எல்லையோரக் கடல் அடுத்த மண்டலம் பற்றிய சர்வதேசச் சட்டம்

எல்லையோரக் கடல் அடுத்த மண்டலம் பற்றிய சர்வதேசச் சட்டம்

எல்லையோரக் கடல் அடுத்த மண்டலம் பற்றிய சர்வதேசச் சட்டம்
(International Law on Contiguous Zone)

எல்லையோரக் கடலை அடுத்த மண்டலம் மற்றும் கண்டத்திட்டு பற்றிய நாட்டின் அதிகாரங்கள்
                          எல்லையோரக் கடல்  முடிவடையும் புள்ளியில் இருந்து ஆழ்கடலை நோக்கி அடுத்திருக்கும் கடல் பகுதியே எல்லையோரக் கடலை அடுத்த மண்டலம் ஆகும். எல்லையோரக் கடலின் அகலம் 3 மைல்கள் எனக் கொள்ளப்பட்ட காலத்தில் எல்லையோரக் கடலை அடுத்த மண்டலத்தின் அகலம் கரையில் இருந்து 12 கடல் மைல்களாகக் கருதப்பட்டது.  அதையே 1956 ஆம் ஆண்டு ஜெனிவா மாநாடும் ஏற்றுக் கொண்டது.
                எல்லையோரக் கடலின் அகலம் 12 கடல் மைல்கள் என ஏற்றக் கொள்ளப்பட்ட பின்னர், அதனை அடுத்திருந்த ஆழ்கடல் பகுதியில் எல்லையோரக் கடலை அடுத்த மண்டலத்தின் அகலம் எதுவரை என்ற கேள்வி எழுந்தது. இக்கேள்விக்கு 1982 ஆம் ஆண்டு கடல் சட்டம் பற்றிய ஐ. நா. மாநாடு விடையளித்தது. இம்மாநாடு, எல்லையோரக் கடலை அடுத்த மண்டலத்தின் அகலம், எல்லையோரக் கடலின் அகலத்தை நிர்ணயிக்க வரையப்பட்ட அடி எல்லைக்கோட்டில்  இருந்து  24  கடல் மைல்களுக்கு மேல் இருக்கக் கூடாது என்று வரையறுத்தது.  அதாவது கரையோர நாட்டின் எல்லையோரக் கடலின் அகலம் 12 கடல் மைல்கள் என்றால் அதனை அடுத்து ஆழ்கடல் நோக்கிச் செல்லும் எல்லையோரக் கடலை அடுத்த மண்டலத்தின் அகலம் இன்னொரு 12 கடல் மைல்கள் ஆகும்.

அதிகார வரம்பு (Jurisdiction) 
    1982 ஆம் ஆண்டு  கடல் சட்டம் பற்றிய ஐ.நா.மாநாட்டு விதிகள், ஷரத்து 33  இன்படி, எல்லையோரக் கடலை அடுத்த மண்டலத்தில் அதன் கரையோர நாடு.(a)  ஆள்நில எல்லை அல்லது எல்லையோரக் கடலுக்குள் சுங்கத் தீர்வைகள், நிதி ஆதாரங்கள், குடியேற்றங்கள் அல்லது சுகாதாரம் தொடர்பான ஒழுங்கு முறைகள் மீறப்படுவதைத் தடுப்பது:
(b) ஆள்நில எல்லை அல்லது எல்லையோரக்  கடலுக்குள் மேலே கண்ட ஒழுங்கு முறைகள் மீறப் பட்டால் அதற்கு தண்டனை வழங்குவதற்கு,அவசியமான கட்டுப்பாட்டு அதிகாரத்தைச் செயல்படுத்தலாம். ஆனால், எல்லையோரக் கடலை அடுத்த மண்டலத்தின் மீது அதன் கரையோர நாட்டிற்கு இறையாண்மை அதிகாரம் கிடையாது.

