ஏற்ற இறக்கத்தில் பங்குச் சந்தை

மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகம் அதிக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது.
ஏற்ற இறக்கத்தில் பங்குச் சந்தை

மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகம் அதிக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது, பணவீக்க உயர்வு ஆகியவற்றின் தாக்கம் நிதி பற்றாக்குறையை அதிகரிக்கும் என்ற நிலைப்பாட்டால் முதலீட்டாளர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டனர்.
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பில் காணப்பட்ட ஏற்றத்தாழ்வு, இந்திய கடன்பத்திரங்களின் விலை ஓராண்டில் இல்லாத அளவுக்கு குறைந்து போனது உள்ளிட்ட நிகழ்வுகளும் பங்கு வர்த்தகத்தில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தின.
கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு கொண்டாட்டம் நெருங்கி வருவதையடுத்து முதலீட்டாளர்கள் பங்கு வர்த்தகத்தில் அதிக ஆர்வத்துடன் ஈடுபடவில்லை. 
மோட்டார் வாகனம், வங்கி, வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருள்கள், எண்ணெய்-எரிவாயு ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் முதலீட்டாளர்களிடம் போதிய ஆதரவைப் பெறவில்லை.
நிறுவனங்களைப் பொருத்தவரையில், மஹிந்திரா & மஹிந்திரா பங்கின் விலை 3.74 சதவீதம் சரிவைக் கண்டது. இதையடுத்து, மாருதி சுஸுகி, ஹெச்யுஎல், பஜாஜ் ஆட்டோ, ஆக்ஸிஸ் வங்கி பங்குகளின் விலை 1.11 சதவீதம் வரை குறைந்தது. 
சிறப்பு நீதிமன்றம், 2ஜி ஸ்பெக்ட்ரம் குற்றச்சாட்டிலிருந்து அனைவரையும் விடுவித்ததையடுத்து, அந்த வழக்குடன் தொடர்புடைய நிறுவனப் பங்குகளின் விலை 20 சதவீதம் வரை உயர்ந்தது.
டிபி ரியாலிட்டி பங்கின் விலை 19.89 சதவீதமும், யுனிடெக் 11.86 சதவீதமும், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் 4.05 சதவீதமும், சன் டிவி நெட்வர்க் பங்கின் விலை 4.51 சதவீதமும் உயர்ந்தது. 
மும்பை மின் வர்த்தகத்தை ரூ.18,800 கோடி மதிப்புக்கு அதானி டிரான்ஸ்மிஷன் நிறுவனத்துக்கு விற்பனை செய்யும் வகையில் உடன்பாடு கையெழுத்தானதாக ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் தெரிவிதையடுத்து, அந்த நிறுவன பங்கின் விலை 8.12 சதவீதம் அதிகரித்தது.
மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 21 புள்ளிகள் சரிந்து 33,756 புள்ளிகளில் நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 3 புள்ளிகள் குறைந்து 10,440 புள்ளிகளில் நிலைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com