ஒரு நாட்டிற்கு கடலில் உள்ள அதிகாரங்கள் என்னென்ன..?

ஒரு நாட்டிற்கு கடலில் உள்ள அதிகாரங்கள் என்னென்ன..?

ஒரு நாட்டிற்கு கடலில் உள்ள அதிகாரங்கள் என்னென்ன..?

சர்வதேசக் கடல் சட்டம் (International Law of Sea)


    சர்வதேசச் சட்டத்தின் பார்வையில் ஒரு நாட்டின் ஆள்நில எல்லையும் அதிகாரவரம்பும் அதன் நிலப்பகுதியை ஒட்டியுள்ள கடல் பரப்பு வரையிலும் நீளக் கூடியதாகும் கற்கரையிலிருந்து ஆழ்கடல் வரை பறந்து விரிந்துள்ள கடற்பரப்பின் மீது கரையோர நாடுகளுக்கும் சர்வதேச நாடுகளுக்கும் இருக்கும் அதிகாரவரம்பு பற்றிய சர்வதேச விதிகளே சர்வதேசக் கடல் சட்டம் என்று பொதுவாக அழைக்கப்படுகிறது.

    உலகின் நிலப்பரப்பு முழுவதும் நான்கில் மூன்று பங்கு கடல் நீரால் சூழப்பட்டுள்ளது.  ஆனால் இவ்வுலகை “ஆழி சூழ் உலகு” என்பது வழக்கம். சர்வதேசக் கடல் சட்டம், முழுக்கடல் பரப்பையும் எல்லையோரக் கடல்கள் (Territorial Seas), ஆழ்கடல்கள் (High Seas) என்றும் இருவகையாகப் பிரிக்கின்றது. எல்லையோரக் கடல்களுக்கும் ஆழ்கடல்களுக்கும் இடையில், எல்லையோரக் கடல்களுக்கும் ஆழ்கடல்களுக்கும் இடையில் எல்லையோரக் கடலை அடுத்த மண்டலம் (Contiguous zone), நீரிணைகள் (Straits) கண்டத் திட்டுகள் (Continental Shelf) மற்றும் தனியுரிமைப் பொருளாதார மண்டலம் (Exclusive Economic Zone) ஆகிய பகுதிகளாகப் பிரித்து அதற்கான விதிகளையும் வகுத்துள்ளது. 

கடல் சட்டத்தின் வளர்ச்சி


    கடந்த பல பத்தாண்டுகளில் சர்வதேசக் கடல் சட்டத்தைப் போன்று புரட்சிகரமான மாறுதல்களுக்கு உள்ளான சர்வதேசச் சட்டத்தின் பிரிவு வேறொன்றும் இல்லை என்றால் மிகையில்லை. ஏனெனில் கடல் சட்டத்தின் வளர்ச்சி மிக சமீப காலத்தியதே ஆகும். 17 ஆம் நூற்றாண்டு தொடங்கி 20 ஆம் நூற்றாண்டின் முதற் பாதி வரையிலும் உலகம் முழுவதிலும் உள்ள கடல்களின் சட்டம் “கடல்களின் சுதந்திரம்” (Freedom of Seas) என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில் அமைந்திருந்தது. அதாவது எந்தவொரு நாட்டின் தலையீடோ, சர்வதேசச் சட்ட விதிகளின் கட்டுப்பாடுகளோ இல்லாமல் அனைத்து நாடுகளும் சுதந்திரமாக கடல்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற நிலையே இருந்தது. ஹியூகோ க்ரோஷியஸ் (Hugo Grotius) தொடங்கி அக்காலகட்ட சட்டவியலாயர்கள் அனைவரும் பரந்து விரிந்த கடல்கள் எந்த நாட்டுக்கும் சொந்தமானவை அல்ல என்றே கூறி வந்தனர்.


