மாக்கியவெல்லியின் அரசியல் சிந்தனைகள்-3

மாக்கியவெல்லியின் அரசியல் சிந்தனைகள்-3

மாக்கியவெல்லியின் அரசியல் சிந்தனைகள்-3: சொந்தக் கட்டு திட்டங்களின் கீழ் வாழ்ந்து வந்திருக்கும் நகரங்களையும் சமஸ்தானங்களையும் ஆளுமுறை


அலெக்ஸாண்டர் ஜெயித்த டேரியஸின்  (Darius) ராஜாங்கம், அலெக்ஸாண்டருடைய வாரிசுகளுக்கு எதிராகக் கலகம் விளைவிக்காத காரணம்


    புதிய நாடுகளை  ஆள்வதிலுள்ள சிரமத்தை பார்த்தால் மகா அலெக்ஸாண்டர் சில வருடங்களுக்குள்ளாக ஆசியாவில் வெற்றிக்கொடி நாட்டி அதை ஆளத்தொடங்கியவுடனே இறந்துவிட்டதால்,  அப்போது ராஜ்ய முழுவதிலும் கலகம் விளைந்திருக்க வேண்டுமே,  எப்படிக் கலவரமின்றியிருந்தது என்று ஆச்சர்யமாயிருக்கும்.  அவனுடைய வாரிசுகள் தங்கள் உரிமைகளைப் பாதுகாத்துக் கொண்டனர்.  பேராசை மேலிட்டு அவர்கள் தங்களுக்குள் சச்சரவிட்டு கொண்டதைத் தவிர வேறு கலகம் ஒன்றும் நேரவில்லை.
    

சரித்திர மூலமாக  நாம் அறிந்துள்ளபடி ராஜ்யங்கள் இரண்டு விதமாக நிர்வகிக்கப்படுகின்றன.  ஒன்று அரசனால் அல்லது அவனுடைய தயவும் அனுமதியும் பெற்ற அமைச்சர்களால் ஆளப்படுகிறது.  இன்னொரு விதம் அரசனும் பிரபுக்களும் (Barone) ஆளுவது.  பிரபுக்கள் தங்கள் பதவிகளை அரசனுடைய தயவால் பெற்றவர்களல்ல. புராதன பரம்பரையைச் சேர்ந்தவர்களாயிருப்பதால் அடைந்தவர்கள். பிரபுக்களுக்குச் சொந்த ராஜ்யங்களும்,  அவர்களை எஜமானர்களென்று கருதும் குடிகளும் உண்டு. அக்குடிகள் பிரபுக்களை இயற்கையாகவே நேசிக்கிறார்கள். அரசனாலும் அவனுடைய அமைச்சர்களாலும் ஆளப்படும் ராஜ்யத்திலோ அரசன் ஒருவனுக்கே அதிகாரம் அதிகம்.  ஏனெனில் அந்த ராஜ்யத்தில் அவனைவிட மேலானவர்கள் கிடையாது. மற்றவர்களுக்கு ராஜாவுடைய அதிகாரிகள் என்பதைத் தவிர வேறு விசேஷமான மதிப்பு ஒன்றும் இருக்காது.
    

துருக்கி முடியரசு ஓரே அரசனால் ஆளப்படுகிறது.  மற்றவர்களெல்லாம்’ ராஜ சேவகர்களே,  அரசன் தன் ராஜ்யத்தைப் பல பிரிவுகளாக பிரித்து அவற்றை நிர்வாகம் செய்வதற்கு அதிகாரிகளை நியமித்தனுப்புகிறான்.  வேண்டாத போது அவர்களை  மாற்றுகிறான்,  அல்லது திருப்பி அழைத்துக் கொள்கிறாள். ப்ரான்ஸ் அரசன் பல பழமையான வம்சங்களில் உதித்த பிரபுக்களால் சூழப்பட்டிருக்கிறான்.  அந்தப் பிரப்புக்கள் ஜனங்களுடைய நன்மதிப்பைப் பெற்றவர்கள். அவர்களுக்குத் தனிப்பட்ட உரிமைகள் உண்டு. அவற்றை அரசனால் பறிக்க முடியாது, பறிக்க முயன்றால் அரசனுக்கு ஆபத்து. இவ்விரண்டு ராஜயங்களையும் நோக்குங்கால், துருக்கியரின் ராஜ்யத்தை ஜெயிப்பது கஷ்டம்.  ஆனால் ஜெயித்த பின் அதிகாரத்தை ஸ்தாபிப்பது மிகவும் சுலபம் என்பது புலப்படுகிறது.  பலவிதங்களில் பிரான்ஸைக் கைப்பற்றுவது எளிதாயிருக்கும். ஆனால் அதில் உரிமையை நிலைக்கச் செய்வது மிகவும் கஷ்டம்.
    

