மத அரசியல்-12: சாரதுஷ்டிரம் அல்லது சௌராஷ்டிரம்

மத அரசியல்-12: சாரதுஷ்டிரம் அல்லது சௌராஷ்டிரம்

சாரதுஷ்டிரம் அல்லது சௌராஷ்டிரம் (Zarathustra / Zoroaster) என்ற பெயர் இச்சமயத்தை உருவாக்கிய சாரதுராஷ்டிரர் பெயரால் அமைந்ததாகும். இது உருவாகிய நாட்டின் பெயரால் பார்சி சமயம் என்றும் அழைக்கப்படுகிறது.

சாரதுஷ்டிர முனிவர்

பாரசீக நாட்டின் ரே அல்லது ரா என்றழைக்கப்படும் நகரில் அந்நாட்டு இளவரசன் பௌருஷஸ்பா என்பவருக்கும் அவர் மனைவி துக்தொவாவாவுக்கும் சாரதுஷ்டிரர் பிறந்தார். இவர் கி.மு 12-ஆம் நூற்றாண்டிலிருந்து கி.மு 10-ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் வாழ்ந்தார் என்பது சிலர் கருத்து. ஸ்பிதமெ என்பதே சாரதுஷ்டிரருக்கு பெற்றோர் சூட்டிய பெயராகும். 

ஸ்பிதமெ பிறக்கும் போதே பாரசீக கொடுங்கோல் மன்னர்கள் அனைவரும் தீய கனவுகளையும் தீய நிமித்தங்களையும் கண்டு மருட்சியடைந்தனர். அதனால் ஸ்பிதமெவைக் கொல்ல திட்டமிட்டனர். அதனைக் கேள்வியுற்ற பௌருஷஸ்பா குழந்தையை அதன் தாயோடு, அவளது தந்தை வீட்டிற்கு அனுப்பிவிட்டார். அந்நாளைய பாரசீக வழக்கப்படி ஸ்பிதமெ தனது பதினைந்தாம் வயதில் திருமணம் செய்து வைக்கப்பட்டார்.  ஆனால் அவரது மனம் இறை சிந்தனையை நோக்கியே சென்றது. அவர் துறவியானார்.

இடைவிடாத தியானத்தில் இருந்தார். அப்பொழுது, கெட்ட ஆவிகளை உண்டாக்கக்கூடிய அங்ரமன்யு (அஹ்ஹிமன்) அவருக்கு பல இடையூறுகளைச் செய்தான். அச்சமயத்தில் ஸ்பிதமெவுக்கு முன்னாஅல் அஹூர மஜ்தா தோன்றினார். அஹுந-வர்யு மந்திரத்தையும் கற்பித்தார். 

மேலும் இறைவன் ஸ்பிதமெவுக்கு தங்க ஒளிமயமான இறகுகள் கொண்ட முதியவனும் பறவையும் கலந்த வடிவமாக காட்சியளித்தார். ஸ்பிதமெவையும் அவ்வாறே மாற்றினார்,அன்றிலிருந்து சாரதுராஷ்டிர முனிவர் என்று அழைக்கப்பட்டார்.

சாரதுராஷ்டிர முனிவர் பாரசீகம் முழுதும் வீடு வீடாகச் சென்று தனது கொள்கைகளை போதித்தார். அந்நாட்டு மன்னர்களும் சமயத் தலைவர்களும் சாரதுராஷ்டிர முனிவரைக் கடுமையாக எச்சரித்ததோடு, அவரைப் பின்பற்றுவோர் கடுமையான தண்டணைகளுக்கு ஆளாக நேரிடும் என்றும் எச்சரித்தனர். அதனால் சாரதுராஷ்டிர முனிவரின் சித்தப்பா ஆராஸ்தி என்பவரின் புதல்வன் மைதியொயிமாங்க என்பவரைத் தவிர யாரும் பின் தொடரவில்லை.

சாரதுராஷ்டிர சமயம் முதலில் வீஷ்தாஸ்ப மன்னனின் நாட்டில் பரவி, பாரசீகம் மற்றும் அண்டை நாடுகளில் பரவ ஆரம்பித்தது.