இந்தியாவின் நிலை
    ஏல்லையோரக் கடலை அடுத்த மண்டலம் பற்றிய சர்வதேசச் சட்ட நிலையே இந்தியாவின் நிலையுமாகும். இந்தியாவின் கடலோர மண்டலங்கள் சட்டம், 1976 பிரிவு 5 இன்படி இந்தியாவின் எல்லையோரக் கடலை அடுத்து ஒட்டிச் செல்லும் எல்லையோரக் கடலை அடுத்த மண்டலத்தின் அகலம் அடி எல்லைக் கோட்டில் இருந்து 24 கடல் மைல்கள் என்று கூறுகிறது. அதுபோல இந்தியாவின் பாதுகாப்பு, குடியேற்றங்கள், சுகாதாரம், சுங்கத் தீர்வைகள் பிற நிதி ஆதார விஷயங்கள் போன்றவை தொடர்பாக இந்திய அரசாங்கம் எல்லையோரக் கடலை அடுத்த மண்டலத்தின் மீது தனது அதிகாரத்தைச் செயல்படுத்தும் என்று பிரிவு 5(4) கூறுகின்றது.

எல்லையோரக் கடலுக்கும் எல்லையோரக் கடலை அடுத்த மண்டலத்திற்கும் இடையிலான வேறுபாடு


ஜெரால்டு  கிரே பிட்மாரிஸ்

(Gerald Gray Fitzmaurice)

1. எல்லையோரக்  கடலின் மீதும் அதன் கடலடித்தளம், கடலடி மண், வான் பரப்பு ஆகியவற்றின் மீதும் கரையோர நாட்டிற்கு இறையாண்மை அதிகாரம் உண்டு. ஆனால், எல்லையோரக் கடலை அடுத்த மண்டலத்தின் மீது அதன் கரையோர நாட்டிற்கு இறையாண்மை அதிகாரம் கிடையாது. அப்பகுதியில் சுங்கத் தீர்வை, நிதி ஆதாரங்கள், குடியேற்றங்கள் அல்லது சுகாதாரம் தொடர்பான ஓழுங்கு முறைகள் மீறப்படாமல் தடுப்பதற்கும் மீறப்பட்டால் தண்டிப்பதற்கும் மட்டுமே கரையோர நாட்டிற்கு அதிகாரம் உண்டு. ஜெரால்டு கிரே பிட்மாரிஸ் (Gerald Gray Fitzmaurice) கூறியது போல், எல்லையோரக் கடலை அடுத்த மண்டலத்தில் அதன் கரையோர நாட்டிற்கு இருக்கும் அதிகாரம் காவல் அதிகாரமே பொழிய (Policing Power)  நிர்வாகம் அல்லது நீதி வழங்கும் இறையாண்மை அதிகாரம் அல்ல.
2. எல்லையோரக் கடல் பகுதி, அதன் கரையோர நாட்டின் ஆள்நில எல்லைகுட்பட்ட உள்நாட்டு நீர்நிலையைப் போன்றதாகும். ஆனால் எல்லையோரக் கடலை அடுத்த மண்டலம், அதன்  கரையோர நாட்டின் ஆள்நில எல்லைக்குட்பட்ட பகுதியாகாது.  மாறாக அது ஆழ்கடலின் ஒரு பகுதியாகும்.

கண்டத்திட்டு பற்றிய சர்வதேசச் சட்டம்
(International law on Continental Shelf)

