வரியின்றி நாட்டுக்குள் நுழையும் கொசு வலைகள்: கரூரில் உற்பத்தி தேக்கம்

உலகமயமாக்கலுக்குப் பிறகு இந்தியா உலக அரங்கில் மாபெரும் சந்தையாக உருவெடுத்துள்ளதால் ஜப்பான், சீனா போன்ற நாடுகள் மின்னணு பொருட்களை விற்பதில் இந்தியாவை சந்தை நாடாகப் பயன்படுத்தி வருகிறது.
வரியின்றி நாட்டுக்குள் நுழையும் கொசு வலைகள்: கரூரில் உற்பத்தி தேக்கம்

உலகமயமாக்கலுக்குப் பிறகு இந்தியா உலக அரங்கில் மாபெரும் சந்தையாக உருவெடுத்துள்ளதால் ஜப்பான், சீனா போன்ற நாடுகள் மின்னணு பொருட்களை விற்பதில் இந்தியாவை சந்தை நாடாகப் பயன்படுத்தி வருகிறது. கொசுக்கள் மூலம் மனிதர்களுக்குப் பரவும் டெங்கு, சிக்குன்குன்யா, மலேரியா போன்ற நோய்களைத் தடுப்பதில் கொசு வலைகள் பெரும்பங்காற்றுகின்றன. 

கொசுக்களின் தாக்குதலில் இருந்து மனிதர்களைக் காப்பாற்றக்கூடிய கொசு வலைகளை இந்தியச் சந்தையில் விற்பதில் சீனா, வங்கதேசம், நேபாளம், தைவான், பாகிஸ்தான் ஆகிய நாடுகள் களமிறங்கியுள்ளன. இந்த நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கொசு வலைகளை விட தரத்திலும், நேர்த்தியிலும் சிறந்தவையாக இந்தியாவிலேயே கரூரில் உற்பத்தியாகும் கொசு வலைகள் கருதப்படுகிறது. மேலும், கரூர் கொசுவலைகளுக்கென்றே தனி மவுசு உண்டு. 

இந்நிலையில், தற்போது ஜூலை 1 முதல் நாடெங்கும் அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி வரி, சீனா, வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கொசுவலைகளுக்கு வரி நீக்கியது உள்ளிட்ட காரணத்தால் கரூர் கொசுவலை உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டு, உற்பத்தியான கொசுவலைகள் அனைத்தும் தேக்கமடைந்துள்ளன.

இதுதொடர்பாக கரூர் மாவட்ட கொசு வலை துணி நூல் உற்பத்தியாளர் சங்க ஒருங்கிணைப்பாளர் ஆர்.குப்புராவ், செயலாளர் கருணாகரன் மற்றும் ஆலோசகர் கருணாநிதி ஆகியோர் தெரிவித்தது: 

பொதுவாக கொசு வலைகள் பட்டுவளர்ச்சித் துறை, மருந்துப்பொருட்கள் ஏற்றுமதி நிறுவனங்கள், விவசாயத் துறையில் புதிய பயிர்கள் கண்டுபிடிப்புக்கு சூரிய ஒளி படாதவாறு பயிர்களை பாதுகாக்கவும், நாற்றங்கால் அமைக்கவும் என பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. 

இவற்றைத் தவிர மழைக்காலங்களில் கொசுக்களால் மலேரியா, டெங்கு, சிக்குன்குன்யா போன்ற நோய்கள் தாக்காதவாறு கொசு வலைகளைப் பயன்படுத்தவும், கேரளம், அஸ்ஸாம், சத்தீஸ்கர், ஒடிசா, ஜார்க்கண்ட் போன்ற வனங்கள் நிறைந்த பகுதியில் தோட்டங்களில் உள்ள கிணறுகளில் இலை தழைகள் விழாதவாறு தடுக்கவும் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 
கரூரில் மட்டும் சுமார் 200-க்கும் மேற்பட்ட கொசு வலை தயாரிப்பு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் நேரிடையாக 50,000 தொழிலாளர்களும், மறைமுகமாக 1.50 லட்சம் தொழிலாளர்களும் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஆண்டுக்கு கரூரில் மட்டும் ரூ.500 கோடி வர்த்தகம் உள்நாட்டுக்குள் கொசுவலை மூலம் நடைபெற்று வருகிறது. 