    20 நூற்றாண்டின் பிற்பாதியில் குறிப்பாக இரண்டாம் உலகப் போருக்குப் பிந்திய உலக அரசியல் நிலைமைகளின் பின்னணியில் இந்த நிலைமை மாறத் துவங்கியது.  கடலோர நாடுகள் தங்கள் எல்லைகளை ஒட்டிய கடல் பிரதேசத்தில் ஆள்நில அதிகாரவரம்பு கோரத் துவங்கின. அதுவரையிலும் கட்டற்ற கடல் சுதந்திரங்களை அனுபவித்த வல்லரசு நாடுகள் அதனை எதிர்க்கக் துவங்கின.  முடிவில் சர்வதேச மாநாடுகள் மூலம் சர்வதேசக் கடல் சட்டம் மறுவரையறை செய்யப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

அரசியல் - பொருளாளதாரப் பின்னணி (Politico-Economic Background)


    இரண்டாம் உலகப் போரின் முடிவில் ஆகிய, ஆப்பிரிக்கா நாடுகள் பலவும் புதிதாக விடுதலை பெற்றன. அவ்வாறு புதிதாக விடுதலை பெற்ற நாடுகள், தங்களது நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களை முன்னிட்டு, தங்கள் எல்லையோரக் கடல்களில் தங்களுக்கு மட்டுமே அதிகாரவரம்பு உள்ளது என்று அறிவிக்கத் தொடங்கின. இதனால், அது நாள் வரை கடலில் எல்லையற்ற சுதந்திரத்தை அனுபவித்து வந்த வளர்ச்சியடைந்த அமெரிக்க, ஜரோப்பிய நாடுகளுக்கும் புதிதாக விடுதலையடைந்த நாடுகளுக்கும் முரண்பாடுகள் எழுந்தன. இதன் காரணமாக கட்டுப்பாடுகளற்ற கடல் சுதந்திரம் என்னும் பழைய கண்ணோட்டம் காலத்திற்குப் பொருந்தாததாக ஆகிவிட்டது. புதிய உலக அரசியல் நிலைமைகளுக்கு ஏற்ப கடல் சட்டத்தை புதிதாக மறு வரையறை செய்யய வேண்டிய அவசியம் ஏற்பட்டது.  இதற்காகவே 1958 இல் கடல் சட்டம் பற்றிய ஜெனிவா மாநாடும், 1960 இல் மற்றொரு ஜெனிவா மாநாடும் நடத்தப்பட்டது.


    இவ்விரண்டும் மாநாடுகளுக்குப் பின்னர், அதாவது 1960 களுக்குப் பின்னர் விஞ்ஞான – தொழில் நுட்ப வளர்ச்சியில்பெரும் வளர்ச்சி ஏற்பட்டது. இவ்வளர்ச்சியின் காரணமாக ஆழ்கடலில் கடலடித்தளத்தில் கிடைக்கும் தாதுக்கள் மற்றும் இயற்கை வளங்களை கண்டறிவதும் தோண்டி எடுப்பதும் சாத்தியமாயிற்று. இதனால் கடல்களின் பொருளாதாரம் மீன் வளத்தையும் தாண்டி தாது வளம் சார்ந்தவையாக மாறியது. குறிப்பாக மாங்கனிஸ், நிக்கல், தாமிரம் மற்றும் கோபால்ட் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட உலோகங்கள் அடங்கிய மாங்கனீஸ் திரளைக் கற்கள் (Maganese Nodules) கடலடித்தளத்தில் அபரிமிதமாகக் கிடைப்பது கண்டறிப்பட்டது. இந்த உலோகங்கள் யாவும் அடிப்படைத் தொழில்களுக்கு அவசியமான தாதுக்களாகும்.  இவற்றின் தேவை வளர்ச்சியடைந்த நாடுகளில் அதிகம் இருந்தது.  அத்தேவையை பூர்த்தி செய்யும் நாடுகளாக வளரும் நாடுகளாகிய கடலோர நாடுகள் இருந்தன.  அவை இக்கடல் வளங்கள் மீது முழு உரிமை கோரின.


    எனவே சர்வதேசக் கடல் சட்டத்தை முழுமையாக மறுபரிசீலனை செய்து–மறு வரையறைக்கு உட்படுத்தி சர்வதேசக் கடல் சட்டத்தை புதிதாகத் தொகுக்க வேண்டியது அவசியம் என்று உணரப்பட்டது.  அதன் காரணமாகவே 1982 ஆம் ஆண்டில், கடல் சட்டம் பற்றிய ஐ.நா. மாநாடு கூட்டப்பட்டு சர்வதேசக் கடல் சட்டம் இறுதியாக வரையறுக்கப்பட்டது.  அதுவே இன்றுவரை சர்வதேச நாடுகளால் ஒப்புக் கொள்ளப்பட்ட கடல் சட்டமாக இருந்து வருகிறது.

