எல்லையோரக் கடல் பற்றிய சர்வதேசச் சட்டம்

எல்லையோரக் கடல் பற்றிய சர்வதேசச் சட்டம்

எல்லையோரக் கடல் பற்றிய சர்வதேசச் சட்டம் 
(International Law on Territorial Sea)

எல்லையோரக் கடல், தீவுகள், தீவுக்கூட்ட நாடு நீரிணைகளில் ஒரு நாட்டின் உரிமைகள் என்னென்ன?

எல்லையோரக் கடல் அல்லது எல்லையோரக் கடல் சுற்று (Territorial Sea or Maritime Belt)
    ஒரு கடற்கரையோர நாட்டினை ஒட்டி இருக்கும் கடல் பகுதியே எல்லையோரக்கடல் அல்லது எல்லையோரக் கடல் சுற்று எனப்படும் என்று 1958 ஆம் ஆண்டு எல்லையோரக் கடல்கள் மற்றும் எல்லையோரக்கடலை அடுத்த மண்டலம் பற்றிய ஜெனிவா மாநாட்டுத் தீர்மானம் வரையறுக்கின்றது. எல்லையோரக் கடல் மீது அதன் கரையோர நாடே இறையாண்மை அதிகாரம் பெற்றிருக்கும். கரையோர நாட்டிற்கு எல்லையோரக் கடல் மீது மட்டுமின்றி அக்கடலின் மேலாகச் செல்லும் வான் பரப்பின் மீதும் அக்கடலடித்தளம்  மற்றும் கடலடி மண் மீதும் இறையாண்மை அதிகாரம் உண்டு.

எல்லையோரக் கடல் பற்றிய கருத்தாக்கத்தின் வளர்ச்சி
    ஆரம்ப காலத்தில் கடற்கரையோர நாடுகள் தங்கள் நாட்டின் கடற்கரையில் இருந்து ஆழ்கடல் வரை தங்களது இறையாண்மை அதிகாரத்தை நிலைநாட்டினர்.  அப்போது எல்லையோரக் கடல் எனும் கருத்தாக்கம் கிடையாது. காலப்போக்கில் குறிப்பாக 19 ஆம் நூற்றாண்டுகளில் சர்வதேசக்கடல் வணிகம் பெருகிய போது ஆழ்கடல் மீது சர்வதேச நாடுகள் உரிமை கோரியதன் விளைவாக கரையோர நாடுகளின் இறையாண்மை படிப்படியாகச் சுருங்கி ஆழ்கடலின் சுதந்திரம் நிலையாட்டப்பட்ட சர்வதேசக் கோட்பாடாக ஆனது.
    ஆனால் கரையோர நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களின் பொருட்டு, ஆழ்கடலின் சுதந்திரம் பற்றிய கோட்பாட்டுடன் சேர்ந்தே எல்லையோரக் கடல் எனும் கருத்தாக்கமும் உருவாக்கி வளர்க்கப்பட்டது. இன்று எல்லையோரக் கடல் மட்டுமே கரையோர நாட்டின் இறையாண்மை அதிகாரம் செயல்படும்.

எல்லையோரக் கடலின் அகலம் தொடர்பான பிரச்சனைகள் (Problems of Breadth of Territorial Waters)


கார்னீலியஸ் வான் பைன்கர்ஷாக்

    கரையோர நாட்டிற்கு ஆழ்கடலின் மீதிருந்த இறையாண்மை உரிமை, எல்லையோரக்கடல் வரை மட்டுமானதாக சுருக்கப்பட்ட போது, அதன் எல்லை எதுவரை என்ற கேள்வி எழுந்தது.   கார்னீலியஸ் வான் பைன்கர்ஷாக் (Cornelius van Bynkershoek) ஒரு பீரங்கியால் சுடம் போது குண்டு விழும் தூரமே எல்லையோரக் கடலின் அகலம்  என்றார்.  18 ஆம் நூற்றாண்டு வரையிலும் பீரங்கியின் சுடும் தூரம் 3 மைல்களாக இருந்தது.  எனவே எல்லையோரக் கடலின் அகலமும் 3 மைல்களாகவே கொள்ளப்பட்டது.  19 ஆம் நூற்றாண்டு வரை 3 மைல் அகலமே ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது. பின்னர் விஞ்ஞான வளர்ச்சின் விளைவாக பீரங்கி சுடும் தூரம் அதிகரித்ததனால் பீரங்கி சுடும் தூரம் மூலம் எல்லையோரக் கடலின் அகலத்தை நிர்ணயிக்கும் கோட்பாடு பொருத்தமற்றதாக ஆகிவிட்டது. 


