பங்குச் சந்தையில் தொடர் உற்சாகம்: சென்செக்ஸ் 205 புள்ளிகள் அதிகரிப்பு

மும்பை பங்குச் சந்தையில் தொடர்ந்து மூன்று வர்த்தக தினங்களாக நிலவும் முதலீட்டாளர்களின் உற்சாகத்தால் சென்செக்ஸ் 205 புள்ளிகள் ஏற்றம் கண்டது
பங்குச் சந்தையில் தொடர் உற்சாகம்: சென்செக்ஸ் 205 புள்ளிகள் அதிகரிப்பு

மும்பை பங்குச் சந்தையில் தொடர்ந்து மூன்று வர்த்தக தினங்களாக நிலவும் முதலீட்டாளர்களின் உற்சாகத்தால் சென்செக்ஸ் 205 புள்ளிகள் ஏற்றம் கண்டது.
குஜராத் தேர்தல் கருத்து கணிப்பு முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக இருந்ததன் எதிரொலியால் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் தொடர் விறுவிறுப்புடன் காணப்பட்டது. அமெரிக்க வேலைவாய்ப்பு சந்தையில் எதிர்பார்த்த அளவை விட ஏற்பட்ட முன்னேற்றம், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பில் ஏற்பட்ட எழுச்சி ஆகியவையும் பங்குச் சந்தையின் ஏற்றத்துக்கு வலு சேர்த்தது.
இருப்பினும், இந்த வார கடைசியில் சில்லறை பணவீக்கம், தொழில்துறை உற்பத்தி குறித்த மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் வெளியாகவிருப்பதையொட்டி முதலீட்டாளர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கை உணர்வுடன் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டனர். 
தகவல் தொழில்நுட்பத் துறை பங்குகளின் விலை 1 சதவீதம் அதிகரித்தது. தொழில்நுட்பம், மருந்து, மோட்டார் வாகன துறை பங்குகளுக்கும் முதலீட்டாளர்களிடம் அதிக வரவேற்பு காணப்பட்டது.
நிறுவனங்களைப் பொருத்தவரையில், மஹிந்திரா & மஹிந்திரா பங்கினஅ விலை 2.16 சதவீதமும், லூபின் பங்கின் விலை 2.15 சதவீதமும் அதிகரித்தன. மாருதி சுஸுகி நிறுவனப் பங்கின் விலை 1.11 சதவீதம் உயர்ந்தது. இவை தவிர, ஹெச்டிஎஃப்சி, விப்ரோ, கோல் இந்தியா, பாரத ஸ்டேட் வங்கி, ஐடிசி, பார்தி ஏர்டெல், ஸன் பார்மா, டாக்டர் ரெட்டீஸ் பங்குகளின் விலையும் அதிகரித்தன.
மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 205 புள்ளிகள் உயர்ந்து 33,455 புள்ளிகளாக நிலைத்தது. நவம்பர் 29க்குப் பிறகு காணப்படும் அதிகபட்ச அளவு இதுவாகும். கடந்த இரண்டு வர்த்தக தினங்களில் மட்டும் சென்செக்ஸ் 653 புள்ளிகள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
தேசிய பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 56 புள்ளிகள் உயர்ந்து 10,322 புள்ளிகளாக நிலைத்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com