கடல் சட்டம் பற்றிய சர்வதேச மாநாடுகள்  (International Convention on the Law of Sea)

கடல் சட்டம் பற்றிய ஜெனிவா மாநாடு, 1958 (Geneva Conference on Law of Sea) நாடுகளின் கடல் பரப்பின் மீதான உரிமைக்  கோரிக்கைகளுக்குத் தீர்வு காணும் நோக்கத்துடன் 1958-இல் ஜெனிவாவில் கடல் சட்டம் பற்றிய சர்வதேச மாநாடு கூட்டப்பட்டது. இம்மாட்டின் முடிவில் நான்கு தீர்மானங்கள் ஏற்கப்பட்டன.  அவை: 

(i) எல்லையோரக் கடல் மற்றும் எல்லையோரக் கடலை அடுத்த மண்டலம் பற்றிய மாநாட்டுத் தீர்மானம் 
(ii) ஆழ்கடல்கள் பற்றிய மாநாட்டுத் தீர்மானம் 
(iii) மீன்பிடித்தல் மற்றும் வாழ்வாதார வளங்களைப் பாதுகாத்தல் பற்றிய மாநாட்டுத் தீர்மானம்
(iv) கண்டத்திட்டு பற்றிய மாநாட்டுத் தீர்மானம் 

(i) எல்லையோரக் கடல் மற்றும் எல்லையோரக் கடலை அடுத்த மண்டலம் பற்றிய மாநாட்டுத் தீர்மானம் (Convention on the Territorial Sea and Contiguous Zone)
    எல்லையோரக் கடல் மற்றும் எல்லையோரக் கடலை அடுத்த மண்டலம் பற்றிய மாநாட்டுத் தீர்மானத்தில் எல்லையோரக் கடலின் அகலத்தை அளப்பதற்கான அடிப்படைகள் வரையறுக்கப்பட்டன.  இதன்படி, எல்லையோரக் கடலின் அகலத்தை அளப்பதற்கான சாதாரண அடிப்படை எல்லைக் கோடு அந்தக் கடற்கரைக்கு இணையாகச் செல்லும் தாழ்நிலை நீர் எல்லைக் கோடாவே இருக்கும்.

   மேலும் இத்தீர்மானத்தில் எல்லையோரக் கடலை அடுத்த மண்டலம் எவ்வளவு அகலம் என்பதும் தீர்மானிக்கப்பட்டது. இதன்படி எல்லையோரக்கடலை அடுத்த மண்டலத்தின் பரப்பு, எல்லையோரக் கடலை அளப்பதற்கான அடிப்படைக் கோடாடாகிய நீர் எல்லையில் இருந்து 12 கடல் மைல்கள் வரை உள்ள கடல் பகுதியாகும். அத்துடன் எல்லையோரக் கடல் மற்றும் அதனை அடுத்த கடல் மண்டலத்தின் மீது கரையோர நாட்டிற்கு இருக்கும் அதிகாரவரம்பு பற்றிய கொள்கையினையும் இம்மாநாட்டுத் தீர்மானம் வரையறுத்தது.

(ii) ஆழ்கடல்கள் பற்றிய மாநாட்டுத் தீர்மானம் (Convention on the High Seas)
    ஆழ்கடல்கள் பற்றிய மாநாட்டுத் தீர்மானம், ஆழ்கடல்கள் பற்றிய சர்வதேச வழக்காறுகளைத் தொகுத்து வரையறுத்தது எனலாம். அத்தீர்மானத்திலேயே ஆழ்கடல்களின் சுதந்திரங்கள் (freedom of High Seas) வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

(iii) மீன்படித்தல் மற்றும் வாழ்வாதார வளங்களைப் பாதுகாத்தல் பற்றிய மாநாட்டுத் தீர்மானம்(Convention on Fishing and Conservation of Living Resources)
      இத்தீர்மானம் ஆழ்கடலில் மீன்பிடிக்கும் உரிமை தொடர்பாகவும் ஆழ்கடலின் வாழ்வாதார வளங்களைப் பாதுகாக்க வேண்டிய நாடுகளின் பொறுப்புநிலை குறித்தும் கூறுகின்றது. இதன்படி, அனைத்து நாடுகளுக்கும் ஆழ்கடலில் தங்கள் நாட்டு குடிமக்கள் மீன்பிடித்துக் கொள்வதற்கான உரிமை உள்ளது.  ஆனால் அவ்வுரிமை நிபந்தனைகளுக்கு உட்பட்டதாகும்.  அதாவது