கண்டத்திட்டு 
    ஒரு நாட்டின் கடற்கரையில் இருந்து அதன் நிலப்பகுதியின் தொடர்ச்சி ஆழ்கடலை நோக்கி கடலுக்குள் நீண்டு செல்லும்.  அந்நிலப்பகுதி ஆழ்கடலை நோக்கிக் செல்ல சிறிது சிறிதுதாகச் சரிந்து கொண்டே செல்லும். அதாவது ஆழ்கடலை நோக்கிச் செல்லச் செல்ல கடலின் ஆழம் அதிகரித்துக் கொண்டே செல்லும் அவ்வாறு சிறிது சிறிதாகச் சரிந்து கொண்டே செல்லும் நிலப்பகுதி ஒரு குறிப்பட்ட இடத்தில் திடீரென்று செங்குத்தாக கடலின் அடி ஆழத்தை நோக்கிச் செல்லும். இவ்வாறு கடற்கரையில் இருந்து சரிவாகச் சரிவாகச் சென்று கடலின்அடி அழத்தை நோக்கிச் செங்குத்தாக இறங்கும் இடம் வரை உள்ள தொடர்ச்சியான கடலடிப் பகுதியே கண்டத்திட்டு எனப்படும்.
    புவியியல் ரீதியில் கண்டத்திட்டு பற்றிய கருத்தாக்கம் பழமையான ஒன்றே எனினும் சர்வதேசச் சட்டத்தில் அது புதிதாக உருவான கருத்தாக்கம் ஆகும். 1945 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி ட்ரூமேன் அமெரிக்காவின்  கண்டத்திட்டுகள் மீது அமெரிக்காவிற்கு மட்டுமே முழு உரிமை உண்டு என்று அறிவித்த பிறகே சர்வதேசச் சட்டத்தில் கண்டத்திட்டு பற்றிய விவாதங்களும் சர்ச்சைகளும் துவங்கின. அந்த அறிவிப்பில் அமெரிக்கா, அதன் எல்லையோரக் கடலையும் தாண்டி  ஆழ்கடல் வரை நீண்டிருக்கும் அதன் அனைத்து கண்டத்திட்டுகளில் 600 அடி அழத்தில் உள்ள திட்டு வரை உள்ள இயற்கை வளங்களின் மீது தனக்கு மட்டுமே முழு உரிமை உண்டு என்றது. ஆனால் அக்கண்டத்திட்டுகளுக்கு மேல் இருக்கும் ஆழ்கடலின் மேற்பரப்பு மீது அது தனியுரிமை எதனையும் கோரவில்லை.
    அமெரிக்காவின் கோரிக்கையைத் தொடர்ந்து மெக்சிகோ, சிலி அர்ஜென்டினா, பெரு போன்ற நாடுகளும் தங்கள் நாட்டின் கண்டத்திட்டுகள் மீது அமெரிக்காவைப் போன்றே உரிமை கோரின. இதனால் கண்டத்திட்டு பற்றி வரையறுக்க வேண்டிய அவசியமும் அதன் மீதான நாடுகளின் உரிமைக் கோரிக்கைகள் பற்றி தீர்மானிக்க வேண்டிய அவசியமும் சர்வதேசச் சட்டத்திற்கு ஏற்பட்டது. இப்பணி 1958 ஆம் ஆண்டு ஜெனிவா மாநாட்டில் மேற்கொள்ளப்பட்டது.

கண்டத்திட்டு பற்றிய 1958 ஆம் ஆண்டு ஜெனிவா மாநாட்டு விதி
    1958 ஆம் ஆண்டு ஜெனிவா மாநாடு, ஷரத்து 1 இல் கண்டத்திட்டு என்பது வரையறுக்கப்பட்டுள்ளது.  இதன்படி, “கண்டத்திட்டு என்பது,

(a) கடற்கரையை ஒட்டி ஆனால் எல்லையோரக் கடல் பகுதிக்கு வெளியே 200 மீட்டர் ஆழத்தில் அல்லது இயற்கை வளங்களை எடுப்பதற்கு நீரின் ஆழம் அனுமதிக்கும் அதற்கு மேற்பட்ட ஆழத்தில், கடலில் மூழ்கி உள்ள கடலடித்தளம் மற்றும் கடலடி மண்ணையும்,
(b) தீவின் கடற்கரையை ஒட்டியுள்ள அது போன்ற தடலில் மூழ்கியுள்ள கடலடித்தளம்  மற்றும் கடலடி மண்ணையும் குறிக்கும்”