    மேலும் கரையோர நாடுகள் எல்லையோரக் கடலின் அகலத்தை அதிகரிக்க வேண்டும் என்று கோரத் துவங்கின.  ஆனால் வளர்ச்சியடைந்த வல்லரசு நாடுகள், தங்கள் ஆழ்கடல் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் எல்லையோரக் கடலின் அகலம் 3 மைல்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்று வலியுறுத்தின. கரையோர நாடுகளின் இப்பிரச்சனையைத் தீர்ப்பதற்கான முதல் முயற்சி 1930-இல் ஹேக் சர்வதேசச் சட்டத் தொகுப்பு மாநாட்டில் மேற்கொள்ளப்பட்டது.  3 மைல்கள் அகலம் என்பது அதிகரிக்கப்பட வேண்டும் என்று பெரும்பாலான நாடுகள் ஒப்புக் கொண்டாலும் அதன் அகலம் எவ்வளவு இருக்க வேண்டும் என்பதில் உடன்பாடு எதுவும் எட்டப்படாததால் அம்முயற்சி தோல்வியில் முடிந்தது.

    1958 ஆம் ஆண்டு கடல் சட்டம் பற்றிய ஜெனிவா மாநாட்டிலும் 1960 ஆம் ஆண்டு ஜெனிவா மாநாட்டிலும் எல்லையோரக் கடலின் அகலம் தொடர்பாக சர்வதேச நாடுகளிடையே ஒருமித்த கருத்து எதுவும் எட்டப்படவில்லை.  பல்வேறு நாடுகளின் நிலை 3 மைல்களுக்குக்கும் 12 மைல்களுக்கும் இடையில் வெவ்வேறு தூரங்களைக் கொண்டதாக இருந்தது. பெரும்பாலான நாடுகள் 12 மைல்கள் என்பதை ஏற்றுக் கொண்டன.  மாநாட்டின் உடன்பாடு எதுவும் எட்டப்படாவிட்டாலும் எல்லையோரக் கடலின் அகலம் 12 மைல்கள் என்பது சர்வதேச வழக்காற்றுச் சட்டமாக நிலை பெறத் துவங்கியது கரையோர நாடுகளில்பல தங்கள் உள்நாட்டுச் சட்டங்களின் மூலம் தங்கள் நாட்டின் எல்லையோரக் கடலின் அகலத்தை 12 மைல்கள் வரை அதிகரித்தும் கொண்டன.  ஆனால் நார்வே மீன்பிடி வழக்கல் (Norwegian Fisheries) சர்வதேச நீதிமன்டம் கூறியதைப் போல, எல்லையோரக் கடலின் அகலத்தை அந்நதந்த நாடுகள் தங்களது உள்நாட்டுச் சட்டத்தின் மூலம் நிர்ணயித்துக் கொள்ள முடியும் என்றாலும் அது சர்வதேசச் சட்டத்தால் முடிவு செய்யப்பட வேண்டிய சர்வதேசப் பிரச்சனையாகும்.


    எல்லையோரக் கடலின் அகலம் தொடர்பான பிரச்சனைக்கு இளுதியாக 1982 ஆம் ஆண்டு கடல் சட்டம் பற்றிய ஐ.நா. மாநாட்டின் மூலம் தீர்வு காணப்பட்டது. இம்மாநாட்டுத் தீர்மானத்தின் 3 வது ஷரத்து, ஒவ்வொரு நாட்டிற்கு தங்களது எல்லையோரக் கடலின் அகலத்தை அதன் கடற்கரை அடி எல்லைக் கோட்டில் இருந்து 12 கடல் மைல்கள் வரை நீட்டிக் கொள்வதற்கு உரிமை உண்டு என்று கூறியது.  அதன்படி இன்று சர்வதேச அளவில் எல்லையோரக் கடலின் அகலம்12 மைல்கள் என்பதே நடைமுறையில் உள்ளது.

