நலிவடையும் தென்னை மஞ்சுக் கயிறு தொழில்

பிளாஸ்டிக் கயிறுகளின் வருகை, கால்நடை தொழில் பாதிப்பு போன்ற காரணங்களால், தென்னை மஞ்சுக் கயிறு தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் நிலையில் உள்ளது.
நலிவடையும் தென்னை மஞ்சுக் கயிறு தொழில்

பிளாஸ்டிக் கயிறுகளின் வருகை, கால்நடை தொழில் பாதிப்பு போன்ற காரணங்களால், தென்னை மஞ்சுக் கயிறு தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் நிலையில் உள்ளது.
தென்னை மஞ்சு மூலம் கயிறு உற்பத்தி செய்யும் தொழில், தமிழகத்தில் திண்டுக்கல், தேனி, கோவை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களின் சில பகுதிகளில் பாரம்பரியமாக நடைபெற்று வந்தது. கடந்த 25 ஆண்டுகளுக்கு முன், தென்னை மஞ்சுக் கயிறுகளுக்கு போட்டியாக இயந்திரத்தில் முறுக்கப்பட்ட நூல் கயிறுகள் சந்தைக்கு வரத் தொடங்கின. ஆனால் அதிக விலையின் காரணமாக நூல் கயிறுகளைப் பயன்படுத்துவதற்கு வாடிக்கையாளர்கள் தயக்கம் காட்டினர். இந்த சூழலில் தென்னை மஞ்சு கயிறுகளுக்கு பலத்த போட்டியை ஏற்படுத்தும் வகையில், பிளாஸ்டிக் கயிறுகள் சந்தைகளை ஆக்கிரமிக்கத் தொடங்கின. உறுதியான தரத்துடன், பல வண்ணங்களில் கிடைக்கும் பிளாஸ்டிக் கயிறுகள் அனைத்து தரப்பினர் மத்தியிலும் வரவேற்பைப் பெற்றது.
இதன் காரணமாக, தென்னை மஞ்சுக் கயிறுத் தொழில் நலிவடையத் தொடங்கிய நிலையில், தேனி, கோவை, சிவகங்கை மாவட்டங்களில் இத்தொழிலில் ஈடுபட்டு வந்த பெரும்பாலானோர் மாற்றுத் தொழில் தேடி, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களுக்கு குடிபெயர்ந்துவிட்டனர். தற்போதைய நிலையில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அடுத்துள்ள ஒத்தக்கடை பகுதியிலும், சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியிலும் தென்னை மஞ்சுக் கயிறு தயாரிப்புத் தொழில் சிறிய அளவில் நடைபெற்று வருகிறது.
இத்தொழிலின் தற்போதைய நிலை குறித்து ஒத்தக்கடையைச் சேர்ந்த எஸ்.பெருமாள் கூறியதாவது: வறட்சி காரணமாக தென்னை மரங்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக குறைந்து வருகிறது. அதே நேரத்தில் கயிறுக்கான சந்தை வாய்ப்பும் கடந்த சில ஆண்டுகளாக மங்கி வருகிறது. இதனால் 35 கிலோ எடையுள்ள ஒரு மஞ்சுக் கட்டு ரூ.1000-லிருந்து ரூ.700ஆக குறைந்துவிட்டது.
ஒத்தக்கடையில் உற்பத்தி செய்யப்படும் பொச்சக் கயிறுகள், திண்டுக்கல், தேனி, மதுரை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களுக்கும், கேரளம் மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்பட்டு வந்தன. நாள்தோறும் ஒரு லோடு பொச்சக் கயிறுகள் அனுப்பி வந்த நிலையில், பிளாஸ்டிக் கயிறுக்கு கிடைத்த வரவேற்பால் தற்போது வாரத்திற்கு 2 லோடு மட்டுமே அனுப்பும் நிலை உள்ளது.
எனவே சந்தை வாய்ப்பு இல்லாததால், ஆந்திரத்திற்கு தற்போது கயிறு அனுப்பப்படுவதில்லை. தமிழகத்தில் கால்நடை வளர்ப்புத் தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளதால், கயிறுக்கான தேவையும் குறைந்துள்ளது. கோயில்களில் சிறிய அளவிலான தேர் (சப்பரம்) இழுத்துச் செல்வதற்கு வடக் கயிறுகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்த முறை பல ஊர்களிலும் மாற்றமடைந்து, இரும்பு சக்கர வண்டியில் வைத்து சுவாமி ஊர்வலம் நடத்தப்படுவதால் தேர்வடக் கயிறுகளுக்கான வரவேற்பும் குறைந்துவிட்டது.
ஒத்தக்கடையில் மட்டும் 15 நிர்வாகத்தின் கீழ் சுமார் 500 பேர் கயிறு
உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். 20 இயந்திரங்கள் மூலமாகவும் கயிறு தயாரிக்கப்படுகிறது. இந்த வகை பொச்சக் கயிறுகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. ஆனாலும் மின்தடை ஏற்படும் நேரங்களில், உற்பத்தி பாதிக்கப்படும் என்பதால், கைத் தயாரிப்பை
நம்பியே இத்தொழில் சுழல வேண்டிய கட்டாயம் உள்ளது என்றார்.

கயிறுகளின் வகைகள்

வடக் கயிறு, பாரக் கயிறு, வால் கயிறு, கமலைக் கயிறு, கடகா கயிறு, பிடிக் கயிறு, தாம்புக் கயிறு, புணயல் கட்டிக் கயிறு, தும்புக் கயிறு என பல வகையான கயிறுகள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தன. இயந்திர மயமாக்கல் காரணமாக, கமலையில் தண்ணீர் இரைப்பது தடைப்பட்டது.
இதனால் கமலைக்கயிறு தயாரிப்பும் நின்றுவிட்டது. அறுவடை செய்த பயிர்களில் உள்ள கதிர்களை நீக்கிவிட்டு, மாடுகளை இணைத்துப் புணயல் அடிப்பது வழக்கம். கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த முறையும் மாறியதால் புணயல் கயிறு உற்பத்தி பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே நிறுத்தப்பட்டுவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com