அஹூர மஜ்தா (Ahura Mazda)

ஈரானில் செதுக்கப்பட்ட ஃபரவாஹர்

நக்ஷ்-எ-ரஸ்டம் (Naqsh-e Rustam) என்பது பெர்சோபொலிஸின் (Persepolis) வடமேற்கில் இருந்து 12 கிமீ தொலைவில் உள்ள ஒரு பழங்கால கல்லறை அமைப்பு ஆகும்.

சாரதுராஷ்டிரர்களின் கடவுள் அஹூர மஜ்தா ஆவார். இவரே பூமியையும் மற்ற அனைத்தையும் படைத்தவர்.

 
ஈரானில், ஒரு பரவாஹர் அல்லது ப்ராஹ்ஹார் (A Faravahar or Frawahr) இல் உள்ள ஜோரோஸ்ட்ரிய தீ கோவிலில் சின்னம், ஜோரோஸ்ட்ரியஸியத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சின்னங்களில் ஒன்று.

பார்சி இன மக்கள் புலப் பெயர்வு

பாரசீகத்தை கி.பி. 651-ல் முழுவதுமாக வெற்றி கொண்ட கலிபா உமர் தலைமையிலான அரபு இஸ்லாமியர்கள், அங்கு வாழ்ந்த ஜோரோஸ்ட்ரீய (Zorostrianism) மதத்தை பின்பற்றும் மக்களை கட்டாய மதமாற்றம் செய்தனர். பலர் கட்டாய மதமாற்றத்திற்கு அஞ்சி, பாரசீகத்தை விட்டு வெளியேறி இந்தியாவில், சிந்து பகுதியிலும், சௌராஷ்ட்ர தேசத்தின் குஜராத்து கடற்கரை பகுதிகளில் 775-ல் அடைக்கலம் அடைந்தனர். இவர்களைத்தான் பார்சி மக்கள் என்பர். 

பின்னர் இவர்கள் ஆங்கிலேயர்கள் ஆட்சியில் சூரத், பம்பாய் போன்ற பகுதிகளில் குடியேறி தொழில் தொடங்கினர்

இந்தியாவில் சாரதுராஷ்டிரர்கள்

இந்தியாவில் சாரதுராஷ்டிரர்கள் அவர்களின் தாய் நாடான பாரசீகத்தின் பெயரால் பார்சிக்கள் என்று அழைக்கப்படுகின்றனர். சௌராஷ்டிரர் சமயத்தினர், தற்போதைய குஜராத் மாநிலத்தில் உள்ள கிர் சோம்நாத் மாவட்டம், தேவபூமி துவாரகை மாவட்டம், அம்ரேலி மாவட்டம், போர்பந்தர் மாவட்டம், ஜாம்நகர் மாவட்டம், ராஜ்கோட் மாவட்டம், பவநகர் மாவட்டம், மோர்பி மாவட்டம், சுரேந்திரநகர் மாவட்டம், போடாட் மாவட்டம், ஜூனாகாத் மாவட்டம், மற்றும் அகமதாபாத் மாவட்டத்தின் கிழக்கு மற்றும் தென்கிழக்குப் பகுதிகளில் வாழ்ந்தவர்கள்.

1024-1025 இல் கஜினி முகமது சௌராஷ்டிர தேசத்தினையும், சோமநாதபுரத்தில் உள்ள சிவன் கோயிலையும் சூறையாடிய பின், அங்கு வாழ்ந்த சௌராஷ்டிரர்களின் பெரும் பகுதியினர், தேவபூமி துவாரகை மாவட்டத்தின் தலைமையகமான காம்பாலியம் நகரத்தில் குடியேறி அறுபது ஆண்டுகள் வாழ்ந்த பின், தற்போதைய மகாராஷ்டிரத்தில் உள்ள தேவகிரியில் குடியேறி 300 ஆண்டுகள் வாழ்ந்தனர். பின்னர் தில்லி சுல்தான் அலாவுதீன் கில்சியின் படைத்தலைவரான மாலிக் கபூர் தேவகிரியை 1307ல் கைப்பற்றியபின்பு, இந்துக்களின் புகழிடமாக விளங்கிய விஜயநகரப் பேரரசுசில் 1312ல் குடியேறினர். விஜயநகரப் பேரரசு, பாமினி சுல்தான்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பின்னர் சௌராட்டிர சமூக மக்கள் 1575-க்குப் பின்பு தஞ்சை நாயக்கர்கள் மற்றும் மதுரை நாயக்கர்கள் ஆண்ட தமிழ்நாட்டின், மதுரை, கும்பகோணம், சேலம், தஞ்சாவூர், பரமக்குடி போன்ற பகுதிகளில் குடியேறினர்.

