இன அரசியல்-9: புதிய கற்கால, இந்தியப் புதிய கற்கால, தென்னிந்தியப் புதிய கற்கால மனித இனங்கள்

இன அரசியல்-9: புதிய கற்கால, இந்தியப் புதிய கற்கால, தென்னிந்தியப் புதிய கற்கால மனித இனங்கள்


புதிய கற்காலம்

புதிய கற்காலம் மனித வாழ்வில் ஒரு புரட்சிகரமான காலமாகும். இக்கால மனிதன் நிலத்தில் பயிர் செய்து வாழ்விடம் அமைத்து நிலையாகத் தங்கினான். வேட்டையாடியதோடு மிருகங்கள், பறவைகளை வளர்க்கவும் தொடங்கினான். சக்கரத்தின் உதவி கொண்டு அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான மட்பாண்டங்கள் செய்தான். இவ்வாறு ஒரு குடும்ப வாழ்க்கையை மேற்கொண்டான். இக்காலத்திலே தான் நெசவுத் தொழில் மூலமட ஆடைகளைத் தயாரிக்கத் தொடங்கினான். உலோகங்களின் பயனையும் அறிந்து கொண்டான். இக்காலத்தின் முற்பகுதியிலேயே இந்த அனைத்துப் பண்பினையும் இவன் பெறவில்லை. வாழ்க்கைத்தரம் உயர உயரப் புதிய கண்டுபிடிப்புகள் அதிகமாயின. இக்கால மனிதன் பளபளப்பான கைக்கோடாரிகளைப் பெருமளவில் தாயரித்து உபயோகத்தான் என்றாலும் பல இடங்களில் குறுணிக் கற்கருவிகளையும் உபயோகித்தான் என்பதற்கான தடயங்களும் காணப்படுகின்றன.

புதிய கற்காலம், பல்வேறு புவியியற் பகுதிகளில் வேறுபட்ட காலங்களில் நிலவியது. கி.மு 8500 இல், லேவண்ட் (ஜெரிக்கோ, பாலஸ்தீனம்) பகுதியில் இது காணப்பட்டது. இது, இப்பகுதியில் நிலவிய இடைக்கற்கால, நாத்தூபியன் (Natufian) பண்பாட்டிலிருந்து வளர்ச்சியடைந்தது. நாத்தூபியன் பண்பாட்டுக்குரிய மக்களே காட்டுத் தானியங்களை முதலில் உணவுக்காகப் பயன்படுத்தினர். இதுவே பின்னர் முறையான வேளாண்மையாக வளர்ச்சியடைந்தது. இதனால் நாத்தூபியன் பண்பாட்டு மக்களை முந்திய புதிய கற்காலப் (proto-Neolithic) பண்பாட்டினர் (கி.மு. 11,000-8500) எனலாம். நாத்தூபியர்கள் காட்டுத் தானியங்களில் தங்கியிருக்கத் தொடங்கியபோது, உடலுழைப்புக் குறைவான வாழ்க்கை முறை ஏற்பட்டது. உறைபனிக் காலத்தோடு தொடர்புடைய காலநிலை மாற்றம், அவர்களின் வேளாண்மை விருத்திக்குத் தூண்டியது. கி.மு. 8500 - 8000 அளவில், லேவண்ட்டில் உருவாகிய வேளாண்மைச் சமுதாயம், அனதோலியா, வட ஆப்பிரிக்கா, வட மெசபோடோமியா ஆகிய இடங்களுக்கும் பரவியது.

கி.மு. 8,000 ஆண்டுகளில்புதிய கற்காலம் முதன் முதலாக மேற்கு ஆசியாவில் தோன்றியது. அப்போது அங்கே ஏற்பட்ட தட்ப வெப்ப மாற்றத்தாலும், சுற்றுப்புறச்அசூழலில் ஏற்பட்ட மாற்றத்தாலும் அப்பகுதி ஆடு, செம்மறி ஆடு, எருது, எருமை, பசு, நாய், பன்றி போன்ற மிருகங்கள் வளர்ப்பதற்கு ஏற்றனவாய் அமைந்தன. கோதுமை, வார் கோதுமை, பார்லி போன்ற பயிர்கள் இயற்கையாகவே முளைத்தன. இதனால் அங்கு வாழ்ந்த மனிதன் மந்தை வளர்ப்பிலும், பயிர் செய்வதிலும் முக்கிய கவனம் செலுத்தினான். புதிய கற்கால மனிதன் நாளடையில் தனது கருவிகளைச் சீராக அமைக்கவும் நிரந்தரமான குடியிருப்புகளைக் கட்டவும், மட்பாண்டங்களை ஆக்கவும் முனைந்தான்.