எல்லையோரக் கடலை அளக்கும் அடி எல்லைக் கோடு (Base Line measuring Territorial Sea)
    எல்லையோரக் கடலின் அகலமாக 12 மைல்களை கடற்கரையின் எந்த ஆதாரக் கோட்டை அடிப்படையாக வைத்து அளப்பது என்பது மற்றுமொரு சர்வதேசப் பிரச்சனையாக இருந்தது.  இது தொடர்பாக இருவேறு கருத்துக்கள் நிலவியது. வளைந்து நெளிந்து செல்லும் கடற்கரையின் தாழ்நிலை நீர் எல்லைக்கு இணையாகச் செல்லும் கோடே எல்லையோரக் கடலை அளக்கும் அடி எல்லைக் கோடாக இருக்க வேண்டும் என்பது ஒரு கருத்தாகும். அவ்வாறின்றி அது கடற்கரை செல்லும் பொதுவான போக்கின் அடிப்படையில் கடலுக்குள் நீட்டிக் கொண்டிருக்கும் நிலப்பகுதிகளை இணைக்கும் கோடே எல்லையோரக் கடலை அளக்கும் அடி எல்லைக் கோடாக இருக்க வேண்டும் என்பது மற்றொரு கருத்தாகும்.  நார்வே மீன்பிடி வழக்கில் சர்வதேச நீதிமன்றம் இரண்டாவது கருத்தையே ஏற்றுக் கொண்டது. 
    Anglo-Norwegian Fisheries case (1951)-என்ற வழக்கில், 1938 ஆம் ஆண்டு ஜூலையில் நார்வே தனது அரசாணையின் மூலம் தனது நாட்டின் மீன்பிடி மண்டலத்தை வரையறை செய்து வெளியிட்டது. அவ்வாறு வரையறுக்கும் போது, நிலத்திலும், நிலப்பகுதிக்கு அருகாமையில் இருக்கும் தீவுகள், பாறைகள் ஆகியவற்றின் மீது தேர்ந்தெடுக்கப்பட்ட 48 புள்ளிகளின் வழியாக வரையப்பட்ட அடி எல்லைக் கோட்டை அடிப்படையாகக் கொண்டு வரையறை செய்தது.  இந்த அடி எல்லைக் கோட்டிற்கும் அதற்கு இணையாக 4 மைல்கள் வரையுள்ள கோட்டிற்கும் இடைப்பட்ட  பகுதியே தன் நாட்டிற்கு மட்டும் உரிமையுள்ள மீன்பிடி மண்டலம் என நார்வே அறிவித்தது.  இதன் விளைவாக கடலின் ஒரு பெரும் பகுதியை மற்ற அண்டை நாடுகளை விலக்கிவிட்டு நார்வே தனியுரிமை கோரியது.  நார்வே வரைந்த அந்த அடி எல்லைக் கோடு  சர்வதேசச் சட்டத்திற்கு முரணானது என்று இங்கிலாந்து, ஆட்சேபனை தெரிவித்தது.  இப்பிரச்சனை சர்வதேச நீதிமன்றத்தின் விசாரணைக்கு அனுப்பப்பட்டது.  சர்வதேச நீதிமன்றம் நார்வே வரைந்த அடி எல்லைக் கோடு சர்வதேசச் சட்டத்திற்கு முரணானாது அல்ல என்று முடிவு செய்தது.


    அதன் பிறகு நடந்த 1958 ஆம் ஆண்டு கடல் சட்டம் பற்றிய ஜெனிவா மாநாட்டில் ஏற்கப்பட்ட எல்லையோரக் கடல் பற்றிய மாநாட்டுத் தீர்மானத்தில் இது  தொடர்பாக பின்வரும் கோட்பாடுகள் வகுக்கப்பட்டன: 


(i) எல்லையோரக் கடலின் அகலத்தை அளப்பதற்கான சாதாரணமான அடி எல்லைக் கோடு கடற்கரையை ஒட்டிச் செல்லும் தாழ்நிலை நீர் எல்லையாகவே இருக்கும்.
(ii) கடற்கரை ஆழமாக உட்குவிந்து அல்லது தொடர்ச்சி அறுபட்டு அல்லது கடற்கரையை ஒட்டி குட்டித் தீவுகள் அமைந்து இருக்கும் இடங்களில், தேர்ந்தெடுக்கப்பட்ட பொருத்தமான புள்ளிகள் வழியே செல்லும் நேரடி எல்லைக் கோடு (Strait Base Line) முறை பயன்படுத்தப்படும்.
(iii) அவ்வாறே நேரடி எல்லைக் கோடு முறை பயன்படுத்தப்படும் போது அப்பகுதியின் தனிப்பட்ட பொருளாதார நலன் கணக்கில் கொள்ளப்பட வேண்டும். அத்தகைய நலன்கள் நீண்டகால பழக்க மரபின் மூலம் நிரூபிக்கத்
தக்கதாக இருக்க வேண்டும். 
(iv) அடி எல்லைக் கோடு வரையும் போது கடற்கரையின் பொதுவான போக்கை விட்டு விலகிச் செல்லக் கூடாது. மேலும் அடி எல்லைக் கோட்டுக்கும் மேல் எல்லைக் கோட்டுக்கும் இடைப்பட்ட எல்லையோரக் கடல் அந்நாட்டின் நிலப்பகுதியுடன் நெருக்கமான தொடரில் இருக்க வேண்டும்.
(v) நேரடி எல்லைக் கோடு முறையைப் பின்பற்றி வரையும் போது அக்கோடு மற்றொரு நாட்டின் எல்லையோரக் கடலை ஆழ்கடலில் இருந்து துண்டிக்கும் வகையில் இருக்கக் கூடாது.