துருக்கியருடைய ராஜ்யத்தைப் பிடிப்பதிலுள்ள சிரமம் என்ன வென்றால், அதை ஆக்கிரமிக்க விரும்புவர்கள் உள்நாட்டு மக்களால் அழைக்கப்பட மாட்டார்கள். அரசனோடு இருப்பவர்களெல்லோரும் அவனுடைய அடிமைகளாயும் அவன் தயவை நாடி நிற்பவர்களாயுமிருந்ததால் அவர்களைக் கலைப்பதும் எளிதல்ல. அப்படி அவர்களைக் கலைத்தாலும், பிரயோஜனப்படாது அவர்களுக்கு ஜனங்களிடம் செல்வாக்குக் கிடையாது. ஆகவே அந்நாட்டைத் தாக்குபவர்கள் தம்சொந்த சக்தியையே நம்பித்தான் துருக்கியரை ஜெயித்து, மறுபடியும் அவர்களுடைய சேனைகளைத் தலைதூக்காமற் செய்து விட்டால் பயமேயில்லை.  ராஜ வம்சத்தார்களை மட்டும் ஒழித்துவிட்டால் அஞ்சுவதற்கு வேறு யாருமே இல்லை. ஏனெனில் வேறொருவருக்கும் பொதுமக்களிடையே மதிப்புக் கிடையாது.
    

பிரான்ஸைப் போன்ற தேசங்களின் சமாசாரமே வேறு.  பிரபுக்களில் சிலரை வசப்படத்திக் கொண்டு அம்மாதிரி தேசங்களில் நுழைந்து  விடலாம். சில பிரபுக்கள் எப்போதும் திருப்தியற்றவர்களாயும், புது மாறுதலை விரும்புகிறவர்களாயும் இருப்பார்கள்.  அப்படிப்பட்டவர்கள் ஏற்கனவே குறித்துக்ள காரணங்களுக்காக வெளியரசனுக்கு வழியைத் திறந்து விட்டு, அவனுடைய வெற்றிக்கு உதவி செய்வார்கள், அவனால் அடக்கப்பட்டவர்கள் எல்லோரும் எதிர்த்துக் கொள்ளுவார்கள், அவனால் அடக்கப் பட்டவர்கள் எல்லோரும் எதிர்த்துக் கொள்ளுவார்கள்.  அந்நாட்டின் ராஜ குடும்பத்தினரை மாத்திரம் அழிப்பது போதாது, புதிய ராஜிய கொந்தளிப்புகளை (Revolution)ஏற்று நடத்தப் பிரபுக்கள் இருப்பார்கள்.  அப் பிரபுக்களைத் திருப்தி செய்வதும் முடியாது, தொலைத்து விடவும் இயலாது. அவர்கள் சமயம் பார்த்துக் கொண்டே இருந்து ராஜ்யத்தை அபகரித்துக் கொள்வார்கள்.

