நாட்டின் அதிகாரவரம்பில் இருந்து காப்பு விலக்கு

நாட்டின் அதிகாரவரம்பில் இருந்து காப்பு விலக்கு

நாட்டின் அதிகாரவரம்பில் இருந்து காப்பு விலக்கு
(Immunity from Sate Jurisdiction)


    சர்வதேசச் சட்டத்தின் கீழ் சில நபர்கள் அல்லது நபரத்துவங்களுக்கு (Entities) ஒரு நாட்டின் ஆள்நில எல்லைக்குள் அதன் அதிகாரவரம்பில் இருந்து காப்புவிலக்கு அளிக்கப்படுகிறது.  இக்காப்புவிலக்கு பல சமயங்களில் உள்நாட்டுச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டும் உள்ளது. பின்வரும் நபர்கள் அல்லது நபரத்துவங்களுக்கு நாட்டின் அதிகாரவரம்பில் இருந்து காப்பு விலக்கு அளிக்க்பட்டுள்ளது

(i)     அயல்நாட்டு அரசுகள் மற்றும் அயல்நாட்டு அரசுகளின் தலைமைகள்
(ii)    அயல்நாடுகளின் தூதுவப் பரதிநிதிகள் 
(iii)    அயல்நாடுகளின் அரசுக் கப்பல்கள் 
(iv)    அயல்நாட்டு ஆயுதப் படைகள்
(v)    சர்வதேச நிறுவனங்கள்

(i) அயல்நாட்டு அரசுகள் மற்றும் அயல்நாட்டு அரசுகளின் தலைமைகளுக்கு காப்புவிலக்கு (Foreign State and heads of Foreign States Immunity)


    ஒரு நாட்டின் அதிகாரவரம்பில் இருந்து அயல்நாட்டு அரசுகளுக்கும் அயல்நாட்டு அரசுகளின் தலைமைகளுக்கும் காப்புவிலக்கு உண்டு.  ஒரு நாடு மற்றொரு நாட்டால் அங்கீகரிக்கப்பட்டு விட்டது எனில், அங்கீகரிக்கப்பட்ட நாட்டின் மீது அங்கீகரித்த நாட்டின் உள்நாட்டு  நீதிமன்றங்களில் வழக்குத் தொடர முடியாது.  ஆனால் ஒரு நாடு தன் விருப்பத்தின் பேரில் மற்றொரு நாட்டின் நீதிமன்ற அதிகாரவரம்பிற்குத் தன்னை உட்படுத்திக் கொள்ளலாம்.  அவ்வாறு அதிகாரவரம்பிற்கு உட்படுத்திக் கொள்வது பொதுவான உடன்படிக்கiயின் மூலமாக ஏற்படலாம்  அல்லது ஒரு குறிப்பிட்ட வழக்கிற்கு மட்டும் உட்படுத்திக் கொள்ளும் ஒரு நாட்டின் செயல்பாட்டின் மூலம் ஏற்படலாம்.  காப்பிவிலக்கு பெற்றிருப்பதால் ஒரு அயல்நாட்டின் மீது ஒரு நாட்டின் உள்நாட்டு நீதிமன்றங்களில் வழக்கிட முடியாதேயொழிய அந்த அயல்நாடு அந்நாட்டின் உள்நாட்டு நீதிமன்றங்களில் வழக்குத் தொடர்வதற்கு எந்த தடையும் கிடையாது.  காப்பு விலக்குப் பெற்ற ஒரு அயல்நாட்டுஅரசு, மற்றொரு நாட்டின் உள்நாட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்கிறது என்றால், அந்த அயல்நாட்டு அரசு அக்குறிப்பிட்ட வழக்கைப் பொறுத்து தன்னை அந்நாட்டின் அதிகாரவரம்பிற்கு உட்படுத்திக் கொண்டுள்ளது என்பது பொருளாகும்.
    அயல்நாட்டு அரசுகளுக்கு காப்புவிலக்கு அளிக்கப்படுவதற்கு அடிப்படையாக பல காரணங்கள் விளக்கப்படுகின்றது.  சர்வதேச மரியாதை மரபுகளின் (Comity) படி காப்புவிலக்கு அளிக்கப்படுவதாக ஒரு சில சட்டவியலாளர்கள் கருதுகின்றனர்.  வேறு சிலர், அயல்நாட்டு அரசுகளை உள்நாட்டு நீதிமன்ற அதிகாரவரம்பிற்கு உட்படுத்தினால் அந்த அரசுகளுக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பிக்கும்  உத்தரவுகளை செயல்படுத்த இயலாது என்ற நடைமுறைச் சிக்கலில் காரணமாகவே காப்புவிலக்கு அளிக்கப்படுவதாகவும் கருதுகின்றனர். காரணம் எதுவாக இருப்பினும் அயல்நாட்டு அரசுகள் மற்றும் அரசு தலைமைகளுக்கு உள்நாட்டு அதிகாரவரம்பில் இருந்து அளிக்கப்பட்டுள்ள காப்புவிலக்கு நன்கு நிலைபெற்ற ஒன்றாக ஆகிவிட்டது.
    2004 ஆம் ஆண்டு, அரசுகள் மற்றும் அவற்றின் சொத்துக்களுக்கான காப்புவிலக்கு குறித்த ஐ.நா. மாநாடு அயல் நாட்டு அரசுகளுக்கும் மற்றும் அரசுத் தலைமைகளுக்கும் உரிய காப்புவிலக்கு உரிமையை அங்கீகரித்துள்ளது. ஷரத்து-5, ஒரு நாட்டிற்கும் அந்நாட்டின் சொத்துக்களுக்கும் மற்றொரு நாட்டின் அதிகாரவரம்பில் இருந்து  காப்பு விலக்கு உண்டு என்று கூறுகின்றது.  மேலும் ஒவ்வொரு நாடும் ஷரத்து 5 இன் கீழ் மற்ற  நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள காப்புவிலக்கு உரிமையை மதித்து, தங்கள் நாட்டு நீதிமன்ற நடைமுறைகளுக்கு மற்ற நாடுகளையும் அவற்றின் சொத்துக்களையும் உட்படுத்தாமல் இருக்க வேண்டும் என்று ஷரத்து 6 கூறுகின்றது.
    எனவே அயல் நாட்டு அரசுகளுக்கும் அரசுத் தலைமைகளுக்குமான காப்புவிலக்கு பற்றிய சர்வதேசச் சட்ட விதிகளை பின்வரும் தலைப்புகளின் கீழ் விளக்கலாம். அவை:

(a)   நீதிமன்ற நடவடிக்கையில் இருந்து காப்பு விலக்கு:
(b)  அயல் நாட்டு அரசுக்குச் சொந்தமான சொத்துக்களுக்கான காப்புவிலக்கு

(a) நீதிமன்ற நடவடிக்கையில் இருந்து காப்புவிலக்கு (Immunity from the Process of the Court)


    அயல் நாட்டு அரசுகளுக்கும் அரசுத் தலைமைகளுக்கும் வழங்கப்பட்டுள்ள காப்புவிலக்கின் முதன்மையான அம்சம் நீதிமன்ற நடவடிக்கையில் இருந்தான காப்புவிலக்கு ஆகும். அதாவது ஒரு நாட்டின் உள்நாட்டு நீதிமன்றகளில் தொடரப்படும் எந்ததொரு வழக்கிலும் அயல் நாட்டு அரசு அல்லது அரசுத் தலைமையை தரப்பினராகச் சேர்க்கக் கூடாது.  சம்மர் பிரபு (Lord Summer) வின் கூற்றுப்படி, ஒரு அயல் நாட்டு அரசை உள்நாட்டு நீதிமன்றத்தில் ஒரு தரப்பாகச் சேர்க்க முடியாது.  ஆனால் அந்த அயல் நாடு, தானே ஒரு வாதியாக வழக்கிட்டு அல்லது பிரதிவாதியாக சேர்க்கப்பட்ட வழக்கில் ஆட்சேபனையின்றி முன்னிலையாகி வழக்கை நடத்துவதன் மூலம் உள்நாட்டு நீதிமன்றத்தின் அதிகாரவரம்பிற்கு தன்னைத தானே உட்படுத்திக் கொள்ளலாம்.
    The Christina Case (1938 – என்ற வழக்கில் கிறிஸ்டினா எனும் கப்பலை ஒப்படைக்குமாறு ஸ்பெயின் அரசாங்கத்திற்கு எதிராக இங்கிலாந்து நீதிமன்றத்தால் நீதிப் பேராணை பிறப்பிக்கப்பட்டது.  ஸ்பெயின் அரசாங்கம், தான் ஒரு இறையாண்மை என்பதால் காப்புவிலக்கு உண்டு என்று வாதிட்டது.  இங்கிலாந்து பிரபுக்கள் சபை அந்த நீதிப்பேராணைகளை ரத்து செய்ததுடன், ஒரு அயல் நாட்டு அரசு அல்லது அரசுத் தலைமையை மறைமுகமாக தரப்பினராகச் சேர்ப்பதும் கூட சர்வதேசச்சட்டத்திற்கு விரோதமானதே என்று தீர்ப்பளித்தது.

(b) அயல் நாட்டு அரசுக்குச் சொந்தமான சொத்துக்களுக்கான காப்புவிலக்கு (Immunity with respect to the Properties of the State)


    அயல் நாட்டு அரசுகளுக்கும் அரசுத் தலைமைகளுக்கும் வழங்கப்பட்டுள்ள காப்புவிலக்கின் மற்றொரு அம்சம் அவற்றின் சொத்துக்களுக்கான காப்புவிலக்கு ஆகும். ஒரு நாடு தன் நாட்டின் நீதிமன்ற நடவடிக்கையின் மூலம் மற்றொரு நாட்டு அரசுக்குச் சொந்தமான சொத்து அல்லது அதன் உடைமையில் இருக்கும் சொத்தைக் கைப்பற்றவோ தடுத்து வைக்கவோஅல்லது நீதிமுறையில் பறிக்கவோ கூடாது.  அது குறித்த நீதிமன்ற நடவடிக்கையில் அந்த அரசு தரப்பினராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்த காப்புவிலக்கு உரிமை அந்நாட்டிற்கு உண்டு.
     Juan Ysmale &Co,Inc-Vs-Government Republic of Indonesia (1955 A.C. 75)- என்ற வழக்கில் அயல் நாட்டு அரசு அதன் சொத்துக்களுக்கான காப்புவிலக்கைக் கோருவதற்கு, அந்நாடு தன்னுடைய கோரிக்கை கற்பனையானதோ குறைபாடான ஆவணங்களின் அடிப்படையிலானதோ அல்ல என்பதை சாட்சியங்களுடன் நிரூபிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

விதிவிலக்குகள் (Exceptions)
    அயல்நாட்டு அரசுகளுக்கும் அரசுத் தலைமைகளுக்கும் அவற்றின் சொத்துக்களுக்கும் வழங்கப்பட்டுள்ள காப்புவிலக்குகள் பின்வரும் விதிவிலக்கான நேர்வுகளில் மறுக்கப்படலாம்.

