இன அரசியல்-6: மனித இன நவீன வரையறைகள் மற்றும் வகைப்பாடுகள்

இன அரசியல்-6: மனித இன நவீன வரையறைகள் மற்றும் வகைப்பாடுகள்

உலகளாவிய நிலையில் மனித குலத்தாரைப் பல்வேறு இனங்களாகப் பாகுபடுத்திய முறையைப் பின்னாளில் மானிடவியலர்கள் மாற்ற விரும்பினார்கள்.  இனம் என்னும் சொல்லுக்குப் பதில் மெண்டலிய மக்கள் என்று கூறலாம் என ஸ்டான்லி மேரியன் கார்ன் (Stanley Marion Garn) முன்மொழிந்தார். 
 

ஸ்டான்லி மேரியன் கார்ன்


தொடக்க காலத்தில் இனம் எனும் சொல் ஏதொ ஒரு வகையில் நேரடியாக இனவெறியோடும்.  இன ஒதுக்குதல் கொள்கையோடும் தொடர்பு பெற்று விட்டதால் அச்சொல்லாடலைக் கைவிட வேண்டுமென விரும்பினார்கள். ஆனாலும் அது தொடர்ந்து கொண்டிருப்பதையும் காண முடிகிறது.  அதனால் மானிடவியலர்கள் இச்சொல்லை முழுக்க உயிரியல் துறைசார்ந்த அர்த்தத்தோடு மட்டுமே பயன்படுத்த வேண்டுமெனவும் புரிந்து கொள்ள வேண்டுமென வலியுறுத்தினார்கள்.

இன்று மானிடவியலார் மனித குலத்தாரைப் பின்வரும் வகையினங்களாக வகைப்படுத்துகின்றனர்.  அவை :

1.    புவியியல் சார்ந்த இனம் (Geographical race)
2.    வட்டார இனம் (Local race)
3.    நுண்ணினம் (Micro Race)

புவியியல் ரீதியாகத் தனித்துவம் கொண்ட நிலப்பகுதியில் வாழும் மக்களினத்தவரின் உயிரியல் பண்புகள் அப்பகுதிக் குள்ளேயே தொடருவதற்கு எல்லா வாய்ப்புகளும் உள்ளன.  அவர்களுக்குள் மணவுறவு நிகழ்வதே காரணம். இதனால் இத்தகைய மக்களை மெண்டலிய மக்கள் என அழைப்பது வழக்கம். தீவுக்கூட்டம், ஒரு முழுமையான கண்டம்/ துணைக் கண்டம் / மலை / கடல் ஆகியவற்றால் பிரியும் ஒரு பிரதேசம் ஆகியவற்றில் வாழும் அனைவரும் புவியியல் சார்ந்த இனமாகக் கருதப்படுகின்றனர்.  பின்வரும் அட்டவணையில் முக்கியமான புவியியல் சார்ந்த இனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

வட்டார இனங்கள்

புவியியல்சார் இனத்திற்கடுத்து வட்டார இனங்களாக மக்கள் வகைப்படுகின்றனர். ஒரு பரந்த புவியியல்சார் பரப்பிற்குரிய இனமானது வட்டார அடிப்படையில் சில தனித்துவங்களை முன் வைத்து வேறுபடுபவையே ‘வட்டார இனங்கள்’ எனப்படும். புவியியல்சார் இனத்தின் ஒர் உட்பிரிவே வட்டார இனம்.  இனப்பெருக்க அளவில் ஒரு பரந்த எல்லையை வரையறுத்து அந்த எல்லைக்குள்ளேயே நில, சமூக, மொழி எதுவாகவும் இருக்கலாம். இனப்பெருக்க முறையைக் கொண்டிருக்கும் மக்கள் வட்டார இனமாகக் கருதப்படுவார்கள்.