எதிரெதிர் அல்லது அடுத்தடுத்த நாடுகளுக்கு இடையிலான எல்லையோரக் கடல் எல்லையை நிர்ணயித்தல் (Delimitaion of Territorial Sea Between opposition or Adjacent states)
    1982 ஆம் ஆண்டு கடல் சட்டம் பற்றிய மாநாட்டு விதிகள், ஷரத்து 15 இன்படி, இரண்டு நாடுகளின் கடற்கரைகள், எதிரெதிராகவோ அடுத்தடுத்தோ அமைந்திருந்தால் அவ்விரு நாடுகளில் எதுவும், இரு நாட்டு கடற்கரைகளின் அடி எல்லைக் கோடுகளுக்கு இடைப்பட்ட கடலின் அகலத்தின் நடு மையத்திற்கும் மேற்பட்ட தூரத்திற்கு தங்கள் நாட்டு  எல்லையோரக் கடலின் அகலத்தை நிர்ணயிக்கக்கூடாது.  அதாவது அவ்விரு நாடுகளுக்கு இடைப்பட்ட கடல் பரப்பின் மொத்த அகலத்தில் சரி பாதி அகலத்திற்கு மேல் எந்தவொரு நாடும் தங்கள் நாட்டின் எல்லையோரக் கடலின் அகலத்தை நிர்ணயிக்கக் கூடாது.

எதிரெதிரில் இருக்கும் இரு நாடுகளுக்கு இடைப்பட்ட கடலின் அகலம் 12 மைல்களுக்கும் குறைவாக இருக்கும் போது இரு நாட்டின் எல்லையோரக் கடல்களின் அகலத்தை நிர்ணயிப்பதற்கு இந்த சமதூரக் (equidistance) கொள்கையே பயன்படுகிறது.  Qatar-Vs-Bahrain (2001) – என்ற வழக்கில் கத்தாருக்கும் பஹ்ரைனுக்கும் இடையில் உள்ள கடல் பரப்பில் இரு நாடுகளுக்கும் உரிய எல்லையோரக்கடலின் அகலத்தை நிர்ணயிப்பதற்கு சர்வதேச நீதிமன்றம் இக்கொள்கையையே பின்பற்றியது.

எல்லையோரக்  கடல்  மீதான  நாட்டின்  உரிமை (Right of State Over Territorial Sea)
    ஒவ்வொரு நாட்டிற்கும் தன்எல்லையோரக்கடல் மீது முழுமையான இறையாண்மை அதிகாரம் உண்டு.  அந்த அதிகாரவரம்பு, கடல் மீது மட்டுமின்றி கடலின் மேலே இருக்கும் வான் பரப்பு, கடலடித்தளம் மற்றும் கடலடி மண் ஆகியவற்றிலும் உண்டு.  எல்லையோரக் கடல்மீது கரையோர நாடு, தண்டனை அதிகாரவரம்பையும் பெற்றிருக்கும். கரையோர நாடு தன் எல்லையோரக் கடல் வழியாக செய்யப்படும் கரையோர வணிகத்தை (Cabotage) தன் நாட்டுக் குடிமக்களுக்கு மட்டுமேயான தனியுரிமையாக ஆக்கலாம் அதுபோல, எல்லையோரக் கடலின் மீன் பிடிக்கும் உரிமை தன் நாட்டு மக்களுக்கு மட்டுமே உரியதாக ஒதுக்கிக் கொள்ளலாம். ஆனால் ஒரு நாட்டின் எல்லையோரக் கடல் மீது மற்ற நாடுகளுக்கு தீங்கற்ற பாதையுரிமை (Innocent Passage) உண்டு. இருப்பினும் கரையோர நாடு அப்பாதையுரிமையினை ஒழுங்குபடுத்த விதிகளை ஆக்கலாம். 