அ) வெளிப்படையான சம்மதம் (Express Consent) 

ஒரு அரசு எழுத்து மூலமாக உடன்படிக்கை அல்லது ஒப்பந்தம் ஒன்றின் மூலம் மற்றொரு நாட்டின் நீதிமன்ற அதிகாரவரம்பிற்கு உட்படுவதாக சம்மதம் தெரிவித்திருந்தால் அந்நாடு காப்புவிலக்கு உரிமையினை கோர முடியாது.

ஆ) நீதிமன்ற நடவடிக்கையில் பங்கேற்றல் (Participation of Court Proceedings)  

ஒரு நாடு மற்றொரு நாட்டின் நீதிமன்றத்தில் தானே வாதியாக இருந்து வழக்குத் தொடரும் போது அல்லது தன் மீது தொடரப்பட்ட வழக்கில் காப்புவிலக்கு கோராமல் ஆட்சேபணையின்றி பங்கேடுத்துக் கொள்ளும் போது அந்நாடு காப்பு விலக்கு உரிமையினைக் கோர முடியாது.

இ) வணிக நடவடிக்கைகள் (Commercial Transations)  

இன்றைய நவீன காலத்தில் அரசுகள் இறைமைப் பணியுடன் வணிக நடவடிக்கைளிலும் ஈடுபடுகின்றன.  நாடுகள் பெரும்பாலும் அரசுத் துறைகள் மூலமாகவோ பொதுத் துறை நிறுவனங்களில் மூலமாகவோ மற்ற நாடுகளுடன் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன.  அவ்வாறு ஈடுபடும் போது மற்ற நாடுகளில் எழும் தகராறுகள் அல்லது வழக்குகளைப் பொறுத்த வரை அந்நாட்டு நீதிமன்ற நடைமுறைகளில் இருந்து காப்புவிலக்கு கோர முடியாது.
    ஆரம்ப காலத்தில் அரசுகளின் வணிக நடவடிக்கை பிரதானமானதாக ஆகாத நிலையில் இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகள் இறையாண்மை நடவடிக்கையும் வணிக நடவடிக்கையும் கலந்திருந்த போதும்  காப்புவிலக்கு அளித்தன.  parliament Belge (1880) வழக்கில், பார்லிமென்ட் பெல்ஜ் எனும் கப்பல் பெல்ஜியம் அரசாங்கத்திற்குச் (மன்னருக்குச்) சொந்தமான கடிதத் தொடர்புக் கப்பலாகும்.  கடிதப் போக்குவரத்துடன் அக்கப்பல்  வணிக நடவடிக்கையிலும் ஈடுபடுத்தப்பட்டது.  அக்கப்பல்  பிரிட்டனைச் சேர்ந்த கப்பல் மீது மோதிவிட்டது.  கப்பலின் உரிமையாளர் இழப்பீடு கோரி இங்கிலாந்தின் கடலாண்மை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.  ஆனால் இங்கிலாந்து நீதிமன்றம் பெல்ஜியம் அரசுக்குச் சொந்தமான பார்லிமென்ட் பெல்ஜ் கப்பல் வணிக நடவடிக்கையிலும் ஈடுபடுத்தப்பட்டிருந்தாலும் காப்புவிலக்கு பெற்றிருப்பதால் இங்கிலாந்து நீதிமன்றத்திற்கு அதன் மீது அதிகாரவரம்பு கிடையாது என்று தீர்ப்பளித்தது.
    அதன் பிறகு இந்த நிலை மாறிவிட்டது.  1978 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் அரசுக் காப்புவிலக்குச் சட்டம் (State Immunity Act, 1978) அரசுகளின் வணிக நடவடிக்கைகளுக்கு காப்புவிலக்கு கிடையாது என்று அறிவித்தது.  அதற்கு முன்பே Krajina-Vs-Toss Agencies  (1949) 2 All.ER. 274 என்ற வழக்கில் இங்கிலாந்து நீதிமன்றம் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கு அதிகாரவரம்பில் இருந்து காப்புவிலக்கு கிடையாது என்று இங்கிலாந்து நீதிமன்றங்கள் முடிவெடுத்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

ஈ) காப்புவிலக்கை விட்டுக் கொடுத்தல் (Waiver of Immunity) 