முக்கியமான வட்டார இனங்கள் 

ஒரு குறிப்பிட்ட குறுகிய நிலப்பரப்பின் சுற்றுச் சூழல் தரும் அழுத்தத்தின் இனப்பெருக்க வாய்ப்புகளையும், அதையொட்டிய மரபணு பரவுதலில் ஒர் ஒழுங்கையும் தக்கவைக்கும் மக்கள் கூட்டமாக வட்டார இனம் அமைகிறது. அதுவுங்கூட ஒரு பரந்த வகையினமாகவே உள்ளது.  ஏனெனில் திராவிடர் என்ற வகைப்பாட்டிற்குள் வட்டார இனம் இடம் பெறுகிறது நுண்ணினம் என்ற அடுத்தகட்ட வகைப்பாட்டையும் கவனிக்கும் போது இனம் பற்றிய நமது புரிதல் மேலும் தெளிவடையும்.

நுண்ணினம் 

வட்டார இனங்கள் என அறியப்படும் ஒவ்வொரு இனத்தின் கண் அமையும் கிளையினங்களே நுண்ணினம் ஆகும். திராவிடர் எனும் வட்டார இனத்தின்கண் காணப்படும் மொழிவாரிப் பிரிவினர்களை நுண்ணினம் எனக் கொள்ளலாம். தமிழர் தமிழருடன் மணவுறவு கொள்ள விரும்பும் போக்கு இம்மக்களுக்கிடையில் காணப்படும் மரபணு ஒழுங்கமைவினைத் தொடர்ந்து கொண்டு செல்ல உதவுகிறது.  இதனால் ஏற்படும் மக்களினம் தனிவகையினமாக உருப்பெற்று காலங்காலமாகத் தொடர்ந்து வருகிறது.

இந்தவகையில் மனிதகுலமானது பல்வேறு நிலைகளில் படிப்படியாக வகைப்பட்டு அதன தன் மரபணு எல்லையின் தனித்துவத்தை வரையறுத்துக்கொண்டு வருகின்றது.  மேற்கூறிய இனங்களுக்கிடையில் கலப்பு  நீண்ட நெடுங்காலமாக நடந்து வருகிறது.  இந்த இனக்கலப்பு என்பது ஒர் இனத்தின் தனித்துவமான சில பண்புகளை உடனடியாக மாற்றிவிடாது.  மாறாக, இதனை மரபணு ஒட்டம் என்று கூறுவார்கள்.  இனப்பெருக்க வரையறை கொண்ட ஒர் இனத்தார் மற்றொரு இனத்தாரை விரும்பி மணக்கும்போது ஒரு மரபணுச் சேர்மத்ததுக்குரிய பண்புகள் மற்றொரு இனத்தின் மரபணுச் சேர்மத்தோடு கலக்கிறது.  இதனையே மரபணு ஒட்டம் என மானிடவியலர்கள் அழைக்கின்றனர்.  இந்திய இனச் சங்கமத்தில் ஆங்கிலோ-இந்தியா, மலபார் கரைக்குரிய மாப்பிள்ளை ஆகியோர் இனக் கலப்பால் உருவான நுண்ணின வகையினங்களாகும். மனித குலத்தின் நீண்ட நெடிய படிமலர்ச்சியில் இத்தகைய போக்குகள் இயல்பானவையே.

இந்தியாவில் இனங்கள்

வரலாற்றுக்கும் முந்தைய இனங்கள் 

இந்தியாவில் வரலாற்றுக்கும் முந்தையகால மனிதர்கள் பல்வேறு  இடங்களில் வாழ்ந்துள்ளனர். அகழாய்வு மூலம் இவர்களை அறியும் முயற்சி 1839இல் பால்கொனர் (Falconer) காட்லி (Cautley) என்பவர்களால் தொடங்கப்பட்டது.