எல்லையோரக் கடல் பற்றிய இந்தியாவின் நிலை (India’s Position on Territorial Sea)
          ஆரம்பத்தில் இந்தியா, தனது நாட்டின் எல்லையோரக் கடலின் அகலம்  3 கடல் மைல்களாக அங்கீகரித்திருந்தது.  இந்நிலை 1956 ஆம் ஆண்டு வரை நீடித்தது.  அதன் பிறகு 1956 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவரின் பிரகடனத்தின் மூலம்  அது 6 கடல் மைல்களாக அறிவிக்கப்பட்டது.  இந்நிலையில் 1960 களின் மத்தியில் இந்தியாவின் எல்லையோரக் கடல்பகுதியில் அதிகளவில் தோரியம் கிடைப்பது கண்டறியப்பட்டது. அதன் விளைவாக இந்தியா தனது எல்லையோரக் கடலின் அகலத்தை 12 கடல் மைல்களுக்கு நீட்டி அறிவித்தது.
       இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 40 வது திருத்தச் சட்டத்தின் படி திருத்தப்பட்ட ஷரத்து  297 இன்படி இந்தியாவின் எல்லையோரக் கடல்கள் அல்லது கண்டத்திட்டு அல்லது தனியுரிமை பொருளாதார மண்டலங்களில் உள்ள கடலின் அனைத்து நிலங்கள், கனிமங்கள் மற்றும் பிற பொருளாதார மதிப்பு வாய்ந்த பொருட்கள் யாவும் இந்திய ஒன்றியத்திற்குச் சொந்தமானதாகும். மேலும் அவற்றின் எல்லைகளை இந்திய  நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் சட்டங்களின் மூலம் இந்திய அரசாங்கம் வரையறுக்கலாம் என்றும் ஷரத்து 297 கூறுகின்றது.  அதன்படி இந்திய நாடாளுமன்றத்தில், எல்லையோரக்  கடல்கள், கண்டத்திட்டு, தனியுரிமை பொருளாதார மண்டலம் மற்றும்  பிற கடல் மண்டலங்கள் சட்டம்,1976 (Territorial waters,Continental Shef,Exclusive Economic Zone and other Maritime Zones Act,1976) இயற்றப்பட்டது.
                           1976 ஆம் ஆண்டு கடல் மண்டலங்கள் சட்டத்தின்படி,  எல்லையோரக் கடலின்  அகலம்,  பொருத்தமான அடி எல்லைக் கோட்டின் அருகாமைப் புள்ளியில் இருந்து 12  கடல் மைல்கள் என நிர்ணயிக்கப்பட்டது. அத்துடன் இச்சட்டம்,  இந்தியாவின் எல்லையோரக்கடல், கடலடித்தளம் மற்றும் கடலடி மண் அதன் மீதுள்ள வான் பரப்பு வரையிலும் இந்திய நாட்டின் இறையாண்மை நீட்டிக்கப்பட்டிருப்பதாகவும்  அறிவித்தது.  அதாவது இன்றைய நிலையில் எல்லையோரக் கடல் பற்றிய இந்தியாவின் நிலை, 1982 ஆம் ஆண்டு கடல் சட்டம் பற்றிய ஐ.நா. மாநாட்டு விதிகளுடன் ஒத்திருக்கின்றது.