தொல்லியலார் புதிய கற்கால வளர்ச்சியை மட்பாண்டங்களின் உபயோகத்திற்கு முந்தைய நிலை, மட்பாண்டங்கள் உபயோகித்த நிலை என இரண்டு பிரிவுகளாகப் பிரித்துள்ளனர்.

கி.மு. 8,000 முதல் கி.மு. 5,000 வரையிலான காலத்தில் மட்பாண்டங்களின் உபயோகம் காணப்படாத புதிய கற்காலக் குடியிருப்புகள் நிரந்தரமான மண்வீடுகளில் காணப்பட்டன. இங்கே மட்பாண்டங்களுக்குப் பதிலாகக் கல்லினாலான பாண்டங்கள் உபயோகத்தில் இருந்தன.

பிற்காலத்தில் கி.மு. 3,500 ஆண்டு வாக்கில் செம்பினாலான உபகரணங்கள் உபயோகத்திற்கு  வந்தன.  மேற்கு ஆசியாவில் ஏற்பட்ட புதிய கற்கால வளர்ச்சி இந்தியாவில் பரவியது. சிந்துச் சமவெளியில் கி.மு. 5,000 அல்லது கி.மு. 4,500 ஆண்டுகளிலும் ஏனைய பகுதிகளான கங்கைச் சமவெளி, மேற்கிந்தியா மற்றும் தக்காணத்தின் வட பகுதியிலும், தென்னிந்தியாவிலும் கி.மு. 4,000 ஆண்டுகளிலும் புதிய கற்காலம் தொடங்கியது.

புதிய கற்காலக் கருவிகளின் பசால்ட், டோ

லோரைட் நயிஸ், சிஸ்ட், எபிடியோரைட் கொன்ற கற்களால் ஆக்கப்பெற்றன. இக்கருவிகளில் கைக்கோடரியும் உளியும் முக்கியமானவை.  கைக்கோடரிகள் தேய்க்கப்பட்டுப் பளபளப்பாக்கப்பட்டன. இவை மரத்திலே பொருத்திப் பயன்படுத்தப்பட்டன. இவையே பிறகாலதத்தில் மனிதனால் தயாரிக்கப்பட்ட உலோகத்தினாலான கருவிகளுக்கும், ஆயுதங்களுக்கும் முன்னோடியாயின. தானியங்களை மாவாக்குவதற்கும், உடைப்தற்கும், அரைப்பதற்கும் அம்மி குழவி போன்ற கருவிகளும் கல்லினால் ஆக்கப்பெற்றன. இக்கால மனிதன் தயாரித்த மட்கலங்கள் உணவுப் பொருள்களைச் சேமிக்கவும் தயாரிக்கவும் உதவி புரிந்தன.

புதிய கற்காலத்தில் கைக்கோடாரிகள், உளிகள், இடிப்பான்கள் பல கைக்கற்கள், வீசி எறியும் கற்கள், வட்டமான துளை கொண்ட கற்கள், தேய்க்கும் கற்கள், கல் உருண்டைகள், தானியம் அறைக்க உதவும் கற்கள், அம்மி குழவி போன்ற கருவிகள், கொட்டைகள் உடைக்க உதவும் கருவிகள் போன்றவை செய்யப்பட்டன. களிமண், மரம் இவற்றின் துணை கொண்டு வட்டம் அல்லது சதுரமான வீடுகள் அமைத்துக் கொண்டனர். முதலில் கையினாலும், பின்னர்ச் சக்கரத்தின் உதவியுடனும் மட்கலங்கள் செய்யப்பட்டன.  இவை முதலில் சூரிய வெப்பத்;திலும் பின்னர் நெரும்பிலும் சூடாக்கப்பட்டு உறுதியாக்கப்பட்டன. ஒவியம் மற்றும் கடுமண்பொம்மைகள் உருவானதும் இக்காலத்திலே தான் இம்மக்கள் விளக்கின் பயனையும், நிறங்களைப்பற்றியும் அறிந்திருந்தனர். குளிர், வெப்பம் பற்றிய பௌதீகப் பண்புகளைப்பற்றிய அறிவு இக்கால மக்களுக்கு இருந்தது.

