மாக்கியவெல்லியின் அரசியல் சிந்தனைகள்-1

மாக்கியவெல்லியின் அரசியல் சிந்தனைகள்-1

மாக்கியவெல்லி வாழ்க்கை

நிக்கோலோ மாக்கியவெல்லி எனச் சுருக்கமாக அறியப்படும் நிக்கோலோ டி பர்னாடோ டெயி மாக்கியவெல்லி (Niccolò di Bernardo dei Machiavelli) ஒரு இத்தாலிய ராஜதந்திரியும், அரசியல் மெய்யியலாளரும், இசைக் கலைஞரும், கவிஞரும், நாடகாசிரியரும் ஆவார்.

இத்தாலியின் புளோரன்ஸ் நகரத்தில் - மே 3, 1469 – சூன் 21, 1527  நிக்கலோ மாக்கியவல்லி பிறந்தார். இவருடைய குடும்பம் பணவசதியோ, சமூக அந்தஸ்த்தில் உயர்ந்த குடும்பமாகவோ இருந்திருக்கவில்லை. ஆனால் நகர மட்ட மானிட வட்டத்திற்குள் புகழ்வாய்ந்த குடும்பமாக காணப்பட்டிருந்தது. மாக்கியவல்லியின் தந்தை பெர்னார்டோ டி நிகோலோ மாக்கியவெல்லி (Bernardo di Nicolo Machiavelli) ஒரு வழக்கறிஞராக இருந்ததுடன் புராதன வரலாறு பலவற்றையும் கற்றிருந்தார். மாக்கியவல்லி புளோரன்ஸ் பல்கலைக்கழகத்தில் தனது உயர்கல்வியை பூர்த்தி செய்ததுடன் லத்தீன் மொழி, மானிடவியல் ஆகிய துறைகளில் புலமை வாய்ந்தவராகவும் காணப்பட்டிருந்தார். மாக்கியவல்லியின் காலத்திற்கு இத்துறைகளில் புலமை பெறுவது அவசியமானதாகவும்,பெறுமதி வாய்ந்ததாகவும் கருதப்பட்டிருந்தது. 

கி.பி.1499-இல் மாக்கியவல்லி தனது 29வது வயதில் Florentine குடியரசின் இரண்டாவது Chancellor பதவியை பொறுப்பேற்றுக் கொண்டதுடன் வெளிவிவகாரங்களுடன் தொடர்புடைய விடயங்களுக்கு பொறுப்பாகவும் இருந்தார். இது மாக்கியவல்லி அரசியல் பற்றிய தெளிவினை பெறுவதற்கு பெரிதும் உதவியிருந்தது. 1512 ஆம் ஆண்டு புளோரன்ஸ் குடியரசு குழப்பமடைந்ததுடன், மாக்கியவல்லியின் தொழிலும் சிக்கலடைந்தது. 1512ஆம் ஆண்டு  பதவியிலிருந்து விலக்கப்பட்ட மாக்கியவல்லி, 1513ஆம் ஆண்டு சிறையிலடைக்கப்பட்டார். பின்னர் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை பெற்றுக் கொண்ட மாக்கியவல்லி சிறை வாழ்க்கைக்கு பிந்திய நாட்களை தனது ஓய்விற்காக பயன்படுத்தினார். இந்த ஓய்வு காலத்தில் தனது ராஜதந்திர அனுபவங்கள், வரலாறு ஆட்சியாளனுக்கு இருக்கக் கூடிய இயல்புகள் என்பவைகள் தொடர்பாக ஆய்வு செய்திருந்தார்