இமயமலையின் தாழ்வான பகுதிகளில் குறிப்பாக சிவாலிக் குன்றுகளின் உயரமான பகுதிகளில் உயர்பாலூட்டி வகையைச் சேர்ந்த புதைபடிவத்தை முதலில் கண்டெடுத்தனர்.  இந்த வாலில்லாக் குரங்கின் புதைபடிவத்தைத் தொடர்ந்து இதனையொத்த பல புதைபடிவங்கள் கண்டெடுக்கப்பட்டன.

1886இல் லைடேக்கர் (Lydekkar) இதற்கு சைனோ செபாவஸ் பால்கொனரி எனவும், 1910இல் பில்கிரிம் (Pilgrim) கண்டெடுத்த இதே வகையினத்திற்கு பப்பியோ பால்கொனரி எனவும் பெயரிட்டனர்.

இன்றைய பாகிஸ்தான் பகுதியிலுள்ள ஜாபி எனும் கிராமத்தில் சிவாலிக் மண்ணடுக்கு வரிசையில் கிடைத்த அதே வகையான மேலுமொரு புதைபடிவவகைக்கு பேலியோ பித்தகஸ் சிவாலன்சிஸ் (Palaeopithecus Sivalensis) எனவும், லீவிஸ் (Lewis) கண்டெடுத்த இதே வகைக்கு சிவாபித்தகஸ் எனவும் பெயரிட்டனர்.  இவ்வகையினம் டிரையோபித்தகஸ் வகையைச் (Dryopithecus pattern) சேர்ந்தது என்ற முடிவுக்குப் பின்னர் வந்தனர்.

டிரையோபித்தகஸ் வகையைச் சேர்ந்த இன்னும் பல புதைபடிவங்கள் பலராலும் கண்டுபிடிக்கப்பட்டன.  அவற்றுக்குப் பல பெயர்கள் இடப்பட்டன.  சில வருமாறு: சுக்ரிவா பித்தகஸ் (Dryopithecus), சிவாபித்தகஸ் (Sivapithecus), சுக்ரிவா பித்தகஸ் (sugrivapithecus), பிராமபித்தகஸ் (Brahmapithecus), ஜைகேண்டோபித்தகஸ் அல்லது இண்டோபித்தகஸ் (Giganio pithecus or Indopithecus), கிருஷணபித்தகஸ் (Krishnapithecus), சிவாஸ்மியா (Sivasimia) ஆகியனவாகும்.

இதற்கடுத்த ஆய்வுகளில்சிவாலிக் குன்றுகளில் ஒரளவு தொடர்புடைய, அதே நேரத்தில் இனங்காண்பதற்குச் சற்று சிக்கலான புதைபடிவடிமொன்று கிடைத்தது. இது வாலில்லாக் குரங்கினத்திற்கும் மனிதர்களுக்கும் இடைப்பட்டதாகக் கருதப்பட்டது.  இதைப் போன்றதொரு புதைவடிவத்தை, 1934இல் இந்தியப் பகுதிக்குட்பட்ட சிவாலிக் குன்றுகளில் ஹரிடாலியங்கன் என்னுமிடத்தில் லூவிஸ் கண்டறிந்தார்.  இதனை ராமபித்தகஸ் பஞ்சாபிகஸ் (Ramaithecus panjabicus) எனப் பெயரிட்டார். 

வரலாற்றுக்கும் முற்பட்ட காலத்திலேயே இந்தியாவில் மனித இனம் காணப்பட்டதற்கான முக்கியமான சான்றாக விளங்குவது இந்த ராமபித்தகஸ் இனம் தான் அதனால் தான் இந்த இன வகை குறித்துப் பல அறிஞர்கள் ஆராயத் தொடங்கினர்.

