வங்கிப் பங்குகள் முதலீட்டுக்கு உகந்ததா?

மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் புத்தாண்டில் உற்சாகம் பெற்றுள்ளன.
வங்கிப் பங்குகள் முதலீட்டுக்கு உகந்ததா?

மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் புத்தாண்டில் உற்சாகம் பெற்றுள்ளன. ஆனால், கடந்த ஆண்டில் சென்செக்ஸ் 2 சதவீதமும், நிஃப்டி 3 சதவீதமும் மட்டுமே உயர்ந்து சோபிக்கத் தவறின. மேலும், கடந்த ஆண்டைக் குறித்து நிபுணர்கள், சந்தை வர்த்தக ஆலோசகர்களின் கணிப்பும் பொய்த்துப் போனது.
சென்ற ஆண்டு முதல் பாதியில் வெகுவாக ஏற்றம் பெற்ற சென்செக்ஸ், நிஃப்டி செப்டம்பருக்குப் பிறகு கடும் சரிவைச் சந்தித்தன. இதனால், ஏற்கெனவே பெற்ற லாபம் அனைத்தையும் இழந்தது என்பதே உண்மை.
சீனாவின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பின்னடைவு, ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறியது, அமெரிக்க ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பு, உள்நாட்டில் நிலவிய நிச்சயமற்ற தன்மை உள்ளிட்டவை சந்தையை வெகுவாக பாதித்தது. இந்த நிலையில், புத்தாண்டில் பங்குச் சந்தைகள் உற்சாகம் பெற்றுள்ளன.
தற்போது சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய இரண்டும் முக்கிய இடர்பாட்டு அளவைக் (ரெஸிஸ்டென்ஸ்) கடந்து ஏறுமுகத்தில் உள்ளன. இந்த ஆண்டு சென்செக்ஸ் 30,000 புள்ளிகளையும், நிஃப்டி 9,000 புள்ளிகளையும் கடக்க அதிக வாய்ப்பு உள்ளதாக பங்குத் தரகு நிறுவனங்களும், ஆய்வு நிறுவனங்களும் மீண்டும் கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன.
இந்நிலையில், பொதுத்துறை வங்கிப் பங்குகள் இன்னும் சரிவிலிருந்து மீளாமல் உள்ளன. குறிப்பாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்கு பிறகு சற்று உத்வேகத்துடன் இருந்த பொதுத் துறை வங்கிப் பங்குகள் கடந்த ஆண்டு செப்டம்பருக்கு பிறகு உற்சாகம் இழந்தது. இதன் பிறகு உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் வங்கிகளில் அதிக அளவில் டெப்பாசிட்டாகின. இதனால், வங்கிகளில் டெபாசிட் விகிதம் அதிகரித்தது. இதன் காரணமாக பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள பொதுத் துறை வங்கிப் பங்குகளில் காளையின் ஆதிக்கம் இருந்தது.
ஆனால், அதன் பிறகு வங்கிகளில் டெபாசிட்டுகள் அதிகரித்தாலும், ஏடிஎம்களில் நிலவிய பணத் தட்டுப்பாடு, புதிய ரூபாய் நோட்டு விநியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை, வங்கிகளில் நிலவும் ஊழியர் பற்றாக்குறையால் வாடிக்கையாளர்களை சமாளிக்க முடியாத நிலைமை, அதிகரித்துள்ள வாராக் கடன் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. இதன் விளைவாக வங்கிகளின் வளர்ச்சி விகிதம் பாதிக்கும் என்ற நிலை தோன்றியது. இதன் தாக்கம் வங்கிப் பங்குகளில் எதிரொலித்தது. இதன் காரணமாக வங்கிப் பங்குகளின் விலை குறையத் தொடங்கியது.
உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு (நவம்பர் 8) பிறகு இதுவரை பொதுத் துறை வங்கிப் பங்குகள் பெரிய அளவில் சோபிக்க முடியாமல் திணறி வருகின்றன.
பொதுத் துறை, தனியார் துறையைச் சேர்ந்த 12 வங்கிப் பங்குகளை உள்ளடக்கிய "நிஃப்டி பேங்க்' குறியீட்டு எண் ஓராண்டில் 19.12 சதவீதம் உயர்ந்துள்ளது. ரூபாய் நோட்டு விவகாரத்துக்குப் பிறகு கடந்த ஒரு மாதத்தில் 2.42 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது. இதன் 52 வார அதிகபட்ச அளவு 20575.80 புள்ளிகளாகவும், குறைந்தபட்ச அளவு 13,407.25 புள்ளிகளாகவும் பதிவாகியுள்ளது. கடந்த வார வர்த்தக நேர முடிவில் 18,912.10-இல் நிலைபெற்றுள்ளது.
இதேபோன்று 11 பொதுத் துறை வங்கிப் பங்குகளை மட்டும் உள்ளடக்கிய "நிஃப்டி பிஎஸ்யூ பேங்க்' குறியீட்டு எண் 52 வார அதிகபட்ச அளவாக 3,503.90 ஆகவும் குறைந்தபட்ச அளவாக 1,894.00 புள்ளிகளாகவும் பதிவாகியுள்ளது. தற்போது 3,048.30-இல் நிலைகொண்டுள்ளது. கடந்த ஓராண்டில் இக்குறியீட்டு எண் 21.33 சதவீதம் உயர்வைக் கண்டுள்ளது. அதே சமயம் கடந்த ஒரு மாதத்தில் மொத்தத்தில் 4.75 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.