(a) அந்நாடுகளின் உடன்படிக்கையின் பாற்பட்ட கடப்பாடுகள், (b) கரையோர நாடுகளுக்கு இருக்கும் உரிமைகளட மற்றும் நலன்கள், (c) இம்மநாட்டுத் தீர்மானத்தின் பிற வகை முறைகள் ஆகியவற்றுக்கு உட்பட்டு அனைத்து நாடுகளின் குடிமக்களுக்கும் ஆழ்கடலில் மீன்பிடிக்கும் உரிமை உண்டு என்று இம்மாநாட்டுத் தீர்மானம் கூறுகின்றது.

(iv) கண்டத்திட்டு பற்றிய மாநாட்டுத் தீர்மானம் (convention on the Continetal Shelf)             கண்டங்களின் கரையோரங்களை அண்டி அமைந்துள்ள திட்டான பகுதி கண்டத் திட்டு எனப்படுகின்றது. இது ஆழம் குறைந்த கடற்பரப்பினால் மூடியிருக்கும். கண்டத்திட்டு முடியும் இடத்தில் பெரும்பாலும் சடுதியான சரிவு காணப்படும். இது திட்டுமுடிவு (shelf break) ஆகும். திட்டு முடிவுக்குக் கீழ்க் கண்டச் சரிவு (continental slope) என அழைக்கப்படும் பகுதியும் அதற்கும் கீழே கண்ட எழுச்சியும் (continental rise) காணப்படும். இக் கண்ட எழுச்சி இறுதியில் கடல் மிக ஆழமான கடலடித்தளத்துடன் (abyssal plain) சேரும் கண்டத்திட்டு பற்றிய மாநாட்டுத் தீர்மானம் கண்டத்திட்டு என்பதை வரையறுத்ததுடன் கண்டத்திட்டு பற்றிய விதிகளையும் தொகுத்தது.  இதன்படி கண்டத்திட்டின் இயற்கை வளங்கள் மீது கரையோர நாட்டிற்கும் இருக்கும் இறையாண்மை உரிமை அங்கீகரிப்பட்டது.  

கடல் சட்டம் பற்றிய ஜெனிவா மாநாடு, 1960
    எல்லையோரக் கடலின் அகலத்தை நிர்ணயிப்பதற்காக 1960 ஆம் ஆண்டில் ஜெனிவா மாநாடு கூட்டப்பட்டது.  ஆனால் அம்மமாநாட்டில் அது பற்றி எந்த முடிவும் எட்டப்படாததால் அது தோல்விடைந்தது.


கடல் சட்டம் பற்றிய ஐ.நா. மாமநாடு, 1982 (U.N. Convention on the law of Sea,1960)
    கடல் சட்டம் பற்றி 1958 இலும் ஆக இரண்டு மாமநாடுகள்  நடத்தப்பட்ட போதிலும் கடல் பரப்பு மீதான அதிகாரவரம்பு தொடர்பாக நாடுகளுக்கு இடையே எழுந்த பிரச்சனைகள் முழுமையாகத் தீர்க்கப்படவிலலை.  அதிலும் குறிப்பாக 1958 ஆம் ஆண்டு மாநாட்டில் நான்கு தீர்மானங்கள் ஏற்கப்பட்டிருந்தாலும்

a) எல்லையோரக் கடலில் உள்ள நீரிணைப்புகள் வழியாக எல்லாக் காலங்களிலும் போர்க் கப்பல்கள் சென்று வர அனுமதிப்பது, 
b) தீவுக் கூட்ட நாடுகளின் கடல் எல்லைகள்
c) கடல் வாழ் உயிரினங்களைப் பாதுகாத்தல் போன்றவை தொடர்பாக உடன்பாடுகள் எதுவும் எட்டப்படவில்லை.
 