இந்தியப் புதிய கற்காலம்

1. வட இந்தியப் புதிய கற்காலம்
2. தென்னிந்தியப் புதிய கற்காலம்.
3. கிழக்கிந்தியப் புதிய கற்காலம் என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டுள்ளன.

வடஇந்தியப் புதிய கற்காலம்     

வடஇந்தியாவில் காஷ்மீர்ப்பகுதி தான் புதிய கற்கால வாழ்விடமாக அமைந்தது. இக்கால மனிதன் குழி வீடுகள் போன்ற அமைப்பில் வாழ்ந்தான். பளபளப்பான கைக்கோடரிகள், உளிகல், போன்ற கல் ஆயுதங்களுடன் எலும்பினாலான துளையீடும் கருவிகள், ஊசிகள், கூர்முனைகள், மீன் பிடிக்க உதவும் தூண்டில்கள் போன்றவற்றையும் உபயோகப்படுத்தினான். இக்கால மட்கலங்கள் கையினால் செய்யப்பட்டவையே ஆகும்.

பின்னாளில் குழிதோண்டி உருவாக்கப்பட்ட வீடுகளுக்குப் பதிலாக மரம் மற்றும் களிமண் கொண்டு நிலத்தின் மேற்பரப்பில் உருவாக்க்பட்ட வீடுகள் வழக்கத்திற்கு வந்தன. சுவர்களும், தரையும் சிகப்பு நிறக் கலவை கொண்டு பூசப்பட்டன.  வீடுகளில் அடுப்பும் அம்பிக்குழவியும் இருந்தன.  சக்கரம் கொண்டு அடங்கும் பாறைச் செதுக்கல் பாறை ஒவியங்கள் மூலமாகவும் எலும்பினால் செய்யப்பட்ட வேட்டையாடும் கருவிகள் காணப்படுவதன் மூலமும் வேட்டையாடுதல் ஒரு முக்கிய தொழலாக இருந்தது என உணரலாம். இக்காலத்தில் மனிதனுடன் சேர்த்து விலங்குகளையும் புதைக்கும் வழக்கம் இருந்தது.  இப்புதிய கற்காலம் கார்பன் காலப் பகுப்புப் படி கி.மு. 2400 – கி.மு. 1400 ஆண்டுகளில் தழைத்தோங்கியது. இப்பண்பாடு வட சீனாவில் காணப்படும் புதிய கற்காலப் பண்பாட்டுடன் ஒத்துப் போவதால் வடசீனாவிலிருந்து பரவியிருக்கலாம் என்று ஒரு சாரரும், மேற்காசிய நாடுகளிலிருந்து பரவியிருக்க வேண்டும் என்று மற்றொரு சாரரும் கருதுகின்றனர். இது தென்னிந்தியப் புதிய கற்காலத்தோடு ஒற்றுமை உள்ளது என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும்.

தென்னிந்தியப் புதிய கற்காலம் 

தென்னிந்தியப் புதிய கற்காலத்திலும் பளபளப்பான கைக்கோடரி மற்றும் உளிகள் முக்கிய அங்கம் வகிக்கின்றன. மந்தை வளர்ப்பும், விவசாயமும் முக்கித் தொழில்களாகும்.  இக்கால மக்கள் குடிசைகளிலும், மண் வீடுகளிலும் வசித்தனர். எருது உருவத்தில் சுடுமண் பொம்மைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க தாகும். கிடைத்த மனித எலும்புக் கூடுகளை ஆராய்ந்த அறிஞர்கள் இம்மக்கள் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று அறிவிக்கின்றனர்.

தென்னிந்தியப் புதிய கற்காலத்தை மட்பாண்டம் உள்ள காலம் மட்பாண்டத்திற்கு முற்பட்ட காலம் எனவும், உலோகத்தாக்கம் உள்ள காலம். உலோகத்தாக்கம் இல்லாத காலம் எனவும் பாகுபாடு செய்வர். ஆயினும் இக்காலத்தை அல்சின் கி.மு. 2300-1800, கி.மு. 1800-1500, கி.மு. 1400-1050 என்ற மூன்று காலப்பகுதிகளாகப் பிரித்துக் காண்பார்.

தென்னிந்தியப் புதிய கற்காலம் தென்கிழக்காசிய நாடுகளிலிருந்து பரவியிருக்கலாம் என்றும், மேற்கு ஆசியாவிலிருந்து பரவியிருக்கலாம் என்றும், தன்னிச்சையாக உருவானது என்றும் அறிஞர்கள் கருதுவர்.

