ஐ.டி. துறைக்கு காத்திருக்கும் ஆபத்து?

ஏற்கெனவே உலகளாவிய பொருளாதார சிக்கலால் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் வளர்ச்சி மந்தமடைந்துள்ளது.

ஏற்கெனவே உலகளாவிய பொருளாதார சிக்கலால் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் வளர்ச்சி மந்தமடைந்துள்ளது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் அதிரடிகள், ஆஸ்திரேலியாவின் முட்டுக்கட்டைகள், சிங்கப்பூர், நியூஸிலாந்து ஆகிய நாடுகளில் அறிவிக்கப்பட்டுள்ள விசா கட்டுப்பாடுகள் என இந்திய ஐ.டி. நிறுவனங்களுக்கு அடிமேல் அடி விழுந்து வருகிறது.

அமெரிக்காவின் முன்னணி ஆலோசனை நிறுவனமான மெக்கென்ஸி இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை குறித்து ஆய்வு நடத்தியது. அதில், அடுத்த 3-4 ஆண்டுகளில் சுமார் 50 சதவீத ஊழியர்கள் குறைக்கப்படலாம் எனத் தெரிவித்துள்ளது.

இந்தத் துறையில் தானியங்கி மென்பொருள்களின் செயல்பாட்டால் 30% வேலைவாய்ப்பு பாதிக்கப்படும் என கூறப்படுகிறது. நடுத்தர திறன் வேலைவாய்ப்புகள் 8% வரையும், உயர் திறன் வேலைவாய்ப்புகள் 56% வரையும் பாதிக்கப்படலாம் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்தியாவின் பிபிஓ துறையும் சரிவை சந்திக்கும் என கூறுகிறது ஆய்வு. அடுத்த 5 ஆண்டுகளில் இத்துறையில் சுமார் 3.7 லட்சம் வேலைவாய்ப்பு இழப்பு ஏற்படும். தானியங்கி செயல்பாடுகளை பயன்படுத்துவதால், இந்தியாவில் 69 சதவீதமும், சீனாவில் 77 சதவீதமும் வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படலாம் என உலக வங்கியும் அதன் பங்குக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் ஐ.டி. துறையில் முதலிடத்திலுள்ள டிசிஎஸ்ஸூக்கு அடுத்து அதிகம் பேர் பணியாற்றுவது, காக்னிசென்ட் நிறுவனத்தில். அமெரிக்க நிறுவனமாக இருந்தாலும் இதன் 75% ஊழியர்கள் இந்தியாவில்தான் உள்ளனர். சுமார் 2.6 லட்சம் ஊழியர்களைக் கொண்டுள்ள இந்த நிறுவனம் 5% ஊழியர்களை வெளியேற்றப் போவதாக வெளிப்படையாகவே அறிவித்துள்ளது.
தகவல் தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோ பணிநீக்கத்தைத் தொடங்கியுள்ளது. முதல்கட்டமாக ஊழியர்களின் செயல்திறன் அடிப்படையில் சோதனை நடத்தி 600 பேரை உடனடியாக நிறுவனத்தைவிட்டு வெளியேற்றியுள்ளது. நடப்பு நிதியாண்டில் ஊழியர்களின் பணிநீக்கம் 2000 வரை உயரும் என்றும், வர்த்தக நிலை சீராகும் வரை இந்தப் பணிநீக்கம் தொடரும் எனவும் விப்ரோ அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இன்போசிஸ் நிறுவனத்தில் பணிநீக்கம் மட்டுமின்றி புதிய பணியாளர்கள் தேர்வும் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் இன்போசிஸ் சுமார் 17,857 புதிய ஊழியர்களை பணி நியமனம் செய்தது. ஆனால், 2016-17 நிதியாண்டில் 6,320 ஊழியர்களை மட்டுமே சேர்த்துள்ளது. இது கிட்டத்தட்ட 60% குறைவு.
இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான பிரவீண் ராவ் ஒரு பேட்டியில் கூறும்போது, நிறுவனத்தில், "15-20 ஆண்டு அனுபவம் பெற்ற ஊழியர்கள் நிறுவனத்தின் சொத்து என்பதற்குப் பதிலாக சுமையாக மாறுகின்றனர்; அதிக அனுபவம் பெற்ற ஊழியர்கள் புதிய தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொண்டு நிறுவனத்துக்குப் பயன்பட வேண்டும்' எனக் கூறி சீனியர் ஊழியர்கள் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளார்.
அடுத்து வரும் காலம் தகவல் தொழில்நுட்பத் துறையினருக்கு வசந்த காலமாக இருப்பது சந்தேகமே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com