    மேலும் 1958 ஆம் ஆண்டு மாநாட்டில் ஏற்கப்பட்ட நான்கு தீர்மானங்களையும் எல்லா நாடுகளும் முழுமையாக ஏற்று நடைமுறைப்படுத்தவில்லை. சில நாடுகள் அந்நான்கினுள் சிலவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து நடைமுறைப்படுத்தின. இவற்றின் காரணமாக 1958 ஆம் ஆண்டு மாநாடு அதன் நோக்கத்தில் முழு வெற்றி பெறவில்லை. எனவே கடல் சட்டம் பற்றிய மூன்றாவது மாநாடு கூட்டப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. 1970, டிசம்பர், 17 அன்று ஐ.நா. வின் பொதுசபையில்  இரண்டு  முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  அவை:
(i) தேசிய அதிகாரவரம்பிற்கு அப்பால் உள்ள கடல் அடித்தளம் (Sea bed) கடல் தரை (Ocean floor) மற்றும் அடி மண் (Subsoil) தொடர்பான கோட்பாடுகள் பற்றிய அறிக்கை.
(ii) கடல்சட்டம் பற்றிய மூன்றாவது ஐ. நா. மாநாட்டை நடத்துவது என்று முடிவு செய்யப்படுகிறது.


    அதன்படி மூன்றாவது மாநாட்டின் (UNCLOS) முதல் அமர்வு 1773, டிசம்பர் 3 முதல் 15 தேதிகளில் நியூயர்க்கில் நடைபெற்றது.  அதன்பிறகு 1982 வரை பத்து அமர்வுகளாக நடைபெற்ற அம்மாநாட்டின் இறுதியில் 1982 ஏப்ரல் 30 அன்று கடல் சட்டம் பற்றிய ஐ. நா. மாநாட்டுத் தீர்மானம் ஏற்கப்பட்டது.  தீர்மானத்திற்கு ஆதரவான 130 நாடுகளின் பெரும்பான்மை ஆதரவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  அமெரிக்க, இஸ்ரேல், துருக்கி, வெனிலா ஆகிய நாடுகள் அதற்கு எதிராக வாக்களித்தன.  சோவியத் யூனியன், பிரிட்டன், பெல்ஜியம், நெதர்லாந்து, இத்தாலி, மேற்கு ஜெர்மனி ஆகிய நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. 1982 செப்டம்பர் மாதத்தில் அம்மாநாட்டுத் தீர்மானத்தில் நாடுகள் ஒப்பமிடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
    1982, டிசம்பர் 10  அன்று ஜமைக்காவில் உள்ள மான்டிகோபே (Montergo bay) என்னுமிடத்தில் அம்மாநாட்டுத் தீர்மானம் நாடுகளால் கையொப்பமிடப்பட்டது. அப்போது சோவியத் யூனியன் தீர்மானத்தை ஏற்றுக் கொள்வதாக அறிவித்தது. இறுதியாக 119 நாடுகள் தீர்மானத்தை ஏற்றுக் கொண்டு ஒப்பமிட்டன.  இரண்டு ஆண்டுகள் வரை ஒப்பமிடக் கால அவகாசம் வழங்கப்பட்டது.  1988 நவம்பர் நிலவரப்படி 159 நாடுகள் ஒப்பமிட்டிருந்தன.  அதில் 60 நாடுகள் தீர்மானத்தை மறு ஏற்புறுதி செய்திருந்தன.  எனவே 60 வது நாடாக கயானா ஏற்புறுதி செய்த நாளான 1994 நவம்பர் 16 முதல் இம்மாநாட்டுத் தீர்மானம் செயலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது.  இந்தியா 1996 ஜீன் 29 அன்று ஏற்புறுதி செய்தது.
    ஆனால் முன்னேறிய நாடுகளான அமெரிக்க ஐக்கிய நாடுகள் இங்கிலாந்து, பெல்ஜியம், மேற்கு ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான்,நெதர்லாந்து போன்ற நாடுகள் அதில் ஒப்பமிட மறுத்துவிட்டன. இருப்பினும் பெரும்பான்மை முடிவின் அடிப்படையில் மாநாட்டுத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு செயலுக்குக் கொண்டு வரப்பட்டது. சர்வதேசச் சட்டத்தின் வரலாற்றில் முன்னேறிய வல்லரசு நாடுகளின் விருப்பத்திற்கு விரோதமாக வளரும் நாடுகாளால் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்ட ஒரே மாநாட்டுத் தீர்மானம் என்ற பெருமையையும் 1982 ஆம் ஆண்டு கடல் சட்டம் பற்றிய ஐ. நா. மாநாடு பெற்றது.

