பணமதிப்பிழப்பு நடவடிக்கை அரசின் வருவாயைப் பெருக்கும்!

பணமதிப்பிழப்பு நடவடிக்கை நீண்ட கால அடிப்படையில் அரசின் வருவாயைப் பெருக்கும் என்பதுடன் வரி செலுத்தும் வரம்புக்குள் வருவோரின் எண்ணிக்கையும் அது கணிசமான அளவில் அதிகரிக்கும் என்று உலக வங்கி
பணமதிப்பிழப்பு நடவடிக்கை அரசின் வருவாயைப் பெருக்கும்!

பணமதிப்பிழப்பு நடவடிக்கை நீண்ட கால அடிப்படையில் அரசின் வருவாயைப் பெருக்கும் என்பதுடன் வரி செலுத்தும் வரம்புக்குள் வருவோரின் எண்ணிக்கையும் அது கணிசமான அளவில் அதிகரிக்கும் என்று உலக வங்கி கணித்துள்ளது.
ரூ.500, ரூ.1,000 கரன்ஸி நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு, கருப்புப் பணம் வைத்துள்ளோர் தாமாக முன்வந்து வருமானத்தை தெரிவிக்கும் திட்டம் ஆகியவற்றால் கடந்த 2016-17 நிதி ஆண்டில் கூடுதலான வரி வருவாய் உருவாக்ககப்பட்டுள்ளது.
அதன்படி, மொத்த வரி வருவாய் இலக்கு (மாநிலங்களின் பங்களிப்பு உள்பட) பட்ஜெட் மதிப்பீட்டில் 10.8 சதவீதம் என்று நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் அது 11.3 சதவீதமாக உயர்ந்தது. குறிப்பாக, பெட்ரோலிய பொருட்களின் உற்பத்தி வரி வருவாய் எதிர்பார்த்த அளவை விட மேலும் அதிகமாக இருந்தது. ஆனால், நேரடி வரியில் பணமதிப்பிழப்பின் தாக்கம் நடுநிலையானதாக மட்டுமே இருந்தது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை வரி வசூலை அதிகரிக்கும் நிலையில் அது அரசின் நிரந்தர வருவாய் பெருக்கத்துக்கு ஆதாரமாக அமையும் என்று உலக வங்கி சுட்டிக் காட்டியுள்ளது.
ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்து உடனடியாக அகற்றப்படுவதாக மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி அதிரடியாக அறிவித்தது. ரொக்கப் புழக்கத்தில் இந்த கரன்ஸி நோட்டுகளின் பங்களிப்பு மட்டும் 86 சதவீதமாக இருந்தது. இரவோடு இரவாக அவை செல்லாதவையானதால் உள்நாட்டில் கடுமையான பணத் தட்டுப்பாடு ஏற்பட்டது.
இருப்பினும், மத்திய அரசின் இந்த நடவடிக்கை இந்தியாவின் பொருளாதாரத்தை ஒழுங்குபடுத்தி வளர்ச்சியை ஊக்குவிக்க உதவும் என்று உலக வங்கி தெரிவித்தது.
முறைசாரா பொருளாதாரம் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பாதியளவு பங்களிப்பைக் கொண்டுள்ளது. அதேசமயத்தில், வேளாண் சாராத வேலைவாய்ப்புகளில் அது 82 சதவீத பங்களிப்பைக் கொண்டுள்ளது.
பணமதிப்பு நீக்க நடவடிக்கை என்பது முறைசாரா பொருளாதார வளங்கள் அனைத்தும் முறைசார்ந்த பொருளாதார அமைப்புக்கு மாற்றியமைக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலான நிறுவனங்கள் முறையான பொருளாதார அமைப்புக்கு மாற பெரிதும் தயக்கம் காட்டி வந்த நிலையில் தற்போது அவை டிஜிட்டல் பணப்பரிமாற்றத்துக்கு தங்களை தயாராக்கிக் கொண்டு வெளிப்படையாக இயங்கத் தொடங்கியுள்ளன.
பரவலான முறைசாரா நிறுவனங்களின் ஆதிக்கமே இந்தியாவின் மொத்த உற்பத்தி குறைவுக்கு முக்கிய காரணம். இந்த நிலையில், அவற்றை ஒழுங்குபடுத்தி சீரமைப்பது என்பது சாதகமான மாற்றத்தை உண்டாக்குவதுடன், அதிக திறனுள்ள செயல்பாட்டுக்கு இட்டுச் செல்லும்.
இந்தியாவில் எளிதாகத் தொழில் தொடங்கத் தேவையான முழுமையான நடவடிக்கைகள் இன்னும் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. மேலும், ஜி.எஸ்.டி. அமலாக்கம் என்பது மத்திய அரசின் மற்றொரு மிகப்பெரிய சீர்திருத்த நடவடிக்கையாகும் என உலக வங்கி தெரிவிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com