பிரான்ஸின் ராஜ்யம் துருக்கியரின் ராஜ்யத்தைப் போன்றது.  அலெக்ஸாண்டர் அந்த ராஜ்யத்தை அரிதிற் கைப்பற்றினார். டேரியஸ் இறந்தபின், அது அவனுக்கு பத்திரமுள்ளதாய் விட்டது. அலெக்ஸாண்டருக்குப் பின்னர் வந்தவர்கள் ஒற்றுமையுடனிருந்திருந்தால் அமைதியுடன் நாட்டை ஆண்டு வந்திருக்கலாம். ஏனெனில் அவர்கள் தாங்களே தூபம் போட்டுக் கிளப்பியதை தவிர வேறு கலவரமொன்றும் அங்கே உண்டாகவில்லை. பிரான்ஸ் போன்ற நாடுகளை இவ்வளவு சுலபமாக ஆண்டு வரமுடியாது. ஆகையால்தான் ஸ்பெயின், பிரான்ஸ், கிரீஸ், முதலிய தேசங்களில் ரோமர்களுக்கெதிராக அடிக்கடி கலகம் மூண்ட வண்ணமிருந்தது.  அத் தேசங்களிலுள்ள கணக்கற்ற சிறு ராஜ்யங்களில் பிரபுக்கள் அதிகாரம் வகித்து வந்திருந்தார்கள். அவர்களுடைய ஞாபகம் ஜனங்கள் மனதிலிருந்த மட்டும் ரோமர்களுக்கு தங்கள் வெற்றி நிலையானதாய் இருக்குமென்பதே சந்தேகமாயிருந்தது. ரோம சாம்ராஜ்யத்தின் அபாரமான சக்தியாலும்,  அவர்களுடைய நீடித்த அரசாட்சியாலும் ஜனங்களுக்குப் பழைய எஜமானர்களுடைய ஸ்மரணையே அற்றுப்போன பிறகு ரோமர்கள் எதிர்ப்பாற்பற்றவர்களாய்விளங்கினார்கள்.  

ரோமர்கள் தங்களுக்குள் சச்சரவிட்டுக் கொண்டபோது அந்தந்தப் பிரதேசங்களிலுள்ள ஜனங்களின் ஆதரவை நம்பியிருக்க முடிந்தது. பழைய ராஜ வம்சங்களெல்லாம் அறவே அற்றுப்போனபிறகு ரோமர்களே அரசர்களென்று போற்றப்பட்டார்கள். அலெக்ஸாண்டர் ஆசியாவில் சௌகரியமாக அதிகாரம் வகித்ததில் ஆச்சர்யமொன்று மில்லை.  அவ்வாறே பைரஸும் (Pyrrhus) இன்னும் பலரும் தாங்கள் ஜெயித்த பிரதேசங்களை ஆளக் கஷ்டப்பட்டதிலும் அதிசயமில்லை. இதற்கு ஜெயித்தவர்களுடைய சாமர்த்தியமோ, சாமர்த்தியக் குறைவோ காரணமாயில்லை.  நிலைமைகளின் வித்தியாசமே காரணம்.
    

சொந்தக் கட்டு திட்டங்களின் கீழ் வாழ்ந்து வந்திருக்கும் நகரங்களையும் சமஸ்தானங்களையும் ஆளுமுறை
    ஜெயிக்கப்பட்ட ராஜ்யங்கள் தங்கள் சொந்தக் கட்டுதிட்டங்களுக்குட்பட்டு வாழ்ந்து வந்தவையாக இருப்பின் அவற்றில்அதிகாரத்தை ஸ்தாபிப்பதற்கு மூன்று வழிகள்  உள.  முதல் வழிகொள்ளையடித்தல், இரண்டாவது வழி அரசன் அந்நாடுகளை வாசஸ்தலமாகக்  கொள்வது,  மூன்றாவது  மக்களிடம்  கப்பம் பெற்றுக் கொண்டு, தனக்குச் சாதகமானவர்களைக் கொண்டு ஒரு சர்க்காரை அமைத்துவிட்டு, குடிகளை சொந்த சட்டங்களையே அனுசரிக்கும்படி விட்டுவிடுவது. இந்த சர்க்கார் ராஜாவால் அமைக்கப்பட்டதாகையால் அவனுடைய பாதுகாப்பும் சிநேகமும் இல்லாமல் அது நிலைக்க முடியாது.  

ராஜாவுடைய ஆதரவைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அது என்ன வேண்டுமானாலும் செய்யச் சித்தமாக இருக்கும். சுயேச்சையாயிருந்து பழகிய நாடுகளை ஸ்திரப்படுத்திக் கொள்ள வேண்டுமானால் அந்நாட்டு மக்களையே நிர்வாகத்தை ஏற்று நடத்திச் செய்வது நல்லது. 
 