கடல் சட்டம் பற்றிய ஐ. நா. மாநாடு 1982 - இன் முக்கிய அம்சங்கள்
    1982 ஆம் ஆண்டு கடல் சட்டம் பற்றிய ஐ.நா. மாநாட்டுத்  தீர்மானம் 320 ஷரத்துகளைக் கொண்டதாகவும் 17 பாகங்களாகப் பிரிக்கப்பட்டும் உள்ளது. அதனுடன் 9 இணைப்புகள் இணைக்கப்பட்டுள்ளன. அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:
1) இம்மாநாட்டுத் தீர்மானத்தில் எல்லையோரக் கடலின் அகலம் 12 கடல் மைல்கள் என்பது பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.  
2) தீங்கற்ற பாதையுரிமை (Right of Innocent Passage) கூடுதல் துல்லியத்துடனும் கூடுதல் விரிவுடனும் வரையறுக்கப்பட்டது.  
3) “தனியுறுமை பொருளாதார மண்டலம்” (Exclusive Economic Zone) எனும்புதிய கருத்தாக்கம் ஏற்றுக் கொள்ளப்பட்டு கரையோர நாடுகளின் கடற்கரையிலிருந்து 200 கடல் மைல்கள் வரை உள்ள பகுதி அந்நாட்டின் தனியுரிமை பொருளாதார மண்டலமாக ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.  

4) “எல்லையோயக் கடலை அடுத்த மண்டலம்” (contiguous Zone) எனும் பகுதி வரையறுக்கப்பட்டு அதில் கரையோர நாடுகளுக்கு, அதன் வழக்காறுகள், சட்டங்களை மீறுபவர்களை தண்டிப்பதற்கும் தடுப்பதற்குமான அதிகாரவரம்பு வழங்கப்பட்டுள்ளது.
5) சர்வதேசக் கடல் போக்குவரத்திற்குப் பயன்படும் நீரிணைகளுக்கான சிறப்பு அதிகார அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. 
6) “தீவுக் கூட்டங்களின் கோட்பாடு” (Archipelagic principle) அங்கீகரிக்கப்பட்டது. அதன்படி தீவுக் கூட்டங்களில் உள்ள தீவுகளைச் சுற்றிலும், தீவுகளுக்கு இடையிலும் தீவுகளை இணைக்கும் வகையிலும் இருக்கும் அனைத்து நீர்களும், அத்தீவுக் கூட்டங்களின் மீது இறையாண்மை  அதிகாரம் பெற்ற நாட்டின் உள்நாட்டு நீர்களாகும். 

7) கடல் சுற்றுச் சூழலின் மாசுக் கட்டுப்பாட்டுக் கொள்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
8) ஆழ்கடல்களின் உயிர் வளங்களை மேலாண்மை செய்வதிலும் பாதுகாப்பதிலும் நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு பற்றிய கோட்பாடுகள் ஏற்றுக் கொள்ளப்பட்டது 
9) நான்கு புறமும் நிலப்பகுதிகளால் சூழப்பட்ட நாடுகளுக்கும் (Locked states) கடல் வரை உள்ள இடைப்பட்ட நாடுகளுக்கும் (transit states)இடையே உள்ள உறவுகளை வழிப்படுத்தும் சிறப்பு அதிகார அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.

10) தேசிய அதிகாரவரம்பிற்கு அப்பால் உள்ள ஆழ்கடல் பரப்பின் இயற்கை வளங்களை பாதுகாக்கவும்  நாடுகளுக்கிடையே தகைமை நெறிப்படி பகிர்ந்தளிக்கவும் அதிகாரம் படைத்த சர்வதேசக் கடலடித்தள அதிகார அமைப்பு (International Sea bed Authority) ஒன்றை ஏற்படுத்துவது குறித்த கோட்பாடுகள் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டது அம்மாநாட்டின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். 

