷரத்து 2 இன்படி அகதிகள் தங்களுக்கு புகலிடம் அளித்திருக்கும் நாட்டின் சட்டங்களையும் ஒழுங்கு முறைகளையும் மதித்து நடத்த வேண்டும். அவர்களது அகதிகள் தகுநிலைக்குப் பொருந்தாத நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருக்க வேண்டும். அதுபோல ஒரு நாட்டிற்குள் அனுமதிக்கப்பட்ட அகதிகளை ஆவர்களது விருப்பத்திற்கு விரோதமாக வெளியேற்றக் கூடாது (Non-refoulment) என்றும் வலியுறுத்தப்பட்டது.

அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஆணையர் (U.N. High Commissioner for Refugee)
    அகதிகளுக்கான சட்டப் பூர்வமான பாதுகாப்பை அளிப்பதற்கும் அவர்களுக்கு நடைமுறை உதவிகளைச் செய்வதற்கு அகதிகளுக்கான ஐ.நா.உயர் ஆணையர் எனும் அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்த அமைப்பு உலகம் முழுவதிலும் உள்ள அகதிகளின் நலன்களைப் பாதுகாத்துப் பராமரிக்கும் பணிகளின் ஈடுபட்டு வருகிறது. 1984 ஏப்ரல் 11 அன்று இந்த ஆணையத்தின் விவாதக் குழு பல நாடுகளில் அகதிகளுக்கு எதிராக உருவாக்கப்படும் வெளிநாட்டவருக்கு எதிரான மனநிலையை (Xenophobic) கட்டுப்படுத்துமாறும் அகதிகளை மனிதாபிமானத்துடன் நடத்துமாறும் உலக நாடுகள் எல்லையில் தடுப்புத் சுவர்களை எழுப்புவதற்கு எதிராகவும் அகதிகளை நாட்டின் வளத்தைப் பெருக்க வரும் சொத்துக்களாக கருதுமாறும் உலக நாடுகளிடையே இந்த அமைப்பு 1985 முதல் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

தொடரும்...

Lr.C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com