கண்டத்திட்டு தொடர்பாக ஜெனிவா மாநாடு பின்வரும் விதிகளையும் ஆக்கியது:
(i) கண்டத்திட்டின் இயற்கை வளங்களை கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சி மற்றும் அவற்றை அகழ்ந்த எடுப்பது தொடர்பான இறையாண்மை உரிமைகள் கரையோர நாட்டிற்கே உரியதாகும். அத்தகைய உரிமைகள் கரையோர நாட்டிற்கு மட்டுமே உரிய தனி உரிமையாகும்.
(ii) ஆனால் கண்டத்திட்டின் மீது கரையோர நாட்டிற்கு இருக்கும். அத்தகைய உரிமையானது.  அதன் மேல் இருக்கும் நீரின் ஆழ்கடல் அல்லது அந்த நீருக்கும் மேலே இருக்கும் வான் பரப்பின் சர்வதேசச் சட்டத் தகுநிலையை எவ்விதத்திலும் பாதிக்காது.
(iii) கண்டத்திட்டின் இயற்கை வளங்களை எடுக்க கரையோர நாடு மேற்கொள்ளும் நடவடிக்கைகள், அப்பகுதியில் மற்ற நாடுகளுக்கும் இருக்கும் மீன்பிடி உரிமை, பாதை வழியுரிமை போன்றவற்றை நியாயமற்ற வகையில் இடையூறு செய்யக் கூடாது.
(iv) கண்டத்திட்டின் கடலடித் தளத்தில் கரையோர நாடு பணிகளை மேற்கொண்டிருப்பதை அடையாளப்படுத்தும் எச்சரிக்கை அறிவிப்புகள் கடலின் மேற்பரப்பில் நிரந்தரமாக ஏற்படுத்தப்பட வேண்டும்.
(v) ஓரே கண்டத்திட்டு அருகருகே கடற்கரைகளைக் கொண்டிருக்கும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளின் எல்லைகளுக்கு அருகே அமைந்திருந்தால், ஓவ்வொரு நாட்டின் எல்லையோரக் கடல் எங்கிருந்து அளக்கப்படுகிறதோ அந்த அடி எல்லைக்கோட்டில் மிக அருகில் இருக்கும் புள்ளியில் இருந்து சமதூரத்தில் (Equi-Distance) வரையப்படும்  எல்லைக் கோடே ஒவ்வொரு நாட்டின் கண்டத்திட்டு  எல்லையாக இருக்கும். 

ஜெனிவா மாநாட்டின் குறைபாடுகள்
    1958 ஆம் ஆண்டு ஜெனிவா மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கண்டத்திட்டு பற்றிய வரையறை தெளிவற்றதாக இருந்ததுடன் போதுமானதாகவும் இல்லை. அவ்வரையறையில் முக்கியமானவை: 
(i) கரையை ஒட்டி இருப்பது (adjacency) 
(ii) ஆழம் (depth) மற்றும் 
(iii) இயற்கை வளங்களை எடுப்பதற்கான சாத்தியம்  (Exploitability) 

 