முன்னேறிய நாடுகளுடனான ஐ. நா. வின் உடன்பாடு (1994)
     1982 ஆம் ஆண்டு கடல் சட்டம் பற்றிய ஐ. நா. மாநாட்டுத் தீர்மானம்,  முன்னேறிய நாடுகளின் தேசிய அதிகாரவரம்பிற்கு அப்பால் உள்ள ஆழ்கடலின் கடலடித்தன வளங்களை முன்னேறிய நாடுகள் சுரண்டுவதற்கு பல கட்டுப்பாடுகளை விதித்தது. கடலடித்தள சுரங்கத்தின் மூலம் கிடைக்கும் வருவாயை கரையோர நாடுகளுக்கும் பங்கிட்டுத் தர வேண்டும் என்று கூறியது. இதனால் அமெரிக்கா, இங்கிலாந்து, பெல்ஜியம், பிரான்ஸ், மேற்கு ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் நெதர்லாந்து ஆகிய முன்னேறிய நாடுகள், அதில் கையொப்பமிட மறுத்ததுடன் கடலடித்தள வளங்கள் தொடர்பாக தங்களுக்குள் ஒரு உடன்படிக்கையை ஆகஸ்ட் 3 அன்று ஏற்படுத்திக் கொண்டன. இவ்வுடன்படிக்கை சிறு உடன்படிக்கை(Mini Treaty) என அழைக்கப்படுகிறது. அதாவது 1982 ஆம் ஆண்டு ஐ. நா. மாநாட்டை பெரு உடன்படிக்கை (Maxi treaty) எனக்கொண்டால் அதற்கு மாறான முனனேறிய நாடுகளின் இந்த உடன்படிக்கை சிறு உடன்படிக்கை எனப்பட்டது.

    முன்னேறிய நாடுகளின் 1984 ஆம் ஆண்டு  சிறு  உடன்படிக்கை, ஐ. நாவின்1982 ஆம் ஆண்டு பெரு உடன்படிக்கை ஷரத்துக்களுக்கு விரோதமானதாக இருந்தது. அதாவது, 1982 ஆம் ஆண்டின் ஐ.நா. மாநாட்டுத் தீர்மானம், ஷரத்து 137(3) இன்படி, இதன் XI-வது பகுதியின் வகைமுறையின் படி அல்லாமல் கடலடித்தள வளம் மீதான கோருரிமைகள்  எதுவும் அங்கீகரிக்கப்படாது.  ஆனால் முன்னேறிய நாடுகள் சிறு உடன்படிக்கையின் மூலம் கடலடித்தள வளம் தொடர்பாக தங்களுக்குள் பிரத்யேகமான ஏற்பாட்டை செய்து கொண்டிருந்தனர்.  இந்த முரண்பாடுகளைக் களைவதற்காக ஐ.நா. பொதுச் செயலாளர் மேற் கொண்ட தொடர்ச்சியான முயற்சியின் விளைவாக 1982 ஆம் ஆண்டு ஐ. நா. மாநாட்டைத் தீர்மானத்தின் XI-வது பகுதியை அமல்படுத்துவது தொடர்பாக 1994 ஜீலை 28-இல் முன்னேறிய நாடுகளுடன் ஒரு உடன்பாடு  எட்டப்பட்டது.  அவ்வுடன்பாடு 1994 ஆகஸ்ட்17 இல் ஐ. நா. பொது சபையின் தீர்மானத்தின் மூலம் ஏற்கப்பட்டது. அவ்வுடன்படிக்கையின்படி, கடலடித்தள வளம் தொடர்பான முன்னேறிய நாடுகளின் கவலைகளுக்கு தீர்வு காணப்பட்டது.  அதன் பிறகு அடிமரிக்காவைத் தவிர பிற முன்னேறிய நாடுகள் யாவும் 1982 ஆம்ஆண்டு ஐ.நா. மாநாட்டுத் தீர்மானத்தை ஏற்றுக் கொண்டு ஒப்பமிட்டன.

    அதன்பிறகு 1982 ஆம் ஆண்டு கடல் சட்டம் பற்றிய ஐ. நா. மாநாட்டுத் தீர்மான விதிகளே சர்வதேசக் கடல் சட்டத்தின் அரசமைப்பு (Constitution) போல் ஆகிவிட்டன.  அவற்றை சர்வதேச நாடுகள் பின்பற்றத் தொடங்கிவிட்டதால் அதன் விதிகள் கடல் சட்டம் பற்றிய வழக்காறுகளாகவும் நிலைபெறத் தொடங்கிவிட்டன.  இன்று 1982 ஆம்  ஆண்டின் கடல் சட்டம் பற்றிறய ஐ. நா. மாநாட்டு விதிகள் உலகளாவிய விதிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. அது கடல்சட்டம் பற்றிய வழக்காற்றுச் சட்டத்தின் முழுமையான தொகுப்பாகவும் கருதப்படுகிறது.

தொடரும்...

Lr.C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com