ஸ்பார்டன்கள்

ரோமர்களுடையவும் ஸ்பார்டன்களுடையவும் (Spartans) திருஷ்டாந்தம் இருக்கிறது. ஸ்பார்த்தர்கள் ஏதென்ஸிலும் (Athens) தீப்ஸிலும் (Thebes) நகர மாந்தர்களைக் கொண்டே சர்க்காரை அமைத்தும் அந்நகரங்களை இழந்தனர். ரோமர்கள் காபுவா (Capua) கார்த்தேஜ் (Carthage) நுமந்தியர் (Numantia) முதலிய இடங்களில் அக்கிரமங்களை இழைத்தும் அவற்றை இழக்கவில்லை.  அவர்கள் கிரீஸைக் காப்பாற்றிக் கொள்வதற்காக,  அந்நாட்டுக் குடிகளைச் சுதந்திரத்துடன் சொந்தச் சட்டங்களைப் பின்பற்றும்படி விட்டனர். அவர்களுக்கும் பலன் கிடைக்கவில்லை. ஆகையால் அவர்களுக்கு அம்மாகாணத்தில் பல பட்டணங்களைப் பாழாக்கும் படியான நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அவற்றில் அதிகாரத்தை நிலை நாட்டுவதற்குப் பாழ் படுத்துவதைப் போல் நிச்சயமான வழி எதுவும் இல்லை.  ஒரு சுதந்திர நாட்டை ஜெயித்தவன் அதை அழிக்காவிட்டால் அது அவனை ஒழித்துவிடும். ஏனெனில் ஸ்வாதீனமான நாடுகளில் ராஜ்யக் குழப்பங்கள் உண்டாவதற்கு சுதந்திரம், பண்டை வழக்க முறை, என்பவை தூண்டுதலாயிருக்கும். எவ்வளவு காலம் சென்றாலும், குடிகளை என்ன தான் நல்லதனப்படுத்தி வைத்துக் கொண்டாலும் அவர்களுக்கு அந்த ஞாபகம் போகாது. அவர்களைப் பிரித்துக் கலைந்து போகும்படி செய்யாவிட்டால் எவ்வளவு நன்மைகளைப் பெற்றாலும் அவர்கள் சுதந்திரத்தின் பெயரையும் பழக்கமுறைகளையும், மறக்கவே மாட்டார்கள்.  சமயம் நேர்ந்த போதெல்லாம் அவற்றின் பெயரால் கிளர்ச்சி செய்வார்கள்.  பிளாரன்டின்களின் கீழ் வெகுகாலம் அடிமை நிலையிலிருந்து பைஸா நகரம் அப்படித்தான் செய்தது. ஆனால் அரசன் ஆட்சிக்கு அடங்கிப் பழகிய நாடுகளில், ராஜவம்சத்தைத் தொலைத்துவிட்டால், பிறர் அதிகாரத்திலிருந்தே பழகியதாலும், பழைய ராஜா போய்விட்டதாலும் குடிகள் தங்களுக்குள் ஒரு ராஜாவைத் தேர்ந்தெடுப்பதற்கு ஒற்றமையில்லாமல், சுதந்திரமாயிருக்கவும் வகை தெரியாமல் திண்டாடுவார்கள், அவர்கள் ஆயுத பலங்கொண்டு எதிர்ப்பதற்கும் நாளாகும். அரசன் அவர்களை அதிக சௌகரியத்துடன் வசப்படுத்திச் சாவதானமாக நாட்டில் அமர்ந்து கொள்ளலாம். குடியரசு நாடுகளிலோ துவேஷமும் பழிவாங்கும் ஆவலும் அதிகம். அவர்கள் தங்களுடைய பழைய சுதந்திர வாழ்க்கையை லேசில் மறக்கமாட்டார்கள். மறக்கவும் முடியாது. அவர்களுடைய நாட்டைப் பாழ் படுத்த வேண்டும், அல்லது ராஜா அதை வாசஸ்தலமாகக் கொள்ள வேண்டும். அதுதான் வெற்றிக்கு நிச்சயமான சாதனம்.

சேனாபலத்தினாலும் சொந்தத் திறமையினாலும் ஆட்கொள்ளப்பட்ட புதிய சமஸ்தானங்கள்
    

புதிய சமஸ்தானங்களைப் பற்றிக் கூறும்போது நான் மிகப்பெரிய உதாரணங்களை எடுத்துக் காண்பிப்பதைப் பார்த்து ஆச்சர்யப்பட வேண்டாம். பெரியோர்  காட்டிய வழியைப் பின்பற்றவே மக்கள் ஆர்வம் கொள்கிறார்கள். அவர்களுடைய செயலை அனுசாபிக்கத் தொடங்குகிறார்கள்.  இன்னொருவரை அப்படியே “காப்பி” அடிப்பது சாமான்ய மல்ல. அந்த மேன்மை கிடைப்பது கஷ்டம். அறிவாளியாயிருப்பவன் பெரியோர் அடிச்சுவட்டில் நடந்து, மிகச் சிறந்தவர்களுடைய அருஞ் செய்கைகளைப்  போல்  தானும் செய்ய ஆசைப்பட வேண்டும். அப்படி விரும்பினால் தான் அவர்கள் அளவு சிறப்பை அடைய முடியா விட்டாலும்,  படிக்குப் பாதியாவது தேறும்.