    1958 ஆம் ஆண்டின் அறிவியல்-தொழில் நுட்ப வளர்ச்சி, கடலடியில் 200 மீட்டர் ஆழம் வரை இயற்கை வளங்களை எடுப்பதற்குரியதாக மட்டுமே இருந்தது. அதன்பிறகு பல முன்னேறிய நாடுகளின் திறன் அதற்கும் அதிகமான ஆழத்திற்கும் சென்று இயற்கை வளங்களை எடுக்கும் அளவுக்கு வளர்ச்சியடைந்தது. இதனால் தொழில் நுட்ப வளர்ச்சி பெற்ற நாடுகள் 200 மீட்டருக்கும் அதிகமான ஆழத்தில் உள்ள கண்டத்திட்டின் மீது உரிமைகோர முடிந்தது. ஆனால் வளர்ச்சியடையாத பின் தங்கிய நாடுகள் 200 மீட்டர் ஆழத்திற்குள் உள்ள கண்டத்திட்டின் மீது மட்டுமே உரிமை கோர முடிந்தது. இதனால் வரையறையில் உள்ள ஆழம் மற்றும் இயற்கை வளங்களை எடுப்பதற்கான சாத்தியம் ஆகிய இரண்டும் கூறுகளும் நாடுகளுக்கு இடையே சமத்துவமற்ற நிலையைத் தோற்றுவித்தன. இச்சமத்துவமின்மை விரைவில் களையப்படாவிட்டால் முன்னேறிய நாடுக்ள ஆழ்கடலின் கண்டத்திட்டுகள் அனைத்தையும் விழுங்கி விடக் கூடும் என்ற அபாய நிலை ஏற்பட்டது. இந்நிலையைப் போக்க 1982 ஆம் ஆண்டு கடல் சட்டம் பற்றிய ஐ.நா. மாநாட்டில் கண்டத்திட்டு பற்றிய வரையறை திருத்தியமைக்கப்பட்டது. மேலும் நாடுகளுக்கு இடையே கண்டத்திட்டுகளின் எல்லைக் கோடு வரைவதில்  1969 ஆம் ஆண்டு வடகடல் கண்டத்திட்டு வழக்கு ஒரு புதிய வெளிச்சத்தை வழங்கியது.

வடகடல் கண்டத்திட்டு வழக்கு (1969)
(North Sea Continental Shelf Case)

    வடகடலின் கரைகளில் அமைந்திருக்கும் நெதர்லாந்து மற்றும் டென்மார்க் நாடுகளுக்கும் ஜெர்மனிக்கும் இடையே வடகடல் கண்டத்திட்டின் எல்லைகளைப் பிரிப்பது தொடர்பாக கருத்து வேறுபாடு எழுந்தது. நெதர்லாந்து - ஜெர்மனி இடையிலும் டென்மார்க் - ஜெர்மனி இடையிலும் ஏற்பட்ட இப்பிரச்னை இரண்டு தனித்தனி ஒப்பந்தத்தின் மூலம் சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு விடப்பட்டது. டென்மாமாக்கும் நெதர்லாந்தும், கண்டத்திட்டு தொடர்பாக ஏற்றுக் கொள்ளப்பட்ட 1958 ஆம் ஆண்டு ஜெனிவா மாநாட்டு விதியின் படி தங்களுக்கும் ஜெர்மனிக்கும் இடையிலான கண்டத்திட்டு எல்லை சம தூர அடிப்படையில் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று வாதிட்டன. ஜெர்மனியின் தரப்பில், 1958 ஜெனிவா மாநாட்டில் ஜெர்மனி கலந்து கொள்ளவுமில்லை அதை ஏற்றுக் கொள்ளவுமில்லை என்பதால் அம்மாநாட்டில் ஏற்கப்பட்ட விதிகள் ஜெர்மனியைக் கட்டுப்படுத்தாது என்றும் இரு நாடுகளுக்கு இடையே ஏற்படும் தனியான உடன்படிக்கையின் மூலமாக மட்டுமே கண்டத்திட்டு எல்லை வரையறுக்கப்பட வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.
    முடிவில் சர்வதேச நீதிமன்றம், நெதர்லாந்து மற்றும் டென்மார்க்குடன் கண்டத்திட்டின் எல்லைகளை ஜெர்மனி வரையறுத்துக் கொள்வதில் 1958 ஆம் ஆண்டு ஜெனிவா மாநாடு பின்வரும் காரணங்களால் ஜெர்மனியைக் கட்டுப்படுத்தாது என்று கூறியது:
(a) ஒரு சர்வதேச உடன்படிக்கை, அதில் ஒப்பமிடாத நாடுகளைக் கட்டுப்படுத்தாது:
(b) ஜெர்மன் குடியரசு 1958 ஆம் ஆண்டு ஜெனிவா மாநாட்டில் தரப்பாக கலந்து கொள்ளவில்லை.
(c) அம்மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்ட விதிகளை ஜெர்மனி மறு ஏற்புறுதி (Ratification) செய்யவுமில்லை.
(d) கண்டத்திட்டின் எல்லைகளை நிர்ணயிப்பதில் ஜெனிவா மாநாடு பின்பற்றிய சம தூரக் கோட்பாடு பெரும்பாலான நாடுகளால் பின்பற்றப்பட்டு அது சர்வதேசச் சட்டத்தின் வழக்காறாக ஆகவில்லை.