ஒரு நாடு மற்றொரு நாட்டின் அதிகாரவரம்பில் தனக்கிருக்கும் காப்புவிலக்கை தானாக முன் வந்து விட்டுக்கொடுத்த பின்னர் அந்நாடு காப்புவிலக்கு உரிமையைக் கோர முடியாது.  காப்புவிலக்கை விட்டுக் கொடுத்தல் வெளிப்படையானதாகவோ உட்கிடையானதாகவோ இருக்கலாம்.  இப்பகுதியில் நாம் முன்னரே கண்டது போல்உடன்படிக்கையின் மூலம் வெளிப்படையான சம்மதத்தைத் தெரிவித்தலும் நீதிமன்ற நடவடிக்கையில் ஆட்சேபணையின்றி பங்கேற்பதும் காப்புவிலக்கை விட்டுக் கொடுத்தலே ஆகும்.
    நீதிமன்றங்கள் பொதுவாக வெளிப்படையான விட்டுக் கொடுத்தலையே ஏற்றுக் கொள்கின்றன.  உட்கடையான விட்டுக் கொடுத்தலை ஊகித்து அறிவது அபாயகரமாமனது என்றே கருதுகின்றன.  ஆனால்,

(i)    ஒரு நாட்டின் இசைவுத் தீர்வு (Arbitraion) நடவடிக்கைக்கு உட்படுவதற்கு சம்மதம் தெரிவிக்கும் மற்றொரு நாட்டின் நடவடிக்கை காப்புவிலக்கைக் கைவிடுவதாக ஆகாது.
(ii)    அதுபோல ஒரு நாட்டின் அரசுத் தலைவர் மற்றொரு நாட்டில் வாழ்வதும் அங்கே அவர் ஒப்பந்தத்தில் ஈடுபடுவதும் காப்புவிலக்கை விட்டுக் கொடுத்தல் ஆகாது.  Mighell-Vs-Sultan of Johore (1894) –என்ற வழக்கில் ஜாகோர் என்னும் அரபு நாட்டின் மன்னர் தன்னை யாதென்று அடையாளப்படுத்திக் கொள்ளாமல் ஒரு சாதாரண மனிதர் போல் இங்கிலாந்தில் வாழ்ந்து வந்தார்.  அப்போது அவர் ஒரு பெண்ணை மணந்து கொள்வதாக திருமண ஒப்பந்தத்தில் வாக்குறுதியளித்திருந்தார்.  அதன்பின்னர் அவர் தன் நாடு திரும்பியவுடன் ஒப்பந்தப்படி திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டார்.  அப்பெண் அவர் மீது இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் ஆனால் இங்கிலாந்து நீதிமன்றம், ஒரு அயல் நாட்டு அரசுத் தலைவர் இங்கிலாந்தில் தலைமறைவாக இருந்தாலும் அவர் இங்கு ஒப்பந்தத்தில் ஈடுபட்டிருந்தாலும் அவரது நடவடிக்கை இங்கிலாந்து நீதிமன்ற அதிகாரவரம்பிற்குத் தன்னை உட்படுத்திக் கொண்டதாக அர்த்தம் ஆகாது எனக் கூறி அப்பெண்ணின் வழக்கை தள்ளுபடி செய்தது.

(ii) அயல் நாட்டுத் தூதுவப் பிரதிநிதிகளின் காப்புவிலக்கு


    அயல் நாட்டுத் தூதுவப் பிரதிநிதிகளுக்கும் அவர்களது தூதுரகத்திற்கும் (Embassy or Diplomatic Mission) அவர்களை வரவேற்றிருக்கும் நாட்டின் அதிகாரவரம்பில் இருந்து காப்புவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.  1961 ஆம் ஆண்டின் வியன்னா மாநாட்டில் ஏற்கப்பட்ட தூதுரக உறவுகள் பற்றிய பிரதிகளின்படி தூதுவப் பிரதிநிதிகளுக்கு வழக்கப்படும் காப்புவிலக்கு அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் பணியாளர்களுக்கும் பொருந்தக் கூடியதாகும். அயல் நாட்டுத் தூதுரகங்களும் தூதுவப் பிரதிநிதிகள் குடியிருக்கும் குடியிருப்பு வளாகங்களும் கடனாளர்களின் உரிமையியல் நடவடிக்கைளில் இருந்து மட்டுமல்லாமல் குற்றவியல் அதிகாரவரம்பிலிருந்தும் முழுமையாகக் காப்புவிலக்கு பெற்றுள்ளது.
 

விட்டுக் கொடுத்தல் (Waiver)


    ஆனால் தூதுவப் பிரதிநிதிகள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள், பணியாளர்கள், தூதுரகங்கள் மற்றும் குடியிருப்பு வளாகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள காப்புவிலக்கானது, அவர்களை அனுப்பிய நாட்டுக்கு உரிய காப்புவிலக்கேயொழிய, அவர்களுக்கு உரியது அல்ல.  எனவே அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் காப்பு விலக்கு அவர்களை அனுப்பிய நாட்டால் விட்டுக் கொடுக்கப்படலாம்.  அதுபோல எந்தவொரு தூதுவப் பிரதிநிதியையும் அவரை வரவேற்றிருக்கும் நாடு, வேண்டப்படாதவராக (Persona non grata) அறிவித்து நாட்டை விட்டு வெளியேற்றலாம்.

