டி.சி.எஸ். லாபம் ரூ.6,778 கோடி

நாட்டின் மிகப்பெரிய மென்பொருள் சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் (டி.சி.எஸ்.) மூன்றாம் காலாண்டில் ரூ.6,778 கோடி நிகர லாபம் ஈட்டியது.
டி.சி.எஸ். லாபம் ரூ.6,778 கோடி

நாட்டின் மிகப்பெரிய மென்பொருள் சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் (டி.சி.எஸ்.) மூன்றாம் காலாண்டில் ரூ.6,778 கோடி நிகர லாபம் ஈட்டியது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், தலைமை நிர்வாகியுமான என். சந்திரசேகரன் தெரிவித்ததாவது:
டி.சி.எஸ். நிறுவனம் நடப்பு 2016-17-ஆம் நிதி ஆண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில் ரூ.29,735 கோடி வருவாய் ஈட்டியது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் ஈட்டிய ரூ.27,364 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 8.7 சதவீதம் அதிகம்.
வருவாய் அதிகரித்ததையடுத்து, நிகர லாபம் ரூ.6,110 கோடியிலிருந்து 10.9 சதவீதம் அதிகரித்து ரூ.6,778 கோடியாக காணப்பட்டது. செயல்பாட்டு லாபம் ரூ.7,773 கோடியாக இருந்தது.
நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டுடன் ஒப்பிடும்போது, மூன்றாவது காலாண்டில் வருவாய் 1.5 சதவீதமும், லாபம் 2.9 சதவீதமும் வளர்ச்சி கண்டுள்ளன.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு மூன்றாவது காலாண்டு எப்பொழுதும் சவாலானதாகவே இருக்கும். அந்த வகையில், நிறுவனத்தின் சீரிய செயல்பாடுகளால் மூன்றாம் காலாண்டில் டி.சி.எஸ். கணிசமான லாபத்தை ஈட்டியது. குறிப்பாக, நிறுவனத்தின் டிஜிட்டல் பிரிவிலான வர்த்தகம் 30 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி கண்டது.
இதையடுத்து, நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு, பங்கு ஒன்றுக்கு ரூ.6.5 ஈவுத் தொகை வழங்க முடிவெடுக்கப்பட்டது.
மூன்றாவது காலாண்டில், நிகர அளவில் 6,978 பணியாளர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டதையடுத்து, டி.சி.எஸ். மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 3,78,497-ஆக உள்ளது. இதில், பெண் பணியாளர்களின் எண்ணிக்கை முன் எப்போதும் கண்டிராத வகையில் 34.6 சதவீதமாக உள்ளது.
இந்தியா மற்றும் தென் அமெரிக்காவை பொருத்தவரையில் நிறுவனத்தின் வர்த்தகம் முறையே 10.3 சதவீதம் மற்றும் 12.5 சதவீதம் என்ற அளவில் இரட்டை இலக்க வளர்ச்சியை கண்டுள்ளது.
வட அமெரிக்கா (2.2 சதவீதம்) மற்றும் பிரிட்டன் (1.7 சதவீதம்) நாடுகளிலும் நிறுவனத்தின் வர்த்தகம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ளது என்றார் அவர்.
புதிய நிர்வாக இயக்குநர் நியமனம்
டிசிஎஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமாக இருந்த என்.சந்திரசேகரன், டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக அறிவிக்கப்பட்ட நிலையில், அவரது இடத்தில் ராஜேஷ் கோபிநாதன்  நியமிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
டிசிஎஸ் நிறுவனத்தில் 2001-ஆம் ஆண்டு முதல் இவர் பணியாற்றி வருகிறார். அந்நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக 2013-ஆம் ஆண்டு முதல் பொறுப்பு வகித்து வருகிறார். இந்த நிலையில், தற்போது நிர்வாக இயக்குநர்-தலைமை செயல் அதிகாரி பொறுப்பு அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் மின்னியல்-மின்னணுவியல் பட்டப் படிப்பு பயின்ற ராஜேஷ் கோபிநாதன், ஆமதாபாத் ஐஐடியில் நிர்வாக இயல் பயின்றார். மேலும், என்.கணபதி சுப்ரமணியம், டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரியாக (சிஓஓ) அறிவிக்கப்பட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com