    எனவே இரு நாடுகளுக்கு இடையிலான உடன்படிக்கையின் மூலம் சம தூரக் கோட்பாடு ஏற்றுக் கொள்ளப்பட்டால் மட்டுமே அக்கோட்பாட்டை பயன்படுத்தி கண்டத்திட்டின் எல்லைகளை நிர்ணயிக்க முடியும். இல்லாவிட்டால் அருகருகே அமைந்துள்ள நாடுகளுக்கு இடையே தகைமை நெறிக் கோட்பாட்டின் அப்படையிலேயே கண்டத்திட்டின் எல்லைகள் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று சர்வதேச நீதிமன்றம் தீர்வு முடிவை வழங்கியது.
    மேலும் சர்வதேச நீதிமன்றம் தனது தீர்பில், ஒரு கரையோர நாட்டின் ஆள்நிலப் பகுதியின் இயற்கையான நீட்சியே  (Natural Prolongation) கண்டத்திட்டு ஆகும். எனவே, கரையோர நாட்டிற்கு அதன் நிலப்பகுதியின் மீது இறையாண்மை அதிகாரம் இருப்பது போலவே கண்டத்திட்டின் மீதும் உள்ளார்ந்த அதிகாரமாக இறையாண்மை அதிகாரம் உண்டு என்று கூறியது. சர்வதேச நீதிமன்றத்தின் இக்கருத்து கரையோர நாடுகள் கண்டத்தின் விளிம்பு வரை தங்களுக்கு அதிகாரவரம்பு உண்டு என்று கோருவதற்கு வழிவகுத்தது. இப்பிரச்சனை 1982 ஆம் ஆண்டு  கடல் சட்டம் பற்றிய ஐ. நா. மாநாட்டில் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் தீர்க்கப்பட்டது.

கடல் சட்டம் பற்றிய ஐ.நா.மாநாடு, 1982 இல் கண்டத்திட்டு பற்றிய விதிகள்
    1958 ஆம் ஆண்டு ஜெனிவா மாநாட்டு விதிகள் பெரும்பாலான நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில் 1982 ஆம் ஆண்டு கடல் சட்டம்பற்றிய ஐ. நா. மாமநாடு  கடல் கட்டம் பற்றிய சர்வதேசச் சட்டவிதிகளைக் தொகுத்தது.  அதன் ஷரத்து 76 கண்டத்திட்டு என்பதை பின்வருமாறு வரையறுக்கிறது. “ஒரு நாட்டின் எல்லையோரக் கடலைத் தாண்டி, அதன் ஆள்நிலப்பகுதியின் இயற்கையான நீட்சி முழுவதும், அக்கண்டத்திட்டின் வெளிவிளிம்பு, எல்லையோரக் கடலின் அகலத்தை அளக்கும் அடி எல்லைக் கோட்டில்இருந்து 200 கடல் மைல்கள் வரை நீளவில்லையெனில் அந்த அடி எல்லைக் கோட்டில் இருந்து 200 கடல் மைல்கள் தூரம் வரை உள்ள கடலின் அடியில் இருக்கும் பகுதியின் கடலடித்தளம் மற்றும் கடலடி மண்ணை உள்ளடக்கியதே கண்டத்திட்டு ஆகும்”.
    1982 ஆம் ஆண்டு ஐ. நா.மாநாட்டின் வரையறை 1958 ஆம் ஆண்டு ஜெனிவா மாநாட்டின் வரையறையில் கூறப்பட்ட ஆழம், இயற்கை வளங்களை எடுப்பதற்கான சாத்தியம் போன்ற சர்ச்சைக்குரிய கூறுகளை ஒதுக்கித் தள்ளிவிட்டது.  மேலும் வடகடல் கண்டத்திட்டு வழக்கில் சர்வதேச நீதிமன்றம் வலியுறுத்திய நாட்டின் ஆள்நிலப்பகுதியின் இயற்கையான நீட்சிக் கோட்பாட்டை இவ்வரையறை ஏற்றுக் கொண்டுள்ளது.

