கட்டணமா கந்து வட்டியா?: வங்கிகளின் அடாவடிக்கு தீர்வு என்ன?

அண்மைக்காலமாக, வாடிக்கையாளர்களின் நலனைக் கருத்தில் கொள்ளாமல் தன்னிச்சையாக கட்டணங்களை நிர்ணயிக்கும் போக்கு வங்கிகளிடையே அதிகரித்து வருகிறது. சிறப்பு சேவைகளை வழங்கவும்
கட்டணமா கந்து வட்டியா?: வங்கிகளின் அடாவடிக்கு தீர்வு என்ன?

அண்மைக்காலமாக, வாடிக்கையாளர்களின் நலனைக் கருத்தில் கொள்ளாமல் தன்னிச்சையாக கட்டணங்களை நிர்ணயிக்கும் போக்கு வங்கிகளிடையே அதிகரித்து வருகிறது. சிறப்பு சேவைகளை வழங்கவும், சேவைகளின் தரத்தை உயர்த்தவும் இந்தக் கட்டணங்கள் விதிக்கப்படுவதாக வங்கி நிர்வாகத் தரப்பில் கூறப்படுகிறது. இதனால் வங்கி நிர்வாகங்கள் மீதும், மத்திய அரசு மீதும் மக்களின் அதிருப்தி பெருகி வருகிறது.
கடந்த ஆண்டு இறுதியில் மத்திய அரசு மேற்கொண்ட உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகளின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால், நாடு முழுவதும் வங்கி மூலமான பணப் பரிமாற்றம் பல மடங்கு அதிகரித்துள்ளது. இதுவரை வங்கிக் கணக்கில் வராமலே கணக்கின்றி புழக்கத்தில் இருந்து வந்த ரொக்கப்பணம், வங்கி மூலமான பரிமாற்றத்துக்கு மாறுவதற்கு மத்திய அரசின் நடவடிக்கை வித்திட்டுள்ளது.
மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது பல சிரமங்கள் நேரிட்டபோதும், அவற்றைத் தாங்கிக் கொண்டு அரசுக்கு மக்கள் ஆதரவளித்தனர். நாட்டிலுள்ள கருப்புப் பணத்தை ஒழிக்க அந்த நடவடிக்கை தேவை என்றுணர்ந்த அவர்கள் ரொக்கப் பணத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டபோதும் அரசை ஆதரித்தனர்.
அரசின் அந்த நடவடிக்கை காரணமாக தற்போது சுமார் ரூ. 16.8 லட்சம் கோடி ரொக்கம் வங்கிக் கணக்குகளுக்குள் வந்துள்ளது. இதன் மூலமாக பல வங்கிகளின் நிதியிருப்பு கணிசமாக அதிகரித்துள்ளது. ஆனால், வங்கி முறையை நம்பி தங்கள் பணத்தைச் செலுத்திய பலருக்கும் வங்கிகள் தற்போது தொந்தரவு தரத் துவங்கி இருக்கின்றன.
நாட்டிலுள்ள வங்கிகளைக் கண்காணித்து முறைப்படுத்துவது மத்திய ரிசர்வ் வங்கி. எனினும் வங்கிகளின் நிதிச் செயல்பாடுகளில் முறையற்ற தன்மை தெரியவரும்போது மட்டுமே ரிசர்வ் வங்கி சாட்டையைச் சுழற்றும்; வங்கிகளின் அன்றாடச் செயல்பாடுகளில் ரிசர்வ் வங்கி தலையிடுவதில்லை.
வங்கிகளின் சேவைக் கட்டணங்கள், குறைந்தபட்ச சேமிப்பு இருப்பு வரையறைகள், சிறப்பு சேவைகளுக்கான கட்டணங்களை நிர்ணயித்துக் கொள்ள வங்கிகளுக்கு தன்னாட்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் தன்னாட்சி அதிகாரத்தை பல வங்கிகள் தவறாகப் பயன்படுத்துகின்றன.
அண்மையில் நாட்டின் மாபெரும் பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, மாதாந்திர சராசரி குறைந்தபட்ச சேமிப்பு இருப்பை அதிகரித்தது. பெரு நகரங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு ரூ. 5,000, நகரங்களில் ரூ. 3,000, நகர்ப்புறங்களில் ரூ. 2,000, கிராமப்புறங்களில் ரூ. 1,000 என குறைந்தபட்சத் தொகை அதிகரித்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த குறைந்தபட்ச சராசரி கையிருப்பை வைத்திராத வாடிக்கையாளர்களுக்கு ரூ. 20 முதல் ரூ. 100 வரை அபராதக் கட்டணம் விதிக்கப்படும் என்று பாரத ஸ்டேட் வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது. தொட்டதற்கெல்லாம் கட்டணம்; வங்கிக்கு வங்கி இதில் வேறுபாடு; பாரத ஸ்டேட் வங்கியின் அபராதங்கள் கொடுமை. அவை கட்டணமா? அல்லது கந்துவட்டியா? வங்கி முறையை நியாயமாகக் கடைப்பிடிக்க விரும்பும் நடுத்தர வகுப்பைச் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு இவையெல்லாம் மாபெரும் சுமை என்பதில் சந்தேகமில்லை.