காப்புவிலக்கின் அடிப்படையும் கால அளவும் (Basis of duration of Immunity)


    அயல்நாட்டு தூதுவப்  பிரதிநிதயாக ஒரு நாட்டிற்கு அனுப்பப்பட்டவர் எவ்வித இடையூறும் தொந்தரவும் இல்லாமல் தன் நாட்டின் சார்பாக தன் அதிகாரப்பூர்வ பணிகளை செய்வதற்கான சுதந்திரமான சூழ்நிலையை உருவாக்கித் தருவதே அயல் நாட்டுத் தூதுவப் பிரதிநிதிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள காப்புவிலக்கின் அடிப்படையாகும்.  எனவே ஒரு தூதுவப் பிரதிநிதி தன்னை வரவேற்கும் நாட்டில் நுழைந்தது முதல் அந்நாட்டில் இருந்து வெளியேறுவது வரை அவருக்குக் காப்புவிலக்கு உண்டு. அத்தகைய காப்புவிலக்கு இரு நாட்டுக்கும் இடையே போர் நடைபெறும் காலங்களிலும் உண்டு.  ஒரு வேளை தூதுவப் பிரதிநிதி இறந்து விட்டால், அவரது குடும்ப உறுப்பினர்கள் அந்நாட்டை விட்டு வெளியேறுவதற்கு ஆகும். நியாயாமான கால அளவிற்கு இக்காப்புவிலக்கு அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் உண்டு.
    தூதுவப் பிரதிநிதியின் தன்ப்பட்ட செயல்களுக்கும் அவரது அலுவல் ரீதியிலான செயல்களுக்கும் காப்புவிலக்கு உண்டு. ஆனால் அவர் தன் நாட்டிற்காக உளவு வேலைகளில் ஈடுபட்டால் அவரை வரவேற்றிருக்கும் நாடு அவருக்கு காப்புவிலக்கு உரிமைகளைத் தரவேண்டி அவசியமில்லை.
    காப்புவிலக்கு உரிமையின் மூலம் தூதுவப் பிரதிநிதிக்கு அந்நாட்டு நீதிமன்ற அதிகாரவரம்பில் இருந்து தான் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதேயொழிய, அவரது பொறுப்பு நிலையில் இருந்து அல்ல.  எனவே, தூதுவப் பிரதிநிதிக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடியாவிட்டாலும், தூதுரக நடைமுறையின் மூலம் அவரைப் பொறுப்புக்குள்ளாக்க முடியும்.

(iii)    அயல்நாட்டு அரசுக் கப்பல்களுக்கான காப்புவிலக்கு (Immunity)


    அரசுக்கப்பல் (Public Vessel) என்பது இறையாண்மை பெற்ற நாடு ஒன்றின் அரசாங்கத்ததால் பொறுப்பாணைக்கு (Commission) உட்படுத்தப்பட்ட கப்பலைக் குறிக்கும்.  அதுபோல ஒரு அரசாங்கத்தால் அரசுப் பணிக்காக வாடகைக்கு அமர்த்தப்பட்ட தனியார் கப்பலும் அரசுக் கப்பலே ஆகும்.
    ஒரு நாட்டின் அதிகாரவரம்பில் இருந்து அயல்நாட்டு அரசுக் கப்பலுக்கு காப்புவிலக்கு அளிப்பது தொடர்பாக இரண்டு கொள்ளைகள் உள்ளன. அவை:
(a) ஒன்று, மிதக்கும் தீவுக் கொள்கையாகும். அக்கொள்கையின்படி ஒரு அயல்நாட்டு அரசுக் கப்பல் ஒரு நாட்டு எல்லைக்குள் இருந்தாலும் அக்கப்பலில் பறக்கும் தேசியக் கொடிக்குரிய நிலப்பகுதியே மிதந்து கொண்டிருப்பதாகக் கருதப்படுவதால்,  அந்நாட்டின் உள்நாட்டு நீதிமன்ற அதிகாரவரம்பிற்கு அக்கப்பலை உட்படுத்த முடியாது.
(b) மற்றொன்று, மிதக்கும் தீவுக் கொள்கையை நிராகரித்து விட்டு உள்நாட்டுச்சட்டப்படி நிபந்தனைக்குட்பட்டு காப்புவிலக்கு அளிக்கும் கொள்கையாகும்.
    Chung chi cheung-Vs-R(1939)-என்ற வழக்கில் பிரிவி கவுன்சில், மிதக்கும் தீவுக் கொள்கையை நிராகரித்து விட்டு, காப்புவிலக்குக் கொள்கையின் அடிப்படையில் அக்கப்பலுக்கு விலக்களித்தது.  Schooner Exchang-Vs-Mc’Faddon (1812)-என்ற வழக்கில் அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மாஷல், ஒரு ஆயுதந் தாங்கிய அரசுக் கப்பல், ஒரு நாட்டின் ஆயுதப்படையின் ஒரு அங்கமாகும். அது இறையாண்மை அரசின் உத்தரவின் கீழ் செயல்படுகிறது. அது அந்த அரசால் தேசிய நோக்கத்திற்காக பயன்படுத்தப்படுகிறது.  எனவே ஒரு போர்க்கப்பல், நட்பு நாட்டின் எல்லைக்குள் அனுமதியுடன் உள்ளே நுழைகிறது என்றால், அக்கப்பலை வரவேற்கும் நாட்டின் அதிகாரவரம்பில் இருந்து காப்புவிலக்கு அளிக்கப்படுகிறது என்பதே பொருளாகும் என்று கூறியுள்ளார்.