இந்தியாவிலேயே கரூரில் 90 சதவீதமும், சேலத்தில் 10 சதவீதமும் சாதாரண கொசு வலைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. உலகளவில் கொசு வலை உற்பத்தியில் வங்கதேசம், சீனா, பாகிஸ்தான், நேபாளம், தைவான் ஆகிய நாடுகள் கரூரில் உற்பத்தியாகும் கொசு வலைக்கு போட்டியாக உள்ளன. அந்நாடுகள் பெரும்பாலும் சாலைவழி போக்குவரத்து வழியாக இந்தியாவுக்குள் கூச்பிகார், சிலிகுரி, அஸ்ஸாம், பாட்னா, கொல்கத்தா, தில்லி, கான்பூர், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளை வணிகச் சந்தையாக பயன்படுத்தி வியாபாரம் செய்கின்றன. அவ்வாறு சாலை வழியாக கன்டெய்னரில் கொண்டு வரப்பட்டு இந்தியாவுக்குள் விற்கப்படும் கொசு வலைக்கு 17.5 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்பட்டிருந்தது. 

ஆகவே, அந்த நாடுகளுடன் போட்டிபோட்டு (ஒரு மீட்டர் கொசு வலை ரூ.10-க்கு விற்றால்) நாங்கள் தரமான கொசு வலைகளை சற்று விலை குறைத்து போட்டியில் முதன்மை பெற்று வந்தோம். 

இந்நிலையில் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு, கொசு வலைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த 17.5% இறக்குமதி வரி நீக்கப்பட்டுவிட்டது. வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்பவர்களுக்கும் 5% வரி கட்டினால் போதும் என மத்திய அரசு அறிவித்து விட்டது. மேலும் ரீபண்ட் ஆக்ட் எனும் சட்டத்தின் கீழ் அந்த வரியையும் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். 

ஆனால் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கரூர் கொசு வலைக்கு ரீபண்ட் வரியும் திரும்பக் கிடைக்காதாம். மூலப்பொருட்களுக்கும் 18 சதவீத வரி கட்ட வேண்டியுள்ளது. இது என்ன நியாயம்? 

ரூ. 200 கோடி மதிப்பிலான கொசு வலைகள் தேக்கம்: மத்திய அரசின் இத்தகைய கெடுபிடியால் ரூ.200 கோடி மதிப்பிலான கொசுவலை கரூரில் தேக்கமடைந்துள்ளது. இவற்றைத் தவிர தற்போது மத்திய அரசு ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், ஒடிசா, அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் மத்திய அரசு உலக சுகாதார அமைப்பின் அனுமதியுடன் நெதர்லாந்து நாட்டில் இருந்து ஆல்பாசைபர் மெத்ரின் என்ற வேதிப்பொருள் கலந்து உற்பத்தி செய்யப்பட்ட கொசுவலைகளை அம்மாநில மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது. இந்தக் கொசுவலைகள், நம்நாட்டின் தட்பவெப்ப நிலைக்கு உகந்தது அல்ல என உலக சுகாதார அமைப்பினால் தடை செய்யப்பட்டவை. 

அந்த ரசாயன கொசு வலைகளைப் பயன்படுத்த 12 மணிநேரம் காற்றோட்டமான இடத்தில் வைக்க வேண்டும். மேலும் வலைகளைப் பயன்படுத்துவோர் சோப்பு போட்டு கைகளைக் கழுவ வேண்டும். நம் நாட்டின் சீதோஷ்ண நிலையில் பயன்படுத்தினால் உடலில் அரிப்பு ஏற்படும். 

இத்தகைய குணம் கொண்ட ரசாயனக் கொசு வலைகளை மேற்குறிப்பிட்ட 4 மாநிலங்களிலும் இலவசமாக வழங்க வெளிநாட்டு உற்பத்தியாளர்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்த காரணமும் விளங்கவில்லை. உலக நாடுகளுக்கு ரசாயனக் கொசு வலைகளை எங்களாலும் உற்பத்தி செய்து அனுப்ப முடியும். மேலும் ரசாயன கொசுவலைகளை 6 மாதத்திற்கு மட்டுமே பயன்படுத்த முடியும். ஆனால் எங்கள் கொசு வலையை 3 வருடத்துக்குப் பயன்படுத்தலாம். மேலும் எங்களது கொசு வலை பாதுகாப்பானது.

ரசாயனக் கொசு வலை உற்பத்திக்கு அனுமதி கொடுக்க வேண்டும்: மத்திய அரசு ரசாயனக் கொசு வலை உற்பத்திக்கான அனுமதியை கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதாரண கொசு வலை உற்பத்தி சிறு, குறு தொழில் பட்டியலில் இருப்பதைக் காரணம் காட்டி, எங்களுக்கு ஏற்றுமதி ரக கொசு வலை உற்பத்திக்கான அனுமதியை மறுக்கக் கூடாது எனத் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com