அலாவுதீன் கில்ஜி மற்றும் கஜினி முகமது போன்ற ஆக்கிரமிப்பாளர்களின் கொலை வெறியாட்டத்திற்கும், கட்டாய இஸ்லாமிய மத மாற்றத்திற்கு அஞ்சியும், சௌராஷ்டிர தேசத்து சௌராஷ்டிரர்கள் கி.பி. 1025 முதல் புலம்பெயர்ந்து, பல்லாண்டுகள் பல இடங்களில் சுற்றித் திரிந்து இறுதியாகத் தமிழகத்தை தாயகமாகக் கொண்டு வாழ்கின்றனர்.

சௌராஷ்டிர மொழி

இவர்கள் பேசும் மொழி, சமஸ்கிருதத்தின் பேச்சு மொழியான பிராகிருதம் என்ற குடும்ப மொழியிலிருந்து பிரிந்த கிளை மொழியான ’சௌரஸேனி’ மொழியாகும். இந்த ‘சௌரஸெனி’ மொழியைத் தான் சௌராட்டிரர்கள் தேசத்தில் இருந்தபோது பேசினர். இந்த மொழி குறித்து 1861 மற்றும் 1907 ஆகிய ஆண்டுகளில் டாக்டர். ராண்டேல் மற்றும் ராபர்ட் கால்டுவெல் ஆகியவர்கள் ஆய்வு செய்து, தமிழ்நாட்டு சௌராஷ்டிரர்கள் பேசும் மொழி ‘சௌரஸேனி” என்று உறுதிப்படுத்தியுள்ளனர். இந்தியாவின் மேற்குப் பகுதியில் புழக்கத்தில் இருந்த பிராகிருத மொழியிலிருந்து வளர்ந்தவைகள்தான், ”சௌராஷ்ட்ரீ’, ’அவதி’, மற்றும் ’மஹராஷ்ட்ரீ’ மொழிகள். ’சௌரஸேனி’ மொழியிலிருந்து வளர்ந்தவைகள்  இன்றைய குஜராத்தி மற்றும் ராஜஸ்தானி மொழிகள்” என்று கலைக்களஞ்சியம் கூறுகிறது.

தமிழ்நாட்டில் வாழும் சௌராஷ்டிரர்கள் பேசும் மொழி சௌராஷ்டிரம் என்று அழைக்கப்படுகிறது. இவர்கள் பயன்படுத்தும் சௌராஷ்டிர மொழி எழுத்து வடிவத்தை மதுரை போராசிரியர் தொ.மு. இராமராய் (1852-1913) என்ற சௌராஷ்டிர மொழி அறிஞர், வட மொழி பேராசிரியரான சதுர்வேதி இலக்குமணாச்சாரியர் என்பவரின் உதவியுடன், சௌராட்டிர மொழி எழுத்துக்களை சீர்திருத்தி, புதிய வடிவில் சௌராஷ்டிரா மொழியில் பல பாடநூல்கள் அச்சிட்டு வெளிட்டுள்ளார். இம்மொழிக்கான இலக்கணத்தை மதுரை, தொ. மு. இராமராய் மற்றும் சேலம், புட்டா. ந. அழகரய்யர் ஆகியவர்கள் செம்மைப்படுத்தி புதிய இலக்கண நூல்கள் அச்சிட்டு வெளியிட்டனர்.

தொடரும்...

C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com