அரசுக் கப்பலகளுக்கு உரிமையியல் சட்டத்தில் இருந்தான காப்புவிலக்கு (Immunity from civil law for Public Vessels)


    ஒரு அயல் நாட்டு அரசுக்கப்பல், துறைமுகத்தில் நின்று கொண்டிருக்கும் போது, அக்கப்பலின் உடைமையை மீட்டுத் தரக்கோரியோ அக்கப்பல் மோதியதால் ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடு கோரியோ  உள்நாட்டு நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு நடவடிக்கை எதுவும் தொடர முடியாது.  அக்கப்பல் மீது மட்டுமல்ல. அக்கப்பலின் பணியாளர்கள் மீதும் வழக்குத் தொடர முடியாது. உரிமையியல் சட்டத்தில் இருந்தான இந்த காப்பு விலக்கு, அந்த அரசுக்கப்பல், அரசின் அங்கம் என்ற அடிப்படையில் அதன் பணியை செய்வதற்கு அவசியமான அளவிற்கு மட்டுமே வழங்கப்படும்.  உரிமையியல் சட்டத்தில் இருந்து காப்புவிலக்கு அளிக்கப்பட்டுள்ள போதும்  அக்கப்பல் துறைமுகத்தின் சுகாதார விதிகளை கடைபிடிக்கக் கடமைப்பட்டதாகும்.  அதுபோல உள்நாட்டு வருவாய்ச் சட்டங்களை மீறும் வகையிலும் செயல்படக் கூடாது.  இக்கடமைகளை ஒரு அரசுக்கப்பல் மீறினால் அக்கப்பலுக்கு எதிராக தூதுரக நடவடிக்கைகள் எடுக்கப்படலாம்.  அக்கப்பலை துறைமுகத்தை விட்டு வெளியேறுமாறும் உத்தரவிடலாம்.

  Schooner Exchang-Vs-Mc’Faddon (1812)-என்ற வழக்கில் பிரான்ஸ் நாட்டுக் கப்பல் படையைச் சேர்ந்த கப்பல் ஒன்று புயலால் தாக்கப்பட்டு பழுதுகளை சரி செய்வதற்காக அமெரிக்காவின் பிலடெல்பியா துறைமுகத்தில் நின்றிருந்தது. அமெரிக்கக் குடிமகன்கள் சிலர், அக்கப்பல் முன்பு “சூனர் எக்சேஞ்ச்” என்ற பெயரில் தங்களுக்குச்சொந்தமான கப்பலாக இருந்தது என்றும் 1810 இல் நெப்போலிய அரசாணையின் பேரில் நடுக்கடலில் வைத்து பிரான்ஸ் அரசாங்கத்தால் கைப்பற்றப்பட்டது என்றும் அக்கப்பலின் உடைமையை மீட்டுத் தர வேண்டும் என்றும் கோரி அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கிட்டனர்.  ஆனால் அமெரிக்க அரசாங்கம் அது பிரெஞ்சு அரசுக்கப்பல் என்பதால் அதற்கு காப்புவிலக்கு உண்டு என்றும் நீதிமன்றம் அவ்வழக்கை ஏற்கக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டது.  அதனடிப்படையில் தலைமை நீதிபதி மார்ஷல், அயல்நாட்டு அரசின் போர்க்கப்பலுக்கு உரிமையியல் நீதிமன்ற அதிகாரவரம்பில் இருந்து காப்புவிலக்கு  உண்டு என்று தீர்ப்பளித்தார்.

அரசுக்கப்பல்களுக்கு குற்றவியல் சட்டத்தில் சட்டத்தில் இருந்தான காப்புவிலக்கு (Immunity from Criminal Law For Public Services)


    ஒரு அரசுக்கப்பலில் ஒரு குற்றம் நடந்தால் அத்தகைய குற்றம் அக்கப்பலில் பறக்கும் தேசியக் கொடிக்குரிய நாட்டின் அதிகாரவரம்பிற்குட்பட்டதாகும். ஆனால் அதே குற்றம் அந்த அரசுக்கப்பல் நின்றிருக்கும் நாட்டுக் குடிமகனுக்கு எதிராக இழைக்கப்பட்டிருந்தால் அக்கப்பல் நின்றிருக்கும் நாட்டின் நீதிமன்றத்திற்கே அதிகாரவரம்பு உண்டு. ஆனால் அரசுக் கப்பலின் பணியாளராக அல்லாத ஒருவர் கடற்கரையில் செய்த குற்றம் தொடர்பான காப்புவிலக்கு குறித்து இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன.  அந்த ஆள்நில எல்லைக்குரிய நீதிமன்றங்களுக்கு அத்தகைய நபரின் மீது அதிகாரவரம்பு கிடையாது என்பது ஒரு சாராரின் கருத்தாகும்.  அரசுக்கப்பலில் இருக்கும் பணியாளர் அல்லாத நபர் கடற்கரையில் குற்றம் செய்திருந்தால் அக்கப்பல் அதிகாரி, அந்நபரை உள்நாட்டு காவல் துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது மற்றொரு சாராரின் கருத்து ஆகும். அதே சமயத்தில் ஆபத்தான சூழ்நிலையில் மனிதாபிமான அடிப்படையில் அந்நபருக்கு அரசுக்கப்பல் புகலிடம் அளிக்கலாம்.
     ஒரு அரசுக்கப்பலின் பணியாளர், அது நின்றிருக்கும் நாட்டின் கடற்கரையில் தன் அலுவல் ரீதியிலான கடமைகளை நிறைவேற்றும் போது உள்நாட்டு சட்டத்தை மீற நேர்ந்தால், அப்பணியாளர்களுக்கு முழுமையான காப்புவிலக்கு உண்டு.  ஆனால் அலுவலாகப் பணி சாராத செயலின் போது உள்நாட்டுச் சட்டத்தை மீறினால் அரசுக் கப்பலின் பணியாளருக்கு காப்பு விலக்கு எதுவும் கிடையாது.  அவர் அந்நாட்டின் உள்நாட்டு நீதிமன்றத்தின் அதிகாரவரம்பிற்கு உட்பட்டே ஆக வேண்டும்.