தீங்கற்ற பாதையுரிமை (Right to Innocent Passage)
         ஒரு நாட்டின் எல்லையோரக் கடல் மீது அந்நாட்டிற்கு இறையாண்மை அதிகாரம் இருந்தாலும் அக்கடல் வழியே பயணிப்பதற்கு  மற்ற நாடுகளின் கப்பல்களுக்கும் உரிமை உண்டு.  ஆனால் அவ்வுரிமையைப் பயன்படுத்தி ஒரு நாட்டின் எல்லையோரக் கடல் வழியே செல்லும் கப்பலால் அந்நாட்டின் பாதுகாப்புக்கும் பொருளாதார நலனுக்கும் எவ்வித தீங்கும் ஏற்படக் கூடாது.  இதுவே தீங்கற்ற பாதையுரிமை ஆகும். 
           தீங்கற்ற பாதையுரிமை என்பது மற்ற நாடுகளின்  கப்பல் போக்குவரத்திற்கு மட்டுமின்றி மற்ற தொலைத் தொடர்பு வடங்களை எல்லையோரக் கடல் வழியாக எடுத்துச் செய்வதற்கும் உண்டு.  அதாவது தீங்கற்ற பாதையுரிமை என்பது எல்லையோரக் கடல் வழியாக மற்ற நாடுகளின் போக்குவரத்துக்கும் தொலைத் தொடர்புக்கும் இருக்கும் உரிமையாகும். Corfu Channel Case (1949) – என்ற வழக்கில் சர்வதேச நீதிமன்றம் அமைதி காலத்தில், மற்ற நாடுகளின் போர்க் கப்பல்களுக்கும் தீங்கற்ற பாதையுரிமை உண்டு என்று கூறியது.
    1958 ஆம் ஆண்டு ஜெனிவா மாநாட்டிலும்  1982 ஆம் ஆண்டு கடல் சட்டம் பற்றிய ஐ.நா.மாநாட்டிலும் எல்லையோரக் கடல் மீது மற்ற நாடுகளின் கப்பல்களுக்கும் இருக்கும் தீங்கற்ற  பாதையுரிமை அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி கடலோர நாடுகளாகவோ நிலங்களால் சூழப்பட்ட நாடுகளாகவோ இருந்தாலும் அனைத்து நாடுகளுக்கும் மற்ற நாட்டின் எல்லையோரக் கடல் வழியாகச் செல்லும் தீங்கற்ற பாதையுரிமை உண்டு.
    பாதையுரிமை என்பது எல்லையோர நாட்டின் உள்நாட்டு எல்லைக்குள் நுழையாமல் எல்லையோரக் கடலைக் கடந்து செல்வது அல்லது உள்நாட்டு எல்லைக்குச் செல்வதற்காக கடந்து செல்வது அல்லது ஆழ்கடலை அடைவதற்காக ஒரு நாட்டின் எல்லையோரக் கடலைக் கடந்து செல்வதைக் குறிக்கும்.  அவ்வாறு கடந்து செல்லும் போது தவிர்க்க முடியாத சூழ்நிலையில் மட்டுமே கப்பலை நிறுத்தவோ நங்கூரமிடவோ செய்யலாம்.
    அயல் நாட்டுப் போர்க் கப்பல்களுக்கு தீங்கற்ற பாதையுரிமை இருப்பது போலவே அயல்நாட்டு நீர்மூழ்கிக் கப்பல்களுக்கும் தீங்கற்ற பாதையுரிமை உள்ளது. ஆனால் நீர்மூழ்கிக் கப்பல்கள் கரையோரநாட்டிற்கு உரிய முன்னறிவிப்புக் கொடுத்த பின்னர், கடலுக்குள் இருந்த மேலெழும்பி, தன்நாட்டுக்  கொடி வெளியில் தெரியும் வண்ணமே எல்லையோரக் கடலைக் கடந்து செல்ல வேண்டும்.
    ஆனால் அயல்நாட்டின் மீன்பிடி கப்பலுக்கும் எல்லையோரக் கடலைக்கடந்து செல்வதற்கான பாதையுரிமை இருப்பதாகக்  கூறமுடியாது.  ஏனெனில் அது கரையோர நாட்டின் பொருளாதார நலனுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியதாகும். இருப்பினும் கரையோர நாடு, மற்ற நாடுகளின் மீன்பிடி கப்பல்கள்  அங்கு மீன்பிடிப்பதை   தடை செய்து வகுத்துள்ள சட்டம் மற்றும் ஒழுங்கு முறைகளை மீறாமல் எல்லையோரக் கடலை அனுமதியுடன் கடந்து செல்லலாம்.
       இந்தியாவின் 1976 ஆம் ஆண்டு கடலோர மண்டங்கள் சட்டத்தின் படி (Maritime Zones act,1976) இந்தியாவின் எல்லையோரக் கடலில் மற்ற நாடுகளின் கப்பல்களுக்கு தீங்கற்ற பாதையுரிமை  வழங்கப்பட்டுள்ளது.  ஆனால் அவ்வுரிமை இந்திய  அரசாங்கம் வகுக்கும் விதிமுறைகளுக்கு உட்பட்டதே ஆகும்.

கரையோர வணிகம் (Cabotage)
    ஒரு நாட்டின் எல்லையோரக் கடல் வழியாக அந்நாட்டின் கடற்கரை நகரங்களுக்கு இடையில் நடைபெறும் உள்நாட்டு வணிகம் என்பது ஒரு நாட்டின் ஒரே கடற்கரையோரத்தில் உள்ள இரு பகுதிகளுக்கு இடையே நடைபெறும் வணிகத்தை மட்டுமே குறிப்பதாக இருந்தது.  ஆனால் தற்போது ஒரு நாட்டின் வெவ்வேறு கடற்கரையில் உள்ள இரு பகுதிகளுக்கு இடையில் நடைபெறும் வணிகத்தையும் குறிப்பதாகவும் பொருள் கொள்ளப்படுகிறது.
    எல்லையோரக் கடல் வழியாக நடைபெறும் கரையோர வணிகம் அந்தக் கரையோர நாட்டிற்கு மட்டுமே உரிமையுடையதாகும். எனவே அக்கரையோர நாடு, தனது எல்லையோரக்  கடல் வழியே தன் நாட்டின் துறைமுகங்களுக்கு இடையே நடைபெறும் வணிகம் தன் நாட்டுக் குடிமக்களுக்கு மட்டுமே உரியதென ஒதுக்கிக் கொள்ளலாம்.