மேலும் 1982 ஆம் ஆண்டு ஐ. நா. மாநாடு கண்டத்திட்டு பற்றிய பின்வரும் விதிகளையும் ஆக்கியுள்ளது.

(i) எல்லையோரக் கடலின் அகலத்தை அளக்கும் அடி எல்லைக் கோட்டில் இருந்து 200 கடல் மைல்களுக்கும் அப்பால் கண்டத்திட்டு நீளக்கூடிய கரையோர நாடுகள் அக்கண்டத்திட்டின் வெளி விளிப்பு எந்த இடத்தில் முடிவடைகிறது என்பதை நிர்ணயிக்க வேண்டும்.
(ii) அவ்வாறு நிர்ணயிக்கப்படும் வெளிவிளிப்பு எல்லை, எல்லையோரக் கடலின் அகலத்தை அளக்கும் எல்லைக் கோட்டில் இருந்து 350 கடல் மைல்கள் தூரத்திற்கு மேற்படக் கூடாது அல்லது  2500 மீட்டர் ஆழம் உள்ள இடத்தில் இருந்து 100 கடல் மைல்கள் தூரத்திற்கு மேற்படக் கூடாது.
(iii) கரையோர நாட்டின் கண்டத்திட்டின் வெளிவிளிம்பு எல்லையை நிர்ணயிப்பதில் கரையோர நாட்டிற்கு உதவுவதற்காக இம்மாநாடு கண்டத்திட்டு எல்லை ஆணையம் (Commission on the limits of the Continental Shelf) ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்த ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் கரையோர நாடு நிர்ணயிக்கும் கண்டத்திட்டு எல்லையே  இறுதியானதாகும்.
(iv) எல்லையோரக் கடலின் அகலத்தை அளக்கும் அடி எல்லைக் கோட்டில் இருந்து 200 கடல்மைல்களுக்கு அப்பால் உள்ள கண்டத்திட்டில் இருந்து கரையோர நாடு எடுக்கும் உயிரற்ற இயற்கைவளங்கள் அனைத்திற்கும் கட்டணமாக ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை கரையோர நாடு கடலடித்தள அதிகார அமைப்பிடம் செலுத்த வேண்டும். அக்கட்டணம், முதல் ஐந்து ஆண்டுகள் முடிந்து ஆறாவது ஆண்டில் இருந்து செலுத்தப்பட வேண்டும். ஆறாவது ஆண்டில் எடுக்கப்படும் இயற்கை வளத்தின் மதிப்பில் அல்லது அளவில் 1 சதவீதமும் அடுத்தடுத்த 12 வது ஆண்டு வரையில் ஆண்டுக்கு ஒரு சதவீதம் உயர்ந்து 121 வது ஆண்டில் 7 சதவீதமாகவும் கட்டணம், வசூலிக்கப்படும்.  12 வது ஆண்டுக்குப் பின்னர் கட்டணம்7 சதவீதமாகவே தொடர்ந்து இருந்து வரும், இவ்வாறு கரையோர நாடுகளில் இருந்து வசூலிக்கப்படும் கட்டணம், கடலடித்தள அதிகார அமைப்பால் மாநாட்டில் கையொப்பமிட்ட நாடுகளுக்கு இடையே தகைமை நெறியின் அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்படும்.  கடற்கரை இன்றி நிலங்களால் சூழப்பட்ட நாடுகள், பின் தங்கிய நாடுகள் மற்றும் வளர்ச்சியடைந்த நாடுகளின் தேவைகளைக் கணக்கில் கொண்டு அவை பகிர்ந்தளிக்கப்படும்.

தொடரும்...

Lr.C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com