புத்திசாலியான வில்லாளி தூரத்திலுள்ள ஒரு வட்சியத்தை அடிக்க விரும்பினால், அதைவிடத் தூரத்தில் குறிவைத்து அம்பை எய்கிறான். அவ்வளவு தூரம் தன் பாணம் போகுமென்றதுணிவால் அல்ல. அவ்வளவு உயரத்தில் நாட்டம் வைத்தால் தன் லட்சியத்தில் கட்டாயம்  படும் என்பதால் தான்.  மக்களும் அவ்வாறே செய்ய வேண்டும்.

ரோமுலஸ்
    

புதிய ராஜ்யங்களில் ஒரு புதிய ராஜா ஆள நேர்ந்தால் அரசனுடைய திறமையின் அளவுக்குக் தக்கபடி நிர்வாகம் சுலபமாகவே இருக்கும். ஒரு சாதாரணமான மனிதன் அரசனாவதற்கு அபூர்வமான திறமை, அல்லது அதிர்ஷ்டம் தேவையாயிருக்கிறது. இவ்விரண்டும் அநேகவிதமான சிரமங்களைக் குறைக்க வல்லவை.  அதிர்ஷ்டத்தையே அதிகம் நம்பியிராதாவர்கள்  தங்களை நன்றாகப் பாதுகாத்துக் கொள்கிறார்கள். புதிய அரசனுக்குத் தனத்கென்று வேறு இடமில்லாத்தால் அந்த ராஜ்யத்திலேயே வசிக்கத் தொடங்குவது பெரிய நன்மை. அதிர்ஷ்டம் காரணமாக இல்லாமல் சாமர்த்தியத்தினால் ராஜ பதவியடைந்தவர்களில் மோஸஸ் (Moses) ஸைரஸ் (Cyrus) ரோமுலஸ் (Romulus) தீஸியஸ் (Thesus) போன்றவர்கள் சிறந்தவர்கள். மோஸஸ் கடவுள் ஆக்கினையையே நிறைவேற்றியவர்.  ஆகையால்  அவரைக் குறித்து ஒன்றும் சொல்வதற்கில்லை.  எனினும் கடவுளுடன் நேருக்கு நேர் பேசும் கடவுளுடன் நேருக்கு நேர் பேசும் மகிமையையுடையவராயிருந்தாலேயே அவர் போற்றுவதற்குரியவராகின்றார். ஸைரஸ் முதலியவர்களும் மெச்சத் தகுந்தவர்கள் தாம்.  மோஸஸின் செயல்களைப் போலவே அவர்களுடைய காரியங்களும் அரியவை. அவர்களுடைய வரலாறுகளையும் செய்கைகளையும் பார்த்தால், அவர்கள் அதிர்ஷ்ட தேவதைக்குச் சிறிதும் கடன்பட்டிருக்குவில்லை. அவர்கள் நினைத்ததை முடிப்பதற்குச் சந்தர்ப்பம்தான் துணையாயிருந்தது என்று தெரிகிறது.  சந்தர்ப்பம்  

வாய்த்திராவிட்டால் அவர்களுடைய சக்தி வீணாயிருக்கும். சக்தியில்லாமலிருந்தால் சந்தர்ப்பம் வந்தும் பிரயோஜனமில்லை. சக்தி, சந்தர்ப்பம் இரண்டும் ஒன்று சேர்ந்தால் தான் வெற்றி.