தீவுகள் (Islands)
       பொதுவாக தீவுகள் என்பவை அவை ஒட்டியுள்ள நிலப்பரப்பின் கடற்கரையின் இயற்கையான தொடர்ச்சியே ஆகும். 1982 ஆம் ஆண்டு கடல் சட்டம் பற்றிய ஐ.நா. மாநாட்டு விதிகள் ஷரத்து 121 இன்படி, கடல் நீரின் உயர் அலைக்கும் மேலான உயரத்தில் நான்கு புறமும் நீரால் சூழப்பட்டு இயற்கையாக உருவான நிலப்பகுதியே தீவு ஆகும்.
    ஒவ்வொரு தீவுக்கும் அதன் கரையோர அடி எல்லைக் கோட்டில் இருந்து நிர்ணயிக்கப்படும் எல்லைக்யொரக் கடல், எல்லையோரக் கடலை அடுத்த மண்டலம், கண்டத்திட்டு, தனியுரிமைப் பொருளாதார மண்டலம் ஆகியன உண்டு.  இவற்றை நிலப்பரப்பிற்கு நிர்ணயிப்பது போலவே தீவுக்கும் நிர்ணயிக்க வேண்டும் என்று 1982 ஆம் ஆண்டு ஐ.நா. மாநாட்டின் ஷரத்து 121(2) கூறுகின்றது. உதாரணத்திற்கு ஒரு தீவின் கரையோர அடி எல்லைக் கோட்டில் இருந்து  12 கடல்மைல்கள் அகலத்தின் அதன் எல்iலையோரக் கடல் நிர்ணயிக்கப்பட வேண்டும். ஒரு வேளை அத்தீவு அதை ஒட்டிய நாட்டின் எல்லையோரக் கடலுக்குள் 6 கடல் மைல்கள் தொலைவில் இருந்தால் அத்தீவின் கரையிலிருந்து மற்றொரு 12 கடல் மைல்கள் வரை அந்நாட்டின் எல்லையோரக் கடலின் அகலம்  நீண்டு செல்லும்.

தீவுக்கூட்ட நாடு (Archipelagic State)

    தீவுக்கூட்ட நாடு  என்பது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தீவுக் கூட்டங்களையும் தனித் தீவுகளையும் மட்டுமே முழுவதும் கொண்ட நாடு ஆகும்.  உதாரணத்திற்கு மாலத்தீவுகள் நாடு அத்தகைய தீவுக் கூட்ட நாடு அகும். தீவுக் கூட்டம் என்பது, பல தீவுகளைக் கொண்ட தொகுதியையும் அவற்றை இணைக்கும்  நீரையும் இயற்கைக் கூறுகளையும் உள்ளடக்கிய தொகுப்பாகும்  என்று 1982 கடல் சட்டம் பற்றிய ஐ.நா. மாநாட்டு விதி கூறுகின்றது.
    தீவுக் கூட்ட நாடுகளின் எல்லையோரக்  கடல், எல்லையோரக்  கடலை அடுத்த மண்டலம், கண்டத்திட்டு, தனியுரிமைப் பொருளாதார மண்டலத்தை நிர்ணயிப்பதற்கு முன்னர், அத்தீவுக்கூட்டத்தின் அடி எல்லைக் கோட்டை வரைய வேண்டும்.  அதாவது, அத்தீவுக் கூட்டத்தின்  வெளிச்சுற்றில் இருக்கும் தீவுகளின் வெளி முனைகளை எல்லாம் இணைத்து அத்தீவுக்கூட்ட நாட்டின் அடி எல்லைக் கோட்டை வரைய வேண்டும்.  அவ்விதம் வரையும் போது அந்த எல்லைக் கோட்டுக்குள் அமையும் தீவுகளின் நிலப்பரப்பும், நீர்ப்பரப்பும் 1:1 முதல் 9:1 வரையிலான விகிதத்தில் அமைந்திருக்க வேண்டும்.  அதுபோல அந்த எல்லைக் கோட்டின் நீளமும் 100 கடல் மைகளுக்கு மேற்படக்கூடாது. அதுபோல அவ்வாறு வரையப்படும் அடி எல்லைக் கோடு, மற்றொரு நாட்டின் எல்லையோரக் கடலை ஆழ்கடலில் இருந்தோ அதன் தனியுரிமைப் பொருளாதார மண்டலத்தில் இருந்தோ பிரிப்பதாக இருக்கக் கூடாது.
       மேலும் கண்டவாறு வரையப்படும் அடி எல்லைக் கோட்டில் இருந்து சர்வதேச விதிமுறைகளுக்கு இணங்க அத்தீவுக்கூட்டத்தின் எல்லையோரக் கடல், எல்லையோரக் கடலை அடுத்த மண்டலம்,  கண்டத்திட்டு, தனியுரிமைப் பொருளாதார மண்டலம் ஆக்pயவற்றின்  அகலம் நிர்ணயிக்கப்பட வேண்டும். ஒரு  தீவுக் கூட்டத்தைச்  சுற்றி வரையப்படும் அடி எல்லைக் கோட்டுக்குள் அமைந்திருக்கும் நீர்ப்பரப்பின் மீது அத்தீவுக்கூட்ட நாடு அதன்நிலப்பகுதியின் மீது பெற்றிருப்பதைப் போலவே முழு இறையாண்மை பெற்றிருக்கும். அத்தகைய தீவுக்கூட்ட நீர்ப்பரப்பு அந்நாட்டின் உள்நாட்டு நீரைப் போல் கருதப்பட்டாலும் அதன் மீது மற்ற நாடுகளுக்கு தீங்கற்ற பாதையுரிமை உண்டு. எனவே அத்தீவுக் கூட்ட நாடு அதன் தீவுகளுக்கு இடையே உள்ள நீர்ப்பரப்பின் வழியாக மற்ற நாடுகளின்  கப்பல்கள் இடையேயுள்ள நீர்ப்பரப்பின் வழியாக மற்ற நாடுகளின் கப்பல்கள் ஆழ்கடலை அடைவதற்கு உரிய நீர் வழியை நிர்ணயித்து அறிவிக்க வேண்டும்.

