நேரடி வரி வசூல் 12 சதவீதம் அதிகரிப்பு

நாட்டின் நேரடி வரி வசூல் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான கால அளவில் 12.01 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி திங்கள்கிழமை தெரிவித்தார்.
நேரடி வரி வசூல் 12 சதவீதம் அதிகரிப்பு

நாட்டின் நேரடி வரி வசூல் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான கால அளவில் 12.01 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி திங்கள்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
நேரடி மற்றும் மறைமுக வரி வசூல் சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. ரூபாய் நோட்டுகள் வாபஸ் பிரச்னையால் நாட்டின் பொருளாதாரம் மந்த நிலை அடையும் என்ற கருத்து இதன் மூலம் பொய் என நிரூபணமாகியுள்ளது.
நடப்பு 2016-17-ஆம் நிதி ஆண்டின் ஏப்ரல்-டிசம்பர் வரையிலான ஒன்பது மாத கால அளவில் நேரடி வரி வசூல் முந்தைய நிதி ஆண்டைக் காட்டிலும், 12.01 சதவீதம் அதிகரித்து ரூ.5.53 லட்சம் கோடியாக உள்ளது.
அதேபோன்று, நாட்டின் மறைமுக வரி வசூலும் 25 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.6.30 லட்சம் கோடியாக உள்ளது.
குறிப்பாக, உற்பத்தி வரி வசூல் 43 சதவீதம் அதிகரித்து ரூ.2.79 லட்சம் கோடியாகவும், சேவை வரி வசூல் 23.9 சதவீதம் உயர்ந்து ரூ.1.83 லட்சம் கோடியாகவும் உள்ளன. சுங்க வரி வசூல் 4.1 சதவீதம் வளர்ச்சி கண்டு 1.67 கோடியாக இருந்தது.
சென்ற டிசம்பர் மாதத்தில் மட்டும் மறைமுக வரி வசூல் 4.1 சதவீதம் அதிகரித்தது.
உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதையடுத்து ஏற்பட்ட பணத் தட்டுப்பாடு சூழலிலும் சென்ற டிசம்பரில் உற்பத்தி வரி வசூல் 31.6 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி கண்டது கவனிக்கத்தக்கது. ஏனெனில், இந்த வரி விதிப்பு தயாரிப்பு துறையுடன் நேரடி தொடர்புடையது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோன்று, சேவை வரி வசூலும் சென்ற டிசம்பரில் 12.4 சதவீதம் உயர்ந்தது. அதேசமயம், அம்மாதத்தில் சுங்க வரி வாயிலான வருவாய் 6.3 சதவீதம் சரிவடைந்தது. தங்கம் இறக்குமதி குறைந்து போனதே இதற்கு முக்கிய காரணம்.
நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், டிசம்பரில் மறைமுக வரி வசூல் 12.8 சதவீதம் அளவுக்கு உயர்ந்தது.
வாட் வரி வசூலும் பல மாநிலங்களில் கணிசமான அளவுக்கு அதிகரித்துள்ளது. சென்ற நவம்பரில் பழைய ரூ.500, ரூ.1,000 ரூபாய் நோட்டுகளை கொண்டே இந்த வரி செலுத்தப்பட்டுள்ளது. நன்றாக நிர்வாகம் செய்யக்கூடிய மாநிலங்கள் அனைத்திலும் வாட் வரி வசூல் சிறப்பாக இருந்தது என்பது எனது கருத்து.
மேற்கண்ட புள்ளிவிவரங்கள் அனைத்தும் மதிப்பீடு செய்யப்பட்டவை அல்ல. உண்மையான நிலவரங்கள். எனவே, ரூபாய் நோட்டு வாபஸ் பிரச்னையால் பொருளாதார வளர்ச்சி சரிவடையும் என்ற கருத்து ஏற்கக்கூடியதல்ல என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com