மாக்கியவல்லியின் ஆய்வு நூல்களில் Prince’, ‘Discourses on the First Decade of Titus Livius’ ஆகிய இரு நூல்களும் மிகவும் பிரபலமானதுடன் இவருடைய அனுபவத்தில் இருந்து பிறந்தவைகளுமாகும். 1513ஆம் ஆண்டு நடுப்பகுதியில் Prince என்ற நூலை எழுதியிருந்தார். மிகவும் அர்ப்பணிப்புடனும், கவனத்துடனும் எழுதப்பட்ட இந்நூல் ஆட்சியாளனுக்கு ஆலோசனை வழங்குகிற நூலாகவே இருந்நது. ‘Discourse on Livy’ என்ற நூலில் குடியரசுகளுக்கு இடையிலான உடன்படிக்கை ஒன்றுக்கு வருவதனூடாக கலப்பு அரசாங்கம் ஒன்றை உருவாக்க மாக்கியவல்லி முற்படுகின்றார். இந்நூல் பெருமளவிற்கு புளோரன்ஸ் நகரத்தின் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டே எழுதப்பட்டிருந்தது. ஆயினும் 1512 ஆம் ஆண்டு The Art of War என்ற நூல் ஒன்றை இதற்கு முதல் மாக்கியவல்லி எழுதியிருந்தமை குறிப்பிடத்தக்கது. பொதுவாக மாக்கியவல்லியின் அனேக எழுத்துக்களுக்கான சரியான காலம் இன்றுவரை தர்க்கத்திற்குரியதாகும். மாக்கியவல்லி 1527, ஜூன் , 22-இல் உயிர் நீத்தார்.

மாக்கியவெல்லி என்ற பெயர் சிந்தனை வட்டாரங்களில், அரசியல் கயமைத்தனத்தை குறிக்கிறது. மாக்கியவெல்லியைக் கண்டித்து இகழ்ந்து பெசிய சிந்தனையாளர்களெல்லாம் ஒரு அடிப்படை விசயத்தை மறந்துவிட்டனர். மாக்கையவெல்லி பழைய புடிய மன்னர்களுக்கு அரசாட்சி நிலைக்க வேண்டுமானால் இது செய்யாதொழிக என்று அறிவுரை சூத்திரங்களை வழங்கினார்.


லாரன்சோ டி மெடிசி

மக்கியவெல்லியின் அரசியல் சிந்தனைகளை மடிச்சி குடும்பத் தலைவர் லாரன்சோ டி மெடிசி (Lorenzo de' Medici) க்கு எழுதி அனுப்பிய கடிதமான “இல் பிரின்சிபே’ நூலின் தொடரைக் காண்போம்.

அத்தியாயம்-1 பலவித அரசாங்கங்களும்,அவை நிறுவப்படும் முறைகளும்

மனிதவர்க்கத்தை ஆளுவதற்கதாக ஏற்பட்டிருக்கும் ராஜ்யங்களும் சமஸ்தானங்களும் (Dominions) முடியரசுகள் அல்லது குடியரசுகளாகவே இருக்கின்றன.முடியரசு நாடுகள் பல்லாண்டுகளாகப் பரம்பரையாய் அரசுபுரியும் மன்னர்களைக் கொண்டவை அல்லது சமீப காலத்தில் ஒரு புதிய அரசனால் கைக்கொள்ளப்பட்டவையாக இருக்கும். புதிய ராஜ்யங்கள் பிரான்ஸிஸ்போஸ் போர்ஸா (Francesco Sforza) வுக்கு  மிலன்  (Milan) கிடைத்ததைப்போல் முற்றிலும் புதிதாகவே இருக்கும்.  இல்லையேல் ஸ்பெயின் தேசத்தரசனுக்கு நேபிள்ஸ் (Naples) எப்படியோ, அப்படிப் பரம்பரை பாத்தியதைகளுடன் சேர்த்துக் கொள்ளப்பட்ட புதிய அங்கங்களாக இருக்கும். இவ்விதம் சேர்த்துக்கொள்ளப்பட்ட சமஸ்தானங்கள் ஏற்கனவே வெறொரு அரசனுடைய ஆதிக்கத்தின் கீழ் இருந்தவையாகவாவது, சுயேச்சையாகவாவது இருந்திருக்கும்.  அவை அரசனுடைய அல்லது மற்றவர்களுடைய ஆயுதபலத்தினால், அசாதாரணமாமன திறமையினால், அல்லது அதிர்ஷ்டத்தினால் கைப்பற்றப்பட்டவை.