நீரிணைகள் (Straits)    
     சர்வதேசச்  சட்டத்தில் நீரிணைகளின்  நிலை  எல்லையோரக்   கடலின் நிலையைப் போன்றதே ஆகும். பொதுவாக இரண்டு நிலப்பகுதிகளை இணைக்கும் நீர்ப்பரப்பே நீரிணையாகும். அதுவே ஆழ்கடல்களை இணைப்பதாக இருந்தால் அது சர்வதேச நீரிணை எனப்படும்.
                     ஒரு நீரிணையின் அகலம் 6 கடல் மைல்களுக்கும் குறைவாக இருந்தால் அந்நீரிணை உள்நாட்டு நீர்நிலையாகவே கருதப்படும்.  அது இரு நாடுகளைப் பிரிக்கும் எல்லையாக இருந்தால் அதன்  அகலத்தின் மையத்தில் வரையப்படும் கோடே இவ்விரு நாடுகளின் எல்லைக் கோடாக இருக்கும். ஆனால் 6 கடல்  மைல்களுக்கும் மேற்பட்ட அகலம் உள்ள நீரிணைகளைப் பொறுத்து சர்வதேசச் சட்டத்தில் நிலையான கருத்து எதுவும் உருவாக்கப்படவில்லை. 
          Corfu Chennel Case(1949)-என்ற வழக்கில் ஆழ்கடல்களின் இரண்டு பகுதிகளுக்கு இடையிலான போக்குவரத்துக்குப் பயன்படும் சர்வதேச நீரிணை வழியாக அமைதிக் காலங்களில் நாடுகள் தங்கள் போர்க் கப்பல்களை செலுத்தும்  உரிமை சர்வதேச வழக்காற்றில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.  ஆனால் அவ்வாறு போர்க் கப்பல்கள் செல்வது கரையோர நாட்டிற்கு தீங்கு விளைவிக்காத வகையில் இருக்க வேண்டும் என்று சர்வதேச நீதிமன்றம் கூறியுள்ளது.
                    1982 ஆம் ஆண்டு கடல் சட்டம் பற்றிய ஐ.நா. மாநாடு,  நீரிணை வழியாக அனைத்துக் கப்பல்களையும் வானூர்திகளை இயக்குவதற்கு நாடுகளுக்கு இருக்கும் தீங்கற்ற பாதையுரிமையை அங்கீகரித்துள்ளது. ஆனால் அது போன்ற வசதியான பாதை வேறு ஒன்று இருக்கும் போது நீரிணை வழியாகச் செல்லும் பாதையுரிமையைக் கோர முடியாது  என்றும் கூறுகிறது.

தொடரும்...

Lr.C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com