தேர்தல் முடிவுகள் எதிரொலி! பங்குச் சந்தைகளில் சூடுபிடிக்கும் வர்த்தகம்?

உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் பாஜக பெரும்பான்மை பலத்துடன் அதிரடியாக வெற்றி பெற்றதையடுத்து பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சூடுபிடித்து புதிய உச்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் முடிவுகள் எதிரொலி! பங்குச் சந்தைகளில் சூடுபிடிக்கும் வர்த்தகம்?

உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் பாஜக பெரும்பான்மை பலத்துடன் அதிரடியாக வெற்றி பெற்றதையடுத்து பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சூடுபிடித்து புதிய உச்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் கடந்த சனிக்கிழமை வெளியாகின. இதில், உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களில் பாஜக எதிர்பாராத வகையில் அதிக இடங்களைப் பிடித்து ஆட்சியைக் கைப்பற்றியது.
மேலும், மணிப்பூர், கோவாவிலும் கூட்டணி ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
திங்கள்கிழமை ஹோலி பண்டிகையையொட்டி பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில் பாஜக வெற்றியின் தாக்கம் செவ்வாய்க்கிழமை பங்கு வர்த்தகத்தில் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து டிரேட் ஸ்மார்ட் ஆன்லைன் நிறுவனரும், இயக்குநருமான விஜய் சிங்கானியா கூறியதாவது:
2 மாநிலங்களில் பாஜகவுக்கு கிடைத்துள்ள இமாலய வெற்றி மத்திய அரசின் பொருளாதார சீர்திருத்த கொள்கைகளை மாநிலங்களவையில் நிறைவேற்றப் பேருதவியாக இருக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும், இந்த வெற்றி 2019-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கு முன்னோட்டமாகவும் கருதப்படுகிறது என்றார் அவர்.
இந்த தேர்தல் வெற்றி பொருளாதார சிக்கல்களுக்குத் தீர்வு காண்பது மற்றும் கருப்பு பண ஒழிப்புக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு வலுவான தொடர் ஆதரவை நல்கும். இதனால், சர்வதேச முதலீட்டாளர்கள் மத்தியில் இந்தியா குறித்த நம்பிக்கை நிச்சயம் அதிகரிக்கும். இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளில் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். இதனால் சென்செக்ஸ் புதிய உச்சத்தை தொடும் என்கிறார் சென்ட்ரம் புரோக்கிங் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான சந்தீப் நாயக்.
மேலும், நடப்பு வாரத்தில் இந்திய பங்குச் சந்தைகளின் போக்கைத் தீர்மானிப்பதில் பணவீக்கம் புள்ளிவிவரம், அமெரிக்க மத்திய வங்கி ஆலோசனைக் கூட்டம் ஆகியவையும் முக்கியப் பங்கு வகிக்கும் என நிதித் துறை சார்ந்த பல்வேறு நிபுணர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com