அத்தியாயம்-2 பரம்பரை முடியரசுகள்

நான் இங்கே குடியரசுகளைப் பற்றிச் சொல்லப் போவதில்லை. அவற்றைக் குறித்து வேறோரிடத்தில் வஸ்தாரமாய்ச் சொல்லியிருக்கிறேன். இங்கே முடியரசுகளைப் பற்றி மட்டுமே கூறுகிறேன். மேற்குறித்த பலவகை ராஜாங்கங்கள் எவ்விதம் நிர்வகிக்கப்படுகின்றன, பாதுகாக்கப்படுகின்றன என்பவற்றையே விவரிக்கிறேன். புதிய முடியரசு நாடுகளை ஆள்வதைவிடப் பரம்பரையாக ஒரே ராஜ வம்சத்தின் கீழ் வாழ்ந்து பழகிய நாடுகளைப் பரிபாலிப்பதில் சிரமம் குறைவு.  ஏனெனில் அவ்வித ராஜ்யங்களில் ஒரு அரசன் பழைய வழக்கங்களை மீறாமலும், எதிர்பாராத விதமாக ஏற்படும் நிலைமைகளைச் சமாளித்துக்கொண்டும் போனால் போதும். ஏதேனும் அபூர்வமான விபரீத சக்தியால் அவன் ராஜ்யம் பறிபோகும்படி நேரிட்டாலொழிய, சாதாரணமான ஜாக்கிரதைகளையுடைய  எந்த அரசனும் தன் பதவியை நிலை நிறுத்திக் கொள்ளலாம். அவனுடைய ராஜ்யம் அபகரிக்கப்பட்டுவிட்டால் கூடப் புதிதாய் கைப்பற்றியவனுக்கு ஒரு சிறு துரதிர்ஷ்டம் நேர்ந்தாலும் திரும்பவும் ராஜ்யம் அவன் கைக்குக் கடைத்துவிடும்.

உதராணமாக இத்தாலியில் பெராரா சிற்றரசன் (Duke of Ferrara) கி.பி.  1484 ஆம் ஆண்டில் வெனிஷியர் (Venetians) களுடைய தாக்குதலையும் 1510-ஆம் வருஷத்தில் போப் ஜுலிய (Pope Julius) ஸின் எதிர்ப்யையும் எப்படிச் சமாளித்தான் என்பதற்கு அவன் அந்த ராஜ்யத்தின் பழமையான ராஜவம்சத்தைச் சேர்ந்தவனாயிருந்தது தான் காரணம்.  நியாயமான அரசனுக்குக் குடிகளைத் துன்புறுத்த வேண்டிய அவசியமும் அதிகமாக இரா.  ஆகையால் அவன் குடிகளின் அன்பைப் பெறுவது சகஜம்.  அவனிடம் வெறுக்கத்தக்க  துர்க்குணம் ஒன்றும் இல்லாவிட்டால் பிரஜைகள் அவனிடம் இஷ்டத்துடனிருப்பது இயற்கையே. அவனுடைய ஆட்சி வெகுகாலம் நீடித்துப் பழகியதாய்ப் போயிவிடுவதால் முதன் முதல் புதிதாகச் செய்யப்பட்ட சட்ட திட்டங்களின் காரணங்களும் ஞாபகமும் குடிகளுக்கிருப்பதில்லை. ஒரு மாறுதல் இன்னொரு மாறுதலை ஏற்றுக் கொள்ளும் வழியைத் தயார் செய்கிறது.

தொடரும்...

C.P.சரவணன், வழக்கறிஞர், 9840052475

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com