தமிழகத்தில் புதிய கற்காலக் கருவிகள்

தமிழகத்தில் புதிய கற்காலம் என்பது கி.மு. 3000 - 1000 வரை நிலவியது. குறிப்பாக தமிழகத்தின் வட ஆற்காடு பகுதியிலுள்ள பையம்பள்ளியில் இப்புதிய கற்காலச் சின்னங்கள் அதிகம் காணப்படுகின்றன.

பையம்பள்ளி

பையம்பள்ளியில் காணப்படும் புதிய கற்காலச் சமுதாயம் 2 விதத்தில் காணப்படுகின்றது.

முதற்பிரிவு- இக்கால மக்கள் வெளுப்பு மிக்க சாம்பல் நிற மட்பாண்டங்கள், மெருகூட்டப்பட்ட சாம்பல் நிற மட்பாண்டங்கள், சிவப்பு நிற மட்பாண்டங்கள் ஆகியவற்றை பயன்படுத்தினர். பல வகைக் கற்களால் ஆன கற்கருவிகள், கற்கோடாரிகள், தானியங்களை அரைக்க, இடிக்க உதவும் கற்கருவிகள் ஆகியனவும் கிடைத்துள்ளன. மேலும் இக்கால மக்கள் வாழ்ந்த பல்வேறு அளவுள்ள குழி வீடுகளில் குச்சி நடுகுழிகள் காணப்படுவதால் இவர்கள் கூரைகள் அமைந்த குடிசைகளில் வாழ்ந்ததாகத் தெரிகிறது.

இரண்டாம் பிரிவு- இதே புதிய கற்காலத்தைச் சேர்ந்த இரண்டாம் பிரிவு மக்கள் சாம்பல் மற்றும் சிவப்பு நிற மட்கலன்களையும் பயன்படுத்தினர். குறிப்பாக சக்கரத்தால் செய்யப்பட்ட பானைகள் இங்கு கிடைத்தனவற்றுள் சிறந்தனவாம். உணவு உற்பத்தி: கொள்ளு, பச்சைப்பயறு, ஆடு, மாடு, பன்றி, மான் போன்ற மிருகங்களையும் வளர்த்தனர். அதிலிருந்து வரும் பொருட்களை உணவிற்கு பயன்படுத்தினர்.

பரவல்

மேலும் இக்காலக் கருவிகள் தமிழகத்தில் பல இடங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றின் விவரம்,

வட ஆற்காடு பகுதிகள்- அப்புக்கல்லு, கல்லேரிமலை, சவ்வாது மலை, திருமலை, அம்பூர், சந்திராபுரம், கீழ்விளம்புச்சி, கொளுதம் பத்து, குத்ததூர், மலையம்பத்து, நெல்லிவாசல் நாடு, பழையதலூர், புதூர்நாடு, புலியூர், சோழிங்கூர், விண்ணமங்கலம்.

தென் ஆற்காடு பகுதிகள்- கொண்டிய நாத்தம், மேல் பரிகம், அரிக்கமேடு.

சேலம் மாவட்டம்- சேவரி

கோயமுத்தூர் மாவட்டம்- பெரியகுல்லே பாளையம்.

திருச்சி மாவட்டம்- ஒத்தக்கோயில்

தேனி மாவட்டம்- கருப்பண்ணசாமி கோவில் மேடு, பெரியகுளம்.

திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டம்- சைதங்கநல்லூர், கொற்கை, சாயர்புரம்.

தர்மபுரி மாவட்டம்- கொல்லப்பள்ளி, தொகரப்பள்ளி, பன்னிமடுவ, தயில்மலை, முள்ளிக்காடு, கப்பலாவடி, பர்கூர், கடத்தூர், மரிரெட்டிப்பள்ளி, மயிலாடும்பாறை, மோதூர், கொத்துக்குப்பம், வேடர் தத்தக்கல்  போன்ற இடங்களில் மனித இனங்கள் வாழ்ந்த தடயங்கள் உள்ளன.


References:

  • தமிழ்நாட்டுத் தொல்லியல் அகழ்வுகள், இராசவேலு சு, 1995
  • Archeological Gazatter of Tamilnadu, Chennai. Rajan k ,1997
  • தொல்பொருளியலாய்வும் தமிழர் பண்பாடும். குருமூர்த்தி. சா 1974
  • Neolithic and Megalithic cultures in Tamilnadu Narasimayah B 1976

தொடரும்...

C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com