பீல்பீம், சிமன்ஸ் இருவரும் ராமபித்தகசை வெகுவாக ஆராய்ந்தனர்.  இதன் பல் அமைப்பு ஹோமோ அல்லது ஆஸ்ட்ரலோபித்தகஸ் (homo or Australopithecus) வகைக்கு நெருக்கமாக உள்ளதாகக் கருதினர்.  கடைவாய்ப் பற்களின் ச்சி குறுகி இருந்தது, கோரைப்பல் முன்வாய்ப்பல் இரண்டும் அளவில் சிறியதாக மாறியிருந்தன.  இன்னும் பல கூறுகளைக் கவனத்தில் கொண்டு பார்த்தால் ஒட்டு மொத்த வாய், தாடை, பல் அமைப்புகளின் தகவமைப்பு ஆஸ்ட்ரலோ பித்தகசுக்கு மிக நெருக்கமாக இருந்தது.  இதனால் இவ்வறிஞர்கள் ராம பித்த கஸ்  முதல் ஹோமினிட் வகையைச் சார்ந்தது என்று கருதினர்.  இக்கருத்தை கே (1983)  சோப்ரா (1983), கே ரூ சிம்ன்ஸ் 1983 ஆகியோர் இன்றுவரை ஏற்றுக் கொள்கின்றனர்.

1980களுக்குப் பிறகு பாகிஸ்தானில் அட்டோக் மாவட்டத்தில் போட்வார் பீடபூமியில் மேற்கொண்ட அகழாய்வில் கிடைத்த ராமபித்தகஸ் புதைபடிவத்தினை பில்பீம், ஸ்மித் இருவரும்  (1981, 1982, 1983) ஆராய்ந்தனர். இவர்கள் இந்த இனம் மனித இனத்துக்கான கால்வழியோடு நெருங்காமல் சற்று விலகி நிற்கக்கூடிய ஆசிய மனதக்குரங்கினத்தைச் சேர்ந்தது என்று கருத்து தெரிவித்தனர். அதாவது ஹோமின்ட் இனத்திற்கு மூதாதையராக இல்லாமல் உராங்குட்டானுக்கு மூதாதையாராக இருந்தது என்றனர்.

மூன்றாவதாக ஒரு கருத்தினை சில அறிஞர்கள் முன்வைத்தனர். அதாவது, ராமபித்தகஸ், அதன் உறவுடைய பிற வகையினம் யாவும் ஹோமினட், பொங்கிட் ஆகியவற்றுக்குப் பொதுமூதாதையராக இருந்தவை என்று கருதுகின்றனர்.

ராமபித்தகஸ் இனம் சற்று மேம்பட்டிருந்ததற்கு காரணம் அது தொடர்ந்து உணவை மென்று கொண்டிருக்க வேண்டிய நிலையிலும்.  கடினமான உணவுப் பொருட்களை மென்று தின்னும் நிலையிலும் இருந்ததால் அத்தகு மேம்பட்ட பல் அமைப்பு ஏற்பட்டது என்று கருத்து முன்வைக்கப்பட்டது. இவ்வறிஞர்கள் அனைவருமே ஒரு கருத்தை ஆதரிக்கின்றனர். ஹோமினட் படிமலர்ச்சியல் ராமபித்தகஸ் இன வகையானது ஒரு மிக முக்கியமடான வளர்ச்சிக் கட்டத்தைக் காட்டுகிறது என்பதை இவர்கள் ஒப்புக் கொள்கின்றனர்.

இந்த வகையினமானர் பழைய உலகப் பகுதிகளில் பல இடங்களில் காணப்படுகிறது. ஆப்பிரிக்கா, ஐரோப்பா, சீனா ஆகிய இடங்களில்இவ்வினத்தைக் காண முடிகிறது. இதன் காலம் 14-7 மில்லியன் ஆண்டுகள் ஆகும். இந்நிலையில் நாம் கருத்தில் கொள்ள வேண்டியது யாதெனில் இந்தியப் பகுதியும் இந்த வகையினத்தைக் கொண்டிருந்த ஒரு பகுதியாக விளங்குகிறது என்பது தான்.

தொடரும்...

C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com