எகிப்து  நாட்டில் அடிமைகளாயிருந்து எகிப்தியரால் துன்புறுத்தப்பட்ட இஸ்ரேலின் மக்களைக் கண்டது மோஸஸுக்கு ஒரு அரிய சந்தர்ப்பம். இஸ்ரேலின் ஜனங்கள் தங்கள் அடிமைத் தளையை அறுத்தெரியும்பொருட்டு மோஸஸைப் பின்பற்ற  மனங்கொண்டனர்.  ரோமாபுரியின் வேந்தனாயும் ஒரு புதிய ஜாதியின் சிருஷ்டிக்குக் காரணகர்த்தாவாகவும் ரோமுலஸ் ஆவதற்கு அவன் ஆல்பாவில் (Alba) இருக்க முடியாமல் போய்ப் பிறந்தவுடனே வெளிக்கடத்தப்பட வேண்டியது அவசியமாக இருந்தது. பாரசீகர்கள், மேதியர்களுடைய (Medes) ஏகாதிபத்தியத்தில் அதிருப்திருயடைந்திருந்ததும், மேதியர்கள் நெடுக்காலமாக அமைதியை அனுபவித்து வந்ததால் பலஹீனமும் “பெண் தன்மை “ யும் அடைந்திருந்தும் ஸைரஸுக்கு சாதகமாயிருந்தது.

ஆதனியர்கள் (Athenians) ஐக்கியமின்றச் சிதறியிருந்தராவிடில், தீஸியஸின் திறமையைக் காண்பித்திருக்க முடியாது. இச்சம்பவங்கள் தாம் இந்தப் பெரியோர்களுக்குச் சந்தர்ப்பத்தை அளித்தன. அவர்களுடைய அரிய தன்மைகளால் அச்சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக்  கொண்டு தங்கள் நாட்டின்  கௌரவத்தைச் சிறப்பித்து அதன் அதிர்ஷ்டத்தையும் விருத்தி செய்தனர். 

இம்மாதிரி தங்கள் திறமையினால் அரசர்களானவர்கள் ராஜ்யங்களை ஜெயிப்பதற்குச் சிரமப்பட்டாலும் பிறகு அவற்றைச் சுலபமாகக் காப்பாற்றிக்கொள்வார்கள். ராஜ்யத்தை ஜெயிப்பதிலுள்ள கஷ்டமென்ன வென்றால், தங்கள் பாதுகாப்புக்காகப் புதுச் சட்டதிட்டங்கள் ஏற்படுத்த வேண்டியிருப்பதொன்று, புதுச் சட்டங்களை உண்டாக்கி, அவற்றை அமுலுக்குச் கொண்டு வருவதைப்போல் ஆபத்தான காரியம் வேறில்லை.  சீர்திருத்தம் செய்கிறவன் பழைய சட்டங்களால் லாபமடைந்தவர்களுடைய விரோதியாகி விடுகிறான்.  புதிய சட்டங்களால் நன்மை பெறக் கூடியவர்களும் அவனை அரைமனதுடன்தான் ஆதரிக்கிறார்கள். இதற்குக் காரணம் பழைய சட்டத்தையே வேண்டுகிறவர்களிடம் பயமும், மனிதர்களுடைய சுபாவமான அவநம்பிக்கையுந்தான். மனித இயல்பு எந்தப் புதிய விஷயங்களிலும் அனுபவத்தில் பலனை அறிந்தாலொழிய நம்பிக்கை கொள்வதில்லை.  ஆகவே சீர்திருத்தவாதியை அவனுடைய விரோதிகள் ஆவேசத்துடன் எதிர்க்க, மற்றவர்களும் வேண்டா வெறுப்பாகவே ஆதரிக்கிறார்கள். இவ்விரு திறத்தாரின் நடுவில் அவன் பாடு பெரிய ஆபத்தாயிருக்கிறது.  