அரசுக்குச் சொந்தமான வணிகக் கப்பல்களுக்கான காப்புவிலக்கு (Immunity for State owned Commercial Ships)


    நாட்டின் அரசாங்கங்கள் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடாத 18 ஆம் நூற்றாண்டுகளில் நீதிமன்றங்கள், அரசுக்கப்பல்கள் வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும் அக்கப்பல்களுக்கு காப்புவிலக்கு உண்டு என்று கூறப்பட்டது. (Parliament Belg-1880) ஆனால் அநேகமாக அனைத்து நாடுகளும் தங்களது அரசுத்துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் இன்றைய நாளில், அரசுக் கப்பல்களுக்கு வழங்கப்படும் காப்புவிலக்கு அரசு வணிகக் கப்பல்களுக்கு வழங்கப்படுவதில்லை.  அவ்வாறு வழங்கப்பட்டால் அவற்றோடு வணிகம் செய்யும் தனிநபர்களுக்கு அநீதி இழைப்பதாக அமையும் எனபதாலேயே அரசு வணிகக் கப்பல்களுக்கு காப்புவிலக்கு மறுக்கப்படுகிறது.
    இங்கிலாந்தின் அரசுக் காப்புவிலக்குச் சட்டம், 1978 அரசுகளின் வணிக நடவடிக்கைகளுக்கு காப்புவிலக்கு கிடையாது என்று அறிவித்துள்ளது. அதுபோல நாட்டு அரசுகள் மற்றும் அவற்றின் சொத்துக்களுக்கான அதிகாரவரம்பு காப்புவிலக்கு குறித்த ஐ.நா. மாநாடு 2004, ஷரத்து 16 இன்படி, வணிகம் சாராத அரசுப் பணிகள் தவிர பிற பணிகளில் (அதாவது வணிகப் பணிகளில் ) ஈடுபடுத்தப்பட்டிருக்கும் அரசுகட கப்பல்களுக்கு காப்புவிலக்கு கிடையாது என்று கூறப்பட்டுள்ளது.

(iv) அயல் நாட்டு ஆயுதப் படைகளுக்கான காப்புவிலக்கு (Immunity)


    ஒரு நாட்டின் ஆள்நில எல்லைக்குள் நிறுத்தி வைக்க அனுமதிக்கப்பட்டிருக்கும் நட்பு நாட்டின் ஆயுதப் படைகளுக்கு அந்நாட்டின் அதிகாரவரம்பில் இருந்து காப்புவிலக்கு உண்டு என்பது எந்தச் சூழ்நிலையில் அந்த அயல்நாட்டு ஆயுதப்படை உள்நாட்டில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பதையும், காப்புவிலக்கு தொடர்பாக இரு நாட்டு அரசுகளுக்கு இடையே எட்டப்பட்டிருக்கும் உடன்படிக்கை ஷரத்துக்களையும் பொறுத்ததாகும். ஆவ்வாறு வெளிப்படையான உடன்படிக்கை எதுவும் இல்லையெனில், அயல்நாட்டு ஆயுதப்படையை உள்நாட்டு எல்லைக்குள் இருக்க அனுமதித்த செயலே அந்த ஆயுதப்படைக்கு சில காப்புரிமைகளை வழங்குகிறது.
    Wright-Vs-Contrell (1943)-என்ற வழக்கில் இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்கப்படை ஆஸ்திரேலிய அரசின் அனுமதியுடன் ஆஸ்திரேலிய எல்லைக்குள் நிலை கொண்டிருந்தது. அந்நிலையில், அமெரிக்கப் படையின் தனி உறுப்பினர் ஒருவர் ஆஸ்திரேலிய குடிமகன் ஒருவருக்கு இழைத்த தீங்கிற்காக இழப்பீடு கோரி உரிமையியல் வழக்கு தொடரப்பட்டது.  வழக்கை விசாரித்த நியூ சவுத் வேல்ஸின் உச்சநீதிமன்றம், ஒரு நட்பு நாட்டின் ஆயுதப்படையை தன் நாட்டின் எல்லைக்குள் அனுமதிக்கின்ற ஒரு நாடு, அந்த ஆயுதப்படையின் இறைமைப் பணிக்கு அவசிமான செயல் திறனை பாதிக்கும் வகையில் அந்நாட்டுப் படை மீது தன் அதிகாரவரம்பை செலுத்துவதில்லை என்று உட்கிடையான உறுதி மொழியை அளிக்கிறது  என்று உட்கடையான உறுதி மொழியை அளிக்கிறது என்று கூறியது.  அவ்வாறெனில் அந்த ஆயுதப் படையின் தனி உறுப்பினர் மீது உரிமையியல் வழக்குத் தொடர்வது அந்தப்படையின் இறைமைப் பணியின் அவசியமான செயல்திறனை பாதிக்குமா என்ற கேள்விக்கு அவ்வாறு பாதிக்காது என்று பதிலளித்தது.  எனவே அந்த ஆயுதப்படையின் தனி உறுப்பினருக்கு எதிராக உரிமையியல் வழக்கு தொடலாம் என்று தீர்ப்பளித்தது.