பொதுத் துறை வங்கிளான யூனியன் பேங்க், கனரா பேங்க், ஓரியண்ட்டல் பேங்க், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ), சிண்டிகேட் பேங்க், பேங்க் ஆஃப் இந்தியா (பிஓஐ), ஆந்திரா பேங்க், அலகாபாத் பேங்க், பேங்க் ஆஃப் பரோடா (பிஓபி), பஞ்சாப் நேஷனல் பேங்க் (பிஎன்பி), ஐடிபிஐ ஆகிய 11 வங்கிப் பங்குகளும் "நிஃப்டி பிஎஸ்யூ பேங்க்' இன்டெக்ஸில் உள்ளன. இவற்றில் ஐடிபிஐ தவிர மற்ற அனைத்து வங்கிப் பங்குகளும் வீழ்ச்சியிலிருந்து மீளவில்லை.
குறிப்பாக கனரா பேங்க் பங்கின் விலை 9.45 சதவீதம் வீழ்ச்சியைக் கண்டுள்ளது. எஸ்பிஐ, அலகாபாத் பேங்க் ஆகிய இரு வங்கிப் பங்குகளின் விலை 5 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளன. 9 வங்கிப் பங்குகளின் விலை 2 முதல் 4 சதவீதம் வரை வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன. இதில் ஆந்திரா பேங்க், சிண்டிகேட் பேங்க் ஆகிய இரு வங்கிப் பங்குகளின் விலை கடந்த ஓராண்டில் முறையே 15, 25 சதவீதம் வரை சரிவைச் சந்தித்துள்ளன.
இந்நிலையில், வங்கிப் பங்குகளில் முதலீடுகளை மேற்கொள்ளலாமா? வேண்டாமா? என்று சில்லறை முதலீட்டாளர்களிடையே குழப்பம் நிலவி வருகிறது. இருப்பினும், மதிப்பீட்டு அடிப்படையில் விலை குறையும் போதெல்லாம் வங்கிப் பங்குகளை கொஞ்சம் கொஞ்சமாக நீண்ட கால அடிப்படையில், வாங்கிப் போடலாம் என்று பங்குச் சந்தை வல்லுநர்கள் யோசனை தெரிவிக்கின்றனர். குறிப்பாக வலுவான அடிப்படைகளைக் கொண்டுள்ள வங்கிப் பங்குகளில் முதலீடுகளை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கின்றனர்.
இந்த ஆண்டின் முதல் பாதியில் பங்குச் சந்தைகளில் நிலையற்ற தன்மை இருந்தாலும் பிற்பாதியில் உத்வேகம் பெறும் என்று சந்தை வல்லுநர்கள் கணித்துள்ளனர். இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதம் பெரிய அளவில் பாதிக்காது என்றும், ஜிஎஸ்டி அமலாக்கம் விரைவில் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வங்கிகளின் வாராக் கடன் விகிதத்தைக் குறைக்க எடுக்க ஆர்பிஐயின் நடவடிக்கைகள் பொதுத் துறை வங்கிகளுக்கு உத்வேகத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவை பங்குச் சந்தைக்கு சாதகமான நிலையாகப் பார்க்கப்படுகிறது. எனவே, வங்கிப் பங்குகள் விலை குறையும் போதெல்லாம் முதலீட்டுக்குத் தகுந்த தருணமாகக் கருத வேண்டும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
பொதுத் துறை வங்கிகளான கர்நாடகா பேங்க், ஸ்டேட் பேங்க் ஆஃப் திருவாங்கூர், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, தனியார் வங்கிகளான ஆக்ஸிஸ் பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க், ஃபெடரல் பேங்க், ஐடிஎஃப்சி பேங்க், செüத் இந்தியன் பேங்க், யெஸ் பேங்க், ஆகியவை வலுவான அடிப்படைகளைக் கொண்ட பங்குகள் என்று பங்குச் சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 

பொதுத் துறை வங்கிப் பங்குகளின் தற்போதைய விலை, ஓராண்டில், ஒரு மாதத்தில் பெற்ற லாபம் / நஷ்டம் (சதவீதத்தில்) விவரம்:


வங்கியின் பெயர்      தற்போதைய விலை          ஓராண்டில்                 ஒரு மாதத்தில்     


யூனியன் வங்கி ரூ.138.50 08.33 -2.72
கனரா வங்கி ரூ.276.05 38.51 -9.45
ஓரியண்ட்டல் வங்கி ரூ.114.80 -00.95 -3.77
எஸ்பிஐ ரூ.251.00 24.94 -5.69
சிண்டிகேட் வங்கி ரூ.064.60 -17.50 -2.93
பேங்க் ஆப் இந்தியா ரூ.113.85 13.62 -1.00
ஆந்திரா வங்கி ரூ.049.30 -14.56 -3.80
அலகாபாத் வங்கி ரூ.065.40 08.82 -5.22
பேங்க் ஆப் பரோடா ரூ.157.30 19.08 -1.93
பிஎன்பி ரூ.124.85 27.40 -3.52
ஐடிபிஐ ரூ.073.70 04.84 4.11

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com