கரன்சி விவகாரம் - 50 நாள்களில்...

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ஆம் தேதி ரூ.500 மற்றும் ரூ.1,000 கரன்சி நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது.
கரன்சி விவகாரம் - 50 நாள்களில்...

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ஆம் தேதி ரூ.500 மற்றும் ரூ.1,000 கரன்சி நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. இந்த விவகாரத்தின் எதிரொலி இந்திய பொருளாதாரத்தில் நீண்ட காலத்துக்கு கேட்கும் என்றாலும், 50 நாள்களுக்கு மேல் கடந்துள்ள நிலையில், சில முன்னேற்றங்கள் ஏற்படவே செய்துள்ளன:
வருமான வரி: வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கையில் பின்தங்கிய நாடுகளில் இந்தியாவும் ஒன்று. 123 கோடி மக்கள் தொகை இருக்கும் நாட்டில், 1.25 கோடி பேர் மட்டுமே வருமான வரி செலுத்துகின்றனர் என்கிறது புள்ளிவிவரம். மத்திய அரசின் அறிவிப்புக்குப் பிறகு, செலுத்தும் தொகைகளுக்கு கணக்குகள் கேட்கப்படுவதால் வரி செலுத்துவோர் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. உதாரணமாக, கடந்த ஆண்டில் மட்டும் 25 லட்சம் பேர் கார் வாங்கியுள்ளனர். ஆனால், நாட்டில் ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களாக 24 லட்சம் பேர் மட்டுமே தெரிவித்துள்ளனர். வருவாயை மறைக்கும் எண்ணம் மாறும் நிலை தோன்றியுள்ளது.
மேலும், அதிகம் பேர் வரி செலுத்துவதற்காக வரும் மத்தியபட்ஜெட்டில் வருமான வரிக் கட்டணங்கள் மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொருளாதாரத்துக்கு உத்வேகம்: பண நோட்டு விவகாரத்தால், தற்போதைக்கு பாதிப்பு இருக்கவே செய்கிறது. ஆனால் கருப்புப் பணமும் கள்ள நோட்டுகளும் ஒழிக்கப்படுவதால், நாட்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் (ஜிடிபி) இனிவரும் காலங்களில் 0.5% முதல் 1.5% வரை அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்படுகிறது. புழக்கத்தில் இருக்கும் ரூ.17 லட்சம் கோடி மதிப்பிலான ரூபாய் நோட்டுகளில், ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகளின் மதிப்பு மட்டுமே ரூ.14 லட்சம் கோடி. அவற்றில் ரூ.12 லட்சம் கோடி வரை வங்கிகளில் செலுத்தப்பட்டுள்ளது. இந்தப் பணத்தை வைத்து எதிர்கால திட்டங்களையும் சலுகைகளையும் திட்டமிடலாம்.
பல நாடுகளும் ரொக்கமில்லா பரிமாற்றங்களை நோக்கி நகர்ந்து வருகின்றன. ஆனால், இந்தியாவிலோ கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 500 ரூபாய் நோட்டு எண்ணிக்கை 50 மடங்கும் 1,000 ரூபாய் நோட்டு 109 மடங்கும் அதிகரித்துள்ளன. தற்போதைய நடவடிக்கையால், அந்த இடைவெளி குறைக்கப்பட்டுள்ளது.
வங்கிகளின் செயல்பாடுகள்: கடந்த இரண்டு மாதங்களில், வங்கிகளுக்கும் மக்களுக்கும் இடையிலான நேரடித் தொடர்பு அதிகரித்துள்ளது. வங்கி வட்டி விகிதங்களைக் குறைத்தால் தான் நாட்டின் மொத்த உற்பத்தி விகிதம் அதிகரிக்கும் என்று ரிசர்வ் வங்கி சில ஆண்டுகளாகவே அறிவுறுத்தி வருகிறது. ஆனால், வங்கிகள் செவி சாய்க்கவில்லை. தற்போது, ரொக்கமில்லா பரிவர்த்தனை போன்ற வழிகளில் வருமானம் ஈட்டுவதற்காகவும் தங்கள் செயல்பாடுகளைக் குறைப்பதற்காகவும் வட்டி விகிதங்களையும் சேவை கட்டணங்களையும் வங்கிகள் குறைத்தும் நீக்கியும் வருகின்றன.
கள்ள நோட்டுகள்: உளவு அமைப்புகளின் தகவலின்படி, இந்தியாவில் ரூ.400 கோடிக்கு கள்ள நோட்டுகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவற்றில், 2014-15-ஆம் நிதியாண்டில் மட்டும் சுமார் ரூ.30 கோடி மதிப்பிலான கள்ள நோட்டுகள் அழிக்கப்பட்டுள்ளன. மேலும், ஆண்டுதோறும் ரூ.70 கோடிக்கு புதிய கள்ள நோட்டுகள் நாட்டுக்குள் ஊடுருவுகின்றன. புதிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளதால், ஏற்கெனவே இருக்கும் கள்ள நோட்டுகள் அகற்றப்படும். புதிய கள்ள நோட்டுகளை அச்சிடுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைந்தது 5 ஆண்டுகளுக்கு இல்லை என்கிறது ரிசர்வ் வங்கி.
முறைப்படுத்தப்படும் தொழில்கள்: இந்தியாவில் அமைப்பு சாரா தொழில்கள் ஏராளமாக உள்ளன. அண்மை ஆண்டுகளில் தரகு தொழில் உள்பட பல்வேறு சேவைத் துறைகள் தோன்றி, அவற்றின் மூலம் பல்லாயிரக்கணக்கான கோடிகள் புழங்குகின்றன. அவற்றுக்கு செலுத்தப்படும் தொகைகளை வங்கிகளின் மூலம் செலுத்தப்படுவதால், விலைவாசி குறைவதோடு, ரியல் எஸ்டேட் விலைகளில் வீழ்ச்சியும் ஏற்பட்டுள்ளது. இதனால், சாமானிய மக்களின் சொந்த வீடு கனவுகள் நனவாகும்.
ரொக்கமில்லா பரிமாற்றம்: சில இடங்களில் மட்டுமே இருந்த ரொக்கமில்லா பரிவர்த்தனை நடவடிக்கைகள், தற்போது, உணவகங்கள், காய்கறி மண்டிகள் போன்ற சாதாரண இடங்களுக்கும் விரிவடைந்துள்ளது. இதனால், ரொக்கத்தின் நேரடித் தேவை குறைந்துள்ளது.
பண வீக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதன் பாதிப்பால், மொத்த உள்நாட்டு உற்பத்தி மேலும் அதிகரிக்கும்.
நிதி ஊடுருவல்கள் கட்டுப்பாடு: ரூபாய் நோட்டு அறிவிப்பால், பணத்தை கணக்கில் கொண்டு வர வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது. இதனால், வெளிநாடுகளில் இருந்து வரும் முறையற்ற நிதி ஊடுருவல்கள், நன்கொடைகள் கண்காணிக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com