    எனவே, காப்புவிலக்கு தொடர்பாக வெளிப்படையான உடன்படிக்கை எதுவும் இல்லாத நிலையில் ஆயுதப்படைக்கு வழங்கப்படும் காப்புவிலக்கின் தன்மைகளை பின்வருமாறு விளக்கலாம்:
1) அயல்நாட்டு ஆயுதப் படையின் உள் நிர்வாக விவகாரங்களைப் பொறுத்த வரை, அப்படை தங்கியிருக்கும் நாட்டின் உரிமையியல் மற்றும் குற்றவியல் அதிகாரவரம்பில் இருந்து முழு காப்புவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
2) பின்வரும் குற்றங்களைப் பொறுத்த வரை அந்த அயல்நாட்டுப் படைத் தளபதிக்கும் அவர்களது நாட்டு நீதிமன்றத்திற்கு மட்டுமே தனி அதிகாரவரம்பு உள்ளது.  அவை:
(i) அந்த ஆயுதப்படை நிலை கொண்டிருக்கும் பகுதிக்குள் அடிப்படையின் உறுப்பினர்கள் செய்த குற்றங்கள்
(ii) ஆயுதப்படையின் கடமையை நிறைவேற்றும் போது படை நிலை கொண்டிருக்கும் பகுதிக்கு வெளியே செய்த குற்றங்கள்.
3) மாறாக, ராணுவக் கடமைகள் அல்லாத பிற பணிகளில் ஈடுபட்டிருக்கும் போது படை உறுப்பினர்கள் படை நிலை கொண்டிருக்கும் பகுதிக்கு வெளியே செய்த குற்றங்களுக்காக, அடிப்படை வீரர்கள் மீது அடிப்படை இருக்கும் நாடே அதிகாரவரம்பு பெற்றதாகும்.

(v)  சர்வதேச நிறுவனங்களுக்கான காப்புவிலக்கு (Immunity)


    ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு (nternational Labour Organisation) போன்ற சர்வதேச நிறுவனங்களுக்கு நாடுகளின் அதிகாரவரம்பில் இருந்து காப்பு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.  சர்வதேச நிறுவனங்களுக்கான காப்பு விலக்கு சர்வதேச மாநாட்டின் வாயிலாகவும் அதனடிப்படையில் இயற்றப்பட்ட உள்நாட்டுச் சட்டங்களின் வாயிலாகவும் அளிக்கப்பட்டுள்ளது.
    உதராணத்திற்கு ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச முகமைகளுக்கு காப்புவிலக்கு வழங்கும் வகையில், ஐக்கிய நாடுகளின் தனிச் சலுகைகள் மற்றும் காப்புரிமைகள் பற்றிய மாநாடு (Convention on the Privilege and Immunities of the United Nations) ஏற்கப்பட்டதைக் கூறலாம்.  அதுபோல அம்மாநாட்டு விதிகளுக்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில் இந்தியாவின் 1947 ஆம் ஆண்டில் ஒரு சட்டம் (சட்டம் என் 46) இயற்றப்பட்டது.  1950 இல் இங்கிலாந்திலும் அது போன்ற சட்டம் இயற்றப்பட்டது.

அதிகாரவரம்பின் நீட்சி (Extention of Jurisdiction)
    ஒரு நாட்டின் அதிகாரவரம்பு, அதன் ஆள்நில எல்லைக்குள் மட்டுமின்றி அதன் ஆள்நில எல்லையை அடுத்துள்ள ஆழ்கடலுக்கும் ஆள்நில எல்லை மீதிருக்கும் வான் மண்டலத்திற்கும் சில சமயங்களில் அதற்கும் அப்பால் இருக்கும் வின்வெளிக்கும் நீளலாம்.  எனவே ஆழ்கடல் மீதான அதிகாரவரம்பு, வான் மண்டலம் மீதான அதிகாரவரம்பு, விண்வெளியில் செயல்படும் அதிகாரவரம்பு ஆகியன பற்றிய சர்வதேசச் சட்ட விதிகள் பல்வேறு சர்வதேச உடன்படிக்கைகள், மாநாடுகள் வாயிலாக தற்போது வளர்ந்து வருகின்றன. அவை,
(i)     சர்வதேசக் கடல் சட்டம் (International Law of Sea)
(ii)    சர்வதேச வான் சட்டம் (International Law of Air)
(iii)    விண்வெளி குறித்த அதிகார வரம்பு (Jurisdiction with regards to Outer-Space) ஆகும்

தொடரும்...

Lr.C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com