எந்த ஒரு வாடிக்கையாளரும் ரூ. 500 குறைந்தபட்ச இருப்பு வைத்திருந்தால் போதும் என்ற நிலை முன்னர் இருந்தது. பின்னர் அது ஆயிரம் ரூபாயாக அதிகரித்தது. எனினும் சில தனியார் வங்கிகள் இந்த இருப்புத் தொகையை அதிகரித்தன. அதன் மூலமாக வங்கிகளின் கையிருப்பு அதிகரித்து அவற்றின் பணச்சுழற்சிக்கு உதவின.
ஆனால், பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியும் தனியார் வங்கிகள் போலச் செயல்படுவதை எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியும்? தவிர, அரசு நடவடிக்கையால் தற்போது அனைத்து வங்கிகளின் நிதியிருப்பும் பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், வாடிக்கையாளர்களின் குறைந்தபட்ச சராசரி இருப்பை அதிகரிக்க வேண்டிய தேவை என்ன?
உண்மையில், எஸ்.பி.ஐ. நிர்வாகத்தின் நோக்கம், வரவு- செலவு இல்லாமல் செயலற்றிருக்கும் வங்கிக் கணக்குகளைக் குறைப்பதாக இருக்கக் கூடும். அதிகப்படியான வாடிக்கையாளர்களைக் கையாள விரும்பாத வங்கி ஊழியர்களின் நிர்பந்தம் காரணமாகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம். ஏற்கெனவே மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக வங்கி ஊழியர் சங்கங்கள் போராட்டங்களை அறிவித்ததை மறந்துவிட முடியாது.
இதேபோல, ஐ.எம்.பி.எஸ். முறையில் மின்னணு பணப் பரிமாற்றத்துக்கு சேவைக் கட்டணம், காசோலைக் கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இவை அந்த வங்கியின் வாடிக்கையாளர் சேவை குறித்த கொள்கையை கேள்விக்குறி ஆக்குகின்றன. தவிர, ரொக்கப் பரிமாற்றங்களைக் குறைக்க விரும்பும் மத்திய அரசின் நோக்கத்துக்குத் தடையாகவும் இந்தச் செயல்பாடுகள் உள்ளன.
பழைய ரூ. 500, ரூ. 1000 கரன்சிகள் அனைத்தும் புழக்கத்திலிருந்து திடீரென அகற்றப்பட்டபோது அதற்கு இணையான அளவில் புதிய ரூபாய் நோட்டுகளை வெளியிட முடியவில்லை. அதனால் அப்போது பெரும் ரொக்கத் தட்டுப்பாடு நிலவியது. ஆனால், ஜனவரி இறுதிக்குப் பிறகு இந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டு 80 சதவீத ஏடிஎம்கள் முழுமையாக இயங்கத் துவங்கின. ஆனால், அண்மைக்காலமாக, இந்த ஏடிஎம்கள் பல சரிவர இயங்குவதில்லை.
2016 டிசம்பரில் இருந்த தட்டுப்பாடு நிலைக்கே பல ஏடிஎம்கள் சென்றுவிட்டன. டிசம்பரில் மூடப்பட்ட பல ஏடிஎம்களும் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. இதனால் வாடிக்கையாளர்கள் மீண்டும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பல இடங்களில் பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம்கள்கூட முழுமையாகச் செயல்படுவதில்லை.
மத்திய அரசின் முயற்சியால் உருவான ரூபே பற்று அட்டைகளை பல தனியார் ஏடிஎம்கள் நிராகரிப்பதையும் காண முடிகிறது. இது மத்திய அரசு மீதான அதிருப்தியாக வடிவெடுத்து வருகிறது. ஆனால் வங்கி நிர்வாகங்கள் இதுகுறித்து கவலைப்படுவதாகத் தெரியவில்லை. ரிசர்வ் வங்கியும் இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதில்லை.
அனைத்து நிதிசார் நடவடிக்கைகளும் ரொக்க முறையில் அல்லாது வங்கிகள் மூலமாகவும் மின்னணுப் பரிமாற்ற முறையிலும் நடைபெற வேண்டும்; அதுவே கருப்புப் பணப் புழக்கத்தைக் குறைக்கும் என்பது மத்திய அரசின் நிலைப்பாடாக உள்ளது. அதற்கு உறுதுணை புரிய வேண்டிய வங்கிகளின் செயல்பாடோ இதற்கு நேர்மாறாக இருக்கிறது.
வங்கிகளின் இந்தச் செயல்பாடு காரணமாக வாடிக்கையாளர்கள் வங்கிகள் மீது நம்பிக்கை இழக்க வாய்ப்புண்டு. சேவைகளின் மீதான அதீத கட்டணங்களும் வாடிக்கையாளருக்கு அபராதம் விதிக்கும் நடைமுறைகளும் கந்துவட்டிக்காரர்களைத்தான் நினைவூட்டுகிறது. இதை வங்கி நிர்வாகங்கள் உணர வேண்டும்.
-வ.மு.முரளி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com