இவ்விஷயத்தை மேலும் ஆராய்வதற்குச் சீர்திருத்தக்காரன் சுயேச்சையானவனா அல்லது தன் ஆணையை நிறைவேற்ற இன்னொருவருடைய தயவை வேண்டுகிறவனா என்று பார்க்க வேண்டும். அதாவது ஜனங்களை நல்லதனப்படுத்தி வேண்டிய காரியத்தை நடத்த வேண்டுமா அல்லது கட்டாயப் படுத்தி உத்தரவளிக்கும் சக்தி உண்டா என்று அறிய வேண்டும். முதல் கூறியபடியானால் வெற்றி கிடைக்காது. ஒரு காரியமும் நடக்காது.  ஆனால் தங்கள் சக்தியைக் கொண்டு நிர்ப்பந்தப் படுத்தக் கூடியவர்கள் தோற்பதரிது.  ஆயுத பலமுடைய தீர்க்கதரிசிகள் (Prophets) ஐயமும் ஆயுதமில்லாத மதாசாரியர்கள் தோல்வியும் அடைவது இதனால் தான் ஜனங்களுடைய குணங்கள் மாறுபட்டவை. அவர்களுக்கு உபதேசம் செய்வதெளிது.  நம்ப வைப்பது சுலபம்.  ஆனால் அவர்களை நம்பிக் கொண்டே யிருக்கச் செய்வது சிரமம்.  ஆகையால் அவர்களுடையவிசுவாசம் குறைகிற சமயத்தில் அவர்களை நம்பும்படி நிர்ப்பந்திப்பதற்காகக் கட்டாயத்தை உபயோகிக்க வேண்டும். மோஸஸ், ஸைரஸ், தீஸியஸ், ரோமுலஸ், முதலியவாக்ள ஆயுத பலமில்லாதவர்களாயிருந்தால் அவர்களுடைய சட்ட திட்டங்களை ஜனங்கள் அவ்வளவு காலம் அனுசரித்திருக்க மாட்டார்கள்.  நம் காலத்தில் அந்த சக்தியில்லாததால் பிரா ஜிரோலாமோ ஸவோனாரோலா (Fra Girolomo Savonarola) முற்றிலும் அபஜயமடைந்தான். அவனுடைய புதிய தத்துவங்களில் ஜனங்கள் நம்பிக்கையிழக்க ஆரம்பித்தபோது, நம்பிக்கையுள்ளவர்களைத் தன்வசம் இருத்திக்கொள்ளவும், மற்றவர்களைப் பலவந்தமாக நம்பச் செய்யவும் கூடிய சாதனம் அவனிடம் இருக்க வில்லை. ஆகவே புதிய சட்டங்கள் இயற்றுவோருக்குக் காரிய சித்தி பெறுவதில் மிகுந்த கஷ்டம்  இருக்கிறது. வழியெல்லாம் விபத்துதான்.   அவற்றையெல்லாம் அரசன் தன் சாமர்த்தியத்தினால்தான் கடக்க வேண்டும். ஆனால் கஷ்டங்களை அகற்றிப் பொறாமைக்காரர்களை அடக்கி மக்களுடைய மரியாதையைப் பெறத் தொடங்கிய பின்னர் ராஜா பலசாலியாய் பயமற்று, சந்தோஷமாயும் கௌரவமாயும் இருக்கிறார்.

இந்த உத்கிருஷ்டமான உதாரணங்களுடன் ஒரு சாதாரண விஷயத்தையும் கூறுகிறேன். ஸிராகஸ் () நகரத்து ஹிரோ () கேவலம் சந்தர்ப்பத்தின் துணையினால் சாமான்ய ஸ்திதியிலிருந்து ஸிராகஸ் ராஜயத்துக்கு மன்னனானான். அதிர்ஷ்டம் வேறெந்த உதவியும் செய்யவில்லை. துன்புறுத்தப்பட்டிருந்த ஸிராகஸர்கள் அவனைத் தங்கள் தலைவனாகத் தேர்ந்தெடுத்தனர். அதினின்றும் அவன்தன் கெட்டிக் காரத்தனத்தால் ராஜாவானான். சாதாரண மனிதனாயிருக்கும் போதே அவன் சாமர்த்தியம் பிரமாதமாக இருந்தபடியால் அவனைப் பற்றி எழுதியவர்கள் “அவனுக்கு ஆளுவதற்கு ஒரு ராஜ்யந்தானில்லையே தவிர வேறு ஒரு யோக்கியதைக்கும் குறைவில்லை” என்று எழுதினார்கள். அவன் பழைய சைனியத்தைக் கலைத்துப் புதிய  ராணுவத்தை அமைத்துக் கொண்டான்.  பழைய நண்பர்களை விலக்கிப் புதிய சிநேகங்களை ஏற்படுத்திக் கொண்டான். சிநேகமும் ராணுவமும் தானே பொறுக்கியவையாயிருந்தன.  அந்த அஸ்திவாரத்தின் மீது பத்திரமாக ராஜ்யாதிகாரமாகிய கோட்டையைக்  கஷ்டப்பட்டானே தவிரத் தன் பதவிளை நிலைநிறுத்திக் கொள்ள சிரமப்படவில்லை.

தொடரும்...

C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com